— அகரன் —
‘கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்’ என்ற நூலை படித்துக்கொண்டிருந்தேன். கிராம்ஷி என்பவர் தென் இத்தாலியில் பிறந்து கார்ல் மாக்சின் சிந்தனைகளை இத்தாலிய சூழலுக்கு ஏற்றாற்போல் வடிவமைத்த அறிஞர்.
மாவோவுக்கு நிகரானது அவர் கருத்துக்கள். கடும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வாழ்நாளெல்லாம் வதைத்த உடல் நோயோடு சமூக சமத்துவத்திற்காக இயங்கியவர். அவர் பற்றிய இந்தப் புத்தகம் தமிழில் சிறந்த அறிமுகம்.
1988இல் யாழ்ப்பாணத்தில் இருந்து எழுத்தாளர் யேசுராயாவால் நடத்தப்பட்ட ‘அலைகள்’ என்ற சஞ்சிகையில் ‘அன்ரனி யோகிராம்சியின் சிந்தனைகள்’ என்ற கட்டுரை வந்ததாக இந்த நூலாசிரியர் கூறுவதில் இருந்து இவர்கள் தமிழின் மூலைகளெங்கும் வெளிவரும் அறிவுக்கருவூலங்களை கற்கிறார்கள் என்பது வியப்பாக இருந்தது.
இந்த ஆண்டு மே மாதம் நடந்துகொண்டிருந்தது. மே மாதம் தொழிலாளர் தினத்தில் தொடங்குவதால் மட்டுமல்ல அந்த நாட்களில் செத்து விழுந்த மக்கள் நினைவுகள் அலையலையாக வந்துகொண்டிருக்கும். கதறிய குரல்களும், சாவின் இறுதி முனகல்களும் அப்படிச் சாதாரண சத்தங்கள் இல்லைத்தானே?!
அப்போது அரங்கம் பத்திரிகை ஆசிரியர் ‘’என்ன ஒன்றையும் எழுதக்காணோம்?‘’ என்று குறுஞ்செய்தி அனுப்பினார். 2009இல் இறந்துபோன ஆச்சியை நினைத்து ஒரு கதையை (கஞ்சி) கைபேசியிலேயே எழுதி அனுப்பினேன். அது கதையோ.. கட்டுரையோ.. எனக்கு தெரியாது. என் நிலை அப்படிக் குழப்பமானது.
ஆனால் அந்த கதையை தன் 82 வது வயதில் தமிழகத்தில் வாழும் ஓர் அறிஞர் படித்துவிட்டு அதைப்பற்றி பத்திரிகை ஆசிரியருக்கு எழுதி இருந்தார்.
எனக்கோ கை, கால் உடலில் இருப்பது தெரியவில்லை. கையில் இறக்கை முளைத்துக் கொண்டிருந்தது. ஏனெனில் நான் எழுதுவதை நான் மட்டும் படிப்பதே பெரிய விசயம் என்பது என் சமூக நிலைப்பாடு. நான் படித்துக்கொண்டிருந்த கிராம்ஷியின் நூலை அந்த அறிஞரே எழுதி இருந்தார்.
இந்த சமாச்சாரங்கள் முடிந்து சில நாட்களில் தமிழகத்தில் ‘ஆயல்’ என்ற அமைப்பின் வாழ் நாள் சாதனையாளர் விருது அந்த அறிஞருக்கு வழங்கப்பட்டது. அவர் படைப்புக்கள் பற்றி படிக்கவே என் வாசிப்பு திறமை முடிந்துவிடும்போல் இருந்தது. ஏனெனில் 82 புத்தகங்கள். அத்தனையும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், தத்துவ அறிமுகங்கள், இலக்கியத்தோடு சேரும் அரசியல் முகமைகள், இந்திய சமத்துவ போராட்ட பொறிமுறைகள்.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்று முதன் முதலில் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது. தமிழ்ச் சூழலில் பாரதியாரின் வரிகளை தேவாரம்போல பள்ளிகள் தோறும் பாடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒர் வெளிநாட்டார் நல்லறிஞர் பற்றி படித்தே இருக்கமாட்டார்கள்.
ஆனால் ஒர் வாழ்நாளில் இத்தனை வெளிநாட்டுப் படைப்புக்களை மொழிமாற்றம் செய்து தமிழின் சிறந்தவற்றை ஆங்கிலத்தில் எழுதும் புலமையும், எதிர்பார்ப்பற்ற தலைமுறை அக்கறையும் கொண்ட உழைப்பாளர்கள் அரிதிலும் அரிது. அதில் எம் சமூகத்துக்கு கிடைத்தபெரும் ஆளுமை அவர்.
எஸ்.ராமகிருஷ்ணன் தன் கட்டுரையில்..
‘’சர்வதேச இலக்கியங்களைத் தேடித்தேடி வாசிக்ககூடியவர். குறிப்பாக, நாவல்கள். கவிதைகள் மீது விருப்பம் அதிகம். உலகப் புகழ்பெற்ற நாவல்கள். கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வாசித்தும் பேசியும் மொழியாக்கம் செய்தும் வரும் அவரது நூலகத்தில் பல அரிய புத்தகங்கள் உள்ளன.
இத்தாலிய நாவலாசிரியர் Elena Ferrante நாவல்களை வாசித்து வியந்து அவரைப்பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறார். எலினா பற்றி எழுதப்பட்ட ஒரே கட்டுரை இவருடையதே.
இது போலத் தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ், அன்னா அக்மதேவா, உம்பர்த்தோ ஈகோ, ஜோஸ் சரமாகோ, குந்தர் கிராஸ், மிலன் குந்தேரா, இதாலோ கால்வினோ, வோலோ சோயிங்கா, கார்லோஸ் புயந்தஸ், நெருதா, ஆக்டோவியா பாஸ், லோசா, கொர்த்தசார், ருல்போ, யஹுதா அமிக்காய், முகமது தார்வீஸ், எட்வரட் ஸைத், சார்த்தர் எனப் பல்வேறு முக்கிய இலக்கிய ஆளுமைகள், அவரது படைப்புகள் குறித்து விரிவான விமர்சனங்களை எழுதியிருக்கிறார்.‘’ என்கிறார்.
மேலும் கல்தெப்பம், காட்சி இழத்தலும் காணும், சாட்சி சொல்ல ஒரு மரம் போன்ற கட்டுரைத் தொபுக்குக்கள் முக்கியமானவை என்பது எஸ்.ரா வின் பிரேரிப்பு.
அண்மையில் நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கல் எழுத்தாளர் ஜோஜ்சரமாகோ (Jose Saramago). (இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1998இல் பெற்றவர்.) எழுதிய ‘’கண்டுபிடிக்கப்படாத தீவு’’ என்ற குறுநாவல் வாசித்தேன்.
ஒர் கண்டுபிடிக்கப்படாத தீவை கண்டு பிடிக்க ஒருவன் மன்னரிடம் படகை கேட்டு கடும் பிரயத்தனத்தில் அதை பெறுகிறான். அவன் பயணம் என்ன ஆனது என்பது கதை. சரமாகோவின் இலக்கியங்களுக்குள் எள்ளலும், இறைச்சிப்பொருளாக அதிகார வர்க்கத்தின் கதைகளும் மறைந்திருக்கும்.
எர்னெட் ஷெமிங்வே எழுதிய ‘கிழவனும் கடலும்’ என்ற குறுநாவல் போல ‘கண்டுபிடிக்கப்படாத தீவும்’ உலகப்புகழ் பெற்றது. அதன் பெயரிலேயே மாயம் இருப்பதை அறியலாம்.
இப்படி வியந்த ஒர் படைப்பாளியின் படைப்புக்களை முழுவதுமாகப் படித்து இந்த ஆண்டு தமிழுக்கு ‘சரமாகோ நாவல்களின் பயணம்’ என்ற நூலை ஆக்கியுள்ளார். என்ற சேதியை அறிந்து வியப்படையாமல் இருக்க முடியவில்லை. நிலவு பற்றிய கற்பனையில் இருக்கும்போது ஒருவர் தன் முதுகில் தூக்கிச்சென்று நிலவில் இறக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
இந்த படைப்புக்காக அவர் தினமும் 13 மணிநேரம் உழைத்திருக்கிறார். அவருக்கு இதய பலவீனத்தால் மூன்று அடிகள் எடுத்து வைக்கவே முடியாத நிலை. முகத்தில் உள்ள நரம்புகளின் செயல் இழப்பால் ஒர் கண் பார்வை இழந்த நிலை. தினமும் முகத்தில் வலி. இத்தனை மோசமான உடல் நிலையிலும் அவரால் சமூகத்துக்கு அறிவுச் செல்வங்களை கொடுப்பதில், களமுனைப் போராளிபோல் மனதை வைத்திருக்க முடிகிறது. நிச்சயம் போராளிகளைத் தவிர யாராலும் இந்த சமூக உழைப்பை தம் உடல் உபாதைகளை மீறி கொடுத்திட முடியாது.
சரமாகோவின் நூறாவது ஆண்டு விழா இந்த ஆண்டு (2022) கொண்டாடப்படும்போது அவருக்காக ஒர் தமிழ் படைப்பாளனின் பரிசு இது. இதை சரமாகோ உயிருடன் இருந்திருந்தால் எத்தனை மகிழ்ந்திருப்பார்?
இந்த ஆண்டு தனது 83 வயதையும், நிறைந்து கிடக்கும் உடல் வலிகளையும் வைத்திருக்கும் அந்த அறிஞர், எழுத்தாளர், போராளி. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தன் சமூகத்திற்கு கொடுத்துள்ளார். ஆனால் சொந்தமாக அவரிடம் ஓர் நிலம் இல்லை என்பதை அறிந்தபோது நிலைகுலைந்து போனேன்.
பின்பு, நாம் தமிழர்கள்தானே என்று நினைத்துக்கொண்டேன். நாம் நிழலை கொண்டாடுபவர்கள். நிஜத்தை புசிப்பவர்கள்.
இத்தனை வலியோடு போராடும் அந்த அறிஞர் கரம்பற்றி வலிபோக வருடவேண்டும்போல் இருந்தது. மூன்று பக்கம் எழுதிவிட்டே மூச்சிரைத்துவிடும் என் எழுத்தையும் இத்தனை வலிகளிலும் படித்தவர் அவர். அப்படித்தான் பேரறிஞர்கள் இருப்பார்கள் போலும்.
இவ்வளவும் படித்த பின்பு அவர் யார் என்று புத்தகங்களை நினைப்பவர்களுக்கே தெரிந்துவிடும். அவர் எஸ்.வி.ராயதுரை என்கின்ற மாபெரும் ஆளுமை. எதிர்காலம் கொண்டாடும் அவர் செழுமையை.
1975இல் இருந்து எழுதிவரும் எஸ்.வி.ஆர் ஆரம்ப காலங்களில் சிறுகதைகள் எழுதினாலும் அவரின் தீவிர தத்துவவியல் அரசியல் புனைவு இலக்கியத்தில் அவரின் ஆளுமையை களவாடி விட்டிருக்கிறது காலம் என்பது வருத்தமே.
அவர் எழுதிய 82 புத்தகங்களையும் நான் படிக்கவேண்டும். அதற்கு என் வாழ்நாள் இரக்கம் காட்டட்டும்.
இச்சிறு குறிப்பை எழுதிவிட்டு பத்திரிகை ஆசிரியருடன் பேசினேன். அவர் சர்வதேச ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்தவர் (பிபிசி ). அவர் ‘’என் திருமணத்தை நடத்தி வைத்ததும் அவர்தான்’’ என்றார். ஆச்சரியங்கள் முட்டையிட்டுக்கொண்டே இருந்தன.