—செங்கதிரோன் —
கிழக்கின் ‘முதுசொம்’மொன்றினை 11.05.2022 அன்று இழந்தோம். மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மட்டக்களப்பின் மீன்மகள் பாட்டை நிறுத்தினாள். வாவிமகள் ஆட்டத்தை நிறுத்தினாள்.
‘வணக்கம் மாமா’ என்று சிறுவர்கள் அவரை விளித்துச் சொல்வதும் சிறுவர்களை நோக்கி ‘வணக்கம் மருமக்களே’ என அவர் கூறுவதும் இனி மட்டக்களப்பு மண்ணிலே கேட்காது.
இலங்கை ஒலிரப்புக்கூட்டுத்தாபனச் ‘சிறுவர்மலர்’ மற்றும் ‘சிறுவர் கதைவேளை’ நிகழ்ச்சிகளின் மூலம் ‘வானொலி மாமா’ வாக வலம் வந்த மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் சிறந்த கதைசொல்லி (Story Narrator) – நாடக்கலைஞர் – வில்லிசைக் கலைஞர் – ஓவியர் – பத்திரிகையாளர் – சிறுவர் இலக்கியப்படைப்பாளி –மேடைப்பேச்சாளர் எனப் பல்துறைத் திறமை மிக்கவர்.
மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் (ஆர்.இரத்தினம் சிவலிங்கம்) இலங்கையில் வில்லுப்பாட்டுக் கலையை அறிமுகம் செய்தவர். ஈழத்தில் வில்லிசையின் பிதாமகன் அவரே. கதை சொல்லும் கலை இவருக்குக் கைவந்த கலை. சுமார் பதினெட்டு ஆண்டுகள் மட்டக்களப்பு மாநகரசபை பொது நூல் நிலையத்தில் கதைசொல்லும் கலைஞனாகப் பணியாற்றி 2003இல் ஓய்வு பெற்றவர்.
மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் எனும் கிராமத்தில் 28.03.1933 அன்று பிறந்தார். தந்தையார் திரு.ந.இரத்தினம் ஆசிரியர். தாயார் திருமதி செல்லத்தங்கம். மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் மஞ்சந்தொடுவாய் சென்மேரிஸ் பாடசாலையில் கல்வியைத் தொடங்கி (1ம் 2ம் வகுப்புக்கள்) பின் கல்லடி உப்போடை இராமகிருஸ்ண மிஷன் மகளிர் பாடசாலையில் 3ம் 4ம் 5ம் வகுப்புக்களைக் கற்றார். தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலத்திலும் (6ம் 7ம் வகுப்புக்கள் – 1946/47) பின் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலும் (தற்போது இந்துக்கல்லூரி -1948/52) கல்வி கற்றார். புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் வி.சி.கந்தையா ஆகியோர் இவரது ஆசான்களாக விளங்கினார். பள்ளிப்பருவத்திலேயே நல்ல ‘பகிடிகள்’ சொல்லி மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.
1950களின் நடுப்பகுதியில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதி இயக்கிய ‘அண்ணாவின் தங்கை’ எனும் நாடகம் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் (தற்போது மாநகர மண்டபம்) மேடையேற்றம் கண்டது. இதுவே மாஸ்டர் சிவலிங்கம் நடித்த முதல் நாடகமாகும். இந்நாடகத்தில் கவிஞர் காசி ஆனந்தனும் நடித்திருந்தார்.
அடுத்தது, மட்டக்களப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை எழுதி இயக்கிய ‘சங்கிலியன்’ நாடகத்தில் மன்னன் சங்கிலியனின் அமைச்சராக மாஸ்டர் சிவலிங்கம் நடித்தார். அறப்போரணித்தலைவர் ஆர்.டபிள்யு.அரியநாயகம் (காக்கை வன்னியன் வேடம்) கவிஞர் காசி ஆனந்தன், இன்னொரு ‘வானொலி மாமா’வான இரா. பத்மநாதன் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இராசதுரை சங்கிலி மன்னனாக நடித்த நாடகத்தில் ஒரு கட்டம்.
சங்கிலி மன்னனாக நடித்த இராசதுரை தன்னிடமிருக்கும் வாள் பற்றிய வரலாறுகளை எடுத்துச்சொல்லி அதன் பழமையைப் பெருமையோடு கூறி உறையிலிருந்து வாளை உருவுகிறார். வாள் உறையுள் தங்கிவிட பிடி மட்டும் வெளியே வருகிறது. பார்வையாளர்களின் சிரிப்பொலி.
அமைச்சராக நடித்த மாஸ்டர் சிவலிங்கத்திடமிருந்து சமயோசிதமாக அந்த நேரத்திற்குப் பொருத்தமாக அவரது சொந்த வசனம் அதிரடியாக வெளிப்படுகிறது.
‘மன்னா! பார்த்தாலே தெரிகிறது பழையவாள் என்று’- மீண்டும் பார்வையாளர்களின் கைதட்டலுடன் கூடிய சிரிப்பொலி எழுகிறது.
நாடகம் முடிந்ததும் மாஸ்டர் சிவலிங்கம் இராசதுரை உட்பட எல்லோராலும் பாராட்டப்பெற்றார்.
பின்னர், கவிஞர் காசி ஆனந்தன் எழுதி இயக்கிய தமிழரசுக்கட்சியின் பிரச்சார நாடகமான ‘சூடு சாம்பலாச்சு போடியாரே’ எனும் நாடகத்தில், கவிஞர் காசி ஆனந்தன், இரா.பத்மநாதன் ஆகியோருடன் இணைந்து மாஸ்டர் சிவலிங்கமும் நடித்தார். இது மட்டக்களப்பில் நூறு தடவைகளுக்கு மேல் அரங்கேறிய நாடகமாகும்.
பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ‘கார்ட்டூன்’ (நகை ஓவியம்) சித்திரத்துறையில் பயிற்சி பெறுவதற்காகத் தமிழகம் (தமிழ்நாடு சந்தனக் கலைக்கல்லூரி) சென்றார். அங்கே கவின் கலைகளில் அதிகம் நாட்டம் கொண்டார். ஓவியம், வில்லிசை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். நடிப்பு, நகைச்சுவை, கதாப்பிரசங்கம், பல குரல்களில் பேசுதல் (Mimicry), வில்லுப்பாட்டு, போலச் செய்தல் (Imitation) போன்ற கலைகள் அவரை ஈர்த்தன. அங்கு திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி சில காட்சிகளும் படமாக்கப்பட்டிருந்த வேளையில் அவரது வீட்டாருக்கு அது விருப்பமில்லாத காரணத்தால் ‘அம்மாவுக்குச் சுகமில்லை’ என்று செய்தி கொடுத்து அவரை இலங்கைக்கு வரவழைத்துவிட்டனர். 1960இல் அவர் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பினார்.
தமிழகத்திலிருந்தபோது கொத்த மங்கலம் சுப்பு, கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் மற்றும் பலருடைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நேரில் கண்டும் கேட்டும் உணர்ந்த சிவலிங்கம் அவர்கள் அதனை இலங்கையிலும் அறிமுகம் செய்ய அவாக் கொண்டார். ஆம்! 1960களில் வில்லுப்பாட்டுக் கலையை இலங்கையில் முதலில் அறிமுகம் செய்தவர் இவரேயாவர். இவரது முதலாவது வில்லுப்பாட்டு நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் ‘நமக்கும் மேலே ஒருவனடா’ என்ற தலைப்பில் நடைபெற்றது. ஆரம்பகாலத்தில் வில்லிசைக்கான கதையையும் பாடல்களையும் காசி ஆனந்தனே எழுதிக் கொடுத்தார். சில நிகழ்ச்சிகளில் காசி ஆனந்தனும் மேடையில் அவரோடிணைந்து பாடியிருக்கின்றார். பின்னர் தனது வில்லுப்பாட்டுக் குழுவில் கவிஞர். செ.குணரெத்தினம், சித்தாண்டி சிவலிங்கம், கிருபைரெட்ணம் ஆசிரியர், முழக்கம் முருகப்பா, அன்பு மணி இரா.நாகலிங்கம், வி.கந்தசாமி ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடாத்திப் புகழ் பெற்றார். மிகக்குறுகிய காலத்தில் நூறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. நூறாவது நிகழ்ச்சி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்பின் பாடசாலை மாணவ மாணவியருக்கு அக்கலையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். பாடசாலை மாணவனாக இருக்கும் போதே அவருடைய பெயருடன் ஒட்டிக் கொண்ட ‘மாஸ்டர்’ பட்டம் நிரந்தரமாகிற்று. பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் புதல்வியார் மங்கையற்கரசி அவர்களே இவரது வாழ்க்கைத் துணை. காலஞ்சென்ற எஸ்.டி.சிவநாயகம் அவர்களே இவரது இலக்கியத்துறை வழிகாட்டி. 1966ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு எஸ். டி.சிவநாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி (தினசரி), சிந்தாமணி(வாரமலர்) ஆகிய பத்திரிகைகளில் அவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பணிபுரிந்தார். இப்பத்திரிகைகளின் ‘சிறுவர் பகுதி’க்கு இவரே பொறுப்பேற்றிருந்தார். இப்பத்திரிகைகளின் ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த சுமார் பதினேழு ஆண்டுகள் சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு பாரியது. இவரது ஆசிரியரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை இவரை இலங்கை வானொலியில் ‘சிறுவர் மலர்’ நிகழ்சியை நடாத்திக்கொண்டிருந்த முதலாவது ‘வானொலி மாமா’வான சரவணமுத்து அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பின்னர், இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். 1983 ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினருடன் கொழும்பிலிருந்து வெறுங்கையுடன் மட்டக்களப்பு மீண்டார்.
மட்டக்களப்புக்குத் திரும்பி வந்த மாஸ்டர் சிவலிங்கத்தை மட்டக்களப்பு மாநகரசபை அதனால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது நூல்நிலையத்தில் கதை சொல்லும் கலைஞனாகப் (Story narrator) பதவியிலமர்த்தியது. இப்பதவி இவருக்கென்றே இவரது திறமையை மதித்துப் புதிதாக உருவாக்கப்பட்டதொன்றாகும்.
மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் இயங்கும் மூன்று நூலகங்களுக்கும் சென்று கதை சொல்வார். மேல்நாடுகளில் கதை சொல்லுதல் ஒரு கலையாகவே வளர்ந்துள்ளது. பாடசாலைச் சிறுவர்கள் இவரது கதை சொல்லலில் நல்ல பயன்பெற்றனர். சிறுவர்களுக்கு மகாபாரதம், இராமாயணம் கதைகளை 1984 இல் தொடங்கித் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார். வானொலி, தொலைக்காட்சி (ரூபவாகினி –வண்ணச்சோலை) ஆகிய ஊடகங்களிலும் சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்கினார். இவர் கதை சொல்லும் பாணி மிகவும் கவரக்கூடியது. நகைச்சுவை, நடிப்பு கலந்து கதை சொல்லும்போது கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் தன்மையர். மகாபாரதக் கதை சொல்லும் போது துரியோதனனின் ஆணவச் சிரிப்பையும் சகுனியின் வஞ்சகச் சிரிப்பையும் நடித்துக் காட்டுவார். சிறுவர்களுக்குக் கதை சொல்லும்போது கிழவிபோல் நடந்தும், சிறுவன்போல் ஓடியும், குரங்குபோல் பாய்ந்தும், யானைபோல் பிளிறியும், முயல்போல் துள்ளியும், மான்போல் வெருண்டும், பாம்புபோல் நெளிந்தும் சீறியும் இப்படி அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப் பல்வகை நடிப்புக்களையும் தனிநபர் அரங்கிலே சிறப்பாகச் செய்வார். மாஸ்டர் சிவலிங்கம் கதை சொல்ல வருகிறார் என்றால் மட்டக்களப்பிலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியாது. மட்டக்களப்பிலே இவரது சேவையைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள், பாலர் கல்வி நிறுவனங்கள், சன சமூக நிலையங்கள் பல. மட்டக்களப்பு மாநகர சபை பொது நூல் நிலையத்தில் கதை சொல்லும் கலைஞனாக 1984செப்டம்பர் 15ந் திகதி கடமையேற்ற மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் 2003 மார்ச் 31ந் திகதி ஓய்வு பெற்றார்
வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தொடர்ந்து இடம்பெற்றுவந்த இவரது சிறுவர்க்கான கதை கூறல் நிகழச்சியானது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஈழத்து- தமிழகத்துப் பத்திரிகைகளில் அவரது நகைச்சுவை ஆக்கங்கள் நிறைய வெளிவந்துள்ளன.1993இல் உதயம் வெளியீடாக வெளிவந்த இவரது ‘பயங்கர இரவு’ சிறுவர்களுக்கான தரமான இலக்கியப்படைப்பாகும். 1994இல் ராஜா புத்தக நிலையம் வெளியிட்ட ‘அன்பு தந்த பரிசு’ நூல் வடகிழக்கு மாகாண சாகித்தியப் பரிசு பெற்றது. 1994இல் மட்டக்களப்பிலே மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழாச் சபை ‘மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழா மலர்’ வெளியிட்டு விழாவெடுத்து இவரைக் கௌரவித்தது.
இங்கிலாந்தில் இயங்கும் ‘Buds’ அமைப்பு (Batticaloa Underprivileged Development Society) தனது 10வது ஆண்டு விழாவையொட்டியதாக ‘விபுலானந்த கலை விழா’வை 19.07.1997 அன்று நடாத்தியபோது அதில் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களும் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
அவ்விழாவில் ‘விண்ணுலகில் விபுலானந்தர்’ எனும் தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியையும் அளித்தார். இதுவே அவர் இறுதியாக அளித்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. இது அவரது 127வது வில்லுப்பாட்டு ஆகும். லண்டன் சென்றிருந்த போது மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு நாள், லண்டன் ஈஸ்ட்காம் முருகன் ஆலய வைபவம், லண்டன் துர்க்கை அம்மன் ஆலய நிகழ்ச்சி ஆகியவற்றிலும் கலந்து கொண்டார். லண்டன் ‘Sun Rise’ வானொலியிலும் இவரின் சிறப்புரை இடம்பெற்றது. ‘Buds’ இவருக்கு லண்டனில் ‘கதைமாமணி’ பட்டம் அளித்துச் சங்கை செய்தது.
இலங்கை கலாசார அமைச்சின் ‘கலாபூஷண’ விருது 1999′ பெற்றார். 10.10.2002 அன்று நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் Degree of Master of letters (Honoris Causa) – Presented by the Deen, Faculty of Arts & Culture) வழங்கியது.
மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் நகைச்சுவையுணர்வு நிரம்பப்பெற்றவர். மிகச்சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர்.
1961இல் தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கச்சேரிகளை மறித்துச் சத்தியாக்கிரகம் நடாத்தியது. மட்டக்களப்புக் கச்சேரி வாயிலை மறித்து நடந்த போராட்டத்தில் மாஸ்டர் சிவலிங்கம் பங்கேற்றிருந்தார்.
நகர மண்டத்திற்கு அருகிலிருந்த மட்டக்களப்பு வாடி வீட்டு மண்டபத்தில் சத்தியாக்கிரகிகள் சிலர் உறக்கத்திலிருந்த அதிகாலை இருட்டில் சிங்கள இராணுவ அதிகாரியொருவர் உறங்கிக் கொண்டிருந்தவர்களை ‘எலும்புடா’ எலும்புடா! (எழும்படா! எனும் அர்த்தத்தில்) என்று கூறிக்கொண்டு வந்தார். தவறுதலாக நிலத்தில் உறங்கிக்கொண்டிருந்த மாஸ்டர் சிவலிங்கத்தின் முழங்கால் எலும்பில் தனது சப்பாத்துக்காலினால் மிதித்தும் விடுகிறார்.
இச் சம்பவத்தைப் பின்னர் மாஸ்டர் சிவலிங்கம் மற்றவர்களிடம் கூறும்போது ‘அவன் எனது முழங்கால் எலும்பில் ஏறி மிதித்துவிட்டு ‘எலும்புடா’ என்று நான் சொல்ல வேண்டியதை அவன் சொல்லிக்கொண்டு போறான்’ என்று சொல்லிச் சிரித்தார்.
நகைச்சுவைக் குமரன் (புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை வழங்கியது), நகைச்சுவை மன்னன் (FXC நடராஜா வழங்கியது). வில்லிசைக் குமரன் (பண்டிதர் V.C.கந்தையா வழங்கியது). வில்லிசைச் செல்வர் (1987 – வடகிழக்கு மாகாணசபை), பல்கலைக்கலைஞன், கனிதமிழ்க்கலைஞன், கதை வள்ளல், கதைக் கொண்டல், கலைஞானமணி, கலைக்குரிசில், அருட்கலை திலகம் (வடகிழக்கு மாகாணசபை – 1993,(கதைமாமணி (லண்டன் – 1997), கலாபூஷணம் (1999), ஆளுநர் விருது (வடகிழக்கு மாகாணம் -2000) இலக்கிய கலாநிதிப்பட்டம் (கிழக்குப் பல்கலைக்கழகம்- 2002) ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தாலும் இவை அனைத்துக்கும் மேலாக ‘மாஸ்டர்’ என்னும் மகுடமே மக்கள் மனதை நிறைத்து நிற்கிறது.
1970 மட்டக்களப்பில் பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் மூத்த புதல்வி மங்கையற்கரசி அவர்களை மணம் புரிந்தார். மனைவி ஆங்கில ஆசிரியை. ஒரேமகன் விவேகானந்தன் டாக்டராவார். சிந்தாமணி வார வெளியீட்டில் சிறுவர்களுக்காக இவர் எழுதிய கதைகள் சிலவற்றைக் கொழும்பு அஸ்டலக்ஸ்மி பதிப்பகம் (320,செட்டியார் தெரு, கொழும்பு-11 தொலைபேசி : 2334004) ‘சிறுவர் கதை மலர்’ எனும் தலைப்பில் நூலாக (1ம், 2ம் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.
தனது அந்திமக் காலத்தில் மட்டக்களப்பில் இராமகிருஸ்ண மிஸன் மாணவர் இல்லம், சாரதா இல்லம், தரிசனம், மங்கையற்கரசி மகளிர் இல்லம், மெதடிஸ்த மகளிர் இல்லம் முதலியவற்றில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வில்லுப்பாட்டு, தாளலயம், நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகளை எழுதிப் பயிற்றுவித்தார். அத்துடன் அறநெறிப் பாடசாலைகளில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக்கதைகளை எடுத்துக்கூறியவர்.
என்னைத் தலைவராகக் கொண்ட ‘கண்ணகி கலை இலக்கியக் கூடல்’ எனும் அமைப்பு, தனது கன்னிக் கண்ணகி கலை இலக்கிய விழாவை, 2011ன் 18ஆம், 19ம் திகதிகளில் மட்டக்களப்பு மகாஐனக்கல்லூரிக் கலை அரங்கு மண்டபத்தில் நடாத்தியபோது, அதன் இரண்டாம்நாள் மாலை அமர்வான மாதவி அரங்கிற்கு (கலையரங்கும் நிறைவு விழாவும்) மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் தலைமை வகித்தமையும் — எனது ‘விளைச்சல்’ (குறுங்காவியம்) நூல் அறிமுக நிகழ்வு 16.07.2017 அன்று மட்டக்களப்பு, நாவற்குடா இந்து கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெற்றபோது அதனை மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தமையும் — 2019இல் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்தபோது அவரும் நானும் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை அவரது மட்டக்களப்பு வீட்டில் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தமையும் என் நெஞ்சகலா நினைவுகளாகும்.
மட்டக்களப்பு மண் மறக்கவொண்ணாத கலை இலக்கிய ஆளுமைகளுள் அமரர் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களும் ஒருவராவர்.