காலக்கண்ணாடி – 93 காகமும் வடையும் நரியும்..!

காலக்கண்ணாடி – 93 காகமும் வடையும் நரியும்..!

      ~~~ அழகு குணசீலன்  ~~~

பறவைகளில் தந்திரமானது காகம்.

மிருகங்களில் தந்திரமானது நரி.

பாலர் வகுப்பில் படித்த ஞாபகம்.

வடை ஒன்றைப் பறித்துக்கொண்ட காகம் மரமொன்றில் இருந்ததாம்.

கீழே வந்த நரி அதைக் கண்டதாம்.

“காக்கையரே காக்கையரே உங்கள் அழகான குரலில் கா… கா…. என்று பாடுங்கள் பார்ப்போம் என்றதாம்.

காக்கையரோ சொண்டைத் திறந்து பாடத்தொடங்க  வடை நிலத்தில் விழ, நரி வடையை கௌவிக்கொண்டதாம் .
 
இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் சஜீத் தலஸ் காகத்தை ரணில் நரி ஏமாற்றிய கதை இது.

இலங்கை  இடைக்கால ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊதிதித்தள்ளிய ஊடகங்களுக்கும், நேர்காணல் என்ற பெயரில் அளந்து கொட்டிய அரசியல்வாதிகளுக்கும், அரசியல் அறிவுமயப்படுத்தப்படாத அப்பாவி மக்களுக்கும், ஏன்? காலிமுகத்திடல் போராட்டக்கார்களுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்யப்பட்டுள்ளது. 

ஆம்….! ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக அரசியல் அமைப்பு சட்ட நடைமுறைகளுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் அமைவாக, பெரும்பான்மை வாக்குகளால், அமைதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இதை விடவும் பாராளுமன்ற அரசியலில் வேறு என்ன ஜனநாயக நடைமுறை இருக்கமுடியும்? இது ஒரு புரட்சிப் பாராளுமன்றம் என்றால் அது வேறு விடயம்.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைப் பாராளுமன்றத்தில், இருவர் வாக்களிக்கவில்லை , நான்கு வாக்குகள் செல்லுபடியற்றவை. (225 – (2 + 4) = 219) அளிக்கப்பட்ட செல்லுபடியான 219 வாக்குகளில் ரணிலுக்கு கிடைத்தது 134 வாக்குகள். வேட்பாளர் தலஸ் 82 வாக்குகளையும், அநுரகுமார 3 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள்.

145 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுஜன பெரமுனவில் ஒரு பகுதியினர் பிரிந்து நின்றபோதும் ஒரேயொரு வாக்கைக்கொண்ட ரணில் 134 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால் இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன. எங்கிருந்து வந்தன என்பதை விடவும் எங்கும் போகவில்லை. பிரிந்து போனவர்கள் மட்டும் அல்ல எதிர்தரப்பில் இருந்தும் ரணிலுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. 

54 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் உட்பட 11. ஆக மொத்தம் 65. எனவே மிகுதி 17 வாக்குகள் மட்டுமே  தலஸ்ஸின் வாக்குகள்.  இது முற்று முழுதாக சரியான கணிப்பீடல்ல ஒரு குத்துமதிப்பு. ஏனெனில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் குறுக்கும், மறுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஆக, ராஜபக்சாக்கள் ஆட்சியில் இருக்கிறார்களோ இல்லையோ அவர்களின் கட்டுப்பாட்டிலேயே பாராளுமன்றம் உள்ளது.

இலங்கை அரசியலில் ஒரு “நரி” என்று அழைக்கப்படுகின்ற ரணிலின் இந்த வெற்றியின் மறுவாசிப்பு என்ன? இரகசியம் என்ன?  

தலஸ் அழகப்பெருமாவும், சஜீத் பிரேமதாசாவும் ஆளை ஆள் நம்பி கிடைக்கக்கூடிய வாக்குகளை தப்புக்கணக்கு போட்டதின் விளைவு ரணில் ஜனாதிபதி. தலஸ் அழகப்பெரும நாடறிந்த, அனுபவம்கொண்ட, ஆளுமையுள்ள, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட அரசியல்வாதி அல்ல. பழகுவதற்கு நல்ல மனிதர். எதையும் அவரோடு பேசலாம், விவாதிக்கலாம் என்பதெல்லாம் அரசியல் தலைமைத்துவம் குறித்த பார்வையில் பயனற்றவை. தலைமைத்துவ ஆளுமையை மதிப்பிடும் குறிகாட்டிகள் அல்ல. இதை நன்கு அறிந்தவர்கள் இலங்கையின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள். அதனால் அவர்கள் தங்கள் பாஷையில் வாக்குச்சீட்டால் பதிலளித்திருக்கிறார்கள். 

ஜி.எல்.பீரிஸின் கயிற்றை தலஸ் அழகப்பெரும விழுங்காமல் இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ரணில் ஜனாதிபதியானால் தனது ஆதிக்கம், பொதுஜன பெரமுன தலைமைத்துவத்தில் மட்டும் அல்ல தனது பிரதமர் கனவும் பகல் கனவு என்பதை அறிந்ததால் பீரிஸ் தனக்கு மட்டும் அல்ல சிலவேளைகளில் தலஸ்க்கு கிடைக்கக்கூடியதாக இருந்த பிரதமர் பதவியையும் கெடுத்துவிட்டார். இது காகத்திடம் இருந்து வடையைப் பறிக்க நரிக்கு வாய்ப்பானது. 

இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் இரு பலவீனமான எதிர்கட்சித் தலைவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஒருவர் இராஜவரோதயம் சம்பந்தர். மற்றவர் சஜீத் பிரேமதாச. சஜீத் மிகப் பலவீனமான அரசியல் வாதி. அவர் வாயால் வடை சுடுகின்ற அளவுக்கு அவரிடம் அரசியல் துணிவும், அரசியல் உறுதியும் இல்லை. மிகவும் தளம்பல் நிலைப்பாடு கொண்டவர். இலங்கையின் இன்றைய பொருளாதார, அரசியல் நெருக்கடிச் சூழலில் அவர் தன்னை ஒரு சரியான தலைமைத்துவமாக வெளிக்காட்டத் தவறி விட்டார். கொரோனா காலத்திலும் வெறும் வாய்ச்சவடால்களையே அவரால் விடமுடிந்தது.

மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற, சவால்களை ஏற்றுக்கொண்டு எதிர் நீச்சல் அடிக்கின்ற துணிச்சல் அவரிடம் இது வரை வெளிப்படவில்லை. பதவியை என்னிடம் தாருங்கள் என்று கரையலாம், அதைத் துணிந்து பொறுப்பேற்க முன்வரவேண்டும். அந்தத் துணிவு அவருக்கு இருந்திருந்தால் கோத்தபாயா ரணிலைப் பிரதமராக்கவேண்டிய தேவை இருந்திருக்காது.

நாட்டின் இக்கட்டான சூழலில் பொறுப்புக்களை ஏற்க சஜீத் தயங்குகிறார். எதிர்கட்சி தலைமை என்ற வகையில் ராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு எதிராக அவரால் ஒரு துரும்பைக்கூட நகர்த்த முடியவில்லை என்பதை பாராளுமன்றமும், காலிமுகத்திடலும் நன்கு அறிந்தே இருந்தன. அதனால்தான் காலிமுகத்திடலில் மூக்குடைபட நேர்ந்தது.  
 
ஜனாதிபதி வேட்பாளர் நிலைப்பாட்டில் இருந்து வாபஸ் பெற்றது நாட்டின் நலன்கருதியது என்றும், தான் செய்திருக்கின்ற மிகப்பெரிய தியாகம் என்றும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் அவர் ஒரு முன்மாதிரி என்றும் அவரும், ஆதரவாளர்களும் தேசத்தின் தியாகச் செம்மலாக சிலைவைக்கும் பாணியில் பேசுவதில் எள்ளளவும் உண்மையில்லை. சஜீத் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றியையும் , தோல்வியையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கோளை என்பதையே அவர் ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து பின்வாங்கியது காட்டிநிற்கிறது.

முதலீடு ஒன்றிற்கான இலாபம் அதற்குள்ள ஆபத்தைக் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.  முதலீட்டிற்கான ஆபத்து அதிகரிக்க, அதிகரிக்க இலாபம் அதிகரிக்கும். ஆனால் சஜீத் றிஷ்க் இல்லாமல் வைத்தமடையில் கும்பிட விரும்புகிறார். தலஸ் ஜனாதிபதியானால் அப்படியே எந்த இழப்பும் இன்றி பிரதமர் பதவி தங்கத்தாம்பாளத்தில் கிடைக்கும் என்பதே அவரின் மிகப்பெரிய பலவீனம். கனவு .

நிட்சயமற்ற, துணிச்சலற்ற, உறுதியற்ற தலைவர்கள் இலங்கை போன்ற ஒரு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த, பூகோள அரசியல் நாட்டின் தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர்கள். ராஜபக்சாக்கள், ரணில் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளபோதும் அவர்கள் பயந்தாங்கொள்ளிகளாக இருந்த தில்லை. உலகமே ரணில் தோற்பார் என்று எதிர்பார்த்த போது துணிந்து களத்தில் நின்ற ரணில் தலைமைத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. காலிமுகத்திடல் வன்முறைகளால் அவர் பாதிக்கப்பட்டபோதும் அதை எதிர்கொண்டார்.

ஒரு உதாரணம்: இடைக்கால ஜனாதிபதி தேர்வுக்கு சில தினங்கள் இருக்கையில் உலகபஞ்சம், பட்டினி மாநாட்டில் ரணில் ஆற்றிய உரையின் ஒருபகுதி இது .
 
“மேற்குலகம் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் அதனை மண்டியிடச் செய்ய முடியாது. இது மூன்றாம் உலக நாடுகளையே மண்டியிடச் செய்யும். ரஷ்யாவும், உக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு முன்வரவேண்டும். உக்ரைன் போரால் முழு உலகையும் பயணக் கைதிகளாக வைக்கமுடியாது” அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் முகத்தில் அடித்ல் போன்றது இந்த உரை. இதுவரை இவ்வாறான ஒரு நேரடியான கருத்தை மேற்குலகை நோக்கி இந்தியா கூட சொல்லவில்லை. இது ரணிலின் சர்வதேச தரத்திலான தலைமைத்துவப் பண்பு. இதற்குப் பெயர்தான் தலைமைத்துவம்.

இடைக்கால ஜனாதிபதி தேர்வில் தமிழ்த்தேசியத் தரப்பினர் வழக்கத்திற்கு மாறாக எதையும் செய்யவில்லை. ஒரு நாடு இரு தேசம் எதிர்பார்த்தது போன்று வாக்களிக்கவில்லை. (இரு வாக்குகள்) தமிழ்தேசிய கூட்டமைப்புடன் ரணில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டிருக்கிறார். சஜீத், தலஸ் நேரடியாகச் சென்று சந்தித்திருக்கிறார்கள். தலஸ் அழகப்பெருமாவுக்கு வாக்களிக்கும் முடிவை சித்தார்த்தன் அறிவித்திருக்கிறார். எப்போதும் அறிவிப்புக்களை விடும் சுமந்திரன் அடக்கி வாசித்தது ஏன்?  

ரணிலோடு பின்கதவால் உறவு கொள்ளும் தந்திரமாகவும் இருக்கலாம். இணக்க அரசியல் சாணக்கியமற்று வெறுமனே ராஜபக்சாக்களுடனானதும், ரணில் உடனானதுமான தனிப்பட்ட கோபத்தைக் காட்ட சுமந்திரன் சாணக்கியனைப் பயன்படுத்தினார். ஐரோப்பாவில் சாணக்கியனுக்கு முன்னாள் மூத்த போராளிகள் “அரசியல் வகுப்பு” எடுத்தபின் அவரை” மல்லி பொட்டக் ஹட்ட வகண்ட” என்று சொன்னதாக ஒரு கதை. ஐயா விக்னேஸ்வரன் தன் வாக்கை தலஸ்க்கு அர்ப்பணம் செய்துள்ளார் .
வழக்கம் போல் சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுக்கும் தமிழ்த்தேசிய அரசியல் மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்துள்ளது. 
சஜீத்துடனான பேச்சில் அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கம், அல்லது அவர்களின் வார்தைகளில் “சமஷ்டி” எதுவும் பேசப்படவில்லை. இவர்கள் தலஸ்க்கு வாக்களிக்க முடிவு எடுத்த செய்தி இரவோடிரவாக நள்ளிரவில் ரணிலை எட்டியிருக்கிறது. உடனடியாக செயலில் இறங்கிய ரணில் சிங்கள பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை இச் சந்திப்பைக் காட்டி ஹரீன் பெர்ணாண்டோ ஊடாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். 

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முக்கியமான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு. காலத்தை வீணடிக்கிறது. முடிவுகளை நேரகாலத்தோடு எடுத்து அது வெளியானால் சிவில் அமைப்புக்கள் களத்தில் இறங்கி விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். “சாம் கோ கோம்” குறித்த அச்சம் அவர்களுக்கு உண்டு. ஏற்கனவே இரு சிவில் அமைப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்து இவற்றை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்காது விட்டால் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடாது என்ற கோரியிருந்தனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எப்போதும் போன்றே இப்போதும் கிடப்பில் போட்டுவிட்டது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு ரணில் வீட்டு பின்கதவு தான் இவர்களுக்கு திறந்திருக்கும். வாயிலில் கடிநாய் கவனம்….!  
  
புதிய ஜனாதிபதி சகல தரப்பினருக்கும்  ஒத்துழைப்புக்கான அழைப்பை விடுத்துள்ளார். இது சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருக்கலாம். இங்கு சஜீத்தின் நிலைப்பாடு என்ன? அவரது கட்சி சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கு கொள்ளுமா இல்லை ஒத்துழையாமை செய்யுமா?  ரணிலோடு ஒத்துழைக்க மற்றக் கட்சிகளும் மறுத்தால் பழையதே புதியது. புதியதே பழையது .

அவ்வாறான சூழலில் பொதுஜன பெரமுன மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபித்திருக்கின்ற நிலையில் பிரதமர், முதல் அமைச்சரர்கள் வரை அவர்களே பொறுப்பேற்க வேண்டிவரும். தலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ் ரணிலுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால் பிரதமர் பதவிக்கு வாய்ப்புண்டு. இல்லையேல் அடுத்த பிரதமர் தேர்வு தினேஷ் குணவர்தன. சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ்த்தேசியம் என்னமுகத்தோடு அமைச்சுப்  பொறுப்புக்களை ஏற்பது…?

காலிமுகத்திடலின் ஜனநாயகப் போராட்டங்கள் , வன்முறையாக மாறாமல் இருக்கும் வரை அதன் ஆயுள் நீடிக்கும். கடந்த காலங்கள் போன்று வன்முறைகள் ஆரம்பித்தால் ரணிலின் தந்திரோபாயங்கள் பதிலாக அமையும். இது மேலும் மேலும் வன்முறைக்கே வழிவகுக்கும்.

பாராளுமன்றத்தின் சட்டரீதியான ஜனநாயகத் தன்மைக்கு மதிப்பளித்து முதலில் சமகால பொருளாதார நெருக்கடிக்கு அத்தியவசிய தீர்வுகளைக் காண்பதற்கான கால அவகாசம் புதிய தலைமைக்கு தேவையாகும். அதனை பாராளுமன்றமும், காலிமுகத்திடலும், மக்களும் வழங்கவேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக செயலில் சகல தரப்பும் இணைந்து செயற்பட வேண்டிய காலம் இது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும்வரையும், மீத முள்ள இரு ஆண்டுகாலத்திலும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வை அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றின் ஏற்படுத்துவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் சில தடைகள் ஏற்படலாம். இதற்கு ரணில் ஆட்சியை மட்டும் பொறுப்பு சொல்ல முடியாது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சாணக்கியமற்ற அரசியல் முடிவுகளுக்கான பொறுப்பில் இருந்த விலகமுடியாது . 
ஒட்டு மொத்தத்தில் துரத்தியவர்களே கோத்தபாயாவுக்கு வெற்றிலை வைத்திருக்கிறார்கள். வெகு விரைவில் கோத்தபாயா முன்னாள் ஜனாதிபதியாக நாடு திரும்புகிறார் .  

மகிந்த, நாமல் ராஜபக்சாக்கள் அரசியலில் தொடர்வார்கள். 

நன்றிக்கடன் செலுத்துவார் ரணில் .

ஜனநாயகம், அகிம்சை பேசி வன்முறையை வளர்த்து விட்டதன் அறுவடை . 

இது தப்புக் கணக்குக்கான விடை..!