— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது.
எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பதிப்பு)
இப்படி எந்தச் சட்டப் புத்தகத்தில் இருக்கிறது என்ற கேள்வியைச் சுமந்திரனிடம் எழுப்பும் அதேவேளை, சட்ட வரம்புகளுக்கு உட்படாத இப்படியான சுமந்திரனின் தன்னிச்சையான வியாக்கியானங்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் உண்டா? சுமந்திரன் சொல்வது எல்லாம் ‘வேத வாக்கு’ ஆகிவிடுமா?
சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் போக்குகளைப் பார்த்தால் தமிழ்த் தேசிய அரசியல் இலக்குகளை மறந்துவிட்டுத் தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுவது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ‘முந்திரிக்கொட்டை’ போல் முந்திக்கொண்டு ‘வித்துவக் காய்ச்சல்’ காரணமாக ‘அவசரக் குடுக்கை’ யாகவும் ‘அதிகப் பிரசங்கித்தனம்’ ஆகவும் நடந்து கொள்வதாகவே படுகிறது. இவரைக் குறித்துத் தமிழ் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இவர் மீதான கட்டுப்பாட்டைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழந்துவிட்டன போல்தான் தெரிகிறது.
கடந்த பத்திகள் பலவற்றில் அவ்வப்போது சுமந்திரனின் அரசியல் நடத்தைகளைக் குறிப்பிட்டு, சுமந்திரன் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறாரா? அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு – அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அரசியல் செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுப்பியிருந்தேன்.
இதனை ஊர்ஜிதம் செய்வது போன்று ‘ஈழநாடு’ பத்திரிகை தனது 26.06.2022 வாரமலரில் ‘தமிழ் அரசியல்வாதி ஒருவரினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம்!’ எனத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதியின் பெயர் குறிப்பிடாமல் ஈழநாடு வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள முக்கியமான பகுதிகளை அதில் உள்ளபடி அப்படியே பதிவிடுகிறேன்.
‘ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு மாத்திரமன்றி, அந்தக் கட்சியின் முக்கிய உள்ளகக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் இந்த தமிழ்அரசியல்வாதி, அந்தக் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சிலமுக்கிய முடிவுகளை எடுக்க தூண்டுவதுடன், அந்தமுடிவுகளையே கட்சி செயல்படுத்தவும் வேண்டும் என கட்சியின் ஏனைய தலைவர்களை வற்புறுத்தி வருவதாகவும் மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன’
‘இதே போலவே கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமாக செயல்பட்ட இந்த அரசியல்வாதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உள் விவகாரங்களிலும் தலையிட்டு, பிரதமர் ரணில் மீது கடுமையாக செல்வாக்குச் செலுத்த முற்பட்டார் என்றும், அதன் விளைவாக ஐக்கிய தேசியக்கட்சியின் வீழ்ச்சிக்கே அவர் வழிவகுத்தார் என்றும் சுட்டிக்காட்டுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள், ஆனாலும் இறுதிகாலத்தில் சுதாகரித்துக் கொண்ட பிரதமர் ரணில் மேற்படி தமிழ் அரசியல்வாதியை ஓரங்கட்டினார் என்பதையும் தமது தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இப்போது நினைவூட்டுவதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் மேலும் கசிகின்றன.’
‘ஈழநாடு’ பத்திரிகை குறிப்பிடும் மேற்படி அரசியல்வாதி சுமந்திரன்தான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு வெகுநேரம் எடுக்காது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றை ஓரங்கட்டி- பங்காளிக் கட்சிகளைப் பகிரங்கமாக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் விமர்சித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சிதறடிப்பதில் சுமந்திரனுக்குப் பாரிய பங்குண்டு என்றே தமிழ் அரசியல் பொது வெளியில் பரவலான கருத்துண்டு.
சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான் தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்யும் சுமந்திரன் போன்ற வாய்ச்சொல் வீரர்களையிட்டுத் தமிழ் மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும். தற்போது தமிழ்த் தேசிய அரசியல் என்று கூறிக் கொண்டு இப்படியான வாய்ச்சொல் வீரர்களாகவே அதிகமானவர்கள் வலம் வருகிறார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலிலும்- தமிழர்களின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய ‘மாற்றம்’ நிகழும் வகையில் தமிழர்களின் அரசியல் சிந்தனைகள் இது காலவரையிலான மரபு வழித் தேர்தல் அரசியலிலிருந்து விடுபட்டுப் புதிய திசை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் தமிழர் அரசியலில் சுமந்திரன் போன்ற ‘சுயநலமி’ கள் நுழைவது தடுக்கப்படும். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகைக் கோணத்தினால் திசை திரும்ப வேண்டிய தருணம் இதுவாகும். புதியதோர் அரசியல் தலைமையையும் புதியதோர் அரசியல் கலாசாரத்தையும் தமிழர் அரசியல் வேண்டி நிற்கிறது.