காலக்கண்ணாடி: 90 இலங்கையின் அரசியலமைப்பு  (ஏ)மாற்றங்கள்..!

காலக்கண்ணாடி: 90 இலங்கையின் அரசியலமைப்பு (ஏ)மாற்றங்கள்..!

— அழகு குணசீலன் —

இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசு அரசியலமைப்பு 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அன்றைய அரசியல் அமைப்பு விவகார அமைச்சர் கொல்வின் ஆர் .டி. சில்வாவினால் வரையப்பட்டது. இது சுதந்திர இலங்கையின் சோல்பரி அரசியல் அமைப்புக்கு மாற்றாக எழுதப்பட்ட ஒன்றாகும்.

1978இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் இந்த அரசியல் அமைப்பை மாற்றி ஜனநாயக சோஷலிச குடியரசு அரசியலமைப்பை உருவாக்கியது. இது நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சியை இலங்கைக்கு அறிமுகம் செய்ததுடன், மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஆட்சி என்பதால் சோஷலிசமும், ஜனநாயகமும் இலங்கையின் பிறப்புச் சான்றிதழில் முன்னும், பின்னும் இடம் மாறிக்கொண்டன.

இந்த அரசியலமைப்பு இதுவரை இருபது தடவைகள் மாற்றங்களை சந்தித்துள்ளது. இப்போது 21 வது பற்றி பேசப்படுகிறது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கு “பிடியை” வைத்துக் கொண்டு பேசுகின்றன. முக்கியமாக தென்னிலங்கைப் பேசுபொருளும், தேசிய சிறுபான்மை மக்களின் பேசுபொருளும் பெரும் இடைவெளியைக்காட்டி நிற்கின்றன.

தென் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறை அகற்றல் என்றும், ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்தல் என்றும், பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கல் என்றும், பிரதமருக்கு அதிகாரம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இது ஆளும் பெரும்பான்மையினரின் அபிலாஷைகள்.

சிறுபான்மைத் தேசிய இனங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வேண்டி நிற்கின்றன. ஒரு நாடு இரு தேசம் முதல் மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு வரை இத்தரப்பு பேசுகின்றது. ஆனால் இதுவரையான செயற்பாடுகள் ஜனாதிபதியைப் பற்றி பேசுகின்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் மிகக் குறைந்த அளவுக்காவது சிறுபான்மையினர் பற்றி பேசவில்லை. 

அரசியல் அமைப்பு மாற்றத்தின் மூலமும் , பெரும்பான்மை சிங்கள பாராளுமன்றத்தாலும் அடையமுடியாத கஜேந்திரகுமார் இரட்டையர்களின் தமிழ்பேசும் மக்களை (ஏ) மாற்றும் அரசியலை விட்டுவிடுவோம். ஆனால் தமிழ்த்தேசிய அரசியல் சாத்தியமான 13வது திருத்த முழுமையான நடைமுறை குறித்து போதியளவு பேசவில்லை.

சஜீத்பிரேமதாச, விமல்வீரவன்ச, அநுரகுமார திசாநாயக்க, சிறிசேன ஏன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட இது விடயத்தில் வாய்திறப்பதாக இல்லை. “பொல்லுக் கொடுத்து அடிவாங்குவான் ஏன்? என்றும், யாராவது பொல்லைத் தரட்டும்  வெளுத்து வாங்கலாம் என்றும் தயாராக உள்ளனர்.

உண்மையில் தமிழ்பேசும் தரப்பிலும் சரியான கோரிக்கையும், அணுகுமுறையும் இல்லை. சிங்களத்தரப்பிலும் இல்லை. தமிழ்தரப்பில் உள்ள “வாயாடிகள்” சிறுபான்மையினர் பிரச்சினைக்கான தீர்வைவிடவும், சிங்கள மக்களுக்கான தீர்விலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.சிங்கள மக்களுடன் இணைந்து தீர்வைப் பெறப்போகிறார்களாம்(?). சிங்கள மக்களைப் பாராளுமன்றத்த்தில் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் யார்…? எப்படி இணைந்து தீர்வு காணப்போகிறார்கள் ? இது மறு தமிழ்த்தரப்பின் (ஏ) மாற்றுவித்தை.

பொல்லுக்குகாத்திருக்கும் மேலே குறிப்பிட்டவர்களுடன், மேலும் சரத்வீரசேகர முதல் சரத் பொன்சேகா வரையும் இன்னும் சேர்ந்து கொள்வார்களே அன்றி வேறென்ன நடக்கப்போகிறது. வாசுதேவ நாணயக்கார என்ற தனிமரம் அடிக்கின்ற இனவாதப்புயலில் தள்ளாடுகிறது. அவரும் அமைச்சுப் பதவிகளுக்கு பழக்கப்பட்டுவிட்டார். 1970களில் நாம் பார்த்த வாசுதேவா அல்ல இன்றைய வாசுதேவா. இது அவரது வயதை குறித்தது அல்ல மாறாக அரசியல் முதிர்ச்சியைக் குறித்தது.

பரிகாசத்திற்குரிய ஜனநாயகம் (MOCKERY DEMOCRACY) 


அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புக்கான 20வது திருத்தத்தை / மாற்றத்தை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் பரிகாசத்திற்குரிய ஜனநாயகம் என்று விமர்சனம் செய்திருந்ததை இங்கு சுட்டிக்காட்டுவது நல்லது. இது பாராளுமன்றத்திற்கு இருந்த ஜனநாயக வரலாற்றுப் பாரம்பரிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு கையளிப்பதாக அமைந்தது. 

இந்த இருபதுக்கு முன்னர் 19 தடவைகள் அரசியல் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சிலமுக்கியமான மாற்றங்கள்  சிறுபான்மைத் தேசிய இனங்களைப் பொறுத்தவரை ஏமாற்றங்களாகவே அமைந்தன. இந்த நிலையில் இருந்து 21 இலும் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது என்பதை சுமந்திரன் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார்.

 காலிமுகத்திடலில் கூடி ராஜபக்ஷாக்களை வீட்டுக்கு அனுப்பினால் சிறுபான்மை மக்களின் உரிமைகள்  அரசியல் அமைப்புமாற்றங்களால் கிடைத்துவிடும் என்ற தொனியில் பேசிய அவருக்கே எல்லோருக்கும் முதல் சந்தேகம் வந்துவிட்டது. சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு உரிமை கிடைக்கிறதோ இல்லையோ  சிங்கள அரசாங்கத்தை மாற்றுவதில் மட்டும்  சுமந்திரன் அன் கோ குறியாய் இருக்கிறார்கள்.

அரசியல் அமைப்பின் 6வது திருத்தம் 1983 ஆகஸ்ட் 8ம் திகதி பயங்கரவாத தடைச்சட்டமாக உள்வாங்கப்பட்டது. 7வது திருத்தம் இலங்கையின் 25வது மாவட்டமாக கிளிநொச்சியைப் பிரகடனம் செய்தது. இது 1983 ஒக்டோபர் 4ம் திகதி இடம்பெற்றது. பயங்கரவாத தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. அது மறு பிறப்பு எடுப்பதற்கான வாய்ப்புக்களே அதிகளவில் உண்டு. 

கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு சுவாரஸ்யமானது. யாழ். நிர்வாக மாவட்டத்துடன் இருந்த கிளிநொச்சி உள்ளதற்குள் பின்தங்கிய பிரதேசமாக இருந்தது. கிளிநொச்சி தொகுதியின் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி. அவர் யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று கோரியபோது அமிர்தலிங்கம் தலைமையிலான குடாநாட்டு பாராளுமன்ற குழு அதனை ஏற்கவில்லை. 

ஆனந்தசங்கரி சிங்கள அரசாங்கத்துடன் கொண்டிருந்த நல்லுறவைப் பயன்படுத்தி கிளிநொச்சியை தனிமாவட்டமாக பிரித்தெடுத்தார்.  யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி அரசியல் “சமூக நீதிக்கு”(?) இது சிறந்த உதாரணம். கிளிநொச்சிக்கே இந்த நிலை என்றால் கிழக்கு மாகாணத்தில் சமூக நீதியின் நிலை என்னவாகும். யாழ்மாவட்டத்தில் இருந்து கிளிநொச்சி பிரிந்த கதை தெரிந்தவர்களுக்கு வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்ததும் புரியும். ஏழாவது திருத்தம் குறைந்த பட்சம் கிளிநொச்சி மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்திருக்கிறது. கிளிநொச்சியை கட்டிப்போட்டு ஏறிச்சவாரி செய்ய  நினைத்தவர்களுக்கு சாட்டையாகவும் அமைந்தது. 

13வது மாற்றம் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை சார்ந்த மாகாணசபைகள் சட்டமூலம். இது வடக்கு கிழக்கில் தமிழை உத்தியோக மொழியாக்கியது. ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக்கியது.

இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. முக்கிய தேவையும் கோரிக்கையுமான அதிகாரப்பரவலாக்கலுக்குரிய நிதி, காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இதற்கு சிங்கள தரப்பு  ஏமாற்றியவர்கள் மட்டும் காரணமல்ல, அரசியல் சுய இலாபத்திற்காக தமிழ்பேசும் மக்களை ஏமாற்றிய தமிழ்தரப்பும் காரணம்.

14,15வது திருத்தங்கள் விகிதாசாரம் தேர்தல் முறையின் கீழ் தேசியப்பட்டியல், மற்றும் வெட்டுப்புள்ளி குறைப்பு என்பனவற்றின் மூலம் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சார்ந்த சிறிய கட்சிகளுக்கு சில வாய்ப்புக்களை வழங்கியது. 21 தேர்தல் முறையில் மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் சிறுபான்மையினருக்கு அது மற்றோரு அடியாக அமையும்.

16வது திருத்தம் சிங்களமும், தமிழும் நிர்வாக மொழிகள் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் இதற்குப் பின்னர் அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் அதிக அளவுக்கு ஆளும் கட்சிக்கு சார்பானதாகவும், ஜனநாயகத்திற்கும், அரசியல் நேர்மைக்கும் மாறானதாகவும் அமைந்தன.  17,18,19,20 திருத்தங்களில் இந்த நிலை தெளிவாகியது. இப்போது 21 இலும்  முள்ளைப்பிடுங்கி கட்டையை அடிக்கும் கதையளப்புக்களே உலாவருகின்றன. இந்த அனுபவத்தில் 13வது திருத்தம் வழங்கியவற்றைவிடவும் அதிகமாக சிறுபான்மைத் தரப்பு எதையும் சாதிக்க முடியுமா? 

இந்த அரசியல் அமைப்பு மாற்ற வரலாறு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு ஏமாற்றவரலாறாகவே இருந்துள்ளது. 21ம் இன்னும் ஒரு முறை (ஏ) மாற்றத்தையே தரப்போகிறது. இது தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் ஏமாற்றப்பட்ட வரலாற்று வரிசையில் இன்னும் ஒரு தொடர்கதையாகும்.

சிங்கள அரசு சிறுபான்மை பாராளுமன்ற அரசியலை ஏமாற்றுகிறது…!

சிறுபான்மை பாராளுமன்ற அரசியல் மக்களை ஏமாற்றுகிறது..!! 

 ஏமாறாதே….! ஏமாற்றாதே…..!!