காலக்கண்ணாடி – 92  மதில் மேல் பூனைகள்..!

காலக்கண்ணாடி – 92  மதில் மேல் பூனைகள்..!

திண்ணை காலியாகும் வரை காத்திருந்தோர் கதை..!

— அழகு குணசீலன் —

காலிமுகத்திடல் எதிர்ப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களில் அரங்கத்தின் அரசியல் தொடர்பத்திகளான “வாக்குமூலம்” , “காலக்கண்ணாடி”, மற்றும் பதிவுகளும் அது பற்றி பேசத் தவறவில்லை.

குறிப்பாக “வாக்குமூலம்” அரசியல் நெருக்கடிக்கான தீர்வு ஜனாதிபதி பதவி விலகுவதே என்று அரசியல் அமைப்பு அடிப்படையில் வாதிட்டு வந்துள்ளது.

“காலக்கண்ணாடி” ஆள் மாற்றங்களின் மூலம் சமகால சமூக, பொருளாதார, அரசியல் நெருகடிக்கு தீர்வுகாண முடியாது என்றும், அவற்றின் அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை என்றும் தொடர்ந்தும் வலியுறுத்தியது. குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான உரிமை குறித்து காலிமுகத்திடல் பேசவில்லை என்பது காலக்கண்ணாடியில் விழுந்த விமர்சன விம்பமாக இருந்தது. இன்றைய அரசியல் சூழலில் இது இன்னும் உரத்துப் பேசப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. திண்ணையில் காலியிடம் தேடுபவர்கள் எவரும் இது பற்றி பேசுவதாக இல்லை.

இந்த நிலையில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலின் நிலை மிகவும் பலவீனமாக மட்டும் அல்ல பரிதாபமாகவும்  உள்ளது. ஆரம்பத்தில் நிபந்தனைகளோடு மட்டுமே பேசுவோம், நிபந்தனைகளோடு மட்டுமே ஆதரவளிப்போம் என்ற தமிழ்தரப்பு கோசங்கள் ஓய்ந்துவிட்டன. 

வீட்டுக்குள் மயான அமைதி நிலவுகிறது. மனோகணேசன் மட்டுமே வாய்திறந்து கோசங்கள் வேண்டாம் கோட்பாடுகளை முன்வையுங்கள் என்று கோரியிருக்கிறார். இந்த அறை கூவல் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை நோக்கியது. அரசியல் கட்சிகளிலும் அவர்களின் வேட்பாளர்களிலும் நம்பிக்கையிழந்ததன் வெளிப்பாடே மனோகணேசனின் இந்தக் கோரிக்கை.

இருவர் அமர்ந்து ஓடுகின்ற ஒன்றுக்குப் பின் ஒன்றாக இரு இருக்கைகளைக்கொண்ட பைசிக்கிள்காரர்கள் இது விடயத்தில் இது நம்நாட்டு விவகாரம் அல்ல என்ற போக்கில் உள்ளனர். விக்கினேஸ்வரன் ஐயா இறுதியில் எந்தப்பக்கம் சாய்வார் என்பது அவருக்கே வெளிச்சம்.

இருவருட இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர்களாக ரணில், சஜீத், தலஸ், அநுர ஆகியோரின் பெயர்களை ஊடகங்கள் உச்சரிக்கின்றன. அநுரவை நாம் விட்டுவிடலாம். போடடியிட விருப்பம் தெரிவித்துள்ள நால்வரில் மிகவும் ஆதரவு குறைந்தவர் அவர்தான். அவரது வியூகம் வேறு.

இருதடவைகள் இடம்பெற்ற சபாநாயகர் தேர்வில் பொதுஜன பெரமுன தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இது எதிரணி சஜீத்துக்கு புளியைக் கரைக்கும் விடயம் என்பது தெரியும். பொதுஜன பெரமுனவின் பத்துப் பங்காளிக்கட்சிகளை நம்பியே சஜீத் இந்த களத்தில் இறங்குகிறார். ஆனால் அந்த அணியில் உள்ளவர்களின் ஆதரவை சஜீத் முழுமையாகப் பெறமுடியாத நிலையே காணப்படுகிறது.

சஜீத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில் அவர் மீது அதிருப்தி கொண்டவர்கள் உள்ளனர். ஏற்கனவே இரு முக்கிய புள்ளிகள் கோத்தா -ரணில் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தவர்கள். பெயரளவிலான முஸ்லீம் காங்கிரஸில் அறுவர் நீண்டகாலமாகவே அரசாங்க ஆதரவாளர்களாக உள்ளனர். சஜீத் தனக்கு வந்த சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற அவர் மீதான தலைமைத்துவ குற்றச்சாட்டும் அவரது கட்சிக்குள் நிலவுகிறது.

தமித்தரப்பு சிறிய கட்சிகளான ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி. கட்சிகள் பொதுஜன பெரமுன வேட்பாளரையே ஆதரிப்பர். ரணிலும், தலஸ்ஸும் போட்டியிட்டால் இவர்கள் பெரும்பாலும் ரணிலை ஆதரிப்பதற்கே வாய்ப்புண்டு.

விமல்வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்பன்வெல, சரத்வீரசேகர, அங்கயன்  உள்ளிட்டவர்களினதும், நடுநிலையாளர்களினதும் வாக்குகளை சஜீத் பெறுவது கல்லில் நான் உரிப்பதாக அமையும். மறுபக்கத்தில் தலஸ் அழகப்பெரும நடுநிலை அதிதிருப்தியாளர்களின் வாக்குகளை பெற்றாலும் அந்த வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குகளில் அரைவாசியை எட்டவாய்ப்பில்லை. அப்படி ஏற்படுவதற்கு ரணில் போட்டியில் இருந்து விலகவேண்டும் இது சாத்தியமற்றது. 

சாத்தியமாக்கூடிய மற்றொரு நகர்வு என்ன வென்றால் ரணிலும், தலஸ்ஸும் ஒரு உடன்பாட்டிற்கு வந்து ரணில் ஜனாதிபதியாகவும், தலஸ் பிரதமராகவும் தெரிவு செய்யப்படுவது. பொதுஜன பெரமுன பெரும்பான்மைப் பாராளுமன்றம்  இந்த ஒரு கல்லில் இருமாங்காய்களை மிகவும் இலகுவில் வீழ்த்த முடியும். இல்லையேல் வாக்குகள் பிளவுபடுவது தவிர்க்கமுடியாது.

ஒட்டு மொத்தமாக ராஜபக்சாக்களின் ஆட்சியை மன்னர் ஆட்சி என்று விமர்சித்தவர்கள் அனைவரும் இந்நாட்டு மன்னர்களாக விரும்புகிறார்கள் என்பது மட்டும் உண்மை. ஆக இந்த வகையில் இராஜபக்சாக்களுக்கும் இவர்களுக்கும் இடையே வேறுபாட்டைக் காண்பதற்கு இன்றுவரையும்   இவர்களின் சொல்லிலும், செயலிலும் அரசியல்  மாற்றங்கள் ஏற்படவில்லை. 

ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மிகப்பெரும் வன்முறைகளை நாடு எதிர்கொள்ள வேண்டிவரும். அதை புரிந்து கொண்டுதான் ரணில் தற்போதே இராணுவ அணுகுமுறைக்கான சட்டங்களை படிப்படியாக பிரகடனம் செய்துவருகிறார். இந்த நிலையில் இந்தியப் பிரதமர் மோடி இலங்கைப் பிரச்சினை பற்றிப்பேச சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுகிறார்.

பக்கவாட்டில் இந்திய இராணுவத்தின் வருகை பற்றியும் பேசப்படுகிறது. ராணுவ உயர் மட்டம் இந்தியா சென்று திரும்பிய சூடு இன்னும் ஆறவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதற்கான கட்டியமாகவும் இது இருக்கலாம். 

போராட்டக்காரர்கள் அரசியல் தலைமைகளை எச்சரிக்கும் வகையில் சகல கட்சிகளையும் கொண்ட ஒரு இடைக்கால அரசை வலியுறுத்துகின்றனர்.  அவர்கள் கோருவது சர்வகட்சி அரசாங்கம் அல்ல மாறாக காலவரையறையுடன் கொண்ட இடைக்கால அரசாங்கம். அதைத்தொடர்ந்து இயலுமானவரை விரைவான தேர்தல். இது ஜே.வி.பி. அநுரகுமார திசாநாயக்காவின் கோரிக்கை. ஆக ஜே.வி.பி.க்கும், போராட்டக்கார்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ள பின்னணியை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். இராணுவத்திடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகள் குறித்து ரணிலுக்கும், அநுரவுக்கும் வழியில் நடந்த உரையாடல்  ஜே.வி.பி.யின் பின்னணியை மட்டுமல்ல 1971யையும் நினைவூட்டுகிறது.

கட்சிகள் தமக்குள் பதவிகளைப் பங்கிட்டுக் கொண்டு ஆட்சி தொடர்வதை போராட்டக்காரர்கள்  விரும்பவில்லை. மக்கள் சபை ஒன்று அரசியலை நெறிப்படுத்த அமைக்கப்படவேண்டும் என்பதும், ரணில் ஜனாதிபதியாக கூடாது என்பதும் அவர்களின் கோரிக்கை. அரசாங்க எதிர்ப்பு என்ற பொதுக்கொள்கையில் இருந்து கட்சிகளின் அரசியல் அதிகாரம் நோக்கி போராட்டக்களம் பிளவுபட்டு நிற்கிறது. இது வன்முறைகளுக்கான வழியாகவே அமையும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி, தமிழ்மக்கள் சார் சிவில் அமைப்புக்களும் அடக்கியே வாசிக்கின்றன. அண்மையில் சமூக விஞ்ஞான ஆய்வுமையம், தமிழ்த்தேசிய பண்பாட்டுப்பேரவை என்பன நடாத்திய நிபந்தனைகளை அறிவிப்பதற்கான பத்திரிகையாளர் மாநாடு இந்த பலவீனத்தைப் காட்டுகிறது.

இரு அமைப்புக்கள் இருவேறு ஊடகச்சந்திப்புக்களை நடாத்தியிருந்தாலும்  மோதகம், கொழுக்கட்டை அரசியல்தான்.

இரு அமைப்புக்களும் வைத்துள்ள பத்துக்கோரிக்கைகளில் உள்ளடக்கம் தேங்காய்ப்பூவும், சீனியும் தான். சமூக விஞ்ஞான ஆய்வுமைய கொழுக்கட்டைக்குள் கடமைக்குப் பயறு அங்கொன்றும் இங்கொன்றுமாக கடிபட்டது அவ்வளவுதான்.

ஆய்வுமையம் ஆக கடைசியாக அரசியல் தீர்வு, இடைக்கால நிர்வாகம், காணி, பொலிஸ் அதிகாரம் பற்றி பேசியிருக்கிறது. மற்றும்படி இரு அமைப்புக்களும் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் பற்றியே அதிகம் முன்னுரிமை வழங்கிப்பேசியுள்ளனர். இது வழக்கத்திற்குமாறானது. ஏற்பட்டது மனமாற்றமா..? அல்லது பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் கற்றுத் தந்த பாடமா….?  

இந்தச் சூழலில் யார் ஜனாதிபதியானாலும், ஸ்த்திரமற்ற, நிரந்தர மற்ற, மூன்றில் இரண்டு பெரும்பான்மை அற்ற, தலைக்குமேலால் வெள்ளம் ஓடும் இடைக்கால அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியுமா? முயற்சிக்குமா…?

காலிமுகத்திடல் போராட்டக்கார்களால் அதுவும் ஜே.வி.பி.யினால் வழிநடாத்தப்படும் இவர்களால்  சிறுபான்மை தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் உரிமைமைகளை பெற்றுத்தர முடியுமா ? 

அரசாங்கத்தை நெறிப்படுத்துகின்ற, கண்காணிக்கின்ற, கேள்விக்கு உட்படுத்துகின்ற அதிகாரங்களைக் கொண்ட அவர்கள் கோரிநிற்கின்ற மக்கள் சபை எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது? இதில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் வகிபாகம் என்ன?

ஒரு தரப்பு தர, மறுதரப்பு பறிக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசியலில் தமிழ்தரப்பு சாதிக்கப்போவது என்ன?

சாத்தியமான 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத் துகின்ற வாய்ப்புக்குக்கூட. இடைக்கால அரசில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. 

நிபந்தனைகளை விதிப்பதில் தவறில்லை. அது விரலுக்கு ஏற்ற வீக்கமாக இருக்கவேண்டும்.  ஜதார்த்த அரசியலாக அமையவேண்டும். இல்லையேல் பொதுத்தேர்தல் ஒன்றை நோக்கிய பயணத்தில் அதிக இழப்புக்களை தமிழ்தரப்பே சந்திக்க வேண்டியிருக்கும்.

சிங்களம் பலவீனமான நிலையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் இரட்சகராவதும், படிப்படியாக பலம்பெற்று சிறுபான்மையினரின் ராட்சதராவதும்  இலங்கை அரசியல் வரலாற்றில் ஒருமுறை அல்ல பலமுறை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

யூலை 20 இல் பூனை எந்தப்பக்கம் பாயும்…?