—- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—-
09.04.2022 அன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பெற்ற ‘கோட்டா கோ கோம்’ (GOTA GO HOME) போராட்டம் எழுபது நாட்களையும் தாண்டித் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இப்போராட்டம் ஒரு மக்கள் புரட்சியல்லவென்றும் மேற்குலகச் சக்திகளின் பின்னணியில் – தூண்டுதலில் கொழும்பு வாழ் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கச் சமூகத்தினரைப் பயன்படுத்தி அதாவது பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அதனை அரசியல் நெருக்கடியாக மடைமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையே இதுவென்றும் இப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே பல அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டன. இப்போராட்டத்தைத் தத்தம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜேவிபியும் ஆதரித்தன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர், இப்போராட்டத்தில் வடக்குக்கிழக்குத் தமிழர்களும் பங்கேற்க வேண்டுமென்று பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். அது நடைபெறவில்லை.
இப்போராட்டத்தின் சூத்திரதாரிகள் ஜேவிபி யிலிருந்து பிரிந்து சென்று புதியதொரு கட்சியான முன்னிலை சோஷலிஸக் கட்சியை (FRONTLINE SOCIALIST PARTY) உருவாக்கிய பிரேமகுமார் குணரட்ணம் தலைமையிலானஅதி புரட்சிவாதிகளே எனச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்போராட்டத்தில் பொதிந்துள்ள நுண்ணரசியலைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்போராட்டத்தை ஆதரித்து இலங்கைக்கான அமெரிக்க – பிரித்தானிய மற்றும் கனடாத் தூதுவர்கள்/ இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டிருந்தார்கள். இலங்கைக்குக் குறைந்த விலையில் எரிவாயு வழங்குவதற்கு ரஷ்யா எடுத்த முடிவை மேற்குலக நாடுகள் எதிர்த்தன.
இது எதனைக் காட்டுகிறதென்றால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் நீடித்து அதன் பக்கவிளைவான அரசியல் நெருக்கடி காரணமாகத்தங்களுக்குச் சாதகமான ஆட்சிமாற்றமொன்று இலங்கையில் ஏற்பட வேண்டுமென்பதே மேற்குலக அரசியல் சக்திகளின் இலக்காகும் என்பதையே.
இந்தியா இப்போராட்டத்தை எதிர்க்கவுமில்லை. ஆதரவளிக்கவுமில்லை. நடுவு நிலையில் நின்று நிலைமையை அவதானித்துக்கொண்டு அவ்வப்போது பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கத் தன்னாலியன்ற பொருளாதார உதவிகளைத் தொடர்ந்து இலங்கைக்குச்செய்த வண்ணமேயுள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தனித்து நின்றோ அல்லது மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளைச் சார்ந்து நின்றோஉள்ளூர் அரசியலில் எதனையும் சாதிக்க முடியவில்லையென்ற அனுபவத்தின்-பட்டறிவின்அடிப்படையில் இந்தியாவை அனுசரித்துப் போவதுதான் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பானதும் நன்மையளிப்பதுமாகும்.
1987/1988 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அப்போதைய பிரதமர்/ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்ததனால்-இந்திய சமாதானப் படையுடன் (INDIAN PEACE KEEPING FORCE) போர்தொடுத்ததனால் பின்னாளில் ஏற்பட்ட விபரீதமான விளைவுகள், வரலாறு தமிழ் மக்களுக்குத் தந்துள்ள அனுபவப் பாடமாகும். அன்று இந்திய- இலங்கைச் சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்த அதே சக்திகள்தான் இன்று ‘கோட்டா கோ கோம்’ போராட்டத்தை ஆதரித்தும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதை எதிர்த்தும் செயலாற்றுகின்றன. இந்தச் செயற்பாடுகளில் ‘இந்திய எதிர்ப்பு வாதம்’ நீறுபூத்த நெருப்பாக உட்பொதிந்துள்ளது என்பதைத் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வது அவசியமானது.
ஆனால், இதை உணராத அல்லது உணர்ந்தும் தமது வர்க்க குணாம்சம் காரணமாகத் தத்தம் சுயநலத்திற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் குறிப்பாகச் சுமந்திரனும் சாணக்கியனும் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாகச் ‘சத்தவெடி’ கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய மனதிலே உறைந்து கிடப்பது மேற்குலக ஏகாதிபத்தியம் சார்ந்த இந்திய எதிர்ப்பு வாதமாகும்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் சூத்திரதாரிகள் என ஊடகங்களால் சந்தேகத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரேமகுமார் குணரட்ணம் மற்றும் சுமந்திரன் + சாணக்கியன் சந்திப்பு கொழும்பில் சுமந்திரன் வீட்டிலேயே அண்மையில் நிகழ்ந்துள்ளதாகக் கசிந்துள்ள செய்தி தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைப் பொறுத்தவரை நல்ல சகுனமல்ல. நன்மையளிக்கப் போவதுமல்ல.
ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்குப் பெரியப்பாவுமல்ல; சஜித் பிரேமதாச தமிழ்மக்களுக்குக் குஞ்சப்பாவுமல்ல. அதே போல்தான் ராஜபக்சாக்களில் எவரும் தமிழர்களுக்குப் பெரியப்பாக்களுமல்ல; குஞ்சப்பாக்களுமல்ல.
பொருளாதார நெருக்கடி இலங்கையில் அனைத்துச் சமூகத்திற்கும் பொதுவானது என்றாலும் கூட, தமிழ் மக்கள் (தமிழர் தேசம்) எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளும் சிங்கள சமூகம் (சிங்கள தேசம்) எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளும் அடிப்படையில் வெவ்வேறானவை.
ஆகவே, இலங்கையின் வடக்குகிழக்குத் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளையும் ஏனைய துன்பியல் சம்பவங்களையும் மனதில் வைத்துப் பழிவாங்கும் உணர்ச்சியில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் இன்று எழுந்துள்ள அரசியல் நெருக்கடிச் சூழலை மிகவும் அவதானமாகக் கையாளவேண்டும்.
1987/1988 இல் விட்ட அரசியல் தவறை மீண்டும் ஈழத் தமிழினம் இலங்கையில் இழைத்துவிடக்கூடாது. தமிழ் மக்களுக்கு இன்று சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாத நிலையில் சுயநல அரசியல்வாதிகளின் கதைகளைக் கேட்காமல் தாமே சுயமாகச் சிந்தித்துச் செயற்படத் தம்மைத் தகவமைத்துக் கொள்ளல் அவசியமாகும்.