— அன்பழகன் குரூஸ் —
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொங்கு நிலை உறுப்பினர்கள் என்றால் என்ன?
நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களிலும் பார்க்க தெரிவில் அதிகரிப்பது எப்படி?
உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்துவிட்டது. அரசு ஏலவே வர்த்தமாணி அறிவித்தல் மூலம் உள்ளூர் அதிகார சபைகள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை உறுப்பினர்கள் எனத்தீர்மானித்து அதற்கேற்பவே தேர்தல் நடைபெற்றது. இத் தீர்மானமானது ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபைகளுகளினதும் பரப்பளவு மற்றும் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையல் அம் மொத்த உறுப்பினர் தொகையில் 60% வட்டாரம் மூலமும் 40% பட்டியலிலிருந்து விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்வதாக எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
உதாரணமாக ஒரு உள்ளூர் அதிகார சபைக்கு 20 உறுப்பினர்களை 100% தெரிவு செய்வதாயின் 12 பேர் (60%) வட்டாரத்திலிருந்தும் 08 பேர் 40% பட்டியலில் இருந்து விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்தல்.
இதற்கமையவே கணிப்பீடுகளின்படி தேர்தல் நடைபெற்று முடிவுகளின் அடிப்படையில் சில உள்ளூர் அதிகார சபைகளுகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவாய்ப்புள்ளது. இதுதான் தொங்கும் (Over Hang) உறுப்புரிமையாகும்.
இது எப்படி நிகழ்ந்தது எனப் பார்ப்போம்.
உதாரணமாக கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆகும். இதை100% ஆக எடுத்தால், வட்டாரங்களில் இருந்து 20 பேர் 60% தெரிவு செய்யப்படல் வேண்டும். மிகுதி 13 பேர் 40% அளிக்கப்ட்ட வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். இதுவே தேர்தல் நியதி.
தேர்தலில் வட்டாரத் தெரிவானது ஒவ்வொரு வட்டாரத்திலும் அதி கூடுதலான வாக்குகளைப் பெறுபவர் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது சட்ட ஏற்பாடாகும். அவ்வாறே நிகழ்ந்தது.
ஆனால் தகைமை பெறும் எண்ணைக்கொண்டு ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் உறுப்புரிமை தீர்மானிக்கப்படும் போது கிடைக்கவேண்டிய உறுப்புரிமை எண்ணிக்கையிலும் பார்க்க வட்டார ரீதியான தெரிவில் நேரடியாக அதிகமாக் கிடைத்திருப்பின் அக் கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்க முடியாது. ஏனெனில் அவர்கள் வட்டார ரீதியாக உறுப்புரிமை பெற்று விட்டனர்.
அப்பொழுது மொத்த உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுவே தொங்கும் உறுப்பினர்கள். Over Hang members.
இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் காண்போம். கடந்த முறை மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தல் முடிவுகளின் விபரத்தைப் கொண்டு நோக்கலாம்.
• நிர்ணயிக்கப்பட்ட உறுப்புரிமை – 33.
• வட்டாரங்கள் – 20 (20 பேர் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
• விகிதாசார ரீதியான 13 பேர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
• வட்டார ரீதியாக பெறப்பட்ட விபரம் –
• இலங்கை தமிழரசுக் கட்சி – 17 வட்டாரங்களிலிருந்து 17 உறுப்பினர்கள்.
• தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.
• சிறிலங்கா சுதந்திரக் கட்சி 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.
• சுயேச்சைக் குழு-2 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.
• ஆக 20 வட்டாரங்களிலிருந்தும் 20 பேர் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்பொழுது அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் தகைமை பெறும் எண்..
அளிக்கபட்ட மொத்த செல்லுபடியான வாக்குகள் – 47569. இதனை 33ஆல் (மொத்த உறுப்பினர் எண்ணிக்கை) வகுக்கும்போது பெறப்படுவது தகைமை பெறும் எண்ணாகும்.
இங்கு ஒரு உறுப்பினருக்கான தகைமை எண் 1441 என அமைகின்றது.
இப்பொழுது இத் தகைமைபெறும் எண்ணால் (1441) இலங்கை தமிழரசுக் கட்சி பெற்ற மொத்த வாக்குகளை (17469) வகுக்கும் போது 12.1 என அமையும்
இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி 12 உறுப்பினர்களே பெற வேண்டிய நிலையில் வட்டாரங்களில் 17 உறுப்பினர்கள் பெற்றமையினால் 05 உறுப்பினர்கள் அதிகமாக அமைகின்றது. பெற்ற உறுப்பினர்களை குறைக்க முடியாது.
ஏனைய கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் தகைமை எண்ணால் வகுக்கப்பட்டடு அவர்களுக்குரிய உறுப்புரிமை இதே வகையில் வழங்கப்பட்டது.
இதனால் தற்போது மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதிநிதிகள் எண்ணிக்கை கடந்த முறை 38 ஆக அதிகரித்தது.
இதுவே தொங்கும் உறுப்பினர்கள் (Over Hang members) ஆயிற்று.