தமிழ் இளைஞர்கள் மற்றும் மக்களின் தியாகங்களை புறக்கணித்து அரசியல் விளையாடும் தமிழ் தலைமைகள் (வாக்குமூலம்-17) 

தமிழ் இளைஞர்கள் மற்றும் மக்களின் தியாகங்களை புறக்கணித்து அரசியல் விளையாடும் தமிழ் தலைமைகள் (வாக்குமூலம்-17) 

—  தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

தமிழ்த் தேசியக் கட்சிகள் (?) எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி) உட்பட எல்லாத் தமிழ் அரசியற் கட்சிகளும் தேர்தல் காலங்களில் வாக்குக் கேட்கும்போது தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்குப் போராடப் போகிறோம் என்று சொல்லித்தான் – முழங்கித்தான் – வாக்குவேட்டையாடிப் பாராளுமன்றம் செல்கிறார்கள். 

பாராளுமன்றம் சென்று அதன் பின்பு தமிழ்த்தேசியக் குறிக்கோள்களை மறந்து பாராளுமன்றச் சம்பிரதாயங்களுக்குள் மூழ்கிப் போகிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசிய அரசியலின் பலவீனம் இதுதான். 

1976 மே 14இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில், சுதந்திரத் தமிழீழ அரசை (தனிநாட்டை) நிர்மாணிக்க ஆணை தாருங்கள் எனமக்களிடம் 1977 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஆணை கேட்டுப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, அத்தேர்தல் முடிவுகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அன்றைய செயலாளர் நாயகம் அமரர். அ.அமிர்தலிங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்தபோது, மக்கள் ஆணையைமறந்து பாராளுமன்றச் சம்பிரதாயங்களுக்குள் மூழ்கிப்போனமை பழைய அனுபவம். 

தமிழ்த் தேசிய அரசியற் போராட்டமானது அஹிம்சாவாதம் பேசிய மிதவாதத் தலைவர்களிடமிருந்து ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களின் கைக்குமாறி இறுதியில் அரசியல் வழிநடாத்தலற்ற வன்முறையாக வழிதவறிப் போனமைக்குத் தமிழ் அரசியல் தலைவர்களின் இந்தப் பாராளுமன்ற அரசியல் சம்பிரதாயப் பலவீனமே காரணம். 

 சரி பிழைகளுக்கப்பால் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள். உயிர்த் தியாகம் செய்தார்கள். பொதுமக்களும் தங்கள் இழப்புக்களையும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு ஆதரவளித்தார்கள். இறுதியில் நடந்தது என்ன? எல்லாத் தியாகங்களும் அவம்போயின. இழப்புகள் மட்டுமே எஞ்சின. 

2004 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்து அனுப்பியதுதான் போராட்டத்தின் மிக உச்ச அடைவு(?) ஆகும். இதற்காகவா அத்தனை தியாகங்களையும் இழப்புக்களையும் தமிழ்த் தேசிய இனம் எதிர்கொண்டது. 

2009இல் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரழிவும் சுமார் 15 லட்சம் தமிழர்கள் இலங்கைத் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தமையும்தான் இத் தமிழ்த்தேசியப் போராட்டத்தின் ‘அறுவடை’கள் ஆகியுள்ளன. இந்த எதிர்மறை அனுபவங்களிலிருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ளல் அவசியம். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் ‘பயங்கரவாதப் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் போராட்டம்’ என்று சர்வதேசத்திற்கு அறிவித்துவிட்டு அவரால் புலிகளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக்கட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட – இவ்யுத்தத்தில் அறவே சம்பந்தப்படாத அப்பாவி மக்களைக் காப்பாற்றத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபத்தியிரண்டு பேர் இருந்தும் போர்நிறுத்தம் வேண்டி எதுவும் செய்யாமல் வாளாவிருந்தார்கள். காரணம் தமிழ் மக்கள் அழிந்தாலும் பறவாயில்லை தங்களின் ‘மூத்தண்ணா’ விடுதலைப் புலிகள் அழியவேண்டுமென்பதே அவர்களின் தேவையாக இருந்தது. 

இந்த இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது போர்நிறுத்தம் வேண்டி பாராளுமன்றப் படிக்கட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் தங்கள் பாராளுமன்றப் பதவிகளையாவது இராஜினாமாச் செய்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான மக்களுக்கான போராட்டம். அதனை அப்போது செய்யாமல் தங்கள் தொலைபேசிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு ஓடி ஒளிந்திருந்து விட்டு (இரா சம்பந்தன் அப்போது இந்தியாவில் போய்த் தங்கியிருந்தார்) இன்று தேர்தல் அரசியல் தேவைகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கின்ற- முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்கின்ற –  பருகுகின்ற -நினைவுத் தீபம் ஏற்றும் ‘போலி’த் தமிழ்த் தேசியவாதிகளைத் தமிழ் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். 

 04.05.2022 அன்று பாராளுமன்றத்தில் பிரதிச் சபாநாயகர் தெரிவு நடைபெற்றபோது நடந்ததைப் பார்க்கலாம். ஆளும் தரப்புப் பொது ஜன பெரமுன முன்பு பிரதிச்சபாநாயகராகவிருந்த ரஞ்சித்சியம்பலாபிட்டிய ராஜினாமாச் செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மீண்டும் அவரது பெயரையே பரிந்துரைத்தது. எதிர்க் கட்சியாகிய ஐக்கிய மக்கள் சக்தி  இம்தியாஸ்பாக்கீர்மாக்காரின் பெயரைப் பரிந்துரைத்தது. சியாம்பலப்பிட்டியவே மீண்டும் பிரதிச் சபாநாயகராகி மீண்டும் இராஜினாமாச் செய்தார். 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை பிரதிச் சபாநாயகராக இருவரில் எவர் வந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால் சுமந்திரனும் சாணக்கியனும் இதை ஏதோ தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை சம்பந்தமான முக்கியமான பிரச்சினை போன்று ரணில் விக்கிரமசிங்க சியம்பலாபிட்டியவை ஆதரித்தமைக்காக அவர்மீது சாணக்கியன் கணைகள் தொடுத்தார். காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். 

பின்னர் சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் நியமனத்தை எதிர்த்துக் காரசாரமாகக் கணைகள் தொடுத்தார். 

04.05.2022 அன்று மீண்டும் பிரதிச் சபாநாயகராகத் தெரிவான சியம்பலாபிட்டிய மீண்டும் இராஜினாமாச் செய்தார். மீண்டும் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 17.05.2022 அன்று தேர்தல் நடைபெற்ற போது பொது ஜன பெரமுன அஜித் ராஜபக்சவைத் தமது சார்பில் நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி ரோகிணி கவிரட்னவை நிறுத்தியது. அஜித் ராஜபக்சவே தெரிவானார். 

பிரதிச் சபாநாயகர் தெரிவு போன்ற இவ்வாறான பாராளுமன்றச் சம்பிரதாயங்களுக்குள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போன்ற தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம்தான் என்ன? 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மீதான அதிருப்திப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் 17.05.2022 அன்று விவாதத்திற்கு எடுக்கும் வகையில், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனையை எதிரணியின் சார்பில் சுமந்திரனே முன்வைத்தார். ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. இது குறித்தும் சுமந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை ஆதரிக்கவில்லையென்பதற்காகக் கடினமான வார்த்தைக்கணைகளை ரணில் மீது தொடுத்துள்ளார். சாணக்கியனும் அதற்குப் பக்கப்பாட்டுப் பாடுகிறார். ஐக்கிய மக்கள் சக்திக்காக இப்பிரேரணையை வடிவமைத்துக் கொடுத்தவர் சுமந்திரன்தான். 

இப்பத்தி சுட்டிக்காட்ட முற்படுவது என்னவெனில், சுமந்திரன் இவ்வாறு பாராளுமன்றச் சம்பிரதாயங்களுக்குள் மூழ்கிச் செயற்படுவதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் இல்லை என்பதைத்தான். சாணக்கியனுக்கோ எதுவும் தெளிவாகத் தெரியாது. ஆனால் எல்லாம் தெரிந்தவர் போல் சுமந்திரனுக்குப் பின்னால் ‘சத்தவெடி’யாக முழங்கித் திரிகிறார். சுமந்திரனும் சாணக்கியனைத் தன்னுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்ல நன்கு பயன்படுத்துகிறார். இருவரும் சேர்ந்து தமிழர் அரசியலைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். 20.05.2022 அன்று பாராளுமன்றத்தில் மீண்டும் சாணக்கியன் ரணில் மீது ‘பாய்ச்சல்’ நடத்தியுள்ளார். 

 தமிழ் மக்கள் அமைதியாக இருக்க வேண்டிய விடயங்களிலும்- நடுவுநிலைமை வகிக்கவேண்டிய விடயங்களிலும் – தமிழ்த் தேசிய அரசியலின் இலக்குகள் சம்பந்தப்படாத விடயங்களிலும் அனாவசியமாக மூக்கை நுழைத்து அதிகப்பிரசங்கித்தனமாகவும் ‘அவசரக் குடுக்கை’ களாகவும் நடந்து சுமந்திரனும் சாணக்கியனும் தமிழ் மக்களுக்குச் சங்கடங்கள் ஏற்படுத்துவதை இனியாவது இருவரும் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்தி வழிநடத்தும் வல்லமையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தனும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவும் இழந்துவிட்டனர் போலும். சுமந்திரனும் சாணக்கியனும் தமிழர் அரசியலில் ‘தகப்பன் சாமி’ கள் ஆகிவிட்டார்கள். இது ஆபத்தானது என்பதைத்  தமிழ்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

 நல்லாட்சிக் காலத்தில் (2015–2019) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேலை செய்தது. 

 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேலை செய்கிறது. தமிழ் மக்கள் இவர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியது இதற்காகத்தானா? 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது பொது ஜன பெரமுன என்றாலும் சரிதான்- ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சக்தி என்றாலும் சரிதான் எல்லாமே பௌத்த-சிங்களப் பேரினவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. 

எனவே, தற்போதைய அரசியல் நெருக்கடிச் சூழலில் தமிழர் தரப்பு அரசியற் சக்திகள் அவசரப்பட்டுத் தீர்மானங்களை எடுக்காமல் அறிவுப்பூர்வமாகவும்-அமைதியாகவும்- அவதானமாகவும் காலடிகளைப் பக்கச்சார்பற்றுப் பக்குவமாக எடுத்துவைக்க வேண்டும்.