— அழகு குணசீலன் —
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதி அவர். தந்தை செல்வா முதல் மாவை சேனாதிராஜா வரை தொடர்பில் இருந்தவர். உள்ளூராட்சி தேர்தல் நிலைமைகள் தொடர்பாக கடந்த வாரம் கதை கொடுத்தேன். கதையின் போக்கில் இந்த தேர்தல் முடிவில்தான் மாகாணசபை தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது தங்கியிருக்கிறது என்பது வரை பேசினோம். அப்போது அவர் ஒரு கதை சொல்கிறேன் கேள் என்றார். தமிழ்க்கதை இலக்கியத்தில் அவர் சிறந்த கதைசொல்லியும்தான். ‘வாய்ச்சிப்போச்சு’ என்று மனதுக்குள் நீராடிக் கொண்டு சொல்லுங்களேன் என்றேன்.
ஆ…. ! என்று தொடங்கினார். வடக்கு மாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு அமைச்சர் பதவிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் அடிபிடி நடந்ததாம். எப்படி சாமாளிப்பது என்று அன்றைய முதலமைச்சரான முன்னாள் நீதியரசருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லையாம். மாகாணசபை என்ன நீதிமன்றமா தீர்ப்பை எழுதி மேசையில் அடித்து பைலை மூட. மனிதனுக்கு வந்த சோதனையில் ஒரு யோசனையும் வந்தது. உடனே தனது பெயரைக்கொண்ட மாகாணசபை சட்டத்தை கரைத்துக்குடித்த அந்த கலாநிதிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, மாகாணசபை சபை சட்டத்தின் படி பிரதி அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டாராம். எனக்கு எந்த ‘வாயால்’ சிரிப்பது என்று தெரியவில்லை. மாகாணசபை சட்டமூலம் முதலமைச்சர் உட்பட நான்கு மாகாண அமைச்சர்களுக்கு தான் இடமளிக்கிறது என்பது கூட தெரியாத ஒருவரை சம்பந்தர் களமிறக்கியிருக்கிறார். “இதற்கும் மட்டக்களப்பில் பேரலையை படகு தாண்டியதற்கும் ஏன் முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுறீங்க” என்று நீங்கள் கேட்கலாம். கொஞ்சம் பொறுங்கள். ஆடறுக்க முன்னர் அதற்கென்ன அவசரம்.
கடந்த மாதம் மட்டக்களப்பில் நின்றிருந்த போது படுவான்கரையில் பலரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது வழமையான அரசியல் அலசலின் போது பிள்ளையான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த விடயம் பலராலும் பேசப்பட்டது. எனக்கு அதற்கான காரணங்களை தோண்டுவதில் ஆர்வம். “பிள்ளையான் இம்முறை வெற்றி பெறக்கூடாது என்றுதான் நாங்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை” என்று பலர் சொன்னார்கள். ஏன்? கல்வி, விளையாட்டு, போக்குவரத்து உட்கட்டமைப்பு, கிராமிய பொருதாரம், சுயதொழில் முயற்சிகளில் பிள்ளையானால் படுவான்கரை தானே அதிகம் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறுகிறார்கள்” என்று இன்னும் கொஞ்சம் நோண்டினேன். அப்போது வெளிச்சத்திற்கு வந்த விடயம் தான் முக்கியமானது.
“படுவான்கரையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த நன்றியை நாங்கள் மறக்கவில்லை. பிரச்சினை என்னவென்றால் பிள்ளையானின் பெயரைப்பயன்படுத்தி சில முக்கிய ஆதரவாளர்கள் நடந்து கொள்கின்ற தான்தோன்றித்தனம்தான் எங்கள் முடிவுக்கு காரணம்” என்று தான்தோன்றி அப்பரில் சத்தியம் செய்தார்கள். இதன் மூலம் கட்சிக்கும், பிள்ளையானுக்கும் ஒரு செய்தியை வாக்குச்சீட்டில் எழுதியிருக்கிறோம்” என்றார் ஒரு ஆசிரியர். அவர் இன்னும் ஒன்றையும் சொன்னார். “காலம் வரும்போது படுவான்கரை பிள்ளையானுக்கு அந்த கடனைத்தீர்க்கும்” என்பதுதான் அது. அந்த காலம் மே ஆறாம் திகதி வந்திருக்கிறது தீர்த்திருக்கிறார்கள்.
படுவான்கரையில் மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவுப்பற்று மற்றும் கோறளை வடக்கு, எருவில் பற்று என்று பல பிரதேசசபைகளில் மரபு ரீதியான, பலம்மிக்க தமிழ்த்தேசிய கட்சிகளை பின்தள்ளி தமிழரசுக்கட்சிக்கு அடுத்த இரண்டாம் நிலையை மக்கள் படகுக்கு வழங்கியிருக்கிறார்கள். இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வலுப்படாத 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் பெற்ற வாக்குமட்டத்தில் இது இல்லை. இதற்கு முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தி மூன்றாவது அணியாக மும்முனைப்போட்டியில் புதிய வரவாக களமிறங்கியிருப்பதே.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, முஸ்லீம் காங்கிரஸ் என்பன மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நிலையில் இரண்டு பெரும், குறும் தேசிய பேரலைகளையும் தாண்டி படகு முன்னேறியிருக்கிறது. அதுவும் பிள்ளையான் கைது செய்யப்பட்டு பல்வேறு கதைகளும், சந்தேகங்களும் அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படுகின்ற இன்றைய சூழலில் பிள்ளையான் உள்ளே இருந்தால் என்ன? வெளியே இருந்தால் என்ன அவர் எங்கள் மனச்சிறையில் இருக்கிறார் என்பதாக இந்த வாக்குப்பதிவு அதிகரித்திருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் 31, 286 வாக்குகளை பெற்ற படகு, இந்த தேர்தலில் 39,791 வாக்குகளை பெற்றிருக்கிறது. மாவட்டத்தில் 37 உள்ளூராட்சி பிரதிநிதிகளை கொண்டுள்ளது. இது மற்றைய பிரதான கட்சிகளுக்கு ஏற்பட்ட வாக்குச்சரிவை விடவும் ஒரு மாறுபட்ட விசேட போக்கு என்பதை மறுக்க முடியாது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 96,975 வாக்குகளை பெற்ற தமிழரசு சுமார் 5,000 வாக்குகளை இழந்து 91,818 வாக்குகளை பெற்றுள்ளது. என்.பி.பி. கடந்த தேர்தலில் 55, 498 வாக்குகளை பெற்று சுமார் 2,000 வாக்குகள் இழப்புக்கு 53,002 வாக்குகளையே பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம், சிங்கள வாக்காளர்களின் வாக்குகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாக உள்ளது. மட்டக்களப்பு மாநகர வாக்களிப்பில் படகு நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கும் இந்த சமூகபன்மைத்துவம் ஒரு முக்கிய காரணம். வடக்கில் ஈ.பி.டி.பி.க்கு ஏற்பட்ட தோல்வியுடன் ஒப்பிடுகையில் ரீ.எம்.வி.பி. தனது அரசியல் ஸ்த்திரத்தை உறுதிசெய்திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு, என்.பி.பி, என்பன முறையே 85, 44 உறுப்பினர்களை பெற்றுள்ள அரசியல் சூழலில் ரீ.எம்வி.பி. பெற்றுள்ள 37 உறுப்பினர் தொகை மாவட்டத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக அதனை வெளிப்படுத்துகிறது.
எது எப்படியிருப்பினும் ரி.எம்.வி.பி. கடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயவிமர்சனம் செய்ததா? என்பது தெரியவில்லை. இப்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆதரவாளர்களின் விருப்பு, வெறுப்புக்கள் குறித்தும், கட்சியினதும், அதன் தலைமையினதும் பெயரை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய எதிர்கால பாதிப்புகள் குறித்தும் சுய விமர்சனம் செய்யப்படவேண்டும். கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் பேணப்பட வேண்டும்.
இந்த பத்தியில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்த மூத்த தமிழ்த்தேசியவாதியான அவர் சமகால தமிழ்த்தேசிய அரசியலை முற்றாக நிராகரிப்பவர். அதற்கான ஒரு மாற்றை தேடுபவர். வடக்கு மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் குறித்து அவர் குறிப்பிட்ட இன்னொரு விடயமும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் நிர்வாக ஆளுமையை ஒப்பிட முக்கியமானது. முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் தமிழ் டயஸ்போராவின் ஆதரவாளராகவே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பதும் அதற்காக அவருக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு “மாகாணசபை வெறும் கோது அதற்குள் ஒன்றும் இல்லை” என்பதை வெளிப்படுத்துவதுமாகும். இதனால்தான் விக்கினேஸ்வரன் மாகாணசபையில் சிறந்த முதலமைச்சராக செயற்படமுடியாமல் போனது. இந்த ஒப்பந்தத்திற்குள் தனது தலைமைத்துவ , செயற்றிறன் மற்றும் ஆளுமையற்ற சுயபலவீனத்தையும் மறைத்துக்கொண்டார். இதன் மூலம் அவர் வடக்கு மக்களுக்கு சேவை செய்யாது டயஸ்போராவின் கொந்துராத்தை செய்து முடித்தார்.
இந்த இடத்தில் பிள்ளையானை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சராக அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் எப்படி நோக்குவது? பின் தங்கிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் அடையாயப்படுத்தப்பட வேண்டியவை. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் சாமானிய கிராமிய மக்களின் மனங்களில் பிள்ளையான் இன்னும் இருக்கிறார் என்பதையே மட்டக்களப்பு அரசியல் மே 6 இல் மீண்டும் பதிவு செய்துள்ளது.
தற்போது மாகாணசபை தேர்தல் குறித்து பேசப்படுகிறது. ஜே.வி.பி.யை தெரிந்தவர்களுக்கு அவர்களுக்கு தெற்கிலும், வடக்கு -கிழக்கிலும் 6 மாதங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான துணிச்சலை வழங்கப்போவதில்லை. வடக்கு மாகாண சபையைத்தான் விட்டாலும், தாங்கள் பிரித்தெடுத்த கிழக்கிலாவது தங்கள் ஆட்சியை உறுதி செய்ய முயற்சி செய்வார்கள். அது அவ்வளவு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அதுவும் ஜே.வி.பி.யோ, தமிழரசோ தனித்து ஆட்சியமைக்கவும் முடியாது. இதனால்தான் தமிழரசு ஒற்றுமை பற்றி பேசுகிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் வடக்கில் அமைச்சர் இராமலிங்கத்தினதும் கிழக்கில் பிரதியமைச்சர் அருணினதும் அரசியல் அணுகுமுறைகளுக்கும் குறிப்பாக சிறாபான்மைத்தேசிய இனங்கள் மீதான கொழும்பு அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு -அடக்குமுறை, இன விகிதாசார புறக்கணிப்பு நியாயப்படுத்தலுக்கு எதிரான பதிலடியாகும்.