பெற்ற(வன்) கடன்  

பெற்ற(வன்) கடன்  

    — சபீனா சோமசுந்தரம் — 

விடிந்தால் நடக்கப்போகும் விபரீதத்தை நினைக்க அவனுக்கு அடிவயிற்றை கலக்கியது. விபரீதத்தை தடுக்க வேண்டியவனே அதை நிகழ்த்துபவனாக இருக்கையில் எவ்வாறு அதை தடுக்க முடியும்?  

‘எனக்கு 16 வயசு ஆகிட்டு.. நான் ஒன்டும் சின்னபொடியன் இல்ல.. என்னால சரியான முடிவுகள எடுக்க ஏலும்..’ என்று அவன் அறிவு அவன் மனதிடம் அடித்துக் கூறியது.  

ஆனாலும்; நிம்மதியாக உறங்க முடியவில்லை. உணர்வுகளுக்கு அடிமையாகிப்போன பாவப்பட்ட மனித மனம் என்ன தான் செய்யும்?நிலைகொள்ளாமல் நிம்மதியற்று தவிக்கத்தானே செய்யும். வினோத்தினுடைய மனநிலையும் அப்படித்தான் இருந்தது.  

அந்த ஊரில் விவசாயம்தான் வாழ்வாதாரம். வினோத்தினுடைய தந்தை சேகர் தோட்டம் செய்யும் விவசாயி. மரக்கறிகள் பயிரிடுவதுதான் அவர்களது வாழ்வாதாரமாக இருந்தது.  

இருபது வயதிலேயே பாடசாலை காலத்திலிருந்து தான் காதலித்த அருந்ததியை யாருக்கும் தெரியாமல் கூட்டிக்கொண்டு போய் திருமணம் செய்து கொண்டான் சேகர். 

இப்போதும் ஏதாவது வாய்த்தர்க்கம் என்றால்’ உங்கள்ல இருக்கிற ஆசையிலதானே எல்லாத்தையும் விட்டுட்டு உங்களோட ஓடி வந்தன்…’ என்று மூக்கைச் சீறுவாள் அருந்ததி. 

தாயும் தகப்பனும்; சண்டையிட்டு; விநோத் ஒருநாளும் பார்த்ததில்லை. அவனுடைய தகப்பன் சரியான அமைதியான பேர்வழி என்பது அவனுடைய எண்ணம். காரணம் அருந்ததி குரலை உயர்த்தினால் சேகர் பொட்டிப் பாம்பாய் அடங்கி விடுவான்.  

அப்படிப்பட்ட தகப்பன் இப்படியொரு காரியத்தை செய்வார் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.  

கடந்த இரண்டு வாரங்களாக சேகரின் நடவடிக்கைகள் இயல்பாக இல்லை. அதை அருந்ததி கவனித்தாளோ இல்லையோ விநோத் அதை கவனிக்க தவறவில்லை. சேகர் முடிந்தவரை வெளியில் போவதை தவிர்த்துக் கொண்டான் வீட்டிலேயே அதிக நேரம் இருந்தான்.  

கணவனுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை போல என்று அலட்சியமாக இருந்துவிட்டாள் அருந்ததி.  

வினோத்திற்கு தகப்பன் மீது பாசம் அதிகம் ஆரம்பத்தில் தகப்பனின் நடவடிக்கைகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டவனுக்கு நாள் போகப்போக எதோ தவறாக தோன்றியது.  

தகப்பனுக்கு தெரியாமல் அவன் செய்த புலனாய்வு இப்படி ஒரு நிலையில் கொண்டு வந்து விடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அதன் பிறகு சேகரை பார்க்கும் போதெல்லாம் வினோத்திற்கு ச்ச்சீ.. என்றிருந்தது. அதற்கு பிறகு வந்த ஒவ்வொரு நொடியும் ஆமை போல் ஊர்ந்து கொண்டே இருந்தது அவனுக்கு.  

பலவாறு யோசித்தான். ஒரு மகனாக தான் செய்ய வேண்டியது என்ன என்று ஆழ்ந்து சிந்தித்தான். ஒரு முடிவை எட்டினான். அதற்கான நாளுக்காய் காத்திருந்தான்.  

அந்த நாள் வந்தது. பொழுது விடிந்தது. இன்றைய நாளை நினைக்க வினோத்திற்கு சலிப்புத் தட்டியது. அதோடு மனம் பயத்தில் படபடத்துக்கொண்டே இருந்தது.  

படுக்கையிலிருந்து எழுந்து வந்தான். அவனுக்கு பரீட்சைக்கு படிப்பதற்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தங்கை பாடசாலைக்கு சென்று விட்டிருந்தாள். 

‘வினோத்து மதிய சாப்பாடும் சமைச்சி வச்சிருக்கன்.. அப்பாவுக்கு சுகமில்ல கொஞ்சம் அவரையும் எட்டி பாத்துக்க… நான் தோட்டத்துக்கு போயிட்டு வாறன்..’ என்று சொல்லி பையை எடுத்துக்கொண்டு அருந்ததி கிளம்பினாள்.  

வினோத் கிணற்றடியில் போய் உட்கார்ந்தான். காலை வெயில் சுளீரென சுட்டது. அந்தச் சூடு அவன் அடிவயிற்றில் புகைந்து கொண்டிருந்த நெருப்பில் வீழ்ந்து பற்றி எரிந்தது போல் ஆவேசமாக எழுந்தான். 

கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். தகப்பனின் அறை திறந்திருந்தது. எட்டிப் பார்த்தான் வினோத். சேகர் கட்டிலில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.  

வினோத் அறைக்குள் போய் சேகரின் கால்மாட்டில் அமர்ந்தான். வினோத் இப்படி வந்து அமர்ந்திருப்பதை பார்த்த சேகருக்கு பயம் தொற்றிக்கொண்டது.  

யாருக்கும் தெரியாவிடினும் மனச்சாட்சி என்ற ஒருவன் நம் கூடவே இருக்கிறானே. அவனுக்கு மறைத்து எதை தான் செய்து விட முடியும்?  

குனிந்திருந்த வினோத்தின் முகத்தை சேகர் பார்த்தான் தயக்கத்தோடு. எல்லாமோ அல்லது எதையோ தெரிந்து கொண்டு தான் மகன் வந்திருக்கிறான் என்பது மட்டும் சேகருக்கு உச்சி மண்டையில் சுத்தியலால் அடித்தது போல் விளங்கியது.  

வினோத் நிமிர்ந்தான். அவனுடைய அந்த பார்வையும் பார்வையில் தெரிந்த ஏமாற்றமும் தனது உயிரை உறிஞ்சி வெளியே துப்பியது போல் இருந்தது சேகருக்கு.  

‘த….தம்பி… வி..னோ…’ என்று சொற்கள் தடுமாறி பேச முடியாமல் நா தடுமாறியது சேகருக்கு. தான் செய்துவிட்ட தவறுக்காக சேகர் கலங்கவில்லை. அவனது குரூர மனம் அதை தவறென்றே உணரவில்லை. அது வெளியே தெரிந்துவிடக்கூடாது என்ற பயத்தில் தான் இவ்வளவு நாளும் யோசித்துக் கொண்டு திரிந்தான்.  

ஆனால் இப்போது அதை தெரிந்து கொண்டு வந்திருப்பவன் ஒரு மூன்றாம் மனிதனல்ல, அவன் பெற்ற பிள்ளை என்பதை உணர்ந்த அந்த நொடி சேகர் அவமானத்தில் கூனிக்குறுகி போனான். 

வினோத்திற்கு தகப்பனிடம் பேச தயக்கமாக இருந்தது. தன்னை பெற்று, கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து அன்பையும் அக்கறையையும் அள்ளி கொடுத்த ஈன்றவனை தான் எப்படி கேள்வி கேட்க முடியும்? 

ஆனால்.. அவன் செய்த காரியம்? அதை மன்னித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்சிசயோடு வாழ வேண்டுமே. தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். கைகள் நடுங்கியது அவனுக்கு. மெல்ல தகப்பனின் கால்களை பிடித்தான் வினோத். 

இதை சற்றும் எதிர்பாராத சேகர் மகனின் கைகளிற்குள் சிக்கிய தனது கால்களை வெடுக்கென இழுக்க முயன்றான். ஆனால் வினோத்தின் பிடி இறுகியது. 

தகப்பனின் காலை பிடித்துக்கொண்டு அழுதான் வினோத். எனக்கு எல்லாம் தெரியுமப்பா… ஏம்பா இப்பிடி செய்தீங்க…? இது வெளில தெரிஞ்சா…? அம்மாவுக்கு தெரிஞ்சா…?’ 

சேகர் எதையோ சொல்ல முயல, வினோத் அவனை பேச விடவில்லை. தகப்பனிடமிருந்து ஒரு வார்த்தையையும் அவன் கேட்க விரும்பவில்லை. 

சேகரின் காலைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்த வினோத் நிமிர்ந்தான். சிவந்த கண்களோடு தன்னைப் பார்க்கும் மகனைப் பார்க்க சேகருக்கு ஐம்புலனும் செயலிழந்து போனது போல் இருந்தது.  

16 வருடங்களுக்கு முன் தன் கைகளில் ஏந்திய தன் பிஞ்சு மகன் இன்று நெஞ்சை நிமிர்த்தி ஓர் ஆண்மகனாக வந்து நிற்கையில்தான் சேகர் தன் தவறை நினைத்து கூனிக்குறுகி போனான். 

எழுந்து மகனின் கையை பிடித்துக்கொண்டு அழுதான்„ ஏதோ புத்தி தடுமாறு இப்பிடி செய்திட்டன்.. உங்கம்மாவுக்கு தெரிஞ்சா.. ஊருக்குள்ள தெரிஞ்சா… நான் என்ன செய்வேன்.. ஐயோ…’ என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினான் சேகர். 

தன் கைகளை பற்றியிருந்த தகப்பனின் கைகளை உதறிவிட்டு. இப்ப கூட வெளிய தெரிஞ்சா என்ன செய்யிறது என்டுற பயம் தான்… நீங்க செஞ்சது சரியா அப்பா? ஏம்பா… அந்த பிள்ளயும் என் தங்கச்சி மாதிரி தான்பா.. அப்பா.. அந்த பிள்ள பாவமில்லையாப்பா.. அந்த நேரத்தில நீங்க பெத்த மகளோட ஞாபகம் கூட வரலயாப்பா உங்களுக்கு..’ என்று கேட்டு அழுதான் வினோத். 

தன் இச்சைக்கு பலியாக்க முயன்றபோது உயிரை விட்ட அந்த சிறு பெண்ணை இவன் தன் மகளோடு ஒப்பிட்டு பேச சேகருக்கு அவமானத்தில் உடல் சுருங்கிப் போனது.  

இச்சை தலைக்கேற எதையும் யோசிக்காமல் எப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டேன் என மனம் குற்ற உணர்ச்சியில் விம்மியது.  

சேகருடைய மகளை விட இரண்டு வயது பெரிய பிள்ளை அவள். வினோத்தை விட ஒரு வயது சிறியவள். பக்கத்து வீட்டு பிள்ளை. அடிக்கடி சேகர் வீட்டிற்கு வருவாள்.  

‘அங்கிள்.. அங்கிள்..’ என்று சேகரை உரிமையோடு கூப்பிடுவாள். தன் தந்தை போல் அவனையும் நினைத்தாள் அந்த சின்னவள்.  

ஆனால் சேகருக்கு ஆறு மாதங்களுக்கு முன் தான் பூப்படைந்து பருவ வயதின் அழகோடு மெருகேறி நின்ற அவள் மீது ஓர் அற்ப இச்சை. பல முறை அவன் தனிமையாக இருந்த நேரங்களில் அவள் வீட்டிற்கு வரும் போது தன் ஆசையை வெளிப்படுத்த முயன்று தோற்றுப் போனான். 

அப்படியிருக்கையில் தான் அவர்கள் ஊர் கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இடம்பெற்றது. இறுதி நாள் திருவிழாவில் அனைவரும் கோவிலில் இருக்க அன்றும் பட்டுப் பாவாடை தாவணியில் குமரியாய் நின்ற அவளை பார்க்க சேகருக்கு மனதில் ஓரத்தில் கிடந்த ஆசை கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. 

கோவிலில் அவன் கண் அவளை விட்டு அகலவில்லை. தாய் ஏதோ எடுத்து வரும்படி அவளை வீட்டிற்கு அனுப்ப அவளை மோப்பம் பிடித்து சேகர் பின்னாலேயே வீடு வந்து சேர்ந்தான்.  

மாலை நெருங்கி இருட்டி விட்டிருந்தது. சேகர் மெல்ல பக்கத்து வீட்டு கேற்றை திறந்து கொண்டு உள்ளே போனான். வீடு திறந்து கிடந்தது. சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டான். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். 

வீட்டினுள் போனான் அவள் இல்லை. ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்தான் அவளை காணவில்லை. வீட்டின் பின்பக்கம் போனான். அங்கே கிணற்றில் தண்ணீர் வாளியை நிரப்பி கயிறை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் அவள்.  

சேகர் போய் அந்த கயிற்றை பிடித்து இழுத்து வாளியை தூக்கினான். அவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்து சேகரை அங்கு கண்டதும் ‘ஐயோ அங்கிள் நீங்களா…? பயந்தே போயிட்டன்..’ என்று புன்னகைத்தாள்.  

சேகர் பதிலுக்கு புன்னகைத்துக் கொண்டு அவளை நெருங்கினான். ஆரம்பத்தில் அவனின் செயலின் அர்த்தம் புரியாத அவள் புரிந்த பின் உடைந்து போனாள். தன் தகப்பனை போல் எண்ணிய அவனிடம் அவள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.  

கெஞ்சினாள் தன்னை விட்டுவிடும்படி. ஆனால் அவனுடைய இச்சை தலைக்கேறியிருந்தது. அவன் தன் நீண்ட நாள் இச்சையை தீர்த்துக் கொள்வதில் குறியாக இருந்தான். அவளுடைய அழுகையோ கெஞ்சலோ அவன் காதுகளில் விழவேயில்லை.  

தப்பிக்க போராடினாள் முடியாமல் போகவே தன் ஆசைகள் கனவுகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு உள்ளம் கதறியழ அந்தக் கிணற்றில் குதித்தாள்.  

சேகர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் இப்படியே நின்றுவிட்டான். தன் ஆசை தீரவில்லை என்ற குறை ஒரு பக்கமும் யாரும் வந்து விட்டால் என்ன செய்வது என் பயம் ஒரு பக்கமும் அவனை வாட்டியது.  

கிணற்றினுள் எட்டிப் பார்த்தான். ஆழமான இருளை தவிர ஒன்றும் தெரியவில்லை. தயங்கியபடி நின்றவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.  

வேகமாக கோவிலை நோக்கி நடந்தவனின் மனமெல்லாம் ஏமாற்றம். கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்று மனம் கொதித்தது. கோவிலில் போய் ஒன்றும் தெரியாதவன் போல் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டான்.  

வீட்டிற்கு போன பிள்ளையை காணவில்லை. பிள்ளை வீட்டிலும் இல்லை கோவிலுக்கும் திரும்பி வரவில்லை. திருவிழா மகிழ்ச்சி யார் மனதிலும் ஒட்டவில்லை. ஊரே சேர்ந்து ஊர் ழுமுவதும் பிள்ளையை தேடினார்கள். மறுநாள் வீட்டின் கிணற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.  

என் பிள்ளை தற்கொலை செய்து கொள்ள மாட்டாள் என அந்த அப்பாவி சிறுமியின் தாய் கதறினாள். இருட்டு தானே கிணற்றில் தவறி விழுந்து விட்டாள் போலும் என்று தான் ஊரே பேசியது.  

எப்படியோ விபத்து அல்லது தற்கொலை என்று முடிவானதில் சேகருக்கு மனநிம்மதி. கொலை என்ற சிறிய சந்தேகம் வந்தாலே பொலிஸார் தோண்டி பிடித்து கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால் நிலைமை சேகருக்கு சாதகமாகவே இருந்தது. 

‘அப்பா…’ என்ற அதட்டல் குரலில் சுயநினைவிற்கு வந்தான் சேகர்.  

யாரும் கண்டு பிடிக்க வாய்ப்பே இல்லை என்று அவன் நிம்மதியாக இருக்க அவன் மகனே அதை கண்டுபிடித்து விட்டான் என்பதை சேகரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  

மகனின் முகத்தை பார்க்க முடியாமல் கூனிக்குறுகி போய் நின்றான் சேகர். 

வினோத்திற்கு கூட அவளின் மரணம் பெரும் கவலையை கொடுத்தது. தன் தங்கை போல் தான் அவளையும் அவன் நடத்தினான். அவளும் அவனைக் காணும் போதெல்லாம் ‘ஹாய் அண்ணா..’ என்று புன்னகைப்பாள். 

வினோத்திற்கு அதை நினைக்க நினைக்க தாங்கிக் கொள்ள முடியவில்லை.  

இருவரும் எதுவும் பேசவில்லை. அறை முழுவதும் மயான அமைதி.  

‘நீங்க எங்களுக்கு வேணாம்பா…’ அந்த அமைதியை கிழித்துக் கொண்டு வினோத்தினுடைய வார்த்தைகள் இடியென இறங்கியது சேகரின் காதுகளில்.  

‘அப்பா இந்த விசயம் வெளில தெரிஞ்சா நாங்க இந்த ஊரில் வாழ முடியாதுப்பா.. அம்மாவ ரொம்ப பிழையா கதைப்பாங்க.. தங்கச்சிய வாழ விட மாட்டாங்க.. அப்பன போல தான் பிள்ளயும் என்டு என்னையும் உங்கள மாதிரி கேவலமான மனுசனா தான் பாப்பாங்க..’ என்றான் வினோத். இதை சொல்லும் போது அவன் முகத்தில் ஒரு வித கடுமையை கண்டான் சேகர். 

மகனுடைய இந்த நிலை சேகருக்கு பயத்தை உண்டு பண்ணியது.  

உள்ளே மண்டியிட்டு அழும் தன் மனதை அடக்கி கொண்டு. கீழே விழுந்து சேகரின் கால்களை பிடித்துக் கொண்டு அழுதான் வினோத். 

‘அப்பா… வேற என்ன செய்யிற என்டு எனக்கு தெரியலப்பா.. நீங்க இருக்கிற வீட்டுல என்ர தங்கச்சிய வச்சிருக்கவும் பயமா இருக்குப்பா..’ என்று சொல்லி விம்மினான் வினோத். 

அந்த வார்த்தைகள் சேகரின் மனதை சுக்குநூறாக நொறுக்கியது. சேகர் ஒன்றும் பேசவில்லை. சிலை போல் அப்படியே நின்றான்.  

கண்ணீரைத துடைத்துக் கொண்டு எழுந்தான் வினோத். அறைக்கதவை நோக்கி நடந்தான். கடைசியாக ஒரு முறை தகப்பனை திரும்பி பார்த்தான். வெறுமையாக உறைந்து போய் நிற்கும் தன் தகப்பனை பார்க்க அவனால் தாங்க முடியவில்லை.  

வேகமாக அங்கிருந்து வெளியேறினான். ஒரு சேட்டை எடுத்து போட்டுக் கொண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினான். வாசல்படியை அவன் தாண்ட சேகர் தனது அறைக்கதவை தாழிடும் சத்தம் வினோத்தின் காதுகளில் கேட்டது.  

அவனால் அங்க நிற்க முடியவில்லை. கால்கள் வலுவிழந்தது. நிற்க தெம்பில்லை. அங்கிருந்து வேகமாக வெளியேறினான். வழமையாக தோட்டத்தில் போய் அமர்ந்திருந்துதான் படிப்பான். தோட்டத்தை நோக்கி நடந்தான்.  

வழியெங்கும் ‘அப்பா… அப்பா..’ என மனம் கதறியது. 

தோட்டத்திற்கு போனான். அம்மா கேட்டால் என்ன சொல்வது என்று மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.  

ஆனால் அவனது தாய் அங்கு இருக்கவில்லை. அவள் ஏற்கனவே அங்கிருந்து கிளம்பிவிட்டிருந்தாள்.  

புத்தகத்தை விரித்துக் கொண்டு அமர்ந்தான். மனம் புத்தகத்தில் நிலைக்கவில்லை. வினோத்தின் மனம் சேகரின் அறையை விட்டு வெளியே வரவில்லை. அங்கேயே நின்று கொண்டு ‘அப்பா.. அப்பா..’ எனகதறிக் கொண்டிருந்தது.  

அரைமணி நேரம் கடந்திருந்தது. தூரத்தில் வினோத்தின் பெயரை சொல்லி அழைத்துக் கொண்டு ஒரு சிறுவன் ஓடி வந்தான். வினோத்திற்கு ‘ஐயோ…’ என்றிருந்தது.  

‘அண்ணா உங்கம்மா வரட்டாம்… உங்க அப்பா தூக்கில தொங்கிட்டாரு…’ என்றான் வந்தவன் மூச்சிரைக்க.  

புத்தகத்தை பற்றியிருந்த வினோத்தின் கைகள் இறுகியது. புத்தகங்களை அங்கேயே போட்டுவிட்டு எழுந்து ஓடினான் வினோத். 

வீட்டை நெருங்க நெருங்க அவனது தாயின் கதறல் காற்றோடு அவன் காதுகளில் இரைச்சலோடு இறங்கியது. அந்த இரைச்சலோடு அவன் மனமும் ‘அப்பா.. அப்பா..’ என்று ஓலமிட்டது.