‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-21) 

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-21) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்— 

 08.06.2022 அன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் ஆற்றிய உரையின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டுமென்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் மூலம் புதிய அரசாங்கம் வரவேண்டுமென்றும் மிகவும் காட்டமாகப் பேசியுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. உத்தேச இருபத்தியோராவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டுமென்பதிலும் அதற்கும் மேலே சென்று நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டுமென்றும் அவர் கூறிவந்துள்ளார். புதிய அரசியலமைப்பொன்றுக்காகவும் அவர் குரல் கொடுத்துவருகிறார். 

 இவற்றையெல்லாம் ஆழமாக நோக்கும் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகவும் விளங்கும் சுமந்திரன் யாருக்காக அரசியல் செய்கின்றார் என்ற கேள்வி எழுகிறது. 

காரணம், அவர் கூறுவதுபோன்று ஜனாதிபதி கோட்டாபய பதவிவிலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ -பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடைபெற்று புதிய பாராளுமன்றம் அமைவதாலோ- உத்தேச 21ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவதாலோ-நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரமுள்ள ஆட்சி முறைமை மீண்டும் கொண்டுவரப்படுவதனாலோ-புதிய அரசியலமைப்பு வருவதனாலோ தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. இது டொனமூர் அரசியலமைப்புக் காலத்திலிருந்து இன்று வரையில் சுமார் ஒரு நூற்றாண்டு கால இலங்கை அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் தமிழர்கள் கண்டதொரு பட்டறிவாகும். இதனை விளக்கவேண்டியதில்லை. 

‘பிரியாணி’ தந்தால்தான் சாப்பிடுவேன் (‘பிரியாணி’ சாப்பிடயாருக்குத்தான் ஆசையில்லை) என்று அடம் பிடித்து கையில் இருக்கும் கஞ்சியைக் குடிக்காமல் விட்டால் இறுதியில் பட்டினிச்சாவுதான் ஏற்படும். இதுதான் யதார்த்தம். 

 இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் கையில் இருக்கின்ற ஒரே ஒரு ‘கஞ்சிக் கலயம்’ இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்தான். 

ஆனால், துரதிஷ்டம் என்னவெனில் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையல் ஜனநாயக ரீதியிலான தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அங்கீகாரம் படைத்த தமிழ் அரசியல் தரப்புகள் எதுவுமே – இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட காலத்துத் (1987) தமிழர்விடுதலைக் கூட்டணியோ அல்லது அதன் பின் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ (2001) அல்லது தற்போது பல அணிகளாகச் சிதறுண்டு தம்மைத் தமிழ்த் தேசியக்கட்சிகளென அழைத்துக்கொள்ளும் தற்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசியக் கட்சி (முன்னாள் ஈபிஆர்எல்எஃப்) போன்ற கட்சிகள் எதுவுமே 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கான எந்த காத்திரமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதுமில்லை. இனிமேலும் இக்கட்சிகள் இச்செயற்பாட்டில் ஈடுபடப்போவதற்கான எந்த அறிகுறிகளும் தெரிவதாகவும் இல்லை. 

 மக்களால் தெரிவு செய்யப்பட்டுப் பிரதிநிதித்துவப் பெறுமானத்தைத் தம்வசம் ஏதோவொரு வகையில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகள் ஆளுக்கொரு பக்கம் நின்றுகொண்டு, ஒரு அணி இப்போதும் ‘புலியுகம்’ பற்றிப் புகழ்ந்து பாடி ‘இரு தேசம்; ஒரு நாடு’ எனும் வாய்ப்பாட்டை நெட்டுருப் பண்ணிக் கொண்டும் -மற்றொரு அணி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’ என்று உச்சரித்துக் கொண்டும் தலைமை அணி பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான அரசியல் தீர்வு என்று ‘வழுவழு’ ப்பாகப் பேசிக்கொண்டும் தமது காலத்தைக் கடத்துகின்றனவே தவிர, 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாகவும்முறையாகவும் அமுல் நடாத்தும் செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பதாயில்லை. 

ஆனால், இவற்றிற்கு மத்தியில் ஊடகங்களாலும் மேற்போந்த தமிழ்த் தேசியக் கட்சிகளாலும்(?) புலி ஆதரவுச் சக்திகளாலும் ‘துரோகிகள்’- ‘அடிவருடிகள்’-‘ஒட்டுண்ணிகள்’ என வசைபாடப்பெறும் தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி என்பன அகில இலங்கை தமிழர் மகாசபையின் ஏற்பாட்டில் அக்கட்சியும் இணைந்து ஐந்து கட்சிகளும் கூடித் தேர்தல் அரசியலுக்கு அப்பால் 09.04.2021 அன்று ‘அதிகாரப்பகிர்வுக்கான இயக்கம்’ என்னும் அமைப்பினை உருவாக்கியுள்ளன. 

 இந்த ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின்’ நோக்கம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை நோக்கிய செயற்பாட்டரசியலின் ஆரம்பப் புள்ளியாகத் தற்போது இலங்கை அரசியலமைப்பின் அங்கமாகவுள்ள 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதாகும். இந்நோக்கம் மிகவும் சமூகப் பொறுப்புமிக்க தெனினும் கூட, அமைப்பு உருவாகி ஒரு வருடகாலம் கடந்தும் இதன்செயற்பாடுகள் மந்தநிலையிலேயே உள்ளன. 

எனினும்கூட கடந்த ஒரு வருட காலத்துக்குள் ஐந்து கட்சிகளும் இணைந்து தயாரித்த ‘அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழிகாட்டி’ (A GUIDE FOR FULL IMPLEMENTATION OF THE 13TH AMENDMENT TO THE CONSTITUTION) எனும் தலைப்பில் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பெற்ற ஆவணமொன்றை 10.03.2022 அன்று ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளித்துள்ளமை இவ்வியக்கத்தின் குறிப்பிடத்தக்க பாரிய பணியாகும். 

இந்த ஆவணத்தின் பிரதிகள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும- இலங்கைப் பிரதமர் மற்றும் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை ஆதரிக்கின்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் வதியும் தமிழ் மற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளுக்கும்- தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களுக்குமெனப் பரவலாகக்கையளிக்கப்பட்டுள்ளன. 

 மேலும், இந்த ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அரசியல் ஆர்வலர்கள் ,k.vigneswaran41@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியுடனோ அல்லது senkathirgopal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்பு கொண்டு ஆவணத்தின் மென் பிரதியைப் (Soft Copy) பெற்றுக்கொள்ளமுடியும். 

 இப் பத்தியின் நிறைவாகத் தமிழ்ச் சமூகத்திடம் ஓர் அன்பான -பணிவான- விநயமான வேண்டுகோள்! 

மேற்படி அதிகாரப்பகிர்வுகான இயக்கத்தின் செயற்பாடுகளை மேலும் பரவலாகவும் துரிதமாகவும் காத்திரமாகவும் முன்னெடுப்பதற்கான ஆதரவைப் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் தாமாகவே முன்வந்து தரவேண்டும். 

இந்த அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம் எதிர்காலத்தில் பலம் வாய்ந்ததாகக் கட்டியெழுப்பப்பெற்றுத் தமிழ் மக்களின் அரசியல் அங்கீகாரத்தைப் பெறுமானால் தமிழ்த் தேசிய அரசியலில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்துமென்பது திண்ணம். மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் காலத்தின் தேவையான மாற்று அரசியல் சக்தியாகவும் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம் அரசியல் ரீதியாக மடைமாற்றம் அடையும்.