காலிமுகத்திடலில் காந்தி பேசுகிறார் (காலக்கண்ணாடி 91) 

காலிமுகத்திடலில் காந்தி பேசுகிறார் (காலக்கண்ணாடி 91) 

   — அழகு குணசீலன் —

ஆயுபோவன்… !  வணக்கம்…!! அஸ்ஸலாமுஅலைக்கும்.!!! நமஸ்தே..!!!! 

அன்பர்களே…! 

காலனித்துவ வெள்ளையர் ஆட்சி எமக்கு விட்டுச் சென்ற எச்சங்களில், வடுக்களில், ஆம் தழும்புகளில் நாம் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு தழும்புதான் GALL FACE என்ற இந்தப் பெயரும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். 

பாரதமாதாவும், இலங்கைமாதாவும் ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பிறக்கின்ற இரட்டைக் குழந்தைகள் போன்று அடுத்தடுத்த 1947ம், 1948ம் ஆண்டுகளில் சுதந்திரத்தை வெள்ளையர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டோம். 

என்னைப் பொறுத்தவரை இந்த சுதந்திரமானது 75 ஆண்டுகளைக் தாண்டியும் வெறும் பெயரளவான சுதந்திரமே. இடம் பெற்றது வெறும் ஆள் மாற்றத்துடன் கூடிய அதிகார மாற்றமே அன்றி அடிப்படை சமுக, பொருளாதார, அரசியல் மாற்றம் அல்ல. உளுத்துப்போன சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கள் தகர்க்கப்படாது பூசப்பட்ட முலாம். சிற்றன்னை இலங்கை மாதாவின் இன்றைய நிலைக்கு இதுவே அடிப்படைக் காரணம். 

காலனித்துவ ஆட்சியை அகிம்சைவழியில் வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடாத்தியவன் நான் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதல்ல. இன்று வெள்ளையர் ஆட்சி அகன்று இருந்தாலும் நவகாலனித்துவம் எங்கள் சுதேசியத்தை சிதைத்துக்கொண்டிருக்கிறது. சுரண்டி விற்றுக்கொண்டிருக்கிறது. 

கண்ணுக்கு வெளிப்படையாகப் புலப்படாத வகையில் விதேசியம் அந்நிய முதலீட்டுப்பாய்ச்சல், தாராளபொருளாதாரம், மேற்குலக சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளின் அபிவிருத்தி போர்வையிலான திணிப்பு, உலகமயமாக்கம், நவீன தொழில்நுட்ப புரட்சி, பல்தேசிய கம்பெனிகள் என்றென்லாம் போர்வைகளைப் போர்த்திக்கொண்டு எங்கள் சுதேசியத்திற்குள் ஊடுருவி உள்ளது. 

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சுதேசிய சமூக, பொருளாதார, அரசியல் கொள்கையே எமக்கு பொருத்தமானது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த இலக்கை வன்முறையற்று, ஆயுதம் அற்று, இரத்தம் சிந்தாது அடைவதே என் அகிம்சைவழி. உப்புச் சக்தியாக்கிரகம், கதர் ஆடைப்போராட்டம், மக்களுக்கான சமூக நீதிப்போராட்டம், பொருளாதார சமத்துவத்துவத்திற்கான எனது அழைப்பு, இவை எல்லாம் அகிம்சை வழியைச்சார்ந்தவை. 

அன்றும், இன்றும், ஏன் நாளையும் எனது உறுதியான கொள்கை பிரித்தானிய எச்சமாக இன்னும் எங்கள் அரசியல்வாதிகளால் பாதுகாக்கப்படுகின்ற வெஸ்ட் மினிஸ்டர் ஜனநாயக ஆட்சி முறையல்ல. இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, இலங்கைக்கு பொருத்தமற்ற சமூக, பொருளாதார, அரசியல் அணுகுமுறைகளின் வெளிப்பாடு அன்றி வேறென்ன ..?  

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? அப்படியானால் அதை நிரூபித்துக்காட்டுங்கள் என்ற மதம் சார்ந்த கேள்விகளை ஒருபக்கம் தள்ளிவிட்டு மனட்சாட்சியே கடவுள் என்று கொள்வோமானால் எங்கள் மதங்களில் இருந்து நிறையவே நீதிக்கோட்பாடுகளைக் கற்றுக்கொள்ளமுடியும். இவற்றைத் தவறாக அர்த்தப்படுத்தும் தீவிர மதவாதிகளுக்கும், நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் இடையே நான் வேறுபாட்டைக் காணவில்லை. 

பகவத்கீதை, அல்குரான், பைபிள் அனைத்தும் மனித வாழ்வியலை நெறிப்படுத்தும் வழிமுறைகளையே பேசுகின்றன. இன்றைய மனித வாழ்வியலுக்கும், மதங்களின் வழிகாட்டலுக்கும் இடையே ஒரு பாரிய இடைவெளி நிலவுகிறது என்பது உண்மையே. அதற்கு மனித வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் அன்றி மதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமல்ல. மனிதன் மாறிவிட்டான். மதங்கள் அதன் அடிப்படையையே பேசுகின்றன. ஆனால் மாறிய மனிதன் அந்த அடிப்படைகளை தனது சுய இலாபத்துக்காக திரிபுபடுத்துகிறான். 

பஞ்சசீலக்கொள்கை, பஞ்சமாபாதகங்கள், பத்துக்கட்டளைகள் பற்றி எல்லாம் எங்கள் மதங்கள் பேசுகின்றன. எனது சத்திய சோதனை சார் வாழ்க்கையில் ஏழு கட்டளைகளை/ பாவங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். 

1. கொள்கை இல்லாத அரசியல். 

2. உழைப்பு இல்லாத ஊழியம். 

3. ஒழுக்கம் இல்லாத கல்வி. 

4. தியாகம் இல்லாத வழிபாடு. 

5. மனட்சாட்சி இல்லாத இன்பம். 

6. மனிதாபிமானமற்ற அறிவியல். 

7. நேர்மையற்ற வணிகம். 

அன்பர்களே…..! 

நான் ஏற்கனவே கூறிய இந்த ஏழு பாவங்களும்தான் இலங்கை மாதாவின் இந்த நிலைக்கு காரணம் என்பதை உங்களால் புரிந்து கொள்ளமுடிகிறதா….? 

அரசியல்வாதிகள் மட்டுமல்ல இன்றைய இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி நாட்டின் வங்குரோத்து நிலையிலும் தங்கள் சேவைகளை வழங்காது உழைப்பு இல்லாமல் ஊதியம் பெறுகிறவர்கள், பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி நேர்மையற்ற வணிகம் செய்து மக்களின் வயிற்றில் அடிப்பவர்கள், மற்றும் மனிதாபிமானம் அற்ற சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள், ஈடுபட்டவர்கள் அனைவரும் இந்த நிலைக்கு காரணமானவர்கள்.  

காலிமுகத்திடலில் கூடி மக்களுக்காக ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் செய்வதாகக் குரல்கொடுத்துக்கொண்டு அந்த அசாதாரண சூழலைப்பயன்படுத்தி மனச்சாட்சி இன்றியும், தியாகம் இன்றியும், ஒழுக்கம் இன்றியும் செயற்பட்டவர்கள், செயற்படுபவர்கள் இங்கு கூடியிருக்கின்ற அரச வசிப்பிடங்களிலும், அலுவலகங்களிலும் அல்லது பாராளுமன்றத்திலும் உங்களோடு ஒருவராக இந்தக் கூட்டத்திலும் இருக்கிறார்கள் என்பதை நான் சத்தியம் செய்கிறேன். 

 அன்பர்களே…! 

நான் உங்கள் முன் இந்த உரையை நிகழ்த்த முடிவு செய்ததற்கான காரணம் எனது அவதானிப்பில் இப்போராட்டம் அகிம்சையில் இருந்து வன்முறைக்கு தடம்புரண்டுவிடும் என்ற அச்சம்தான். எனக்கு நன்கு தெரியும் நீங்கள்  ஒருபுறம் வெஸ்ட் மினிஸ்டர் அரசியல் சட்டத்திற்கும், மறுபுறம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமகால ஜதார்த்தத்திற்கும் இடையில் நின்று போராடுகிறீர்கள்.  

போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட அரச, தனியார் உடமைகள் மீதான அழிப்புக்களையும், அதனூடாக பரவிய வன்முறைகளையும், உயிர் இழப்புக்களையும் நான் விரும்பவில்லை. ஆனால் போராளிகள் அந்த சதிவலையை ஆரம்பத்தில் இல்லாவிட்டாலும் இப்போதாவது உணரத்தொடங்கியிருப்பது நல்லது.   அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படாதவரையில் அதிகாரங்கள் ஒருவர்க்கத்திற்குள் கைமாறப்படுபவையாகவே எப்போதும் இருக்கின்றன. அதுவே நடந்துகொண்டிருக்கிறது. நடக்கவும் போகிறது என்று நான் உங்களை எச்சரிக்கிறேன். 

அகிம்சைப் போராட்டத்தின் உன்னதமான உண்ணாநோன்பு குறித்து சில வார்த்தைகள் கூறிவிட்டு இந்த பேச்சை முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அதன் மூலம் நான் அதிகம் சாதித்திருக்கிறேன் என்பதே எனது மதிப்பீடு. பதினாறு தடவைகள் நான் உண்ணாநோன்பு இருந்திருக்கிறேன். இரு தடவைகள் இருபத்தியொரு நாள்வரை நீடித்திருக்கின்றன. அப்போதெல்லாம் நான் வாழ்க்கையின் எல்லைக்குச் சென்று திரும்பினேன். 

தென்னாபிரிக்காவில் இனவெறிக்கு எதிராக நீதிகோரி, இந்தியாவில் இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்காக, தீண்டாமை கொடுமையை முடிவுக்கு கொண்டு வர, பிரித்தானியர்களின் வெளியேற்றத்தை விரைவுபடுத்த எல்லாம் உண்ணா நோன்பை ஆயுதமாக்கினேன். அதன் வலியை சுமந்துகொண்டேன். 

அதேவேளை இதையும் நான் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். உண்ணாவிரதம் இருப்பவர் எதிராளியின் அன்பையும், அக்கறையையும் பெறமுடியாத போது அவருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது பயனற்றது. நச்சுவாயு கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த யூதர் ஒருவர் நாஸிகளுக்கு எதிராக, சைபிரியச் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் ஸ்டாலின் படைக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது பைத்தியக்காரத்தனம். 

பிரித்தானியருக்குப் பதிலாக இந்தியாவை கிட்லரோ, ஸ்டாலினோ ஆண்டிருந்தால் எனது உண்ணாவிரதக்கருவி பயனற்றுப் போயிருக்கும் என்பதை நான் அறிந்தே இருந்தேன். இந்த நிலையானது ஈழத்தமிழர்களுக்கு அதுவும் இந்திய இராணுவத்திற்கு எதிரான உண்ணாநோன்பில் ஏற்பட்டது குறித்து ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன். 

போராளிகளே …! 

 உங்களை தவறான வழியில் இழுத்துச் சென்று, வன்முறையாளர்களாக காட்சிப்படுத்த அரசியல் தலைவர்களும், கட்சிகளும் முயற்சிக்கின்றார்கள். நாட்டின் இந்த இக்கட்டான சூழலில் பழையவர்கள் தங்கள் அதிகாரத்தை பலப்படுத்த, அல்லது புதியவர்கள் அதைக்கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இது அரசியல் வங்குரோத்து – கொள்கை இல்லாத அரசியல். இந்த வலையில் நீங்கள் சிக்கிக்கொள்ளாது ஒழுக்கம், தியாகம், மனச்சாட்சி, மனிதாபிமானம் என்பனவற்றின் அடிப்படையில் போராடுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அகிம்சைசார் அரசியல் அறம் தவறாதீர்கள். 

வெறும் அதிகாரமாற்றத்தையும், ஆள்மாற்றத்தையும் நிராகரிக்கும், சமூக, பொருளாதார, அரசியல் அடிப்படை மாற்றங்களையும், சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்பனவற்றை கோரிநிற்கும் உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். ஆனால் அது அவ்வளவு இலகுவானதல்ல என்பதை கடந்த நூறு நாட்களில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆழ்த்தான் துடிக்கும். 

அனைவருக்கும் நன்றிகள்..! 

வோம ஸ்துதி…!! 

சித்தம் இருந்தால் மீண்டும் சந்திப்போம்..!!! 

இன்ஷா அல்லாஹ்…!!!!