காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை  அல்ல, களப்பணியாளர்களையே

காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே

— கருணாகரன் —

“முள்ளிவாய்க்கால் கஞ்சி“ யை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை – மூதூரில், மூன்று பெண்களைப்  பொலிஸார்  கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட முறை மிகத் தவறானது. இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போதும் இது சமர்ப்பிக்கப்படலாம். 

இரவு வேளையில் வீட்டில் அணிந்திருக்கும் ஆடைகளோடு கிரிமினல் குற்றவாளிகளைப் போல குற்றம்சாட்டப்பட்ட பெண்களை ஆண் பொலிஸார் கொற இழுவையாக இழுத்துச் செல்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இந்தக் கைதுக்கு முறைப்படியான நீதிமன்ற ஆணை பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. பெண் பொலிசார் அங்கே சென்றபோதும் ஆண் பொலிசாரே பெண்களைக் கைகளில் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். 

இந்த நடவடிக்கையைத் தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள், மலையக மக்கள், சிங்களவர்கள் என நாட்டிலுள்ள அனைவரும் வேறுபாடின்றிக் கண்டிக்க வேண்டும். மட்டுமல்ல, மனித உரிமைவாதிகள், ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இந்த விடயத்தில் கூடிய அக்கறையைக் கொண்டு செயற்படுவது அவசியம். இந்த நாட்டிலே நீதியும் அமைதியும் முன்னேற்றமும் கிட்ட வேண்டும் என்போர் அனைவரும் இதற்கு எதிராகப் போராட வேண்டும்.

ஏனென்றால், பொலிஸ் அராஜகத்தை எந்த நிலையிலும் யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொலிஸ் அராஜகம் வளர்ந்தால், அது தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்றெல்லாம் பார்க்காது. எல்லோரிலும் தயக்கமின்றிக் கை வைக்கும்.

கஞ்சி கொடுக்கும் அரசியலைப் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். முள்ளிவாய்க்காலில் இறுதி வரையிலிருந்து உயிர் தப்பி வந்தவர்களில் ஒருவரான லதா கந்தையா இந்த அரசியலைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தையும் பார்வையையும் சொல்கிறார். “முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் தேங்காய்களுமில்லை. தேங்காய்ச்சிரட்டைகளும் இல்லை. இதற்கென தயார்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளும் சாமிகளும் ஆசாமிகளும் அடக்கம். ஒரு போராட்டத்தின் முடிவு சிரட்டை ஏந்த வைத்ததென்பதை வெளிப்படுத்துவதும், இறந்தவர்களின் அர்ப்பணிப்பை இழிவுபடுத்துவதுமான குறியீடு இது” என்று. 

இதை ஒத்ததாக இன்னொருவரான அன்பழகி சொல்கிறார், “நானும் மனம் வருந்தினேன். சிலர் சிரட்டையை அடையாளப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். தலைவர் (பிரபாகரன்) கடைசியாக சிரட்டையேந்த வைத்தார் என நாசூக்காக பரப்பி இறந்தோரை,  உயிர்த்தியாகங்களை இழிவுநடுத்துகிறார்கள்”என. 

 இறுதிப் போர்க்காலத்தில் அங்கேயிருந்து மீண்டவர்களில் ஒருவராக நானும் சொல்வேன், “முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய என்னுடைய பார்வையும் நிலைப்பாடும் வேறு. கஞ்சி வழங்குவதாலோ கஞ்சி குடிப்பதாலோ உள ஆற்றுப்படுத்தல் நிகழ்கிறது எனவும் நான் கருதவில்லை. அதை ஒருசிலர் முன்னெடுத்து, இன்று பலரும் பின்பற்றுகிறார்கள். ஆகவே அது அந்த நெருக்கடி நாட்களை நினைவு கொள்வதற்கான சமூக நிகழ்வாக உள்ளது. அந்த நெருக்கடி, அதன் பின்னணி பற்றிய பல பார்வைகள் உண்டென்பதையும் அறிவேன். ஆனாலும் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட நெருக்கடி, வன்முறை, அழிவு என்பது மறுக்கப்பட முடியாது. ஆகவே அந்த மக்கள் அதை நினைவிற் கொள்ளவே முயற்சிப்பர். அந்தக் கொடிய நினைவுகளைக் கடந்து செல்வதற்கு இலங்கைத் தீவின் ஆட்சிமுறையும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. உண்மையான ஆற்றுப்படுத்தலை தீர்வின் மூலம் அரசாங்கம் செய்திருக்க வேண்டும். அதுவரையிலும்  கொந்தளிக்கும் மனநிலையுடைய  மக்கள் இப்படித்தான் தங்கள் நினைவுகளை மீட்டுக் கொண்டிருப்பர். அதை பிற சக்திகள் வாய்ப்பாகக் கையாண்டு கொண்டேயிருக்கும்”.  

முள்ளிவாய்க்கால் கஞ்சியை முன்னெடுப்போரோ “இதொரு நினைவு கூரல் செயற்பாடு”என்கிறார்கள். அதனைத் தடுக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம். 

அது ஒரு போராட்ட வழிமுறையாகவோ போராட்டத்துக்கான ஒரு அடையாளமாகவே இருக்கலாம். அதை போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகமே தீர்மானிப்பது.

இப்படிப் பல்வேறு பார்வைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.  அது வேறு விடயம்.

இதை அரசியல் ரீதியாகவே அரசாங்கம் அணுக வேண்டும். நினைவு கூரலுக்கு எந்தத் தடையும் இல்லை என்றே கடந்த ஆண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துமிருந்தார். அடிப்படையில் இதொரு அரசியற் செயற்பாடு என்றே முன்னெடுக்கப்படுகிறது. 

இப்பொழுது காட்சி மாறியுள்ளதா? சரி இது குற்றம்தான் என்றாலும் அதைச் சட்டரீதியாக – முறைப்படிதானே அரசாங்கம் அணுக வேண்டும். இப்படி வெறித்தனமாக இல்லையே!

எப்பொழுதும் தனக்கு வெளியே உள்ள எத்தகைய அரசியற் செயற்பாட்டையும் அரசு அரசியற் கண்கொண்டு பார்ப்பதை விட சட்டத்தின் துணைகொண்டு அடக்க முயற்சிப்பதே அதனுடைய இயல்பு.  அதிகாரத் தரப்பின் வழமை இது. அதனால் அது அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. அதற்குப் பொலிஸையும் படையையும் பயன்படுத்துகிறது. 

போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்படுவதுண்டு. பொலிஸ் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை என பின்னர் அவர்களும் உறவினர்களும் அலைவார்கள். தலைவர்களும் ஆலாசகர்களும் ஊடக முதலாளிகளும் அவற்றை அரசியலாக்கிக் கொள்வர். இது ஒரு வகையில் அயோக்கியத்தனம். பிற நாடுகளில் தலைவர்களும் கருத்துருவாக்கிகளுமே முதலில் களத்தில் நிற்பர். அவர்களே முன்னணிப்படையாகச் செயற்படுவர்.

இங்கோ தலைவர்களும் ஆலோசகர்களும் கருத்துருவாக்கிகளும் பாதுகாப்பு வலயங்களில் (Safty Zoon) சௌகரியமாக இருந்து விடுகிறார்கள். 

ஒடுக்குமுறை அரசும் அதனுடைய படைக்கட்டமைப்பும் எப்போதும் மக்களுக்கு எதிராகத்தான் செயற்படும். இதொன்றும் புதியதல்ல. இன்னும் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளத் தயாரில்லாத அரசும் ஆட்சியும்தான் நடைமுறையில் உள்ளது. 

ஆகவே, ஒரு போராட்டத்தை அல்லது போராட்ட வடிவமொன்றைத் திட்டமிடும்போது, அதை நிச்சயமாக அரசும் அதனுடைய படைக்கட்டமைப்பும் எதிர்க்கும். முறியடிக்க முயற்சிக்கும். ஒடுக்கும். இதெல்லாம் வன்முறையினாலேயே மேற்கொள்ளப்படும் என்ற புரிதலும் முன் எச்சரிக்கையும் நமக்கு வேண்டும்.

இதுதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது என்ற அனுபவமும் அறிவும் நமக்கு உண்டல்லவா!

அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், அதாவது அரசு இப்படி நடக்க முற்படாமல் இருக்க வேண்டுமானால் இவ்வாறான அடாவடி, அத்துமீறல், முறையின்மைகளுக்கு எதிராகப் பல ஆயிரக்கணக்கான மக்களாக நாம் திரண்டு நிர்வாக முடக்கம், பொலிசுக்கு எதிராக போராடுவதாக இருக்க வேண்டும். அதுவே அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும்.

ஆகவே இதை எப்படி எதிர்கொள்வது, முறியடிப்பது என்று முன்திட்டமிடல் இருந்திருக்க வேண்டும். அதாவது திட்டம் 1, திட்டம் 2, திட்டம் 3 என தொடர் போராட்டத்துக்கான திட்டமிடலாக.  

இன்னும் இதை தெளிவாக விளக்க வேண்டுமென்றால், கஞ்சி கொடுக்கும்போது படைகள் எதிர்த்தால் அல்லது தடுத்தால் அல்லது கைது செய்தால், அடுத்த கட்டமாக என்ன செய்வது? அதை ஒரு பெருமெடுப்பிலான மக்கள் எதிர்பாக வளர்த்தெடுப்பது எவ்வாறு? அதில் எல்லோரையும் எப்படிப் பங்கெடுக்க வைப்பது? தாம் அதில் எப்படி இணைந்திருப்பது என்றெல்லாம் தெளிவாகத் திட்டமிட்டிருக்க வேண்டும்.

அப்படியில்லாமல்தான் பல போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இதனால் “பலிக்கடா”க்களாவது மெய்யான உணர்வோடு போராட்டக்களத்தில் குதிக்கின்ற மக்கள் அல்லது மாணவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய குடும்பங்களே பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் பின்னர் பலருக்கு தெரியாமல்  போய் விடுகிறது. 

இதற்குக் காரணம், போராட்டங்களுக்கு ஐடியா கொடுக்கின்ற ஐயாமணிகளுக்கு அதன் தாற்பரியம் தெரியாது.

அவர்கள், இராணுவத்தையோ பொலிசையோ, சிறைச்சாலையையோ, ஏன் போராட்டக்களங்களையோ வாழ்நாளில் கண்டதும் இல்லை. எதிர்கொண்டதும் இல்லை. 

அவர்களுடைய நோக்கமெல்லாம் அரசாங்கத்தையும் படைகளையும் சீண்டுவது மட்டும்தான். அதிலே தங்களுக்கான உயிர்ச் சூட்டைத் தக்க வைத்துக் கொள்வது. அவ்வளவுதான். 

கைது செய்யப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இவர்கள் தங்களுடைய குடும்ப விடயங்களை மிகக் கச்சிதமாகக் கவனித்துக் கொள்வார்கள். பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளைப் பிரத்தியேக வகுப்புகளுக்குக் கொண்டு செல்வார்கள். வலு சந்தோசமாகப் பிறந்த நாள் கொண்டாட்டங்களைச் செய்வார்கள். தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்களைப் பார்ப்பார்கள். வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்துவார்கள். வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்….

இதையெல்லாம்  செய்து கொண்டே மாலையில் அல்லது முன்னிரவில் அல்லது விடுமுறை தினங்களில் (தங்களுடைய வருமானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி நிரலும் கெட்டுவிடாமல் பார்த்துக் கொண்டு, ஓய்வு நேர) அரசியலைச் செய்வார்கள். 

அந்த அரசியல் கூட மக்களுக்கானதாக இருக்காது. பிறத்தியாரைத் திருப்திப்படுத்துவதற்காகவே இருக்கும். சில தூதரகங்களின் நிகழ்ச்சி நிரல், அதற்கான அனுசரணை, நிதியூட்டம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டே இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அதாவது சொந்த மக்களை பிறத்தியாருக்காகப் பலி கொடுக்கிறார்கள். 

இதொன்றும் ஊகநிலைத் தகவல்களில்லை. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற வலிமையான கருத்துகள். 

தாங்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் இறங்காமல், முன்னிற்காமல் பிறரைத் தூண்டி விடுவதன் மூலம் இதெல்லாம் நிகழ்த்தப்படுகிறது. 

என்பதாலேயே தமிழ்ச்சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் வரவரப் பலவீனப்பட்டு, தமிழ்த்தேசிய அரசியலே வங்குரோத்தான நிலைக்கு வந்திருக்கிறது. 

போராட்டத்துக்கு தூண்டுகின்றவர்கள், ஆலோசனைகளை வழங்குவோர் அவற்றுடன் கூட நிற்க வேண்டும். அதற்கு விழுகின்ற ஒவ்வொரு அடிடையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் போராட்டங்களும் அந்த அரசியலும் பலமாகுமும்.

திருகோணமலையில் நடைபெற்ற கைதுகளுக்கு அறிக்கை விடுவது, ஆவேசமாகப் பேசுவதற்கு அப்பால், இந்தப் பெண்களை விடுவிக்கச் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை மீட்டெடுக்க வேண்டும். அப்படி எடுப்பதோடு, பொலிசின் அராஜகத்துக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தை நடத்த வேண்டும். 

இந்தக் கைதுக் காணொலியையே இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் (சிங்களர், முஸ்லிம்கள், தமிழர்கள், மலையக மக்கள்) பகிர்ந்து ஜனநாயக உரிமைக்கு எதிரான ஒரு அரச வன்முறை என்பதை உணர வைக்க முடியும். அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள ஜனநாயகச் சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், அவ்வாறான அமைப்புகளுக்கு பகிர்ந்து, அவர்களுடன் இது தொடர்பாக உரையாடி ஒரு தூண்டலையும் அழுத்தத்தையும் கொடுக்கலாம்.

பல்லாயிரக்கணக்கான மக்களாகத் திரண்டு பொலிஸ் நிலையங்கள், அரச பணிமனைகள் போன்றவற்றை அமைதி வழியில் முற்றுகையிட்டிருக்கலாம். தொடர் மக்கள் போராட்டமாக அதை விரித்திருக்க முடியும். 

இதற்கு திட்டமிடலும் கடுமையான உழைப்பும் களத்தில் நிற்கக் கூடிய அர்ப்பணிப்பு உணர்வும் தேவை.

அதற்கு யார் தயார்?

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களும்(?) இப்படித்தான் தொடங்கப்பட்டது. இப்படித்தான் சூம்பிப் போனது. 

நாளை சூம்பிப்போன…போராட்டங்களாகவும்  சூம்பிப்போன தமிழ்த்தேசியமாகவும்தான் எல்லாம் இருக்கும்.