படுவான் ஒரு நாள் எழுவான்! (காலக்கண்ணாடி – 89) 

படுவான் ஒரு நாள் எழுவான்! (காலக்கண்ணாடி – 89) 

பேராசிரியர்  “செல்வ” “ராசா”: கல்விச் செல்வத்தின் வேந்தரானார்….!! 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்வியியல் துறைத்தலைவர் மானாகப்போடி செல்வராஜா அவர்கள், அப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செய்தி நிலத்திலும், புலத்திலும், அவரை அறிந்த வெளிநாட்டுக் கல்வியாளர்கள், நண்பர்கள் மத்தியிலும் நற்செய்தியாக பரவிவருகிறது. 

அவரின் மாணவர்கள், தொழில்துறை நண்பர்கள், அவரோடு இணைந்து சமூகம் சார்ந்த கல்வி, மொழி, மத கலாச்சார பண்பாட்டுத் தளங்களில் பயணித்தவர்கள், மற்றும் “சிவாநந்தியன்” என்ற விசேட அடையாள நடசத்திரத்தினை உள்ளக் கமலத்தில் அணிந்திருப்பவர்கள் அனைவரும் அளப்பரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பதை சமூக ஊடகப்பதிவுகள் கடந்த சில தினங்களாக பறைசாற்றி நிற்கின்றன. 

 மட்டக்களப்பின் – குறிப்பாக படுவான்கரையின் குக்கிராமங்களிலும், வயல்வாடிகளிலும் “நம்மட மானாகப்போடியின் மகன்” என்று உரிமையோடு   உச்சரிக்கிறார்கள். இதற்குக் காரணம் பேராசிரியர் மா.செல்வராசா அவர்கள் தான் சார்ந்த மண்ணையும், மக்களையும் நேசித்ததுதான். 

மட்டக்களப்பின் படுவான்கரை பெருநிலப்பரப்பில், வாவியின் மேற்குக் கரையில், முனைக்காடு என்ற கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இன்றைய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்றால், அந்த வரலாற்று நிகழ்வை பத்தோடு பதினொன்றாக, ஒரு வழமையான நிகழ்வாகக் கடந்து செல்லமுடியாது. 

1948ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முனைக்காட்டில் அவர் பிறந்தார். சிறு பிராயத்தில் தாயாரை இழந்ததினால் எழுவான் கரையின் வங்கக் கடலோரக் கிராமமான தாளங்குடாவுக்கு தகப்பனோடு குடிபெயர்ந்தார். பேராசிரியர் செல்வராசாவின் தந்தையார் மட் / தாளங்குடாவைச் சேர்ந்தவர். இதனால் தாயார் சங்குபதியின் இழப்பு முனைக்காட்டில் இருந்து அவரை தாளங்குடாவில் தகப்பன்வழி உறவினர்களுடன் இணைத்தது.  

 ஆரம்பக் கல்வியை தாளங்குடா றோமன் கத்தோலிக்க, அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைகளில் ஆரம்பித்த செல்வராசா என்ற சிறுவனை தகப்பனார் கல்லடி உப்போடை இராமக்கிருஷ்ணமிஷன் இல்லத்தில் சேர்த்தார். சுவாமி விபுலாநந்தரின் சிவானந்த வித்தியாலயத்தில் மாணவரானார் இன்றைய வேந்தர் பேராசிரியர் செல்வராசா. 

அன்றைய அதிபர்கள் கணபதிப்பிள்ளை, தியாகராஜா ஆகியோரின் மதிப்பபைப் பெற்ற மாணவனாகவும், சுவாமி ஜீவானந்தாஜீ யின் அனுசரணையில் பகவான்   இராமக்கிருஷ்ணர், சாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலாநந்தர் ஆகியோரின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் செல்வராசா என்ற மாணவனின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தின. 

சிவானந்த வித்தியாலயத்தில் பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் கலைப்பிரிவில் சித்தியடைந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் பட்டப்படிப்பை ஆரம்பித்தார். கல்வியே கருந்தனம் ஆகிப்போனது அவருக்கு. அதனைத் தொடர்ந்து பல கல்விசார் விடயங்களில் அவரது முன்னேற்றம் அடுத்தடுத்து ஏற்பட்டது. அவை எல்லாவற்றையும் இச் சிறுபதிவில் பட்டியல் இட்டு மாளாது என்பதால் சில முக்கிய நகர்வுகளை மட்டும் காட்ட முனைகிறது காலக்கண்ணாடி.  

1974இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விமாணி சிறப்பு பட்டம் பேராசிரியர் பெற்ற முதல்பட்டம். தொடர்ந்து 1978 ம், 1980ம் ஆண்டுகளில் கல்வி முதுமாணி -தத்துவமாணி பட்டங்களை பெற்றுக்கொண்டார். 1992இல் லீட்ஸ் (LEEDS ) பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ நிர்வாக முதுமாணிப் பட்டம் அவருக்கு கிடைத்தது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக 1998 முதல் 2004 வரை பணியாற்றிய அவர் 2004 இல் கல்வியியல் துறையின் தலைவரானார்.  

பேராசிரியர் மா.செல்லவராசா அவர்கள் சாதாரண பட்டதாரி ஆசிரியராக கல்விப் பணியில் இணைந்து படிப்படியாக அவர் நேசித்த, அவரின் உயிர் மூச்சான கல்விப் பணியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் வரை வளர்ந்திருக்கிறார் என்றால் இது ஒரு மகத்தான சாதனை. அவரது பணிக்கு கிடைத்திருக்கின்ற பெரும் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் ஆகும்.  

1974 இளமாணிப் பட்டப்படிப்பு முடிந்த பின் பட்டதாரி ஆசிரியராக அவரது முதல் நியமனம் குருநாகல் பொல்ஹகா ஜாயா முஸ்லீம் மகாவித்தியாலயம்.  1977இல் மல்வானை மத்திய கல்லாரியில் பட்டதாரி ஆசிரியராகக்  கடைமை ஏற்றார். தொடர்ந்து கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றி, 1982 கல்வி நிர்வாக சேவைத் தகுதியைப் பெற்று (SLEAS) இரத்மலானை இந்துக் கல்லாரியின் அதிபராக 1984 வரை கடமையாற்றினார். 

தேசிய கல்வி நிறுவனத்தின் செயற்திட்ட பணிப்பாளராகவும்,மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் விரிவுரையாளராகவும்,கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்கு முன்னர் அவர் கடமையாற்றியுள்ளார். அவரது இந்த அகல, ஆழ விரிந்து, பரந்த கடமைக் களமானது கல்வியாளர்களின் அறிமுகங்களையும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் அறிமுகத்தையும், இவை அனைத்திற்கும் மேலாக பெறுமதிமிக்க அனுபவங்களையும் அவருக்கு வழங்கியது.  

உள்நாட்டிலும், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர் பெற்ற அனுபவங்கள் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் சூழலுக்கு அமைவாக அவரால் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டங்களில் ஒரு பகுதியாகவும், மறுபகுதி அவரின் சிந்தனையிலும் இருப்பதைக் கணமுடியும். இந்த அனுபவ அணுகுமுறை அவரின் கல்விசார் பணியின் வெற்றிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒளிக்கல்லூரி  – THE COLLEGE OF LIGHT

1978 இன் நவம்பரில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தம் படுவான்கரையின் கல்வி அபிவிருத்தியில் அவரை களத்தில் இறக்கியது. முனைக்காடு கிராமத்தில் இருந்த பௌதிக மற்றும் ஆற்றல்மிக்க மனித வளங்களைப் பயன்படுத்தி இலவசக் கல்விக்கான ஒரு நிறுவனமாக “ஒளிக்கல்லூரி” அவரால் நிறுவப்பட்டது. 

இந்த கருத்தியல் பேராசிரியர் செல்வராசாவின் சிந்தனையில் உதித்தது. அதற்கான வாய்ப்பும், வளங்களும் முனைக்காட்டில் இருந்ததனால் அதனைச் செயற்படுத்துவதில் பெரும் சிரமங்கள் எதுவும் இருக்கவில்லை. பின்னர் இது முழுப் படுவான்கரைக்குமான கல்வி நிறுவனமாக திறந்துவிடப்பட்டது. 

 காலப்போக்கில் அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கன்னன்குடா கிராமங்கள் வரையும் கிளைகளைக் கொண்டதாக ஒளிக்கல்லூரி வளர்ந்தது. ஒளிக்கல்லூரி என்ற கருத்தியல் விதை அப்பகுதியின் விருட்சமாக வளர்ந்து படுவான்கரைக்கு வளங்கிய அறுவடை அதிகமானது.  

அதன் தாக்கத்தினை படுவான்கரையில் மட்டுமன்றி மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சியிலும், ஏன் கிழக்கு மாகாணத்தின் கல்வியல் துறைசார் நிபுணத்துவத்திலும் காணமுடியும். ஒளிக்கல்லூரியின் அதிபராக நண்பர் சி.வரதசீலன் இருந்த காலத்தில், மாணவர்களின் வெறும் புத்தகக்கல்வி வேலியை தகர்த்து பல்வேறு மாற்றுச் செயற்பாடுகளிலும் ஒளிக்கல்லூரி செயற்பட்டது.  

குறிப்பாக ஒளிக்கல்லூரியின் வெளியீடான “ஒளி” கலை இலக்கிய சஞ்சிகையானது ஐந்து பிரசவங்களுடன் நின்றுபோனது என்றாலும் அது ஏற்படுத்திய தாக்கம் அதிகமானது. உலகம் அறிந்த கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலைகள் ஒளியை தொடர்ந்து மிளிர விடாத சூழலை ஏற்படுத்தியது. இதன் ஆசிரியராகவும் நண்பர் சி.வரதசீலனே செயற்பட்டார். இந்தப் படுகொலையானது ஒளிக்கல்லூரியினால் உருவாகிய ஒரு இளம் கல்விகற்ற தலைமுறையை அழித்தது. அந்த இடைவெளி படுவானில் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. 

 40 வருடங்களைத் தாண்டியும் பேராசிரியர் செல்வராசா இட்ட அந்த வித்தின் விருட்சம் இன்னும் பழம் தருகிறது என்றால் அதன் பலமான ஆணிவேர் அதிசயத்திற்குரியது. இத்தனை இழப்புக்களுக்கு மத்தியிலும் யுத்தத்தினால் அதனை வேரோடு சாய்க்க முடியவில்லை. 

அதற்குக் காரணம் பேராசியரின் கருத்தியலுக்கு பின்னணியில் இருந்த சமூகநீதியே அன்றி வேறொன்றும் இல்லை. 

இராமகிருஷ்ணமிஷனதும், சுவாமி விபுலாநந்தரதும் கீழைத்தேய கல்விக்கொள்கைக்கு சார்பாகவும், இணைவாகவும் மட்டக்களப்பு பிரதேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களை உள்வாங்கி அவற்றோடு தனது வெளிநாட்டு அனுபவப் பகிர்வையும் கொண்டதாக இச்செயற்றிட்டங்கள் இருப்பதை நாம் அவதானிக்க முடியும். 

ஒளிக்கல்லூரியின் அதிபராக இருந்தபோதும், அதற்கு முன்னரும் செல்வராசா அண்ணரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பு இப்பத்தியின் எழுத்தாளரான எனக்கு நிறையவே இருந்தது. தாளங்குடா கடற்கரை மணலில் பாதம் புதைய நடக்கும் போதும், திரண்டுகிடக்கும் அடம்பன் கொடிகளைக் கடக்கும் போதும், மரமுந்திரிகை மரநிழலிலும், வீட்டுத்திண்ணைப் பேச்சிலும், செயலிலும்  அவரின் எண்ணம் மட்டக்களப்பின் கல்வி அபிவிருத்தியே.  

வீதியில் போகின்ற பள்ளிப்பராய பிள்ளைகளைப் பார்த்து “நீ ஏன் பள்ளிக்கு போகல்ல” என்று கேட்பார். பெற்றோர்களை சந்திக்கும் போது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாம விட்டுறாதிங்க” என்று சொல்லுவார். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்பள்ளிக்கான அங்கீகாரத்தை அவர்சாதித்ததும், அரசடித்தீவிலும், கிரானிலும் இரு முன்மாதிரி முன்பள்ளிகளை அமைத்ததும் இந்த சிந்தனையின் வெளிப்பாடே.  

இது போன்ற மற்றொரு சிந்தனை வெளிப்பாடுதான் “தாய்மார்கள் பாடசாலை”. முதலில் தாளங்குடாவில் அமைக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் 15 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. பெற்றோர் குறிப்பாக தாய்மார்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் விழிப்பூட்டுவதன் மூலம் கல்வி அபிவிருத்தியை ஊக்கப்படுத்தல் இதன் நோக்கம். ஆபிரிக்க முது மொழி ஒன்று இருக்கிறது. “ஒரு பெண்ணுக்கு கல்வியூட்டுவது ஒரு சமூகத்திற்கு கல்வியூட்டுவதற்கு சமமானது”. இதையே தாய்மார்கள் பாடசாலைகள் திட்டம் செயலில் காட்டியது. 

  மட்டக்களப்பு மண்மீதான அதீத அக்கறை….! 

 பட்டங்களுக்கும், பதவிகளுக்குமாக சொந்த மண்ணின் நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கும், செயற்படுவதற்கும் பலர் தயங்குகின்ற இன்றைய சூழலில் பேராசிரியர் செல்வராசாவின் செயற்பாடு தெளிவானதும், ஒழிவு மறைவு அற்றதுமாகும். நான் அறிந்த வரையில் அவர் எப்போதும் அரசியலுக்கு முக்கியம் கொடுத்ததில்லை. அதை ஒரு புறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு சமூகப் பணியையே தன்னோடு வரிந்து கட்டிக்கொண்டவர். 

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியிலும், கட்டிட அமைப்பிலும் மறைந்த கலாநிதி செல்வராசா கோபால் அவர்களோடு இணந்தும், இன்றைய தமிழ்ச்சங்க முக்கியஸ்த்தர்கள், அறிஞர்களோடு இணைந்தும் அவரது வகிபாகமும் உண்டு. 

தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயங்களின் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டவராக இன்றும் பேராசிரியர் செல்வராசா இருக்கிறார். கிழக்கிலங்கை தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பிலும் கிழக்கின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை கொண்டு செயற்பட்டதாக அறியக் கிடைக்கிறது. 

அவர் எழுதிய பல நூல்கள் வெளிவந்துள்ளன. இவை அவரது துறைசார் நூல்களாகும். உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களிலும் இவை இணைக்கப்பட்டுள்ளன. கல்வி முகாமைத்துவம், அபிவிருத்தி முகாமைத்துவம், கல்விக்கொள்கையும் முகாமைத்துவமும், அடிப்படைக் கல்விக்கருத்தியல் என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. 

பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா அவர்களின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான வேந்தர் நியமனம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் வி.கனகசிங்கம் அவர்களுக்கு ஒரு பலமாக அமையும் என்று நம்புவோம்.  

சுவாமி விபுலாநந்தரின் கனவை நல்லையா, கே.டபிள்யூ.தேவநாயகம் செ.இராசதுரை ஆகியோர் நனவாக்கினார்கள். அந்த இலக்கில் உபவேந்தரும், வேந்தரும் தொடர்ந்து பயணிக்க   வாழ்த்துகிறோம்.  

                    “படுவான் ஒரு நாள் எழுவான்”…!