‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-20) 

 ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-20) 

              — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —  

‘கடந்த 74 ஆண்டுகளாக தமிழ் மக்கள் விடுக்கும் வேண்டுகோள் அதிகாரப்பகிர்வு மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதே. அதனை புதிய அரசமைப்பின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேவேளை அரசு, அரசமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அது பழைய அரசமைப்பில் புதிதாக ‘பச்’ போடுவதாகவோ அல்லது ‘ரிங்கரிங்’ செய்வதாகவோ இருக்கக் கூடாது. அரசமைப்புத் திருத்தம் அன்றி முழுமையான புதிய அரசமைப்பொன்றே அவசியமாகிறது’. (‘ஈழநாடு’ 04.06.2022) 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளதாக மேற்படி ‘ஈழநாடு’ச் செய்தி கூறுகின்றது. 

முதலில், சுமந்திரனிடம் ஒரு கேள்வி. 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வீட்டுக்குப் போகச் சொல்லும் சுமந்திரன் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தைக் காரசாரமாக எதிர்க்கும் சுமந்திரன் இனப்பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பை யாரிடமிருந்து எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்? எப்படி அதனைச் சாத்தியப்படுத்துவீர்கள்? உங்கள் அரசியல் நடத்தையும் உங்கள் எதிர்பார்ப்பும் ஒன்றுக்கொன்று முரணாகவல்லவா இருக்கிறது. 

இக்கேள்வி ஒருபுறமிருக்கச் சுமந்திரனின் மேற்படி கூற்று, தமிழ்த் தேசிய அரசியலின் வரலாறு அவருக்கு நன்கு தெரியாதென்பதையும்-தமிழ்த்தேசிய அரசியல் குறித்த தெளிவான புரிதல் அவரிடம் இல்லையென்பதையுமே வெளிக்காட்டுகிறது. இவற்றை அவரிடமிருந்து எதிர்பார்க்கவும் முடியாதுதான். காரணம், முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்பு 2010இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் (தமிழரசுக் கட்சிக்குக்) கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன் சுய விருப்பத்தின் பேரில் சுமந்திரனுக்கு வழங்கியதால், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வில்லங்கமாக இழுத்துவரப்படும் வரைக்கும் தமிழ்த் தேசிய அரசியலின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்காதவர்தான் சுமந்திரன். அதுவரைக்கும் வடக்கு கிழக்கு தமிழர்கள் சுமந்திரனின் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட சுமந்திரன்தான் இப்போது ‘கடந்த 74 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் விடுக்கும் வேண்டுகோள்’ பற்றிப் (தவறாகப்) பேசுகிறார். 

சுதந்திரத்திற்கு முன்பு சேர்.பொன்னம்பலம் இராமநாதன்- சேர்.பொன்னம்பலம் அருணாசலம்- ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோர் காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகள் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளே கோரிய ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை உட்பட) அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளாகவே இருந்தன. 

 பின், சுதந்திர இலங்கையில்1949இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் உருவான இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல் கோட்பாட்டு ரீதியாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ‘சமஸ்டி’யைக் கோரி அதற்காக 1972 குடியரசு அரசியல் அமைப்பு வரை அகிம்சா வழியில் போராடியது. 

இது தோல்வியுற்றதன் பின்பு-1972 குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றத்தின் பின்பு- 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய ‘சமஷ்டி’க் கோரிக்கை கைவிடப்பட்டுத் தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையாக வடிவெடுத்து அதனடிப்படையில் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து அப்போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து கடந்த 13 வருடங்களாக ஒரு தரப்பினரால் ‘இரு தேசம்; ஒரு நாடு’ கோரிக்கையாகவும்- மறு தரப்பினால் வடக்கு கிழக்கு இணைந்த ‘சமஸ்டி’க் கோரிக்கையாகவும்-இடையில் 1987இல் ஏற்பட்ட இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையானதும் முறையானதுமான அமுலாக்கல் வேறொரு தரப்பினரின் கோரிக்கையாகவும்-இப்படியாகத் தமிழ்த் தேசிய அரசியலில் வெவ்வேறு தரப்புகளால் வெவ்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது, சுமந்திரன் வெறுமனே ‘கடந்த 74 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் விடுக்கும் வேண்டுகோள் அதிகாரப் பகிர்வின் மூலம் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென்பதே.’ என மொட்டையாக பொதுமைப்படுத்திக் கூறியிருப்பது தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு பற்றிய அவரது தெளிவின்மையையும் தமிழ்த்தேசிய அரசியல் குறித்த அவரது புரிதலின்மையையுமே வெளிக்காட்டுகிறது. 

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிச் சூழலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வழமைக்கு மாறாக அவ்வளவு வாய் திறப்பதில்லை. ஒருவகையில் அது தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பானதுதான். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மூப்பு மற்றும் தள்ளாத வயது காரணமாகவோ என்னவோ அரிதாகவே வாய் திறக்கிறார். இதுவும் ஒரு வகையில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பானதே. 

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் அரசியல் நடத்தைகளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிக்காட்டும் இந்திய எதிர்ப்பு வாதமும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்போ-நன்மையோ அளிக்கப் போவதில்லை.  

இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை; தமிழ் மக்களுக்கு உபத்திரவம் தராவிட்டாலே போதும் என்ற நிலைதான் இப்போது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகப் புதிய அரசியலமைப்புக்காகக் காத்திருப்பது ‘இலவு காத்த கிளி’ போலானது. சுமந்திரன் எதிர்வு கூறும் புதிய அரசியலமைப்பு என்பது வெறும் ‘கானல் நீர்’ போன்றது. 

இப் பத்தித் தொடரில் ஏற்கெனவே பல தடவைகள் குறிப்பிட்டதுபோல், இனப்பிரச்சினைக்கான எந்த அரசியல் தீர்வும் இப்போது கைவசமுள்ள 13வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் முழுமையான-முறையான அமுலாக்கலை ஆரம்பப் புள்ளியாக-அடிப்படையாகக் கொண்டே அமையவேண்டுமென்ற அரசியல் யதார்த்தத்தைத் (தலைவர்களுக்குப் புரியாவிட்டாலும்) தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.