இதயம் பத்திரம் – இறுதிப்பகுதி 

இதயம் பத்திரம் – இறுதிப்பகுதி 

           — யோ.அன்ரனி —  

பரவலாக உலக நாடுகளில் அதிகரித்து வரும் இதய இரத்தக்குழாய் நோய்களை, உணவு முறைகளை மாற்றுவதாலும், உடலுழைப்பை அதிகரிப்பதாலும் குறைக்க முடியுமென்பதைக் கடந்த பகுதிகளில் பார்த்தோம். இந்த வருமுன் இதய நோயினின்று காக்கும் படிமுறைகளில் மூன்றாவதாக மன அமைதி பேணல் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை இந்த இறுதிப் பகுதியில் பார்க்கலாம்.  

மனப்பதகளிப்பு (stress) சாதாரணமானதா? 

இவ்வினாவுக்கு சுருக்கமான பதில் “ஆம்” என்பதுதான். உயிரியல் ஆய்வு முடிவுகளின்படி, “சண்டையிடும் அல்லது தப்பியோடும் (fight or flight)” நரம்பியல் தொழிற்பாடு உயிரினங்கள் ஆபத்திலிருந்து தப்பி வாழ அவசியமான ஒரு துலங்கல். இந்த அடிப்படையான நரம்பியல் தொழிற்பாட்டின் உயர் வடிவம்தான் மனிதர்களுக்கு ஏற்படும் மனப்பதகளிப்பு. எனவே, குறுகிய கால அளவில் ஏற்படும் மனப்பதகளிப்பு எங்களைப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது. உதாரணமாக, ஒரு கால எல்லைக்குள் முடிக்கவேண்டிய பணியொன்றில்ஈடுபட்டிருக்கும் போது, எங்கள் கவனத்தைப் பணியில் குவியவைக்கும் இயல்பு, essential stress எனப்படும் மனப்பதகளிப்பினால் ஏற்படுகிறது. பிரச்சினைக்குரியது என்னவெனில், இத்தகைய மனப்பதகளிப்பு நிலை தொடர்ந்து நீடிக்கும் போது, எங்கள் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இதயம், குருதிக் குழாய்கள், கணையம் என்பவற்றைப் பாதிப்பதால் இதய நோயும், நீரிழிவும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.  

மனப்பதகளிப்பினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் எவை? 

ஒரு ஆபத்திலிருந்து நீங்கள் தப்பியோடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இதயத்துடிப்பு அதிகரிக்கும், சுவாச வீதம் அதிகரிக்கும், முதுகு போன்ற பகுதிகள் சில்லிடும் (இரத்தம் தோலில் இருந்து திசை மாற்றப்பட்டு, முக்கிய உறுப்புகளுக்கு வழங்கப்படுவதால் இது நேரும்), நாக்கு வரண்டு போகும். இவையெல்லாம் நீங்கள் அவதானித்து உணரக் கூடிய உடலியல் மாற்றங்கள். இவற்றைவிட எங்களால் உணர முடியாத பல உள்ளக மாற்றங்களாக, உடலில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பது, கொழுப்பின் அளவு அதிகரிப்பது, குருதிக் குழாய்கள் அதிக அழுத்தத்தை உருவாக்கும் பொருட்டுச் சுருங்குவது போன்ற மாற்றங்களும் சம நேரத்தில் நிகழும். எங்கள் தப்பியோடும் வேகத்தைத் தற்காலிகமாக அதிகரிக்கும் பொருட்டு ஏற்படும் இந்த இரண்டாம் வகை மாற்றங்கள் தொடர்ந்து நாட்கணக்கில், வாரக்கணக்கில் நீடித்தால், அவை இதயத்தின் குருதிக் குழாய்களில் கொழுப்பு மூலம் திட்டுக்கள் (atheroma) உருவாவதையும், இதயத்தின் இரத்த ஓட்டம் தடைப்படுவதையும் அதிகரிக்கச் செய்யும். மேலும், இரத்தத்தில் சோடியத்தின் அளவையும் தொடர் மனப்பதற்றம் அதிகரிப்பதால், உயர் இரத்த அழுத்தமும் அதிகரித்து மூளையில் இரத்தவோட்டத் தடை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். மூன்றாவதாக, மேலே குறிப்பிட்டது போல, தொடர்ந்த மனப்பதகளிப்பினால், இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிக்கும் போது, கணையம் இன்சுலினை மிகையாகச் சுரந்து, இரண்டாம் வகை நீரிழிவு உருவாகவும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.    

தூக்கத்திற்கும் மனப்பதகளிப்பிற்கும் என்ன தொடர்பு? 

உறக்கம் ஏன் ஏற்படுகிறது, எப்படி எங்கள் உயிர்வாழ்வைப் பேண உதவுகிறது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு முழுமையான விடைகள் இன்னும் மருத்துவ விஞ்ஞான ஆய்வுகளின் வழியே கிடைக்கவில்லை. ஆனால், போதிய உறக்கம் இல்லாவிட்டால், மனித உடல் மனப்பதகளிப்பின் போது அனுபவிக்கும் அதே வகையான மாற்றங்களை அடைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தத் தகவல், மனப்பதகளிப்பிற்கும், எங்கள் நரம்புத் தொகுதியின் ஒரு முக்கியமான பகுதிக்குமிடையிலான தொடர்பைத் தெளிவாகக் காட்டுகிறது. மனப்பதகளிப்பின்போது மேலோங்கித் தொழிற்படும் “பரிவு (sympathetic) நரம்புத் தொகுதி” தான் நாம் மேலே குறிப்பிட்ட உடலியல் மாற்றங்களுக்குக் காரணம். தூக்கத்தின் போது, இந்தப் பரிவு நரம்புத் தொகுதி அடக்கப்பட்டு, அதன் எதிர் பிரிவான “பரபரிவு (parasympathetic) நரம்புத்தொகுதி” மேலோங்குகிறது.இந்தப் பரபரிவு நரம்புத் தொகுதி என்பது உடலின் முக்கிய உறுப்புகளை ஓய்வில் வைத்திருக்கும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக, தூக்கத்தில், உங்கள் இதயத்துடிப்புக் குறையும், குருதிக்குழாய்கள் பெரும்பாலான உறுப்புகளில் தளர்வடையும் -எனவே இரத்த அழுத்தம் குறையும். இப்படி, உடலை ஓய்வு நிலையில் வைத்திருக்கும் வேலையை தூக்கத்தின்போது பரபரிவு நரம்புத் தொகுதி செய்கிறது.      

எனவே, மனப்பதகளிப்பைக் குறைக்க தூக்கத்தை அதிகரிக்க வேண்டுமா?   

உரிய நேரத்தில் (இருள் சூழும்போது) போதிய தூக்கம்தான் ஆரோக்கியத்திற்கு அவசியமேயொழிய, தேவையற்ற நேரத்தில் வலிந்த தூக்கம் உடல் நலத்தை வேறு வழிகளில் பாதிக்கும். உதாரணமாக, மதிய உணவின் பின்னரான நீண்ட தூக்கம் உடற்பருமனை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு, எனவே மனப்பதகளிப்பைக் குறைத்தாலும், அதிகரித்த உடற்பருமனால் இதய குருதிக்குழாய் நோய்களை நோக்கி உங்கள் உடல் நகரலாம். அப்படியானால், எப்படி இந்தப் பரபரிவு நரம்புத் தொகுதி தரும் நன்மைகளை நாம் விழித்திருக்கும்போதே அடைவது?    

தீர்வு என்ன

மனப்பதகளிப்பை முற்றாக நீக்குதல் என்பது நவீன வாழ்வில் சாத்தியமில்லாத ஒன்றாகக் கருதப்படுகிறது. எங்கள் வேலையிடச் சூழல், வாழும் நகரச் சூழல், குடும்ப நிலைவரங்கள் என்பன பல சமயங்களில் மாற்ற முடியாத காரணிகளாக இருக்கின்றன. எனவே, மனப்பதகளிப்பிற்கான காரணிகளை அகற்ற இயலாதபோது, எங்கள் பரபரிவு நரம்புத்தொகுதியை மேலோங்கிச் செயற்படச் செய்வதன் மூலம் மனப்பதகளிப்பை நாம் முகாமை செய்ய முடியும். உதாரணமாக, ஒரு இயற்கை சூழ்ந்த பூங்காவில் நடப்பது கூட எங்கள் உடலை மனப்பதகளிப்பின் தாக்கத்திலிருந்து காக்கும் ஒரு எளிமையான வழியாக அறியப்பட்டிருக்கிறது. மேலதிக முயற்சிகளாக, மன அமைதியைத் தூண்டும் யோகாசனம், தாய்ச்சி (Tai chi), தியானம் என்பனவும் இதே பணியைச் செய்கின்றன என்பது தெளிவாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இவையோடு, உடலுக்கு அவசியமான தூக்கம் – உரிய நேரத்தில், முடிந்தளவு கிரமமான நேரத்தில் – மனப்பதகளிப்பைக் குறைக்கும்  ஒரு அன்றாட நிவாரணி. 

முடிவுரை 

உணவு முறை மூலம் உடலின் கொழுப்பு, அதிகரித்த குளுக்கோஸ் என்பவற்றைக் குறைத்தல், உடலுழைப்பு மூலம் மிகையான சக்தியை எரித்தல், மனப்பதகளிப்பைக் குறைக்கும் வாழ்க்கை முறை – இவை மூன்றும் இதய குருதிக் குழாய் நோய்களை மட்டுமன்றி, சிக்கலான நீரிழிவு நோயையும் தள்ளிப் போடும் அல்லது தடுக்கும் வழி முறைகள். இவை மருந்துகள் அல்ல – தடுப்பு முறைகள் மட்டுமே. எனவே, இந்தத் தடுப்பு முறைகளோடு, கொழுப்பை, அதிகரித்த இரத்தக் குளுக்கோசைக் குறைக்கும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்தில் எடுத்துக் கொள்வது, நீடித்த உடல் ஆரோக்கியத்திற்கான வழிகளாகும்.   

முற்றும்.