வரும் ஆனால் வராது : இது ஒரு நவீன ஆக்கிரமிப்பு யுக்தி

வரும் ஆனால் வராது : இது ஒரு நவீன ஆக்கிரமிப்பு யுக்தி

      —கருணாகரன்—

“வரும், ஆனா வராது” என்று நடிகர் வடிவேலுவின் மிகப்பிரபலமான பகடி ஒன்றுண்டு. அதை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் – இலங்கை அரசின் – இன்றைய துயர நிலவரம்.

கடைகளில்  “சமையல் எரிவாயு இருக்கா?” என்று கேட்டால், தலையை உயர்த்திப் பார்க்காமலே “இல்லை” எனப் பதில் சொல்கிறார் கடைக்காரர். “எப்ப வரும்?” என்று கேட்டால், “வரும், ஆனால் வராது” என்கிறார்.

இதைக் கடந்து சிலவேளை “பின்னேரம் வந்து பாருங்கோ” அல்லது “நாளைக்கு வரும்” என்று அவர் சொன்னாலும் அந்தப் பொருள் அப்படி உரிய நேரத்தில் வருமென்றில்லை. அதற்கான உத்தரவாதமெல்லாம் முடிந்து விட்டது. அந்தக் காலமே மலையேறி எங்கோ போய்த் தொலைந்துவிட்டது.

எரிவாயு மட்டும்தான் தட்டுப்பாடு என்றில்லை. அத்தனை பொருட்களுக்குமே தட்டுப்பாடு. பத்து மாதங்களுக்கு முன்பே 740 பொருட்களுக்குமேல் இறக்குமதித்தடையை விதித்தது அரசாங்கம். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட இறக்குமதி செய்யப்படும் பொருட்களே அதிகம். ஏன் இறக்குமதியில்தான் நாடே ஓடிக் கொண்டிருந்தது என்று சொல்லலாம்.

1977இல் கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதாரத்தின் விளைவு இது. அப்படியிருக்கும்போது மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் ஒரே நாளில் இறக்குமதிக்குத் தடை என்றால் என்ன நடக்கும்?

இப்பொழுது கையிருப்பில் இருக்கும் பொருட்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டால் பிறகு? கட்டுவதற்குக் கோவணமும் இருக்காது என்று ஒருவர் சொன்னது உண்மையாகப் போகிறது.

ஏற்பட்டிருக்கும் தீவிர பொருளாதார நெருக்கடியினால் இப்பொழுது டீசல், பெற்றோல் மட்டுமல்ல, மண்ணெண்ணையையும் பெற முடியாது என்றாகிவிட்டது.  

எரிவாயு இல்லை. அதற்குப் பதிலாக மண்ணெண்ணை அடுப்பைப் பயன்படுத்தலாம் என்று எல்லோரும் மண்ணெண்ணைக் குக்கரை வாங்கினார்கள். ஒரே நாளில் குக்கருக்குத் தட்டுப்பாடு. விலையும் மலைபோல ஏறியது. இப்பொழுது மண்ணெண்ணையும் இல்லை என்றால் என்ன செய்ய முடியும்?

மின்தடைக்கு மாற்றாக மண்ணெண்ணை விளக்கையாவது ஏற்றலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சைக்கிள் திருத்தம் செய்யும் கடைகளில் அந்த உதிரிப்பாகங்களைக் கழுவுவதற்கும் மண்ணெண்ணை இல்லை.

மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, உரம் இல்லை என்றால் எப்படி விவசாயத்தைச் செய்ய முடியும்? அரிசியின் விலை மட்டுமல்ல காய்கறிகளின் விலையும் உச்சத்துக்குப் போய் விட்டது. விலை அதிகரித்தால் வீட்டுத் தோட்டம் செய்யலாம் என்றால், அதற்கும் மருந்தோ உரமோ தேவையே!

எரிபொருள் இல்லை என்பதால் கடலுக்குப் போக முடியாது. அதனால் மீன்பிடியும் இல்லை. இப்பொழுது ஒரு கிலோ மீனின் விலை 2000க்கு மேல். இந்த விலைக்கும் பொருள் கிடைப்பது அரிது.

இதையெல்லாம் சீர்ப்படுத்துவதற்குப் பதிலாக, “இனிவரும் நாட்களில் ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிடும் நிலை வரலாம். பெரும் உணவுப் பற்றாக்குறைக்கு முகம் கொடுக்க நேரிடலாம். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்” என்று கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

நெருக்கடி நிலையில் மக்கள் துவண்டு கொண்டிருக்கும்போது, அதற்கான மாற்று நடவடிக்கைகளைச் செய்வதற்குப் பதிலாக நாட்டின் பிரதமர் ஒருவர் கதைக்கின்ற கதையா இது என்று எல்லோரும் முகத்தைச் சுழித்துக் கொள்கிறார்கள்.

ஆனாலும் எவருக்கும் மாற்று வழி தெரியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு வேறு யாரும் முன்வராத போது இந்த ஆள் மட்டும்தான் வந்து ஒற்றை மனிதராகத் துணிந்து தலையைக் கொடுத்தார்.

அப்பொழுது பலரும் நம்பினார்கள், ரணிலுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுண்டு. அந்த ஆதரவைக் கொண்டு நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று. ஆகக் குறைந்தது ஐ.எம். எவ்விடமோ உலக வங்கியிடமோ கடன்பட்டாவது சமாளித்துக் கொள்ளலாம் என. அதாவது ரணில் என்ற ஒற்றை மனிதரைக் கொண்டு நாட்டின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைத் தணித்து விடலாம் என்று கனவு கண்டனர்.

ஆனால், அதே ரணில் என்ற ஒற்றை மனிதரைக் கொண்டே இலங்கையின் அரசியல் விதியைத் தமக்குச் சாதமாகக் கையாண்டு  கொண்டிருக்கின்றன இந்தியாவும் அமெரிக்காவும். இதைப்பற்றிய பகிரங்கமான கருத்துகளுக்கு இந்த இரண்டு நாடுகளும் தொடர்ச்சியாக மறுப்புகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.

ஆக ரணிலை இலங்கை மக்களும் உள்நாட்டு அரசியற் சக்திகளும் கையாள்வதற்குப் பதிலாக வெளிச்சக்திகளே வெற்றிகரமாகக் கையாள்கின்றன. அவர்களுக்கே வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த வெற்றிக்காகவே அவை கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத் தீவிரமாகப் பாடுபட்டன. 2015க்கு முன்பு இலங்கையில் சீனா மிக வேகமாகச் செல்வாக்கடைந்து கொண்டிருந்தது. அந்தளவுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் பின்னடைந்து கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் இலங்கையின் வடக்கில் உள்ள தீவுகளிலும் சீனா காலூன்றப் போகிறது என்ற நிலை வந்தபோது இந்தியா முற்றாகவே கலங்கியது.

ஆனால் இன்று நிலைமை வேறு. இப்பொழுது சீனா மிகத் தொலைவுக்கு ஓரங்கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிடம் முழந்தாழில் மண்டியிட்டு இலங்கை உதவிகளைக் கோருகிறது. இந்தியாவும் கருணைக் கடாட்சமாக இலங்கைக்கு வரையறுக்கப்பட்ட அளவில் அருள்பாலிக்கிறது.

“இது ஒரு நவீன ஆக்கிரமிப்பு உத்தி. நேரடியாக ஆக்கிரமிப்புச் செய்தால் அது உலக விவகாரமாகி விடும். இலங்கையின் உள்நாட்டிலும் அதற்கு எதிரான போராட்டங்கள் எழும். ஆகவே இதை வேறுவிதமாகக் கையாள்கிறது இந்தியா” என்கிறார் பெயர் வெளிப்படுத்த விரும்பாத அரசியல் அவதானி ஒருவர்.

அவருடைய மொழியில் சொன்னால், இலங்கையின் மீது ஆக்கிரமிப்பு என்பதற்குப் பதிலாக இலங்கையைப் பராமரிப்புச் செய்கிறோம் என்ற விதமாக இந்தியா விடயங்களைக் கையாள்கிறது.

இதற்கு அமையவே காலிமுகத்திடல் போராட்டத்தையும் இந்தச் சக்திகள் பயன்படுத்துகின்றன என்றொரு பார்வையும் சிலருக்குண்டு.

இதன் அர்த்தம் அந்தப் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதல்ல. அதைப்போலக் கூட்டிப் பார்ப்பதும் அல்ல.

ரணிலுக்கு முன்பிருந்த மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினரை அதிகாரத்திலிருந்து அகற்றும் வரை மேற்படி சக்திகள் நிம்மதியாக இருக்க முடியாது.

காரணம், மகிந்த ராஜபக்ஸ எப்போதும் சீனாவுக்குச் சாய்வான நிலைப்பாட்டைக் கொண்டவர். அவருடைய அணியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸவிதாரண, டி.யு.குணசேகர, விமல், தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட பெரும்பாலானவர்களும் இதே மனநிலையைக் கொண்டவர்களே.

ஆக இந்த அணியை அதிகாரத்திலிருந்து இறக்கி, அந்த இடத்தில் ரணிலை அமர்த்தி விட்டால் நிலைமையைச் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்றே இவை விரும்பின. அதற்கு வாய்ப்பாக ராஜபக்ஸக்களின் நிர்வாகத்தில் இருந்த தவறுகளும் பலவீனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இயல்பாக இருந்த நெருக்கடிகளையும் அதிருப்தியையும் பயன்படுத்தி, நிலைமை சூடேற்றப்பட்டது. மே முதல் வாரத்தில் நடந்த – நடத்தப்பட்ட – கொந்தளிப்புச் சூழலின் மூலம் மகிந்த ராஜபக்ஸ அணி பின்தள்ளப்பட்டது.

இப்பொழுது ரணில் – கோத்தபாய அணி அரங்கில் உள்ளது. அணி மாற்றமடைந்துள்ளதே தவிர, நாட்டின் நெருக்கடி நிலை அப்படியேதான் உள்ளது. ஆனால், ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் இது மேற்குறித்த வெளிச்சக்திகளுக்கு பயனாகியிருக்கிறது.

அவை இதன் முழுப்பயனையும் பெறுவதற்கு இன்னும் சில வேலைகளைச் செய்யவுள்ளன. இலங்கையின் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றன. அரசியலமைப்பு மாற்றம் நிச்சயமாக ஏற்பட வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை. அதை இலங்கைத் தலைவர்களோ இலங்கை அரசியற் சக்திகளோ சிந்திப்பதற்குப் பதிலாக இவையே சிந்திக்கின்றன – நிர்ப்பந்திக்கின்றன.

கடந்த நல்லாட்சி (2015 – 2019 )க் காலத்தில் சர்வதேச சமூகத்தின் நிபந்தனை அல்லது ஆலோசனைகளில் ஒன்று அரசியலமைப்புத் திருத்தமாகும்.

அது அப்பொழுது சாத்தியமற்றுப் போனது. இப்பொழுது மீண்டும் அதை அவை வலியுறுத்துகின்றன – வலுப்படுத்தப்போகின்றன.

அதுவரையிலும் நாட்டின் நெருக்கடி நிலையில் பாரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாது. ஐ.எம்.எவ்வின் கடனுதவியிலிருந்து நாடுகளின் கொடைகள் வரையில் மட்டிறுத்தப்பட்டேயிருக்கும்.

ரணில் மெல்ல மெல்ல இதற்கான காய்களை நகர்த்திக் கொண்டேயிருப்பார். அவரால் இப்பொழுது நினைத்த மாத்திரத்தில் எதுவும் செய்ய முடியாது.

அதிகாரத்தில் அவர் பிரதமராக இருந்தாலும் நடைமுறையில் ராஜபக்ஸவினரின் கைகளே அரசாங்கத்தை இயக்குகின்றன. மொட்டுக்கட்சி என்ற பொதுஜன பெரமுனவின் தயவில் – ஆதரவில் – ஆதரவில்தான் ரணில் ஆட்சி நடத்த வேண்டியுள்ளது.

ஆனால் நெருக்கடி நிலை என்ற ஒரு விடயம் தவிர்க்க முடியாமல் இரு தரப்புக்கும் இருப்பதால் இழுபறிகளின் மத்தியிலும் இரு தரப்பும் சில விட்டுக் கொடுப்புகளை – ஏற்றுக் கொள்ளல்களைச் செய்து சமாளித்துச் செல்ல வேண்டியுள்ளது.

இதில் யார் இறுதி வெற்றியடைவது (ரணிலா ராஜபக்ஸவினரா இந்தியா, அமெரிக்காவா அல்லது சீனாவா) என்பது ஒரு புறமிருக்கட்டும். இலங்கை எப்படி ஆகப்போகிறது என்பதே கேள்வி.

ஏனென்றால் இந்தளவுக்கு நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத அளவுக்கு நிலைமை வந்து விட்ட பின்னும் இனவாதத்தை விட்டிறங்குவதற்கு எவரும் தயாரில்லை.

அரசியலமைப்பை பொருத்தமான முறையில் பல்லினத்தன்மைக்கு ஏற்ப மாற்றம் செய்யவும் எவரும் விரும்புகிறார்களில்லை. தமக்கிசைவான முறையில் மாற்றங்களை – திருத்தங்களைச் செய்யவே முயற்சிக்கின்றனர்.

நாட்டில் பொருளாதார சீரமைப்பைச் செய்வதற்கோ, உற்பத்தியை மேம்படுத்துவதற்கோ எவரும் சிந்திப்பதையும் காணோம். எங்காவது கடன்பட்டு நிலைமைச் சீர்ப்படுத்திக் கொள்வோம் என்றே எல்லோரும் எண்ணுகிறார்கள்.

இதே நிலைமை நீடித்தால் அடுத்த ஆண்டு இலங்கையில் ஒரு லட்சம் பேருக்கு மேல் உணவின்மையினாலும் நோயினாலும் செத்து மடிந்து விடுவர்.

அதற்குள் மாற்றம் வருமா என்றால் “வரும், ஆனால் வராது”.