உயர் ஆயுளும் உயிர் கொல்லி நோய்களும்…

உயர் ஆயுளும் உயிர் கொல்லி நோய்களும்…

 —- வேதநாயகம் தபேந்திரன் —-

இலங்கையரின் சராசரி ஆயுள் எத்தனை வருடங்கள்?

75.5 (எழுபத்தைந்து அரை) வருடங்கள் என மத்திய வங்கியின் 2021ஆம் ஆண்டு அறிக்கை கூறுகின்றது.

நீண்ட கால நோக்கில் இதே சராசரியில் அல்லது இதனை விடக் கூடுதலான இலக்கத்தில் தனிமனித சராசரி ஆயுள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா ?

இல்லை என்பதே கவலை தரும் விடயாகும்.

மாநகரம், நகரம், கிராமம் சேர்ந்த ஒரு கலவையே ஒரு நாடு. மாநகரம், நகரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை ஒரு முறை நோட்டம் விட்டுப் பாருங்கள். உடல் பருமன் பெருத்த மாணவர்களையே பெருமளவில் காண்பீர்கள்.

கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்துடன் இணைந்த வீட்டு வேலைகள் செய்து, விளையாட்டுக்களில் ஈடுபட்டு வளரும் மாணவர்களே அதிகம். அதனால் அங்கு உடல் ஆரோக்கியமுள்ள மாணவர் தொகை அதிகம். இயற்கையுடன் பெருமளவுக்கு ஒன்றித்து வாழ்வதும், போசாக்கான உணவுகள் கிடைப்பதும், அளவாகச் சாப்பிடுவதும் இன்னொரு காரணம்.

மாணவர்களது வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் பருமன் இருக்க வேண்டும் என உடற்திணிபுச் சுட்டெண் கூறுகிறது. ஆனால் அதனை விடக் கூடுதலான உடல் பருமன் உடைய மாணவர்களே நாட்டில் அதிகம்.

இதன் தொடர் விளைவு நீண்ட கால நோக்கில் தொற்றா நோய்களான நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்களை உடைய பெரும் எண்ணிக்கையான மனிதர்கள் உள்ள நாடாக எமது நாடு இருக்கப் போகின்றது.

உயர் மருத்துவ சுகாதார வசதிகள் மூலமாக மனித உயிரை உடலில் பிடித்து வைக்கலாம். ஆனால் உடல் உள உற்சாகத்துடன் உழைக்கக் கூடிய பெரிய சனத்தொகையை வைத்திருக்க முடியாது.

அதிலும் வயது 40 கள் முதல் 50 கள், 60 களில் உற்சாகமாக உழைக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை இன்னமும் 20 வருடங்களின் பின்பாக குறையத் தொடங்கப் போகிறது.

அதன் விளைவு அறிவுசார் பொருளாதார உழைப்பாளிகளின் திறனில் வீழ்ச்சியை ஏற்படுத்தப் போகிறது.

உடல் உழைப்பு மூலமாக வருமானம் ஈட்டுவோர் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான நிலை தொடரும்.

ஆனால் 21ஆம் நூற்றாண்டானது அறிவுசார் பொருளாதார உழைப்பாளிகள் மூலமாக நாடுகள் வருமானம் ஈட்டும் காலமாக உள்ளது.

இதனால் உடற் திணிபுச் சுட்டெண்ணைப் பேணி ஆரோக்கியம் மிகும் சனத்தொகையில் ஏற்படும் வீழ்ச்சியானது எமது நாட்டின் தேசிய வருமானத்தை மிக மோசமாகப் பாதிப்படையச் செய்யப் போகின்றது. நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மருத்துவ சுகாதார வசதிகளின் செலவுகள் அதிகரித்து பொருளாதாரச் சுமை ஏற்படப் போகின்றது.

அதன் விளைவு இலங்கையரின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிப்படையச் செய்யப் போகின்றது.வெளிநாட்டுக் கடன்களின் சுமைகளினாலும், இறக்குமதிகளில் பெருமளவு தங்கி இருப்பதனாலும், ரஸ்ய – உக்ரைன் உள்நாட்டுப் போராலும், கொவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாகவும் தற்போது  பொருளாதாரம் அதல பாதாள நிலையில் உள்ளது. அது போன்றதொரு பெரிய பொருளாதார சமூக நெருக்கடியை மீண்டும் சந்திக்கப் போகின்றோம்.

யாழ் நகரிலுள்ள பிரபல கல்லூரியின் அதிபர் கூறுகையில் தனது பாடசாலையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 77 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் உடற்திணிபுச் சுட்டெண்ணின் படி வயதுக்கும் உயரத்துக்கும் கூடிய நிறையைக் கொண்டுள்ளனர்.

77 மாணவர்கள் 9 ஏ எடுப்பதை விட பாடசாலையில் உதைபந்தாட்டம், கிரிக்கெற், எல்லே போல ஒரு விளையாட்டில் ஈடுபட்டும், பிற இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு 5 அல்லது 6 ஏ எடுப்பது சிறந்தது. அத்தகைய ஒரு மாணவரே சவால் மிகுந்த வாழ்க்கைச் சூழ்நிலையை வெற்றி காண்பார். வெறுமனே புத்தகப் பூச்சிகளை உருவாக்கிப் பயனில்லை.

அதிலும் விளையாட்டின் மூலமாக உடல் ஆரோக்கியம் பேணப்படுவதுடன் வெற்றியையும் தோல்வியையும் சமனாக மதிக்கும் மனோபாவம் கிடைக்கும் எனவும் பாடசாலை அதிபர் கூறினார்.

சாதாரண தரத்தில் 9 ஏ, உயர்தரத்தில் 3 ஏ பெறுபேறுகளுக்கு போட்டியிடும் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களது உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறைப்படுவதில்லை.

இதன் தொடர் விளைவு தனிமனித ஆயுளின் உயர்ந்த எண்ணிக்கையின் வேகமான வீழ்ச்சியை ஒரு காலத்தில் காணப் போகின்றோம்.

படி, மீண்டும் படி, மீண்டும் மீண்டும் படி என்ற சுற்றோட்டத்தையே பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர்.

ஓவ்வொரு பாடத்திற்கும் 6000 ரூபா முதல் 10 000 ரூபா வரையில் கட்டணம் செலுத்திப் பிரத்தியேக வகுப்புகளை ஒழுங்கு செய்யும் பெற்றோர்கள் கூட இருக்கின்றனர். ஒரு பாடத்திற்கு இரு இடங்களில் ரியூசன் ஒழுங்கு செய்யும் பெற்றோர்கள் கூட இருக்கின்றனர்.

இதன் விளைவு பாடசாலை- ரியூசன் என்ற இறுக்கமான ஒரு சுற்றோட்டத்தினுள் மாணவர்கள் அகப்பட்டு உடற் திணிபுச் சுட்டெண்ணில் பாதகமான நிலையைக் கண்டு பயணிக்கிறோம்.

இதன் தொடர் விளைவு நோயாளிகளால் நிறைந்த நாடு ஒன்றை உருவாக்குகின்றோம்.

நல்ல நாட்டிற்குரிய அடிப்படைப் பண்பாகிய ஆரோக்கியமுள்ள சமூகத்தை இழந்த வளர்ச்சி எதற்கு?