— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களுக்கு 15.06.2022 அன்று வழங்கிய செவ்வியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஆட்சி மாற்றமேற்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுதந்திர இலங்கையில் கடந்த 74 வருடங்களாக ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் யாவும் தலைவலிக்கு மருந்து தலையணையை மாற்றிய விடயமாக நடந்துள்ளதே தவிர தலைவலி தீரவில்லை.
இன்று இலங்கைத் தமிழர்களுக்கு-இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குக் குறைந்தபட்சமாவது சமூக பொருளாதார அரசியல் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருப்பது 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமே. இது ஆட்சி மாற்றங்களினால் ஏற்பட்டதொன்றல்ல. இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்டதொன்றாகும். அதற்கான புறச் சூழலைத் தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டமும் ஆயுதப்போராட்டமும் அவற்றின் சரி-பிழைகளுக்கு அப்பால் பலம்- பலவீனங்களுக்கப்பால் ஏற்படுத்தித் தந்தன. இந்த யதார்த்தத்தைத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.
ஆனால், இன்று இலங்கையில் எதிர்வு கூறப்படும் அல்லது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் பிறிதொரு பரிமாணத்தையுடையது. நாட்டிலே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அதன் பக்க விளைவாக அரசியல் நெருக்கடிகளையும் உருவாக்கி உடனடி ஆட்சி மாற்றத்தையும் வேண்டி நின்றது.
இதன் அடிப்படையில் 09.04.2022இல் காலி முகத்திடலில் ஆரம்பித்த போராட்டம் பல படிகளைத் தாண்டி 09.07.2022 அன்று உக்கிரமடைந்து இறுதியில், “இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே ஆகிய நான் இலங்கைக்கு வெளியே இருப்பதன் காரணமாக ஜனாதிபதி பதவிக்குரிய தத்துவங்கள் கடமைகள் மற்றும் பணிகளை பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் இயலாது என கருதுவதனால் நான் இலங்கைக்கு வெளியே இருக்கும் கால எல்லைக்குள் ஜனாதிபதி பதவியின் தத்துவங்கள் கடமைகள் மற்றும் பணிகளை பிரயோகிப்பதற்கும் புரிவதற்குமாக இலங்கை ஜனநாயக குடியரசு அரசியல் அமைப்பின் 37 (01) ஆம் உறுப்புரையின் கீழ் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை 2022 ஜூலை மாதம் 13ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்குவருமாறு இத்தால் நியமிக்கின்றேன்” என்ற வர்த்தமானி அறிவித்தலில் வந்து தரித்து இறுதியாக கோட்டபய ராஜபக்சே தனது ஜனாதிபதி பதவி விலகல் (14.072022) கடிதத்தைச் சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி அது சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பு விதிகளின் படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 15.07.2022 அன்று பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணமும் செய்துகொண்டார். ஜனாதிபதிப் பதவியின் மீதிக் காலத்துக்குரிய நிரந்தர- புதிய ஜனாதிபதியைப் பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயிருந்து தேர்ந்தெடுக்கும பொறுப்பு பாராளுமன்றத்தின் தலையில் வந்து விழுந்திருக்கிறது.
ஆட்சி மாற்றம் எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு நகர போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் எதனைச் சொன்னாலும் யாவும் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு விதிகளின் படியே நடைபெறும். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ள சர்வ கட்சி அரசாங்கம் எவ்வாறு என்ன வடிவத்தில் அமையும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அதனையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜனாதிபதி கோட்டபய பதவி விலகிய பின்னரும் கூடப் பாராளுமன்றத்தில் பொது ஜனப் பெரமுனைக் கட்சியினருக்கே பெரும்பான்மை நிலவுகிறது என்பதால் பொது ஜனப் பெரமுனைக் கட்சியினர் ஆதரிக்கும் ஒருவரே புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் அதனைத் தொடர்ந்து அப்புதிய ஜனாதிபதியால் நியமிக்கப்படப்போகும் பிரதமரும் பொது ஜனப் பெரமுனைக் கட்சியினர் ஆதரிக்கும் ஒருவராக இருப்பதற்குமே சாத்தியமுண்டு. சர்வ கட்சி அரசாங்கம் அமைவது தற்போதைய நிலையில் கேள்விக் குறியாகவே உள்ளது.
ஆனால், எந்த ஆட்சி மாற்றமும் பொருளாதார நெருக்கடிக்கு எப்படி? எத்தகைய? தீர்வைக் காண போகிறது என்பது ‘மில்லியன் டாலர்’ கேள்வி.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த ஆட்சி மாற்றத்தையும்- ஆட்சி மாற்றம் நிகழும் நிலைமாறு காலத்தையும் (Transitional Period) தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களைத் தக்கவைத்து எப்படி முன் கொண்டு செல்லும் வகையில் எப்படி அரசியல் தந்திரோபாயத்துடன் கையாள வேண்டுமென்பதே அக்கறைக்குரியதாகும்.
இந்த அக்கறை தமிழர் தரப்பு அரசியல் சக்திகளிடம் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இருக்கிறதா? என்பதே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்/ தமிழ்க் கட்சிகளின் கூட்டங்களில் கலந்து கொள்வதை விட அதிகமாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடனான சநதிப்புகளிலுமே அதிகமாகக் கலந்து கொள்கிறார். இது தமிழர்களுக்கு ஆபத்தானது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூட வந்த குரங்குதான் ஆண்டால் என்ன? கோட்டபய பதவி விலகினால் மட்டும் போதும் என்றில்லாமல் மீதிக்கால (இடைக்கால) ஜனாதிபதியாக வருபவர் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை அனுசரித்துப் போகிறவராகவும் -கைவசம் இருக்கின்ற பதிமூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதில் அரசியல் விருப்புக் கொண்டவராகவும்- இந்த விடயத்தில் இந்தியாவை அனுசரித்துப் போகிறவராகவும் இருப்பதே தமிழ் மக்களுக்குச் சாதகமானது என்பதைக் கருத்திலெடுத்துச் செயற்படவேண்டும். இதற்கான இராஜதந்திர நகர்வுகளை இப்போதிருந்தே மேற்கொள்ளுமாறு தமிழ் மக்களிடையேயுள்ள கல்விமான்களும், துறைசார் நிபுணர்களும், அரசியலாளர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழுத்தமும்-ஆலோசனைகளும்-அனுசரணையும் வழங்க வேண்டியது அவசியம். அப்போதுதான் உத்தேச ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களுக்கு ஏதும் ஆகும்.
அவர் வேண்டாம் இவர் வேண்டாம் என்று சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்று கும்பலிலே கோவிந்தாப் போடும் முட்டாள்த்தனமான செயற்பாடுகளைத் தமிழர் தரப்பு கைவிட வேண்டும்.
இரா.சம்பந்தனும் தனது வழமையான தன்னலம்-தலைக்கனம் -தன்முனைப்பு என்பவற்றை இத்தருணத்திலாவது களைந்து தமிழ் அரசியல் பொது வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் சகல தமிழ் அரசியற் சக்திகளையும் (அதிகாரப் பகிர்வு இயக்கம் உட்பட) அணைத்துக் கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொள்வாரேயானால் தமிழ் மக்களுக்கு அது மிகுந்த பலனளிக்கும்.
இது விடயத்தில் அதிகாரப் பகிர்வு இயக்கம் தயாரித்துள்ள ‘அரசியலமைப்பின் 13வது அரசியல் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழிகாட்டி’ (A GUIDE FOR FULL IMPLEMENTATION OF THE 13TH AMENDMENT) எனும் தலைப்பிலான ஆங்கில மொழி மூல ஆவணம் சிறந்த வழிகாட்டியாகும்.
தடைகளையெல்லாம் தாண்டி சர்வகட்சி அரசாங்கம் அமையுமானால், இந்த ஆவணத்தின் உள்ளடக்கத்தை அமுல் செய்வதை நிபந்தனையாக விதித்து அதற்குக் காலக்கெடுவும் கொடுத்து உத்தேச சர்வ கட்சி அரசாங்கத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் பங்காளர்களாக இணைந்து கொள்ள முன்வர வேண்டுமென்று இப்பத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் வேண்டிக் கொள்கிறது.