எஸ்.பொன்னுத்துரை : இன்னமும் உரத்துப் பேசப்பட வேண்டியவர்

எஸ்.பொன்னுத்துரை : இன்னமும் உரத்துப் பேசப்பட வேண்டியவர்

–இரண்டாம் விசுவாமித்திரன் –

எஸ்பொ தமிழ் இலக்கியத்தின் எழுத்துப் பெரியார். அவர்பற்றி யார்தான் அறியார்.? தமிழ் இலக்கியப் பரப்பில் அவர் பற்றி அறியாதார் தமிழ் இலக்கியம் அறியாதவரே எனல் தகுமா?

கங்காரு நாட்டில் அவர் உயிர் பிரிந்து இன்றுடன் பத்து வருடங்கள் முழுமை பெறுகின்றன. அதன் சாட்டிலே இக்கட்டுரை நகர்கிறது.

உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்பியல் வரலாற்றில் எஸ்.பொ. எனவே  பலராலும் அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை பெரும் ஆளுமையாக இருந்தவர். சிறுகதை, புதினம், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல் திறன்நோக்கு, வரலாறு,  மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். அவரளவில் இலக்கியத்தில் சாதனைகளையும் சோதனைகளையும் சமஅளவில் சந்தித்த பிறிதொரு எழுத்தாளர் நம்மிடையே இல்லை.

யாழ்.நல்லூரிலே பிறந்து மட்டக்களப்புவாசியாகவே வாழ்ந்து ஐந்து கண்டங்களின் மண்ணிலும் இலக்கிய உலா வந்து மூன்று கண்டங்களில் சங்கையாக வாழ்ந்து சாதனைகள் தொட்டவர்.

அவர் பற்றி உலகம் நன்றாகவே பேசியிருக்கின்றது. ஆனால் இன்று அவர்பற்றி இன்னமும் உரத்துப் பேசப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் வேறாக இருக்கின்றன அவற்றை மூன்று சிறிய தலைப்புகளாக வகைப்படுத்கிறது இக்கட்டுரை.

01. புனைகதைகள் தவிர அவர் கால்பதித்த ஏனைய துறைகள்  

02. அவர் மீதான வசைகள் நேர் செய்யப்படுதலின் அவசியம்  

03. எஸ்.பொ முன்வைத்த கோட்பாடுகளினதும் சிந்தனைக் கருத்தியல்களினதும் இன்றைய நம்பு திறன் அளவு

ஆகியவே அம்மூன்று தலைப்புகளுமாகும்.  

எஸ்பொ கால்பதித்த ஏனைய துறைகள் பற்றிய நோக்கில் சிறுகதை, புதினம் என்பதற்கும் அப்பால் அவர் இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர். அவைபற்றியெல்லாம் பெரிதாகப் பேசப்படுவதில்லை. மாறாக தீ  சடங்கு போன்றவை பற்றியும் அவரின் தேர் என்ற சிறுகதையின் கனதிபற்றியுமே பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறது இன்றைய உலகம். அவர் இலக்கியத்தில் ஒரு சமுத்திரம். புனைகதை எழுத்துகள் அதில் ஒரு சிறு துளிதான்.  

அவர் பல்வேறு துறைகளில் கால்பதித்துக் கை நனைத்து வெற்றி சுவைத்தவர் அவற்றில் நாடகமும் மொழிபெயர்ப்பும் முக்கியமானவை.

நாடகத்தைப் பொறுத்தவரையில் ‘மட்டக்களப்பு மாப்பிள்ளை’ என்ற அவரது நாடகம் இலங்கை வானொலியில் தொடராக ஆறு மாதங்கள் ஒலிபரப்பாகின. ‘முதல் முழக்கம்’என்பது அவரது சாதனை நாடகம். அது மட்டக்களப்பில் இரண்டு தடவைகளும் அன்றைய உதவி நிதியமைச்சர் நிந்தவூர் எம்.எம் முஸ்தபா முன்னிலையில் கல்முனையிலும் அரங்கேற்றப்பட்டது. அவரது நாடகங்கள் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் மேடையேற்றம் கண்டன. சாவு, அந்த நாள், வலை, முள், ஈடு,  முறுவல் என்பன தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிட்ட இடத்தைப் பெற்றன.

எஸ்பொ வின் நாடகவெளிபற்றி தமிழிலக்கிய உலகம் பேச வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கங்களில் ஒன்றாகும்.

மொழிபெயர்ப்புகள்                                                               எஸ்பொவின் படைப்பிலக்கிய ஊழியத்தின் ஒரு பின்னமாக மொழிபெயர்ப்புப் பணியும் அடங்கும். மகாவம்சம், காமசூத்திரம், தென்னாபிரிக்கப் புதினங்கள், காந்தி தரிசனம் என்பவற்றைத் தமிழுக்கும் கைலாயமாலை என்ற நூலை ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்தவர். அவர் ஆங்கில மொழிச் சொற்களுக்கு ஈடாக புதிய பொருத்தமான தமிழ்ச் சொற்களை உருவாக்கினார். டயஸ்போரா (Diasbora) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பகரமாக புலம்பெயர்ந்தோர் என்றும் மில்லேனியம் என்பதை தமிழில் புத்தாயிரம் எனவும் நமக்குத் தந்தவர் அவரே.

                                                            மகாவம்சம்:                                                                 மகாவம்சம் என்ற நூல் மகாநாம தேரரால் கி.பி 5ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. அவர் இலங்கையை அரசாண்ட தாதுசேன மன்னனின் சகோதரராவார்.  இத்தொகுப்பு நூல் கிமு 543 இல் இருந்து கிபி 361 வரையான 900 வருடகால இலங்கையின் ஆதிவரலாற்றை செய்யுள் வடிவில் 37 அத்தியாயங்களாக பாளி மொழியில் தருகிறது. இலங்கையின் முதல் அரசனான விஜயன் தொடங்கி மகாசேனன் வரையான ஆட்சிக்காலத்தை மகாவம்சம் பேசுகின்றது.

கலாநிதி வில்ஹெம் கெய்கர் என்பவர் mahavamsa  or  the great chronicle  of  Ceylon என்ற மகாவம்சம் தொடர்பான ஆங்கில நூலை எழுதியவர். இன்றுவரை கெய்கரின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பே உத்தியோகரீதியான மகாவம்சவின் ஆங்கில மொழி பெயர்ப்பாகக் கொள்ளப்படுகிறது. அதனையே மகாவம்ச சிங்களர் கதை என்று எஸ்.பொன்னுத்துரை தமிழுக்குத் தந்தார்.

ஒரு நாளைக்கு பத்து மணித்தியாலம் வீதம் ஐந்து மாதங்கள் உழைத்து மகாவம்ச தமிழ் பெயர்ப்பை வெளிக் கொண்டு வந்தார். இளங்கீரன் 1961 இல் வெளியிட்ட மரகதம் சஞ்சிகையில் மகாவம்சவின் ஆரம்பப் பகுதிகள் வெளியாகியும் இருந்தன.

இம்மொழிபெயர்ப்பு நூலின் இன்னுமொரு விசேசம் ஆங்கில நூலை அடியொற்றிய மொழிபெயர்ப்புக்கும் அப்பால் அவர் எழுதிய பெரும்பாலான பக்கங்களிலுள்ள அடிக்குறிப்புகளாகும். வில்ஹேம் கெய்கரின் மொழிபெயாப்புத் தவறுகள் சிலவற்றை அடிக்குறிப்பில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் ஆதிவரலாற்றை தமிழில் வாசிக்கும் அரிய வாய்ப்பை எஸ்பொவின் மகாவம்ச மொழிபெயர்ப்பு நமக்குத் தருகிறது.

வத்ஸாயநரின் காமசூத்திரம் :

                                                              பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வத்ஸாயநர் என்பவர் வடமொழியில் காம சூத்திரம் என்ற நூலை வெளியிட்டார். இரண்டு பாகங்களைக் கொண்ட இந்நூல் ஆண் -பெண் உடலியல் உறவில் உச்சப் பயன் பெறும் வகையை விளக்குகின்றது. அதனை விஞ்ஞானரீதியில் சரிகண்ட சேர் ரிச்சாட் பேட்டன், ஆர்பட்ஹோனட் ஆகியோர் இணைந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். எஸ்.பொன்னுத்துரை மேற்படி இரண்டு பாகங்களினதும் சுவாரஸ்யமான பகுதிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கவிதையாகவே மொழி பெயர்த்தார். அதனூடாக குடும்ப நல வாழ்வுக்கு வழிகாட்டினார்.

தென்னாபிரிக்கப் புதினங்கள்                                                          நைஜீரியாவிலே இருந்தபொழுது பெற்ற ஓய்விலே அத்தாங்கு கொண்டு வரால் மீன் தேடும் பாங்கில் உலக இலக்கியங்களைத் தேத் தேடி வாசித்தார். முதலாம், இரண்டாம் உலக நாடுகளின் இலக்கியத்திலும் ஆபிரிக்கா போன்ற மூன்றாம் மண்டல நாடுகளின் இலக்கியங்கள் திணிவானவை என்பது மட்டுமல்லாமல் அவை தமிழுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதையும் அவர் வாசிப்பின் ஊடாகக் கண்டு கொண்டார். இலங்கை மீண்ட பின்னர் ஆபிரிக்கக் கண்டத்து படைப்புகளிலிருந்து நுட்பமாகத் தேர்வு செய்த பதின்நான்கு புதினங்களைத் தமிழுக்குத் தந்தார். தடம் பதித்த ஆபிரிக்க இலக்கியப் படைப்புகள் என்ற தொடரில் அவை தமிழுக்கு வந்தன. அத்தொடரின் பதினான்காவது ஆக்கம் வெளிவர இருந்த நிலையில் எம்மை விட்டுப் பிரிந்தார்.  

காந்தி தரிசனம்:

                                                     பொன்னுத்துரையின் மொழிபெயர்ப்பு முயற்சிகளின் அடையாளங்களில் ஒன்றாக காந்தி தரிசனம் என்ற நூலைக் கருதலாம்.                                

இலங்கையில் 1969ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா இடம் பெற்றபோது அரசு வெளியீடாக வந்தது.                                                        

மகாத்மா காந்தியை உலகப் பெரும் பிரபலங்கள் எவ்வாறு பார்த்தனர் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட தனித்தனியான இருபத்தொன்பது ஆங்கிலக் கட்டுரைகளை எஸ்.பொன்னுத்துரை தமிழ் செய்து காந்தி தரிசனம் என்ற நூலை வெளியிட்டார்.

கைலாயமாலை:

                                                                கைலாயமாலை ஒரு தமிழ் நூல்.அதனை ஆங்கிலத்தில் எழுதி தமிழின் கியாதியை உலகமயப்படுத்தினார்.                                                  

எஸ்.பொன்னுத்துரையின் மொழிபெயர்ப்புப் பணியின் தொடக்கமாக கைலாயமாலை என்ற நூல் வெளிவந்ததாகத் தெரிகிறது.அது தமிழில் இருந்து  ஆங்கிலத்தில் அவர் தந்தது. குறிப்பிட்ட நூல்பற்றியோ வெளியிட்ட காலம் மொழிபெயர்ப்புக்கான பின்னணித் தகவல் போன்ற எந்தத் தகவலும் வெளிச்சத்தில் இல்லை.ஆனால் சென்னையிலிருந்து மித்ர பதிப்பகம் 2002இல் வெளியிட்ட இஸ்லாமும் தமிழும் என்ற நூலின் பக்(34) இல் ‘கைலாயமாலை என்ற நூலினை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் உள்ளேன்’  என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. இது கைலாயமாலையின் சாட்சியமாகும்.

இரண்டாவது விடயம் அவர் தொடர்பான வசைகள் நேர் செய்யப்படுதல் வேண்டும் என்பதாகும்.

குறிப்பாக அவர் ஒரு பாலியல் எழுத்தாளர் என்ற வசையாகும் அவர் பாலியல் எழுத்தாளரே அல்லர்.அவர் மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர். அவ்வளவுதான்.

இருட்டுறைந்த முடுக்குகளிலிருந்து அவர் கண்டெடுத்த பிரச்சினைகளை எழுத்தில் கொண்டு வந்த அதேநேரம் பாலியல் உந்துதல்களையும் பின்னமளவில் குழைத்துத் தந்தார். இன்ப நுகர்ச்சியன்றி மனிதாபிமானமே அவரின் பாலியல் புனைவுகளின் மையமாக இருந்தது. இந்த அணுகுமுறை இலக்கியப் பரப்பிலிருந்து அவரை ஓரங்கட்ட நினைத்த புத்தி ஜீவித சர்வாதிகாரிகளுக்கு அவலாக வாய்த்தது. அவர் கொக்கோகம் எழுதுகிறார் எனக் குற்றஞ்சாட்டினர்.

ஈடன் தோட்டத்து அப்பிள்பழமும் அகலிகைமீதான சாபமும் எதனைப் பேச எத்தனித்தது? திருவள்ளுவர் காமத்துப் பால் எழுதினாரே. தனது திருக்குறளில் 1330 வது என வரும் கடைசிக் குறளில் ஊடுதல் காமத்துக் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்று சொன்னாரே. ஒளித்து மறைத்தா சொன்னார்?

மராட்டிய எழுத்தாளரான வீ.ச. காண்டேகர் எழுதி 1941இல் தமிழுக்குப் பெயர்ந்து வந்த ‘கருகிய மொட்டுகள்’ என்பது தமிழில் பாலியலைத் தொட்டெழுதிய முதல் புதினம் ஆகும். தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ பாலியலைத்தானே பேசியது. சாணக்கியாவின் அவ்வாறான ஒரு கதைக்கு தமிழ்நாடு அரசு முதற்பரிசு வழங்கியிருந்ததுகூட இங்கு குறிப்பிட வேண்டியதுதான்.

‘ஒளித்து மறைத்துப் பேச வேண்டிய யோனியர, ஆணியர் (இச்சொல்லை முன்னர் நீங்கள் அறிந்ததுண்டா? ) சமாச்சாரத்தை எஸ்.பொன்னுத்துரை பச்சைபச்சையாக எழுதுகிறார். நிர்வாண இலக்கியத்தை மேயவிடுகிறார்’ என்று மீண்டும் மீண்டும் அவர்மீது குற்றம் எழுந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எஸ்பொ அதனை மறுத்துரைத்தார். விரசம் வேண்டியோ கிளுகிளுப்புக்காகவோ தான் எழுதவில்லையென்றும் உடல்சார்ந்த ஆக்கினைகளை வெளிக்கொண்டுவரும் எத்தனமே தனது எழுத்துக்கள் என்றும் வாதாடினார்.

அவரின் வீ என்ற சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை எழுதிய வ.அ.இராசரத்தினம் ‘தொகுதியில் உள்ள ‘விலை’ என்ற கதையில் இடஞ்சல் வந்து மூண்டு நாலு நாள். கோயிலுக்குப் போறதுக்காக முழுகினனான் எனத் தொடங்கி பாவாடையெல்லாம் ஒரே துவால என்று வரும் பகுதிவரை ஆபாசமாக இருப்பதாக பொன்னுத்துரையிடம் குறிப்பிட்டபோது ‘நீங்களோ நானோ வாழும் தளத்திலிருந்து பார்ப்பதினாலேதான் ஆபாசமாகத் தெரிகின்றது. என் பாத்திரம் வாழும் தளத்திற்கும் களத்திற்கும் வாருங்கள். அப்பொழுது அவர்களின் நினைவுகள் இதிலும் பார்க்கக் கொச்சையாக இருப்பதைக் காணலாம்’ என்பது எஸ்.பொவின் பதிலாக இருந்தது என்று குறிப்பிடுகின்றார். மேற்படி இராசரத்தினத்தின் கூற்று எஸ்.பொவின் பாலியல் தரிசனம்மீதான நியாயத்தை விளக்குகின்றது.

மூன்று பெண்களால் வேண்டாதவர் என்று விலக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு இளம்பெண் தனது எதிர்பார்ப்புகள் நிறைவேறாதநிலையில் கணவனின் கருவாகவே மாற்றானின் கருவைச் சுமக்கும் முடிவுக்கு வருகிறாள். அந்த இளம்பெண்ணை ‘ஈரா’ என்ற கதைக்குள் கொண்டு வந்து அவளுக்கு ஆதரவாக நின்றார்.

உரிய வயது வந்தும் தனது மகள் பூப்படைய மாட்டாள் என்று ஜாதகம் சொன்னதை நம்பி ஒரு தந்தை கவலைப்படுகிறார். அதனை ஆண்மை–3 என்ற கதையில் அறிமுகம் செய்து இப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆணினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட ஒருவனை மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் முடிவை பரிந்து பேசுகிறார். மனிதாபமான அடிப்படையிலேயே இவற்றை எழுத்துக்குள் கொண்டு வந்தார். இக்கதைகள் சோற்றுப் பருக்கையான எடுத்துக்காட்டுகளே.

சிறுகதைகளைப் போலவே எஸ்.பொ.வின் தீ, சடங்கு ஆகிய இரண்டு  புதினங்களும் பல்வேறு வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்தின. சதைப் பிடுங்கல்களின் தொந்தரவுகளுக்கு வடிகால் தேடும் தேவை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான் எனக் கூறும் ஆவணமாகவும் தீ தன்னை அடையாளப்படுத்தியது.

‘ஐந்து நாள் விடுமுறை பெற்று ஊருக்குப் போய் மனைவியோடு கூட முடியாமல் கொழும்பு திரும்பும் அரச ஊழியன் ஒருவனின் கதை.                                                         யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதச்சம்பளம் பெறும் நடுத்தர வர்க்க அரச உத்தியோகத்தன் ஒருவன் எவ்வாறு தன் ஆசைகளையும் தேவைகளையும் அடக்கி வாழ்கிறான் என்பதை பதிவு செய்யும் சமூக ஆவணம் சடங்கு.

தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சியைப் படம்பிடிக்கின்ற தீ, சடங்கு ஆகிய இவ்விரண்டும்  உடலின் பசி என்பதற்கும் அப்பால் மனிதாபிமான அடிப்படையில் எழுந்தவையாகும்.

இவ்வாறாக பாலியல் என்பதே பாவம் என்ற நிலையைப் போக்கி தனது எழுத்துக்களாலும் குறிப்புகளாலும் அதனைச் சுற்றியிருந்த பிசுறுகளை நீக்கி அதற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்க முயன்றார். ஆனால் புலமைத் திமிர் கொண்ட புத்தி ஜீவித சர்வாதிகாரிகளின் சீடர்கள் சிலரும் எஸ்.பொ.வி.ன் எழுத்துக்களைத் தீட்டு நோக்கில் பார்த்தார்களே தவிர மனிதாபிமானப் பாலியல் என்னும் செவ்வியல் கருத்தையே அவர் உரத்துப் பேசினார் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாலியல் கல்வியை பாடசாலைக் கலைத் திட்டத்தில் அறிமுகம் செய்யலாமா என்று விவாதம் செய்யும் இன்றைய காலகட்டத்தில் எஸ்.பொ. முன்மொழிந்த மனிதாபிமான எழுத்துககளுக்கான அங்கீகாரத்தை உலகம் விரைவில் காணும் என்பது எனது கட்சியாகும்.

எஸ்.பொ முன்வைத்த கருத்தியல்கள்                                                             எஸ் பொன்னுத்துரை எழுத்தூழியத்தை ஒரு தவம் என்று கருதியவர். தன் மனம் சரி என்று கண்டதை அவர் ஒருபோதும் மறைத்ததில்லை. அவர் நற்போக்கு இலக்கியம் என்ற சிந்தனையை முன்வைத்தார்.அதனை 1963 இல் வெளியிட்டார். 1964 இல் மூதூர் மண்ணில் நடைபெற்ற தமிழ் விழாவிலே முன்னணி சிறுகதை எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் நற்போக்கு இலக்கியத்தை முன்மொழிய கிண்ணியா தந்த கவிஞர் அண்ணல் அதனை ஆமோதித்தார். நற்போக்கு இலக்கியம் சபையோரின் ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டது. வீரகேசரியில் நற்போக்கு இலக்கியம்பற்றி தொடர் கட்டுரை எழுதப்பட்டது.

நற்போக்கு இலக்கியம் எஸ்பொ முன்வைத்த ஒரு இலக்கியக் கோட்பாடு என்று மயங்கி மருளுவோரும் உண்டு. அது கோட்பாடும் அல்ல. முற்போக்கு இலக்கியத்துக்கு எதிரான கோசமுமல்ல. நற்போக்கு இலக்கியம் என்பது எஸ்பொவின் சிந்தனை.

நற்போக்கு இலக்கியம் பற்றி எஸ்பொ பேசியபோது எழுத்தாளர் மு.தளையசிங்கம் (மு.பொன்னம்பலத்தின் சகோதரர்) முற்போக்கு நற்போக்கு என்பவற்றுக்கிடையே நடுவு நிலை தாங்கி தனது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற நூலில் கருத்துக்களை முன்வைத்தார்.

தமிழகத்தின் பிரபல படைப்பாளி வண்ணநிலவன் தனது ‘ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அநுபவங்கள்’ என்ற நூலில் இரண்டு சந்தர்ப்பங்களில் நற்போக்கு சிந்தனையை மு.தளையசிங்கம் முன்வைத்தார் என்று பிழையாகக் குறிப்பிட்ட சுவாரஸ்யங்களும் இடம் பெற்றன.  

எஸ்பொ ‘நற்போக்கு இலக்கியம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும்…’ என்ற நூலை 2013 இல் வெளியிட்டார். அவரின் அறுபத்தாறு ஆண்டுகால இலக்கிய ஊழியத்தின் பின்னர் வெளிவந்த நூல் அது.

அவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியம் இன்றைய நிலையில் எவ்வகையில் பார்க்கப்படுகின்றது.?

அதேபோல எஸ்பொ புத்தாயிரத்தில் புலம்பெயர் தமிழர்கள் படைப்பிலக்கியத்தைத் தலைமை தாங்குவார்கள் என்ற கருத்தியலை முன்வைத்தவர்

புத்தாயிரம் கடந்து இன்று நாம் கால்நூற்றாண்டை அண்மித்திருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் புலம்பெயர் தமிழர்களின் படைப்பு முயற்சிகள் தலைமைப் பொறுப்பை ஏற்கும் கனதி எவ்வகைத்து?

இவைபற்றியெல்லாம் எஸ்பொ பற்றிப் பேசுபவர்களோ அல்லது தமிழிலக்கியம் பற்றிப் பேசுபவர்களோ கவனத்தில் கொள்வார்களா என்பதே எனது கேள்வியாகும்      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *