‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது அரசியல் நெருக்கடியாகவும் கிளைவிட்ட ஆரம்ப காலத்திலிருந்தே அரசியல் தரப்புகள் மற்றும் பொது அமைப்புகளிடமிருந்து, ஜனாதிபதியிடம் அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் 20ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நீக்கி மீண்டும் 19ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களையும் உள்வாங்கிய புதிய 21ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் (19+) கொணர்ந்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கவேண்டும் -மட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும், அதற்கு மேலே சென்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்துப் பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரங்களையும் வழங்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொணரப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தவண்ணமேயுள்ளன.
உத்தேச 21ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த முன்மொழிவு ஒன்றினை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் செயலாளர் மத்துகம பண்டார சபாநாயகரிடம் தனிநபர் பிரேரணையாகக் கையளித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவும் இன்னொரு முன்மொழிவை இது விடயமாகச் சமர்ப்பித்திருந்தார். விஜயதாச ராஜபக்ச (புதிய) நீதி அமைச்சராகிவிட்டார். இதனால் அவர் தனி நபர் பிரேரணையாக முன்பு சமர்ப்பித்திருந்த முன்மொழிவு இப்போது வாபஸ் பெறப்பட்டுவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் மத்துகம பண்டாரவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட முன்மொழிவினைத் தயாரித்துக் கொடுத்தவர் சுமந்திரன்தான் என்ற தகவலும் உண்டு.
உத்தேச 21ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தக் கோரிக்கைகள் பரவலாக எழுந்த சூழ்நிலையில்தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் உத்தேச 21ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொணரச் சம்மதித்துமிருந்தார். இதனடிப்படையில் புதிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் உத்தேச 21ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த நகல் 23.05.2022 அன்று (புதிய) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பெற்றது. ஆனால் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகலில் பல போதாமைகள் உள்ளதாக அதாவது முன்னைய 19ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஐதாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளாலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினராலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளன. உத்தேச 21ஆவது அரசியலமைப்பு சட்ட நகல் குறித்து ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் எனப் பல்வேறு கட்டத்திலும் மட்டத்திலும் நடந்து முடிந்துள்ளன. இனி உத்தேச 21வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த நகல் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதன் இறுதி வடிவம் எப்படி இருக்குமென்பது, அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வந்தபின்புதான் தெரிய வரும்.
இந்த நிலையில் இந்த விடயத்தைத் தமிழர் தரப்பு அரசியல் சக்திகள் எப்படிக் கையாள வேண்டுமென்பது குறித்தே இப்பத்தி கவனங்கொள்கிறது.
இப்பத்தித் தொடரில் ஏற்கெனவே பல இடங்களில் குறிப்பிட்டவாறு பாராளுமன்றம் அதிகாரம் படைத்திருந்த காலங்களிலும் சரி- நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அதாவது ஜனாதிபதி அதிகாரம் படைத்திருந்த காலங்களிலும் சரி தமிழ் மக்களுக்கு எதிரான- பாரபட்சமான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களிடத்தில் எந்த மாற்றங்களும் இருக்கவில்லை.
உண்மையில், இலங்கை ஆட்சியாளர்களின் அடிப்படைக் குணாம்சமான பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்கு மாறாதவரை எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தமோ- அரசியலமைப்பு மாற்றமோ- அரசியலமைப்பு முறைமையோ தமிழ் மக்களுக்குக் கூரையைப் பிய்த்துக்கொண்டு எதனையும் கொட்டிவிடப்போவதில்லை.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஓரளவுக்காவது அதிகாரப்பகிர்வு வழங்கக் கூடியதாக முழு நாட்டுக்குமே பொதுப்படையாக நிறைவேற்றப்பட்ட 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை அரசியல் விருப்புடன் முழுமையாகவும் முறையாகவும் இதுவரை அமுல்படுத்தாது கடந்த முப்பத்திநான்கு வருடங்களாக இழுத்தடித்து வரும் இலங்கையின் ஆட்சியாளர்கள் அதற்கும் மேலாக அதாவது 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கும் அதிகமாகத் தமிழ்மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர முன்வருவார்கள் என்பது முயற்கொம்பு.
எனவே, தற்போது தமிழ் மக்களின் உடனடித் தேவை கோவணத்தைக் காப்பாற்றுவதே தவிர (13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைத் தக்கவைத்துக் கொள்வதே தவிர) பட்டு வேட்டிக் கனவல்ல. (புதிய அரசியல் அமைப்போ அல்லது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களோ அல்ல)
இந்த அரசியல் யதார்த்தப் பின்னணியில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும்- மட்டுப்படுத்தும் உத்தேச 21வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் சம்பந்தமாகவோ அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு சம்பந்தமாகவோ தமிழ் மக்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. இந்த விடயங்களில் தமிழ் மக்கள் நடுநிலைமை வகிப்பதே அரசியல் உபாயம் மிக்கது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சுமந்திரனும் அவரது ‘தொண்டரடிப்பொடியாழ்வார்’ சாணக்கியனும் தமிழ்த்தேசியக் குறிக்கோள்களில் தெளிவில்லாது தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர். இது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
மேலும், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பெற்ற கணத்திலிருந்து சுமந்திரனும் சாணக்கியனும் ரணில் விக்கிரமசிங்க மீது அவருக்கு எதிராகப் பாராளுமன்றத்திலும் வெளியிலும் சரமாரியாக வார்த்தைக் கணைகளைத் தொடர்ந்து தொடுத்து வருகின்றனர். இதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் விளையுமா என்றால் இல்லவேயில்லை.
சிலவேளை, ஜனாதிபதி கோட்டாபயவின் கோரிக்கையை நிபந்தனையின்றி முதலிலேயே ஏற்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதமராக வந்திருப்பாரேயானால் சுமந்திரனும் சாணக்கியனும் அதற்கு ஆதரவளித்து அமைதியாக இருந்திருப்பார்கள் போலும்.
இவர்களைத் தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்து அனுப்பியது தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களைப் பாதுகாக்கவா? அல்லது சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நலன்களைப் பாதுகாக்கவா? எனும் கேள்வி இருவரினதும் அரசியல் நடத்தைகளைப் பார்க்கும்போது எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடமும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடமும் ஒரு பணிவான வேண்டுகோளை இப்பத்தி முன்வைக்கிறது.
அரசியல் கண்ணியமிக்க ஆளுமையான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்நாட்களில் கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் பேர் போனது.
தமிழரசுக் கட்சிப் பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்தை மீறிப் பாராளுமன்றத்தில் அன்று அடையாள அட்டை மசோதாவை எதிர்த்து வாக்களித்தார் என்பதற்காகத் ‘தமிழரசுக்கட்சியின் மூளை’ என்று வர்ணிக்கப்பெற்ற முன்னாள் ஊர்காவற்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரட்ணம் அவர்களையே கட்சியிலிருந்து நீக்கிய அரசியல் பாரம்பரியத்தை உடையது தமிழரசுக்கட்சி.
சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரது கட்டுப்பாடில்லாத ‘தகப்பன்சாமி’ அரசியல் நடத்தைகளால் தமிழ் மக்கள் ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டப் பங்களிப்பு இல்லாதவர்களுக்குத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் நியமனங்களை வழங்கி ‘வியாபாரம்’ செய்தால் இப்படியான (இவர்களைப் போன்ற) கேடுகள்தான் தமிழ் மக்களுக்குத் தலைமீது வந்து விழும்.
தயவுசெய்து இப்போதாவது இருவரையும் கட்டுப்படுத்துங்கள். முடியாவிட்டால் இவர்கள் இருவரையும் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கிவிடுங்கள்.
இல்லையெனில், ‘தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வீட்டுக்குப் போ’ -‘தமிழரசுக்கட்சி வீட்டுக்கு போ’ எனத் தமிழ் மக்கள் திரண்டெழும் நாள் வெகு தூரத்திலில்லை.