ரணிலின் தேர்வு ஜனநாயகத்துக்கு எதிரானதா? (காலக்கண்ணாடி 94) 

ரணிலின் தேர்வு ஜனநாயகத்துக்கு எதிரானதா? (காலக்கண்ணாடி 94) 


      — அழகு குணசீலன் — 

இலங்கையில் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டும் வைக்கோல் இழுத்தவழி தொடர்கிறது. மழை விட்டும் தூவானம் விடவில்லை. நாளுக்கு நாள் வெவ்வேறு, வேறுபட்ட விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவின் தெரிவு ஜனநாயக ரீதியானதா? அல்லது ஜனநாயகத்திற்கு முரணானதா? இதற்கு பதில் தேட விளைகிறது இவ்வாரக் காலக்கண்ணாடி. 

இந்த முறையிலான குறுக்கு மறுக்கு /தாறுமாறு இரகசிய வாக்களிப்பு இலங்கை பாராளுமன்றத்திற்கு பழக்கப்படாத ஒன்றுதான். ஆளுங்கட்சி எதிர்க்கட்சியோடு இணைந்திருக்கிறது. எதிர்க்கட்சியினர் ஆளுந்தரப்புக்கு வாக்களித்துள்ளனர். கட்சிகளின் கட்டுப்பாட்டுக்கு,  கூட்டுப்பொறுப்பு முடிவுக்கு மாறாக உறுப்பினர்கள் “கட்டாக்காலிகளாக” குறுக்கும், மறுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.  

இந்த கட்டாக்காலி செயற்பாடும் ஒருவகையில் கட்டற்ற சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றின் பிரதிபலிப்பே. ஒரு காலத்தில் இது அஃறிணையில் பயன்படுத்தப்பட்டதாயினும், இன்றைய நிலையில் உயர்திணைக்கும் பொருந்திப்போகின்றது. கால்களின் எண்ணிக்கை வேறுபாடின்றி, அறிவு எண்ணிக்கை வேறுபாடின்றி “கட்டாக்காலி” ஜனநாயகப் பண்புகளைக்கொண்ட பொதுப் பெயராகிறதா இல்லையா? 

ஆனால் இந்த கட்டற்ற செயற்பாட்டுக்கும் ஒரு வேலி உண்டு. அதுதான் மற்றவரின் மூக்கு நுனிவரையான எல்லை. இந்த ஜனநாயக உரிமையை வன்முறைகளின் மூலம் போராட்டக்கார்கள் மீறியிருக்கிறார்கள். அதே போன்று அரசாங்கமும் மீறியிருக்கிறது. இவ்வாறான கட்டற்ற அரசியல் செயல்பாடுகளுக்கும் காரணம் உண்டு. காலிமுகத்திடலில் உள்ள சுமார் இருபது குழுக்களை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவது எவ்வளவு கஷ்டமானதோ அதே போன்றுதான் அத்தனை கட்சிகளையும் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதும் கஷ்டமானது. எனினும்   படையினர் கூலிப்படையினராக உள்ள போதும் ஒப்பீட்டளவில் இன்னும் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. 

கட்சியில் சிலரின் ஆதிக்கமும், அதிகாரமும் மற்றவர் கருத்தை புறக்கணிக்கும் ஜனநாயகத்திற்கு புறம்பான போக்கும் கட்டற்ற செயற்பாடும்   காரணமாகும். இந்த நிலையில் கூட்டுப் பொறுப்பை எப்படி ஏதிர்பார்ப்பது? உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்பட்டபோதுபாராளுமன்றத்தில் சுயமாக வாக்களித்துள்ளனர் எம்.பி.க்கள். இது ஜனநாயகத்திற்கு முரணானதா? உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்பட்டதன் விளைவா? இங்கு பேசப்படுவது லிபரல் ஜனநாயகமே அன்றி மட்டுப்படுத்தப்பட்டதும், கட்டுப்படுத்தப்பட்டதுமான சோஷலிச ஜனநாயகம் அல்ல. இது இலங்கை அரசியலில் அனைத்துக் கட்சிகளுக்குமான பொதுப்பண்பு. 

இந்த உள்வீட்டு விவகாரங்கள், ரணிலின் தெரிவு ஜனநாயகத்திற்கு முரணானது என்று பேசும் அளவுக்கு சிலரைத் தூண்டிவிட்டுள்ளது. 

அரசியல் அமைப்பின்படி, சட்ட நடைமுறைகளைப் பேணி, முறைப்படியான அறிவித்தல்கள் வழங்கப்பட்டு, இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தெரிவு எந்த வகையில் ஜனநாயகத்திற்கு முரணானது? எந்த இடத்தில் ஜனநாயகத்தில் இருந்து தடம் புரள்கிறது?  

ராஜபக்சாக்கள் மீதான ஆத்திரத்தை ரணிலில் காட்டும் முனைப்பு இது. 

தேசியப்பட்டியல் எம்.பி. ஒருவர் பிதாமராகவோ, ஜனாதிபதியாகவோ வரமுடியாது என்று அல்லது ஒரு கட்சியில் ஒரே ஒருவர்தான் எம்.பி. என்றால் அவருக்கு அந்தத் தகுதி இல்லை என்று அரசியல் அமைப்பு சட்டம்  கூறுகிறதா? மாறாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின் மூலம் அந்தப் பதவி மேலும் ஜனநாயக மயப்படுத்தப்படுகிறது அல்லவா?. 

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, வாக்காளர்களுக்கு காசு கொடுத்து, மதுபானம் வழங்கி, வேட்டி, சால்வையும், சேலையும், நிவாரணப்பொதிகளும் வழங்கி, இது போன்ற சட்டத்திற்கு முரணான இன்னும் பலவற்றையும் செய்து, கள்ளவாக்கும் போட்டு, அறக்கட்டளைகளை நடாத்தி தெரிவு செய்யப்பட்டுள்ள 225 பேரின் தெரிவும் ஜனநாயகத்திற்கு முரணானது என்ற முடிவுக்கு வரமுடியுமா?. அப்படியானால் இந்த பாராளுமன்றமே ஜனநாயகத்திற்கு முரணானதாகத் தெரிவு செய்யப்பட்டது என்று கொள்ளலாமா? 

ரணில் பொய் வாக்குறுதி அளித்தார், பணம் கொடுத்தார், அமைச்சர் பதவிகளைக் காட்டி ஆசை காட்டினார் என்றெல்லாம் கூறப்படுகிறது. 

இந்தப் பாரம்பரியம் எங்கள் பாராளுமன்ற அரசியலில் தொடரும் ஒன்று. இது எப்போதும் இருந்தது இப்போதும் இருக்கிறது. அதற்காக இது தொடரவேண்டும் என்பதல்ல. அதே குணாம்சங்களைக் கொண்ட இந்த பாராளுமன்றத்தில் இருந்து வேறு எதனை எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன? போராட்டக்காரர்கள் எதிர்பார்த்தார்கள்? 

இவர்கள் ரணில் செய்வதாகச் சொல்வதைச் செய்ய முற்படவில்லையா? ஒரு வித்தியாசம் ரணில் பிரதமராக இருந்தார். அதிகாரம் இருந்தது. இந்த கட்டாக்காலி குறுக்கு மறுக்கு வாக்களிப்பில் தலஸ் வெற்றிபெற்றிருந்தால் இதையே ரணில் தரப்பும் பேசியிருக்கும். பாராளுமன்றம் இன்னும் ராஜபக்சாக்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை இவர்கள் கணக்கில் எடுத்திருக்காதது சிறுபிள்ளைத் தனமானது. இது எப்போதும் போன்று  வென்றவருக்கு எதிரான தோற்றவர் கதையளப்பு. சேறடிப்பு. இதன் அர்த்தம் வாக்களித்தவர்கள் காந்தியும், புத்தரும், யேசுவும் என்று  அல்ல. அவர்களை அப்படி எதிர்த்தரப்பினர் நினைத்திருந்தால் யாரைச் சொல்லி அழ…? 

ரணில் பொதுத்தேர்தலில் தான் போட்டியிட்ட மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை. ஆனால் தேசிய ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சி பெற்றவாக்குகள் அக் கட்சிக்கு  ஒரு தேசியப்பட்டியல் எம்.பி. யை வழங்கியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் முரணானது. 

பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தவர் தேசியப்பட்டியல் ஊடாக எம்.பி.யானது இது தான் முதல்தடவையா? விகிதாசார தேர்தல்முறை சட்டத்தின்படி  இது சட்ட அங்கீகாரம் கொண்டதா இல்லையா? 

அப்படியானால் தேர்தலிலே போட்டியிடாதவர்கள், போட்டியிட்டு தோல்வியுற்றவர்கள் தேசியப்பட்டியல் ஊடாக இதுவரை நூற்றுக்கணக்கில் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பிக்களாக, அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இவர்களின் பதவி சட்டரீதியற்றதா? நியமனம் ஜனநாயகமற்றதா? 

தமிழ்த்தேசிய அரசியலில் அன்று அமிர்தலிங்கம் முதல் இன்று கலையரசன் வரை தேர்தலில் தோல்வியுற்று தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்தவர்கள். அது ஜனநாயகம், சட்ட ஒழுங்கு என்றால் அது ஏன் ரணிலுக்கு பொருந்தாது? சுமந்திரனின் அரசியல் பிரவேசம் மக்களால் தெரிவு செய்யப்பட்டதா? தேசியப்பட்டியல்தானே. உட்கட்சி ஜனநாயகத்தையே மறுதலிக்கின்ற கட்சித்தலைமைகளும், கட்சியின் முக்கிய பேச்சாளர்களும் தொப்பியை ரணிலுக்கு மட்டும் அணிவது ஏன்? 

ரணிலை விடவும் தொப்பி உங்களுக்கு மிகப் பொருத்தம். போட்டுக்கொண்டு கண்ணாடிக்கு முன் நின்று பாருங்கள். 

ரணிலுக்கு அளிக்கப்பட்ட வாக்களிப்பு முறையானது ஒருவகையில் உட்கட்சி ஜனநாயகத்தைப்பேணி இருக்கிறதா? இல்லையா? உண்மையான ஜனநாயக கோட்பாட்டில் கட்சியின் முடிவை சகல உறுப்பினர்களும் ஏற்கவேண்டும் என்பதல்ல. அவர்கள் சுதந்திரமாகச் செயற்படும் ஜனநாயக, கருத்துச்சுதந்திர உரிமையுடையவர்கள். தங்கள் கருத்துக்கு இசைவாக வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள். அவர்களைக் கட்டிப்போட்டு “குறி” சுடுவது கட்சி ஜனநாயகம் அல்ல. 

ரணிலின் வெற்றி “போலி பெரும்பான்மையினால்” ஏற்பட்டது என்று கூறுகிறார் சுமந்திரன். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் இது. “மக்களின் எண்ணப்பாட்டை அவர்கள் பிரதிபலிக்கவில்லையாம்” தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் போலியின் வடிவமா?‌‌ கூட்டமைப்பு மக்களின் எண்ணப்பாட்டை பிரதிபலித்ததா?‌‌ அப்படியானால் எந்த சந்தர்ப்பங்களில்?  

ஜனாதிபதி தெரிவு குறித்து உங்கள் நிலைப்பாட்டின் மீதான மக்களின், சிவில் அமைப்புக்களின், புலம்பெயர் சமூகத்தின், முன்னாள் போராளிகள் அமைப்பின் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன? சுமந்திரன் தமிழ் மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை. சிங்கள மக்களில் ஒரு பகுதியினரின் கருத்தை பிரதிபலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது உள்ளது. சிங்கள, பௌத்த தேசியத்தின் காப்பாளர் சுமந்திரன் என்றும் குற்றச்சாட்டு உண்டு. தோற்கடிக்கப்பட்டது தலஸ் அல்ல ஜி.எல்.பீரிஸும், சுமந்திரனும் என்று விமர்சனங்கள் கூறுகின்றன. 

 சிங்கள மக்கள் தாங்கள் தெரிவு செய்த ஆட்சியை அகற்ற விரும்புகிறார்கள். தமிழ்மக்கள் சிங்கள தேச ஆட்சிமாற்றத்தை, சிங்கள தலைமை ஆள்மாற்றத்தை விரும்புகிறார்களா?‌‌அப்படியானால் சுமந்திரனும், சாணக்கியனும் அழைப்புவிட்டபோதும் வடக்கு, கிழக்கு மக்கள் அதை காதில் எடுக்காதது ஏன்? தமிழ்மக்கள் ராஜபக்சாக்கள் பதவி இழப்பதை விரும்புகிறார்கள் அவ்வளவுதான். அவர்களை பதவிக்கு கொண்டுவந்தவர்கள் அதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அவர்களிடமே விட்டுவிட்டார்கள். 

“மக்களே மக்களுக்காக மக்களால் ஆளப்படும் ஆட்சி ஜனநாயகம்”. இது உலக நாடுகளில்  ஏதாவது ஒன்றில் உண்மையாக உள்ளதா?. எனவே கோட்பாட்டு ஜனநாயகத்தையும் விடவும் நடைமுறை ஜனநாயகமே முக்கியமானதும், சாத்தியமானதும், ஜதார்த்தமானதும்.  

இலங்கைப் பாராளுமன்றம் மக்களின் எண்ணப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றால், புதிய பாராளுமன்றம் ஒன்றைத் தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும். அந்த உரிமையை மக்களுக்கு வழங்க அரசாங்கம் மறுக்கிறது என்றால் அங்கு எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ஜனநாயகப் பொறுப்பு இருக்கிறது. அது தான் பொதுத்தேர்தல் ஒன்றுக்கான கோரிக்கை. இதுவரை இந்தக்கோரிக்கை எதிர்க்கட்சிகளின் ஒருமித்த குரலாக ஒலிக்கவில்லை.  

அதைச் செய்வதுடன், தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அரசாங்கத்தை செயலிழக்கச் செய்யவேண்டும். அதைத் தவிர்த்து வெறும் கோஷங்களை வைத்து மக்களுக்கு காதில் பூச்சூட முடியாது.  

அதுவே மக்கள் ஆணையை இழந்திருக்கின்ற பாராளுமன்றத்திற்கு புதிய ஆணையைப் பெறுவதற்கான வழி.  

இந்திய அழுத்தத்தை செயற்படுத்துவது முதுகு எலும்பு அரசியல் அல்ல. அது முள்ளந்தண்டு அற்ற மண்புழு அரசியல். பதவியை இராஜினாமாச் செய்து மக்களுக்கு ஜனநாயகத்தை மீட்டுக்கொடுப்பதே முள்ளந்தண்டு அரசியல். முன்மாதிரி என்பது சொல்லில் அல்ல, செயலில். 

 செய்வார்களா……?