(அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
30.04.2024 அன்று வவுனியா வாடிவீட்டு விடுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் சில அமைப்புகள் கூடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ ஒருவரைக் களமிறக்குவது என முடிவெடுத்ததைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சிவில் அமைப்புகளும் தமிழ் அரசியற் கட்சிகளும் கூடிய கூட்டமாகக் கருதப்படும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் 04.05.2024 அன்று நிறைவேறியுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழர் தரப்பின் பழம் பெரும் கட்சிகளிலொன்றான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயர் பலகையை மாட்டிக்கொண்டுள்ளது) கலந்து கொள்ளவில்லை. அக்கட்சி ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஸ்கரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இக்கூட்டத்தில் மற்றப் பழம் பெரும் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டுள்ளது.
இக்கூட்டத்தின்போது தமிழர் தரப்பிலிருந்து ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்குப் ‘பொதுக்குழு’ வொன்றை அமைக்க முற்பட்டவேளை, பொதுக்குழு அமைப்பதற்கு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் (முன்னாள்) தலைவர் மாவை சேனாதிராசா இரண்டு வார காலம் அவகாசம் கோரியுள்ளார். அதனால், பொதுக்குழு அமைப்பதை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து இக்கூட்டம் நிறைவடைந்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் இந்நாள் தலைவராகக் கருதப்படும் சிறிதரன் பா.உ. தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைக் கடுமையாக ஆதரித்து நிற்பவர். தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்) முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிதரனின் நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்திற்குச் ‘சிவப்புக் கொடி’ யையே காட்டி நிற்கின்றனர்.
இவையொருபக்கமிருக்க, தமிழரசுக் கட்சி இரண்டாகப் பிளவுற்று நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருக்கிறது.
இந்த இலட்சணத்தில் இரண்டு வார கால அவகாசத்தில் மாவை. சேனாதிராசா என்ன முடிவைத் தரப் போகிறாரோ தெரியவில்லை.
தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களின் பின்னர் கேட்டுவிட்டுத்தான் ஒட்டுமொத்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கப் போவதாக ‘ரெலோ’ வின் தலைவர் செல்வம். அடைக்கலநாதனின் ‘வேடிக்கை’ யான அறிவிப்பு வேறு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டு-கழற்றி விடப்பட்டுவிட்டது. தமிழரசுக் கட்சியின் (முன்னாள்) தலைவரான மாவை சேனாதிராசா கையாலாகாதவர் என்றும் காட்டப்பட்டு விட்டது. இவரது இரண்டு வார கால அவகாசத்தை இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகக் கருதப்படும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்-தமிழ்த் தேசியப் (?) பரப்பிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகள்-முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு இரண்டு வார காலத்தின் பின்னர்தான் இறுதித் தீர்மானத்திற்கு வரப் போகிறார்கள் என்றால் அது ஒரு ‘வேடிக்கை’யான விடயம்தானே.
04.05.2024 இலிருந்து இரண்டு வார காலத்தின் பின்னர்தான் அதாவது 18.05.2024 இன் பின்னர்தான் இக் கூட்டத்தின் ‘பொதுக்குழு’ அமைத்து ‘பொது வேட்பாளர்’ தேடி ‘வேட்டை’ க்குப் புறப்படப் போடுகிறார்கள். இப் ‘பொதுக்குழு’ அமைக்கப்பட்டாலும்கூட ‘வேட்டை’ க்குப் புறப்படும் ‘முகூர்த்த’ நாளைத் தீர்மானிக்கவும் கால அவகாசம் தேவைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மொத்தத்தில் இது ‘ஆண்டிகள் கூடி மடம் கட்டும்’ வேலைதான். வேறொன்றுமில்லை.