நேட்டோ விரிவாக்கம்! ஐரோப்பாவில் ஒரு மத்தியகிழக்கு! (?) (காலக்கண்ணாடி 87) 

நேட்டோ விரிவாக்கம்! ஐரோப்பாவில் ஒரு மத்தியகிழக்கு! (?) (காலக்கண்ணாடி 87) 

             — அழகு குணசீலன் — 

பூகோளத்தில் எப்போதும் கொதிநிலையிலும், எப்போது வேண்டுமானாலும் யுத்தத் தீப்பிழம்பைக் கக்கக்கூடிய நிலையிலும் உள்ள ஒரு யுத்தக்களம் மத்திய கிழக்கு.  

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மற்றும் அதைச் சுழவுள்ள அரபு நாடுகளையும் கொண்ட போர்க்களம் இது.  

அணுவாயுதங்களைக் கொண்டுள்ள ஈரான் உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை அழித்தே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது. 

 இரு தரப்பும் தற்காப்பின் பெயரில் ஒரு புறம் ஆக்கிரமிப்பையும், மறுபுறம் பயங்கரவாதத்தையும் எதிர்த்து சண்டையிடுவதாக கூறிக் கொள்கின்றனர். 

இந்தக் களம் ரஷ்யா, உக்ரைன் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பின் மூலம் ஐரோப்பாவிற்கும் இடம்மாறியுள்ளது. அணுவாயுததின் பெயரால் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஆளுக்காள் எச்சரிக்கின்றனர். 

இருதரப்பு நம்பிக்கையீனமும், காரணத்தோடும், காரணம் இல்லாமலும் இருக்கின்ற அளவுக்கு அதிகமான அச்சமும், மத்திய கிழக்கின் அதே தற்காப்புப் பாணியிலான ஆக்கிரப்பும், ஆக்கிரமிப்பு எதிர்ப்பும் ரஷ்ய -உக்ரைன் யுத்த முஸ்திபும் ஐரோப்பாவில் ஸ்த்திரத்தன்மையற்ற ஒரு பிராந்தியத்தை படைத்துள்ளது. 

இடையில் அமெரிக்க, ரஷ்யக் கடவுளர்க்கு நேர்த்திவைத்த கோழியாக உக்ரைன், சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமாதானத்திற்கு வழியைக்காணோம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்திலும் இதன் தாக்கத்தை மக்கள் உணர்கிறார்கள். 

ஐரோப்பிய – ரஷ்ய எல்லையில் உள்ள சிறிய நாடுகளின் சுயாதிக்கம் குறித்த கேள்வியை இந்த யுத்தம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறிய நாடுகள் தங்கள் தற்காப்பை தேடி  நேட்டோ சந்நிதியில்  அடைக்கலம் கோரி நிற்கின்றன. 

ஐரோப்பிய மேடையில் மத்தியகிழக்கு நாடகக்காட்சிகள் அரங்கேறுகின்றன. இஸ்ரேல் எவ்வாறு பாலஸ்தீனத்தின் சுயாதிக்கத்தை அங்கீகரிக்க மறுத்து எல்லைதாண்டி அத்துமீறுகிறதோ, அதையே ரஷ்யாவும் உக்ரைனில் செய்கிறது. 

ஒரு வித்தியாசம் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் பக்கம் அமெரிக்கா நிற்கிறது. ஐரோப்பாவில் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பக்கம் நிற்கிறது.  

அதே முரண்பாடுதான் ரஷ்யாவிலும். இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன விடுதலையை அங்கீகரிக்கின்ற ரஷ்யா, உக்ரைனில் தானே ஆக்கிரமிப்பாளனாக நிற்கிறது. 

இந்த முரண்பாட்டு நிலை ஐரோப்பாவில் ஒரு மத்திய கிழக்கை வடிவமைக்கும் போக்கில் நகர்கிறது. 

நேட்டோ கிழக்குவடக்கு விரிவாக்கம்: 

NORTH ATLANTIC TREATY ORGANISATION என்ற முழுப்பெபயரைக் கொண்ட NATO  1949இல் 12 நாடுகளின் இராணுவக் கூட்டணியாக உருவாகியது. இது காலத்திற்குக் காலம் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று 2022இல் 30 நாடுகளின் கூட்டணியாக விரிவடைந்திருக்கிறது. 

நேட்டோவின் கிழக்கு விரிவாக்கம் என்று அழைக்கப்படுகின்ற கட்டமானது பல்கேரியா, ருமேனியா, சொலவாக்கியா, சொலவேனியா, லித்துவேனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகியவற்றை உள்வாங்கியதாக அமைந்தது. இவை முன்னாள் சோவியத் யூனியனதும் முன்னாள் யூகோசிலாவியாவினதும் பகுதிகளாக இருந்தவை. 

இப்போது உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு காட்டுகின்ற ஆர்வமும், ரஷ்யாவின் அதற்கான எதிர்ப்பும் ரஷ்ய -உக்ரைன் யுத்தத்திற்கும், அப்பிராந்தியத்தில் நிலவும் பதட்டத்திற்கும் காரணமாக உள்ளது. ரஷ்யாவுக்கு அருகில் பின்லாந்து, சுவீடன் என்பன இராணுவ நடுநிலை நாடுகளாகவே இன்றுவரை இருந்தன. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு பின்லாந்தையும், சுவீடனையும் நேட்டோ கூடாரத்துக்குள் தள்ளி விட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள ஒஸ்த்திரியா, சைப்பிரஷ், மோல்டா, அயர்லாந்து என்பனவும் தமது இராணுவ நடுநிலைமை நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

 அல்பேனியா, பொஷ்னியா, மொன்ரநீக்ரோ, வடமக்சிடோனியா என்பனவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்புகின்றன. முதலில் அரசியல், பொருளாதார கூட்டான ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து அதனூடாக இராணுவக் கூட்டான நேட்டோவில் இவை இணையலாம் என்பதை மறுப்பதற்கில்லை. 

இந்த நிலையானது ஐரோப்பாவில் பொதுவாகவும் குறிப்பாக கிழக்கு, வடக்கு ஐரோப்பாவிலும் ஒரு அரசியல் ஸ்த்திரமற்றதன்மையையும், பதற்றத்தையும், சிறிய நாடுகளின் சுயாதிக்கம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. இது இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பா எதிர்நோக்கும் ஒரு பாரிய இராணுவ, அரசியல், பொருளாதார ஸ்த்திரமற்ற நிலையாகும். 

நேட்டோ அங்கத்துவ விடயத்தில் இன்று பேசுபொருளாகி இருக்கும் நாடுகள் சுவீடனும், பின்லாந்தும். ரஷ்யா மிரட்டுகிறது. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அரவணைக்கின்றன. நேட்டோ உறுப்பு நாடான துருக்கி இவற்றின் அங்கத்துவத்திற்கு குறுக்கே நிற்கிறது. 

 தனிநாடு கோரும் குர்திஸ்தான் PKK விடுதலை இராணுவத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் சுவீடனும், பின்லாந்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், இதனால் துருக்கியின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இந்த இரு நாடுகளினதும் அங்கத்துவத்திற்கு எதிராக வீட்டோவைப் பயன்படுத்தப்போவதாக துருக்கி அறிவித்துள்ளது. 

நேட்டோவில் அங்கத்துவம் பெறுவதற்கு அனைத்து 30 நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்பது விதிமுறை. இதனால் துருக்கியை வளைத்துப்போடும் பொறுப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துருக்கி அமெரிக்காவிடம் இருந்து கறக்க வேண்டியதை கறந்தே தீரும். 

ஐரோப்பிய ஒன்றியம் எதிர்நோக்கும் சவால்கள்: 

 ஐரோப்பிய ஒன்றியத்தை திணறடித்த விடயம் BREXIT. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதாகும். இது ஒன்றியத்துடன் முரண்பட்டு நிற்கின்ற அங்கத்துவ நாடுகளுக்கு ஒரு தைரியத்தை வழங்கி இருப்பதுடன், ஒன்றியத்தை அச்சுறுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுக்குப் பின்னால் போவதை ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஒரே குரலில் ஏற்றதாக இல்லை. உக்ரைன் விடயத்திலும் இன்றுவரை இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் கங்கேரி, ஒஸ்த்திரியா என்பன அடக்கியே வாசிக்கின்றன. 

எடுத்த எடுப்பிலேயே அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக அறிவித்த பொருளாதாரத் தடைகளை அப்படியே முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலையிலும் இந்த நாடுகள் இல்லை. ரஷ்யாவுடனான பொருளாதார உறவும், உக்ரைன் தரும் பாடமும் இதற்குக் காரணம். 

உக்ரைன் யுத்தத்தில் ஒஸ்த்திரியா இன்னும் நடுநிலையிலேயே இருக்க முயற்சிக்கிறது. பெலாருஸ் ரஷ்யாவுக்கு வெளிப்படையாக இராணுவ ஆதரவை வழங்குகிறது. யுத்தத்தின் நடுவில் மூன்று தேர்தல்கள் ஐரோப்பாவில் நடைபெற்றன. 

 கங்கேரியில் புட்டின் ஆதரவு VIKTOR ORBAN  53 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சேர்பியாவிலும் ரஷ்ய தலைமைக்கு ஆதரவான ALEKSANDAR VUCIC 60 வீத வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை தேர்தல் பிரச்சாரத்தின் போது கொண்டிருந்தவர்கள். 

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு வேட்பாளரும், ரஷ்ய அனுதாபியுமான MARINE LE PEN 41 வீத வாக்குகளைப் பெற்றார். இன்றைய ஐரோப்பிய ஒன்றிய தலைமையான EMMANUEL MACRONக்கு பெரும் சவாலாக இருந்தார். MACRON வெற்றி பெற்றிருந்தாலும் அது அவருக்கு இலகுவானதாக இருக்கவில்லை. 

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக ஜேர்மனியின் கூட்டாட்சி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. நடைபெற்ற மாநிலத் தேர்தல் ஒன்றில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது. 

அமெரிக்க ஆலோசனையிலான பொருளாதாரத் தடைகளின் விளைவை ரஷ்யா மட்டும் அல்ல ஐரோப்பாவும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போர் ஒரு சமாதான நிலையை எட்டவில்லை என்றால் ஐரோப்பா பாரிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 

AMERICA FIRST: இது வேறு மாதிரி! 

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி TRUMP, America First என்ற கோஷத்தை உரத்து வெளிப்படையாகச் சொன்னவர். ஆனால் மற்றைய அமெரிக்க ஜனாதிபதிகள் சத்தம் இல்லாமல் அதையே செய்தார்கள். ஒரு வித்தியாசம் TRUMP பொருளாதாரத்தில் இந்த இலக்கை அடைய முயற்சித்தார். ஆனால் மற்றையவர்கள் இராணுவபலத்தாலும், யுத்தத்தாலும் அதை அடைய முற்பட்டனர்/ முற்படுகின்றனர்.  

TRUMP அரசியல் தலைமைத்துவம் குறித்து பல விமர்சனங்கள் உள்ளன. எனினும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் உள்ளக சர்வதேச நிறுவனங்கள், நேட்டோ, சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றிற்கான நிதிவழங்கலை அவர் குறைத்தார் அல்லது நிறுத்தினார். அவர் யுத்தப்பிரகடனம் எதையும் புதிதாகச் செய்யவில்லை. மாறாக அமெரிக்க இராணுவத்தை வெளிநாடுகளில் இருந்து திருப்பி அழைக்க ஆரம்பித்தார். 

அமெரிக்க ஜனநாயகக்கட்சியையே கம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்ட்கள் என்று விமர்சித்த அவர் ரஷ்யா, சீனா, வடகொரிய தலைவர்களுடன் கைகுலுக்கினார். இதனால் யுத்த மேகங்கள் சற்று அகன்று இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்க வர்த்தக கொள்கையை தமக்கு சாதகமாக்கினார்.  

அண்மையில் ஆசியப்பயணத்தின் போதும், QUAD சந்திப்பிலும் அமெரிக்கத்தலைமையின் வார்த்தைகள் சீனாவையும் வடகொரியாவையும் சீண்டுபவையாக உள்ளன. மீண்டும் ஒரு அணுவாயத அச்சுறுத்தல். 

ஒட்டு மொத்தத்தில் இந்த வார்த்தைகளும், வாக்கியங்களும் பூகோள அரசியலை யுத்த மையம் நோக்கி நகர்த்துகின்றன. 

உக்ரைன் ஜனாதிபதி ஷெலான்ஸ்கி: “4000 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதங்கள் உரிய நேரத்தில் கிடைத்திருந்தால் இழப்புக்களை குறைத்திருப்போம். எங்களுக்கு ஆயுதங்கள் தேவை… ஆயுதங்கள் தேவை…!” 

ரஷ்ய வெளியுறவு அமைச்சர்: “எங்கள் மீது அழுத்தங்கள் அதிகரித்தால், எங்கள் உறவு சீனா, இந்தியா, ஈரான் நோக்கி திரும்பும் என்பதை சொல்கிறோம்….!” 

அமெரிக்க அதிபர்: சீனா தைவானை தாக்கினால்…? என்ற கேள்விக்கு “எங்கள் கொள்கையில் மாற்றம் இல்லை. நான் நேற்றே சொல்லிவிட்டேன்…!” 

சீனத்தரப்பு: “மக்கள் சீனக் குடியரசின் ஒரு பகுதியான தைவானை நாம்  மீண்டும் இணைப்பதை எந்தச் சக்தியாலும்  தடுக்க முடியாது. ஆம்! அது அமெரிக்காவினாலும் முடியாது..!” 

இந்த வார்த்தையாடல்களின் மறுவாசிப்பு என்ன..? 

மத்திய கிழக்கு…! வட ஐரோப்பா..!! தென்கிழக்காசியா…!!! 

AMERICA FIRST இது ஜோ பைடன் மொடல்!