விளையாடும் அரசியல் வணிகர்கள்; வேடிக்கை பார்க்கும் மக்கள் 

விளையாடும் அரசியல் வணிகர்கள்; வேடிக்கை பார்க்கும் மக்கள் 

— கருணாகரன் — 

இலங்கை நன்றாகக் குழம்பிவிட்டது. (அல்லது யாரோ குழப்பிவிட்டார்கள்!) ஏறக்குறையப் பைத்தியம் முற்றிய நிலையில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இப்போதைக்கு முடிவில்லை. பெரும்பாலான சனங்களுக்கு என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது என்றே தெரியவில்லை. “ஏதோ நடக்கிறது நடக்கட்டும். இதில் நாம் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய இயலும்?” என்று சிலர் நினைக்கிறார்கள். 

முதலில் பொதுஜன பெரமுனவே பிழையானது. அதன் தலைமைப்பீடம் மோசமானது. ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் மகிந்த உள்பட அத்தனை ராஜபக்ஸக்களும் குற்றவாளிகள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதற்கெதிராகத் திரண்டவர்கள் ராஜபக்ஸவினரை விரட்டிவிட்டனர். 

அதிகப்படியான மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் மக்கள்(?) எதிர்ப்பு நடவடிக்கை மூலமாகப் பதவி விலக்கப்பட்டுள்ளனர். அதாவது ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பலவந்தமாகப் பதவியிறக்கப்பட்டனர். 

இதற்குச் சொல்லப்படும் காரணம் – 

அ) மக்கள் முன்னர் வழங்கிய ஆணையைத் திரும்பப் பெற்றுவிட்டார்கள். 

ஆ) மக்கள் ஆணையை சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதை மதிக்காமல், மக்களுக்கும் நாட்டுக்கும் பாதகமாக அதிகாரத்துடன் இவர்கள் நடந்து கொண்டனர் என்பதாகும். 

அவர்கள் அதிகாரத்தை விட்டு, பதவியை விட்டுப் போன பிறகு நிலைமை சீரடைந்ததா என்றால் இல்லவே இல்லை. பதிலாக மேலும் குழப்பங்களே நீடிக்கின்றன. இப்பொழுது பொருளாதார நெருக்கடியோடு அரசியல் நெருக்கடியும் சேர்ந்துள்ளது. 

உண்மையில் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசியல் ஒருங்கிணைப்பு நடந்திருக்க வேண்டும். மக்களையும் நாட்டையும் பற்றிச் சிந்தித்திருந்தால் அந்த ஒருங்கிணைப்பு நடந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பதிலாக அரசியற் குழப்பங்கள், கோணங்கித்தனங்களே மிஞ்சியுள்ளன. 

இதைப்பற்றி நாம் அதிகம் விவாதிக்காமல் நாட்டின் பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்தின் இயலாமை, மக்களின் உணர்ச்சிகரச் செயற்பாடுகள், கட்டளைப் பீடங்களாகச் செயற்படும் பிராந்திய – சர்வதேச (மேற்குலக) தூதரகங்களின் நேரடி, மறைமுக நடவடிக்கைகள் எல்லாவற்றையும் கணக்கிற் கொண்டு பார்த்தால் அடுத்து என்ன நடக்கும்? என்பது எளிதில் விளங்கும். 

அடுத்து நடக்கப்போவதும் குழப்பம். குழப்பம். குழப்பமே. 

ஜனாதிபதி பதவி விலகியதால் இடைக்கால ஜனாதிபதி ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அதைச் சாதாரணமாகவே செய்திருக்க முடியும். அப்படித்தான் செய்திருக்கவும் வேணும். 

ஏனென்றால் நாடு இருக்கின்ற நிலைமை அப்படியான கட்டம். தாய் மரணப்படுக்கையில் இருக்கும்போது பிள்ளைகள் சொத்துக்கு அடிபடுவதைப்போல நாட்டு மக்கள் எல்லாவற்றுக்காகவும் நெருக்கடியைச் சந்தித்துத் தெருவிலும் இருளிலும் இருக்கும்போது இவர்கள் பதவிக்காக அடிபடுகிறார்கள். 

இதைப் பார்க்கின்ற சனங்களுக்கு வெறுப்பு வருகிறது. அவர்கள் காறி உமிழ்கின்றனர். 

இப்படியே ஆளாளுக்கு –தரப்புக்கு தரப்பு ஒவ்வொரு விதமாக எண்ணிக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். நிலைமையோ வரவர மோசமாகிக் கொண்டிருக்கிறது. நாடும் மக்களும் ஏறக்குறைய கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட நிலை. 

இருந்தாலும் சனங்களில் பலரும் அவர்களை அறியாமலே நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை. தங்கள் வாழ்க்கை அழிவதையும் அழிக்கப்படுவதையும்தான் தாம் வேடிக்கை பார்க்கிறோம் என்று. இந்த அறியாமையின் துயரத்தை எப்படி விளக்குவது? என்று தெரியவில்லை. 

மேலும் நடக்கின்ற சம்பவங்கள் (அரசியல் நாடகம் அல்லது அரசியற் கூத்து) எப்படி என்று பாருங்கள். 

உண்மையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தபோது உடனடியாக அதைச் சீராக்கும் நடவடிக்கையில் பாரபட்சங்கள், கட்சி வேறுபாடுகள், நலன்கள் எல்லாவற்றையும் கடந்து அனைவரும் சிந்தித்திருக்க வேண்டும். உடனடியாக மீட்பு நடவடிக்கையில் கூட்டாக அனைவரும் இயங்கியிருக்க வேண்டும். இறங்கியிருக்க வேண்டும். அதையே மக்கள் எதிர்பார்த்தனர். இந்தப் பத்தியாளர் கூட தொடர்ச்சியாக இதை வலியுறுத்தி வந்திருக்கிறார். 

ஆனால் அப்படி யாருமே சிந்திக்கவில்லை. அப்படி யாரும் செயற்படவும் இல்லை. நாட்டில் என்னதான் நெருக்கடி வந்தாலும் பரவாயில்லை. மக்கள் எந்தளவு கஸ்ரங்களைச் சந்தித்தாலும் பரவாயில்லை. நாம் நம்முடைய நலன்களில் கவனமாக இருக்க வேண்டும். அப்படித்தான் இருப்போம் என்றே செயற்படுகிறார்கள். 

“நாட்டு நிலைமை நினைத்துச் சிரிப்பதற்கும் அழுது வாழ்வதற்கும் ஏற்ற மாதிரி இருக்கிறது. ஆட்சியாளர்கள், கட்சிகள், அவற்றின் தலைவர்களில் தவறே இல்லை. அவர்கள் வணிகர்கள். சரியான முறையில் தங்கள் தொழிலைச் செய்கிறார்கள். மக்கள்தான் எப்போதும் தவறு விடுகிறார்கள். அவர்கள்தானே இந்த அரசியல் வணிகர்களை – தந்திரசாலிகளை வளர்த்தவர்கள். 

ஆகவே வளர்த்த கடாக்கள் மார்பில் பாயும்போது அதைத் தாங்கத்தான் வேணும்” என்றொரு நண்பர் காலையில் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். 

அவர் சொன்னதில் என்ன தவறிருக்கிறது?மக்களாகிய நாம் சரியாக இருக்காத வரையில் இந்த அரசியல் வணிகர்கள் நம்மை, நம்முடைய மகிழ்ச்சியை, நம்முடைய துக்கங்கள் எல்லாவற்றையும் வியாபாரம் செய்து கொண்டேயிருப்பார்கள். கண்ணீரையும் புன்னகையையும் விற்கத் தெரிந்தவர்கள் அல்லவா இவர்கள். 

என்பதால் இனியாவது கொஞ்சம் விழிப்போம். ஏமாறாதிருக்க முயற்சிப்போம்.