— ராகவன் —
யுத்தம் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளாகியும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குமான எவ்வித வாழ்வாதார முன்னெடுப்புகளையும் அரசு செய்யவில்லை. ஒரு சில தனிப்பட்ட நபர்கள், அரசு சாரா அமைப்புகள் சில உதவிகளை செய்தபோதும் அவை சமுத்திரத்தின் சில துளிகளே.
இன்னொரு புறம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய எவ்வித முறையான முன்னெடுப்புகளையும் அரசு செய்ய முன்வரவில்லை.
போரில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கான நீதியும் கிடைக்கவில்லை.
இன்னொரு புறம் இலங்கை முன்னெப்போதும் இல்லா பொருளாதார நெருக்கடிக்குள் சென்றுள்ளது. 40% மேற்பட்ட மக்கள் போஷாக்கின்மையால் வாடுவதாக தெரிகிறது.
மறுபுறம்,சிறுபான்மை இனங்களுக்கான சமூக நீதியை வழங்கவும் அரசியலை பங்கு செய்யவும் அரசு மறுத்து வருகிறது.
அரகலயவின் போது எழுந்த ஒரு சிறு பொறியாக இனங்களுக்கான ஐக்கியம் எனும் கருத்தியல் தோன்றியபோதும் அரகலய முடிவுக்கு வந்த பின் இனவாத அரசியல் மீண்டும் தலை தூக்குகிறது.
இந்த சிக்கலான நிகழ்ச்சிப்போக்கில் வருடாவருடமாக நிகழும் முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் குறியீடு பற்றிய ஒரு பார்வை அவசியம்.
குறியீடுகள் வெறும் குறியீடுகள் அல்ல. குறியீடுகளின் பின்னால் ஒரு பாரிய அரசியல் சக்தி இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் முடிவு என்பது பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் நிகழ்வு என்பது ஒரு விடயம். அது அரசின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு.
இன்னொரு புறம், விடுதலைப்புலிகளின் வீரயுகத்தை போற்றும் தீவிர தமிழ் தேசியவாத அரசியல் தரப்புக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தல் என்பது மக்களின் படுகொலையை முன்னிறுத்துவதல்ல; மாறாக மக்களின் படுகொலைகளை மூலதனமாக்கி விடுதலைப்புலிகளின் அரசியலை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல்.
படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட மக்களின், முன்னாள் புலிகளின் உறவினர்கள் மே 18 இல் மட்டும் அவர்களை நினைவு கூருவதில்லை. மாறாக அவர்களுக்கு இந்த இழப்புகள் தினசரி நினைவுகள்.
ஒருவகையில் விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் மாவீரர் குடும்பங்கள், அனாதை சிறுவர்களுக்கான குறைந்தபட்ச பராமரிப்பு இருந்தது. அவர்கள் கைவிடப்படவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்பவர்கள் போரின் வலியை சுமப்பதில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கான எவ்வித முன்னெடுப்புகளையும் செய்வதில்லை. மாறாக
சர்வதேசத்திடம் நியாயம் கேட்பதுடனும் மே18 நினைவு கூர்தலுடனும் அவர்களது பணிமுடிந்துவிடுகிறது. அவர்கள் மே 18 நினைவு கூர்தலை முன்னெடுப்பது தொடர்ந்து தமிழ்த்தேசியவாத அரசியலுக்கான முதலீடாக அதனை தக்கவைத்து கொள்வது மட்டுமே. தமிழ் தேசிய அரசியலை அவர்கள் உளசுத்தியுடன் செய்கிறார்களா என்பதே கேள்விக்குறி.
சாத்வீக ரீதியான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்த தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணித்தலைமை, சரி தவறுகளுக்கப்பால் அனைத்து போராட்டத்திலும் நேரடியாக கலந்து கொண்டது. செல்வநாயகம் அமிர்தலிங்கம், ராஜதுரை, நாகநாதன் போன்ற தலைவர்கள் அரச அடக்குமுறையை எதிர்கொண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். மக்கள் அமைப்பொன்றை கட்ட அவர்கள் முழுமையாக முனையவில்லை எனினும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். அதேபோல் விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து ஆயுத இயக்க தலைமைகளும் பல்வேறு பாரிய தவறுகளுக்கப்பால் களத்தில் நின்றவர்களே. ஆனால் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணயம், தேசம் என்று கூக்குரல் போடும் இன்றைய தலைமை தமிழ்த்தேசியத்தை தமக்கான அரசியல் வியாபாரமாகவே கருதுகிறது. சுமந்திரன் போன்ற ஒரு சில தலைவர்களைத்தவிர.
இந்த அரசியல் தமிழ் மக்களுக்கான எவ்வித அரசியல் தீர்வையும் பெற்றுத்தரப்போவதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக மூன்று பெண்களும் ஒரு ஆணும் அரச படைகளால் மிக மோசமாக நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் என்பதை அனுமானிப்பது ரொக்கட் சயன்ஸ் அல்ல. தேசம், தேசியம், சுய நிர்ணயம் என வாய் கிழிய கத்தும் தேசியவாதிகள் இதற்கான எவ்வித எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கவில்லை. அவ்வாறான நிகழ்வு ஏற்படும் போது அதற்கெதிரான போராட்ட அணி திரட்டல்களை முன்னெடுப்பதற்கான எவ்வித செயல் திட்டமும் அவர்களிடம் இல்லை. தங்களது சுகபோக வாழ்க்கைக்கு எவ்வித குந்தகமும் வரக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாகவே இருக்கின்றனர். இந்த அரசியல் மிக ஆபத்தான அரசியல் மட்டுமல்ல மக்களைப்பலிக்கடாக்கள் ஆக்கும் அரசியல்.
இன்றுவரை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வையோ அல்லது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களையோ தர மறுக்கும் அரசின் மிக மோசமான செயல்பாடுகள் தொடர்கையில் பாதிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூர்தல் அவர்களது உரிமை.
இதற்கான போராட்டத்தை கையில் எடுக்க எவ்வித வேலைத்திட்டமோ, மக்கள் அமைப்போ அற்ற தமிழ் தீவிர தேசியவாதத்தலைமைக்கு எவ்வித தகுதியும் கிடையாது
மே 18 நினைவை தமிழர் , சிங்களவர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றி நினைவு கூர்தலுக்கான முன்னெடுப்புகள் அவசியம். இலங்கை அரசு தனது அடக்குமுறையை தமிழ் மக்கள் மேல் அளவுக்கதிகமாக செலுத்தியது யதார்த்தமெனினும் 70 களிலும் 80 களிலும் ஜே வி பி எழுச்சிகளின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜே வி பி என்ற சந்தேகத்தின் பேரில் காணாமல் ஆக்கப்பட்டனர். 80 களில் மட்டும் ஏறத்தாள 40000 பேர் கொல்லப்பட்டனர்.
அதே போல் முஸ்லிம் மக்கள் அரச அடக்குமுறைக்கும் விடுதலை இயக்கங்களின் அடக்குமுறைக்கும் ஆளானார்கள். மலையக மக்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டது மட்டுமல்ல யுத்தகாலங்களில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.
எனவே அனைத்து இனங்களுக்கும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வன்முறை வரலாறு உண்டு. அத்துடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாழ்வியல் வரலாறும் உண்டு.
இவ்வகையில் இந்த வன்முறைகளை நினைவு கூர்தல் என்பது மக்களுடைய இணக்கப்பாட்டையும் , சகோதரத்துவத்தையும், சகவாழ்வையும் முன்னிறுத்துதலாக அமைதலே காலத்தின் தேவை. முள்ளிவாய்க்கால் குறியீடு என்பது அரசவன்முறையின் குறியீடு என்பதன் ஆழமான அர்த்தத்தை முன்னெடுப்பதே மக்களின் ஒன்றிணைவுக்கான முதல்படி.