— கருணாகரன் —
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குத் தீர்வு எப்போது கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும் என்பதே இன்று மக்களின் மனதில் உள்ள ஆயிரம் டன் கேள்வியாகும். புதிய பிரதமர், (பழைய ஆட்களுடன்) புதிய அமைச்சரவை என்ற பிறகும் நெருக்கடி தீருவதாக இல்லை. பதிலாக மேலும் பொருட்களின் விலை கூடியிருக்கிறது. பஸ் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருட் தட்டுப்பாடு நீங்கவில்லை.
அப்படியென்றால் அடுத்து என்ன நடக்கும்? எப்படி இனி வரும் நாட்களைச் சமாளிப்பது? இதன் முடிவென்ன?
இந்த மாதிரிக் கேள்விகள் மக்களிடம் விடை பெருந்தீயாக எழுந்துள்ளன. கேள்வி மட்டுமல்ல, எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் உருவாகியுள்ளது. இது போர்க்கால அச்சத்தையும் விடப் பயங்கரமானது. அப்போது இந்த மாதிரி எல்லோரும் கஸ்ரப்படவில்லை. ஏதேனும் சில வழிகளில் ஒரு சிறிய இடைவெளியோ ஆறுதலோ இருக்கும். அங்கே மரணம்தான் பெரிய பிரச்சினை. இங்கே மரணத்தைத் தவிர அனைத்தும் பிரச்சினை. அது உயிரை மாய்ப்பது. இது உயிரோடு வைத்து மாய்ப்பதாகும்.
நெருக்கடி நீளும்போது சனங்களின் சேமிப்பு சடுதியாகக் கரைந்து போகும். அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. கையிலே எவ்வளவு பணத்தைக் கொண்டு போனாலும் பையிலே பொருள் சேருதில்லை. வருமானத்தை விடப் பன்மடங்கு செலவீனம் ஏற்படுகின்றது. அந்தளவுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி வாழ்க்கைச் சுமையை ஏற்றி விட்டுள்ளது. சமாளிக்கவே முடியாமல் திணறுகின்றன பல குடும்பங்கள். வறுமை சடுதியாக அதிகரிக்கப்போகிறது. வறுமை ஒழிப்புக்கான சமுர்த்தி உட்பட அரசாங்கத்தின் வேலைத்திட்டம் அத்தனையும் தோல்வியைத் தழுவப்போகின்றன. பதிலாக வறுமைப் பெருக்கமே நிகழவுள்ளது.
நுண்கடன்களால் பாதிக்கப்பட்டிருந்த பல்லாயிரம் குடும்பங்களுக்கு கடன் நீக்கம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை மத்திய வங்கி வழங்கியிருந்தது. இதைக்குறித்து பாராளுமன்றத்திலும் பலரும் வாக்குறுதியளித்திருந்தனர். ஆனாலும் அதொன்றும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் பலர் தற்கொலை கூடச் செய்தனர். இருந்தும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை.
ஏறக்குறைய அதைப்போல இப்பொழுதும் பல விதமான வாக்குறுதிகள், உத்தரவாதங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இதற்கெல்லாம், பெறுமதி என்ன, அர்த்தம் என்ன என்று யாரும் சிந்திப்பதில்லை. அந்தந்த நேரத்துக்கு எதையாவது சொல்லிச் சமாளித்து விடுவோம் என்றே சிந்திக்கிறார்கள். ஆனால், இது நிலைமையைச் சீராக்காது. பதிலாக உள்ளே தணலாகக் கொதித்துக் கொண்டேயிருக்கும். அந்தத்தணல் என்றோ ஒரு நாள் தீயாகப் பற்றும். அதுவே இப்பொழுது ஏறக்குறைய நடந்து கொண்டிருக்கிறது.
இப்பொழுது தேவையானது, பிரச்சினையை மூடி மறைப்பதோ உடனடியாக எதையாவது செய்து சமாளித்துக் கொள்ளலாம் என்று கருதுவதோ அல்ல. இலங்கையில் இதுதான் வழமை. எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுவதில்லை. எல்லாவற்றையும் ஆறப்போடுவது அல்லது இழுத்தடிப்பது. 70 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுபடவில்லையா? அதற்காக ஒரு பெரிய போரே நடந்து முடிந்த பிறகும் அதைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இல்லை. அந்தப் போரில் ஒவ்வொரு குடும்பமும் சந்தித்த நெருக்கடிகளும் இழப்புகளும் அதிகம். நாடே பல்லாயிரக்கணக்கான மனிதர்களை இழந்தது. ஆனாலும் கூட இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற உணர்வு வரவேயில்லை.
இந்த இனப்பிரச்சினையும் அதன் விளைவான போரும் உண்டாக்கிய பொருளாதார இழப்பு இன்றைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் என்பதைக் கூட பலரும் உணரத் தவறுகின்றனர். அப்படி உணர்ந்தாலும் அதைப் பகிரங்கமாகப் பேச அவர்கள் தயாரில்லை.
இதையெல்லாம் மறைத்துக் கொண்டு எப்படி நம்முன்னே உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியும்? முதலில் நாம் நம்முடைய மனக்கதவுகளைத் திறக்க வேண்டும். காலம் அதற்கான சூழலை உருவாக்கித் தந்துள்ளது. வரலாறு நமக்கு அருமையான வாய்ப்பைத் தந்துள்ளது.
இந்தப் பயங்கரமான நெருக்கடிக்குள்ளும் நமக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதை அரசியல் தலைவர்களும் கட்சிகளும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழமையைப் போல இனவாதத்தை விற்பனை செய்ய முயற்சிக்காமல், அப்படிச் சிந்தித்து மேலும் நாட்டைப் பாழ்படுத்தாமல், நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு புதிதாகச் சிந்திக்க வேண்டும். திறந்த மனதோடு சிந்திக்க வேண்டும். அது ஒன்றே மீட்சிக்கான வழி. அதைச் செய்யாமல் வேறு தந்திரங்களைக் கையாண்டு இப்போதும் இந்த நிலைமையைக் கடக்க முற்படலாம் என்று சிலர் எண்ணக் கூடும். அப்படிக் கடந்து போனாலும் அது நீடித்த தீர்வைத் தராது. இன்னொரு கால இடைவெளியில் மீண்டும் இன்னொரு வடிவில் நெருக்கடி வந்தே தீரும்.
இப்போது பாருங்கள், போர் முடிந்து விட்டது. இனிப் பிரச்சினை இல்லை என்றே பலரும் எண்ணினார்கள். குறிப்பாக சிங்கள மக்களிடம் இந்த உணர்வு மேலும் வலுத்திருந்தது. ஆனால் என்ன நடந்தது?
இப்பொழுது சமைப்பதற்கே வழியற்ற நிலை வந்திருக்கிறது.
ஆகவே இனியும் தாமதிக்காமல், நாடு எதிர்கொண்டுள்ள நிலைமையைப் பற்றி வெளிப்படையாக மக்களுக்குச் சொல்லி, அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். “மக்களுக்கு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், அந்த உண்மையை எப்படிச் சொல்ல வேண்டும் என்பது முக்கியமானது. ஏனென்றால் சொல்லப்படுகின்ற உண்மை சரியான முறையில் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், சொல்லப்படும் உண்மை முழுமைப்பட்டதாக இல்லை என்றால், அது நிலைமையின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவில்லை என்றால் என்னதான் சொல்லியும் பிரயோசனமில்லை.
நிலவரத்தைப் பற்றிய உண்மையைச் சொல்வது என்பதோடு அதற்கான மாற்று வழிகள் என்ன? அதில் யாரெல்லாம் பங்கேற்க வேண்டும்? அந்தப் பங்கேற்பும் பங்களிப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூடச் சொல்லப்படுவது அவசியம். முக்கியமாக தேசிய நெருக்கடியைத்தீர்ப்பதற்கு மக்களின் பங்களிப்பின் அவசியத்தைப் பற்றி சரியாக விளக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பங்களிப்புச் செய்யும்போதே மாற்றங்களை உண்டாக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதெல்லாம் செய்யப்படுவதாக இல்லை. இதில் அக்கறை இருப்பதாகவும் இல்லை.
பலருடைய அபிப்பிராயமும் அல்லது எதிர்பார்ப்பும் என்ன வென்றால் எங்காவது கடன்பட்டு எப்படியாவது நிலைமையைச் சீராக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு சுமையில்லாமல், நெருக்கடிப் படாமல் சீவித்துக் கொள்ளலாம் என்பதாகவே உள்ளது. அரசாங்கமும் கூட இப்படித்தான் சிந்திக்கிறது.
ஆனால், எங்கே கடன்படுவது? அந்தக் கடனை எப்படி அடைப்பது? அந்தக் கடனோடு சேர்ந்து வரும் நிபந்தனைகள் என்ன? அவை எப்படி நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கும்?
இன்று இல்லாது விட்டாலும் நாளை நிச்சயமாக அந்தக் கடனை நாங்கள் திரும்பச் செலுத்தியே தீர வேண்டும். இல்லையென்றால் நாட்டையே அவர்கள் அடமானத்துக்கு எடுத்துக் கொள்ள நேரிடும். திரும்பக் கடனைச் செலுத்துவதாக இருந்தாலும் அதற்கு வழியென்ன? வட்டியென்ன? அது நம்முடைய பிள்ளைகளுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் உண்டாக்கப்போகும் சுமை என்ன? என்ற விளக்கம் பலருக்கும் இல்லை.
இவ்வளவு காலமும் கடன்பட்டுச் சீவித்ததன் விளைவை இப்பொழுது அனுபவிக்கிறோம் அல்லவா. அதைப்போலத்தான் எதிர்காலத்தில் நம்முடைய பிள்ளைகளும் நெருக்கடியில் சிக்க நேரிடும்.
ஒரு எளிய உதாரணம்,இப்பொழுது எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம்,பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அரசு வழங்கி வந்த மானியத்தை இடைநிறுத்தியுள்ளமையே ஆகும். அரசாங்கத்தின் மானியம் நிறுத்தப்பட்டவுடன் இறக்குமதியாகும் விலைக்கே எரிபொருளை விற்க வேண்டிய நிலை.
ஆகவே இந்த மாதிரி பல மானியங்கள் எதிர்காலத்தில் நிறுத்தப்படலாம். கடன் வழங்குநர்கள் சொல்லுகின்ற அறிவுரை – ஆலோசனை இது. ஏனென்றால் அவர்கள் தங்கள் கடனை – முதலீட்டை –எப்படித்திரும்பப் பெற்றுக் கொள்வது என்பதிலேயே குறியாக இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் லாபம் முக்கியமே தவிர, மக்கள் நலன் அல்ல. ஆனால், அரசாங்கத்துக்கு லாபத்தை விட மக்கள் நலனே முக்கியமாக இருக்க வேண்டும். மக்களைப் பாதுகாப்பதற்கே அரசாங்கம் உள்ளது. அந்தப் பொறுப்புடன்தான் அது சிந்திக்க வேண்டும். நடக்க வேண்டும்.
கடன் வாங்குவது எளிதல்ல. அதை விட அது ஆபத்தானது. நம்முடைய இறைமையை அது நாசமாக்கக் கூடியது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். தவிர்க்க முடியாமல் இப்பொழுது நாம் கடன் பட்டே தீர வேண்டும் என்றால், அதற்குரிய பொறிமுறைகள் அவசியம். கடனை வாங்குவதற்கான பொறிமுறையைப் பற்றி இங்கே நான் குறிப்பிடவில்லை. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான பொறிமுறையைப் பற்றியே குறிப்பிடுகிறேன். அந்தப் பொறிமுறையைச் சரியாக வகுத்துக் கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால் கடன் எங்களை நெருக்கடிக்குள்ளாக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.
எனவேதான் கடன் தரும்போது அவர்கள் சொல்கின்ற நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதற்குப் பதிலாக (அதைச்செய்யத்தான் வேணும். இல்லையென்றால் கடன் தரவே மாட்டார்கள்) அதை மீளச் செலுத்துவதற்கான பொறிமுறையைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
இதை மக்களுக்கு புரிய வைப்பது அவசியம். அரசாங்கம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணப் பாட்டிலிருந்து நாம்தான் அரசாங்கத்தை வழிநடத்த வேண்டும் என்ற உணர்வும் உண்மைப் புரிதலும் மக்களுக்கு வேண்டும். அதைப்போல அரசாங்கத்தை எல்லாவற்றுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், அரசாங்கத்தில் எப்போதும் தங்கியிருக்க முற்படாமல் சுயமாக மக்கள் வாழ்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற தன்மையை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
இந்தப் பரஸ்பரப் புரிதல் நிலைமையைச் சீராக்குவதற்குப் பெரிதும் உதவும்.
இதற்காகத்தான் தேசிய அரசொன்றைப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுகிறது. தேசிய அரசின் குணாம்சம் வேறாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் அவ்வாறு கூறப்படுகிறது. ஆனால் அதையே நம்மால் எட்ட முடியவில்லை. பிறகெப்படி தேசிய நெருக்கடிக்குத் தீர்வைக் காணப்போகிறோம்.
இப்பொழுது தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் கூட எட்ட நின்றே வேடிக்கை பார்க்கின்றன. ஆனால், நெருக்கடிகளோ அனைத்து மக்களுக்கும் ஒன்றாகவே உள்ளன. இதையிட்டு யாருடன் பேசுவது?