வைகாசு – “நாங்கள் சொல்வதைத் கேட்காவிட்டால், எங்கள் ஏகபோகத்தை ஏற்காதுவிட்டால் அவர்களின் ஆயுளை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்” (காலக்கண்ணாடி 88) 

வைகாசு – “நாங்கள் சொல்வதைத் கேட்காவிட்டால், எங்கள் ஏகபோகத்தை ஏற்காதுவிட்டால் அவர்களின் ஆயுளை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்” (காலக்கண்ணாடி 88) 

ஈழப்போராட்டத்தில் வைகா(சு)சி…! 

சபாலிங்கம் முதல் நடேசன் வரை….!!  

                  — அழகு குணசீலன் — 

முத்தமிழ் கலைஞர் கருணாநிதி அவர்கள் சித்திரை புத்தாண்டு கவியரங்கம் ஒன்றிற்கு தலைமை தாங்கியிருந்தார். அந்தக் கவியரங்கில் தமிழ் மாதங்களை வைத்து அவர் வடித்திருந்த தலைமைக்கவிதை உலகின் எந்த படைப்பாளியும், எந்த மொழியிலும் வடிக்க முடியாத ஒன்று. ஈடு இணையற்ற அவ்வாறான படைப்புக்களை அவரால்தான் தரமுடியும். கலைஞருக்கு நிகர் கலைஞரே…! 

“வைகா(சு)சி என் கவிதைக்கு என்று கேட்கமாட்டேன் -அதனால்  

சித்திரைக்கு வாழ்த்துச் சொல்ல என்னை அழைத்திருக்கிறார்கள்…..!” 

என்பது அந்தக் கவிதையின் இருவரிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் வைகாசி (மே) மாதத்தை திரும்பிப் பார்த்தால் அது ஆயுதப்போராட்ட அரசியல் வரலாற்றில் பல முக்கிய திருப்பங்களை, திருப்புமுனைகள ஏற்படுத்தி இருப்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.  

 அதே போன்று கலைஞரின் அவருக்கே உரிய சொற்சிலம்பம் “வைகாசு” ஈழப்போராட்டப் போக்கையும் நிர்ணயித்திருக்கிறது என்பதையும் தவிர்த்து நோக்க முடியாது. இதில் கலைஞர் கருணாநிதிக்கு சுய அனுபவமும் இருந்தது. அதுதான் புலிகளின் “வைகாசு” அரசியல் அவரை தூரத்தள்ளிவிட்டு, எம்.ஜி.ஆர்.ஐ ஆரத்தழுவி அரவணைத்துக் கொண்ட கதை. 

1972 மே 22. இலங்கையை சோஷலிச ஜனநாயக குடியரசாகப் பெயர் சூட்டிய அரசியல் அமைப்பின் பிறப்பு. இந்த அரசியலமைப்பு இலங்கை அரசுக்கு ஒரு மொழியும் (சிங்களம்) மதமும் (பௌத்தம்) இருப்பதாக அறிவித்தது. பிறக்கின்ற குழந்தை ஒன்று பெற்றோரின் மொழியையும், மதத்தையும் தத்தெடுத்துக்கொள்ளும். இங்கு ஒரு அரசு. மொழியும், மதமும் மக்களுக்கா…? அரசுக்கா…..? 

சோல்பரி அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை வழங்கிய 29வது சரத்தின் இரண்டாவது பிரிவை அகற்றியது. 

ஒரு ஊடக “சக்தி” இலங்கை மீண்டும் இந்த அரசியலமைப்புக்கு திரும்ப வேண்டும் என்று சொன்னதாக சேதிகள் அடிபடுகின்றன. இந்த அரசியல் அமைப்புத்தான் இன்றைய இனப்பிரச்சிக்கு அடிக்கல் நாட்டி, ஆயுதப்போராட்டத்தை அதிவேகப்பாதையில் செலுத்தியது என்பதை புரியாத ஊடகச் சக்திகள் “அஞ்சாறு கத்தாவ” சொல்லுகின்றன. 

ஆயுதப்போராட்டம் ஆரம்பத்தில் தனிநபர் பயங்கரவாதமாக வடிவெடுக்கிறது. இதற்கு முன்னரும் மாற்றுக்கருத்துள்ள அரசியல்வாதிகள் விடுதலையின் பெயரில் கொல்லப்பட்டபோதும், 1981 மே 24இல் வட்டுக்கோட்டை தியாகராஜா சுட்டுக்கொல்லப்படுகிறார். இது தனி நபர் பயங்கரவாதத்தின் முதற்கொலையும் அல்ல, இறுதிக்கொலையும் அல்ல. ஈழப்போராட்டம் தனிநபர் கொலைகளை சமாந்தரமாக நகர்த்திப் போகின்ற போக்கை உள்வாங்கிக் கொண்டது. 

1984 மே 10இல் அமெரிக்க ஒகியோ மாநிலத்தைச் சேர்ந்த STANLY BRYSON ALLEN, MARY ALLEN தம்பதிகள் முல்லைத்தீவில் வைத்து கடத்தப்படுகின்றனர். உல்லாசப் பிரயாணிகளான இவர்களை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு, “சி.ஐ.ஏ. முகவர்கள்” என்ற சந்தேகத்தில் கடத்தியது. கடத்துவதற்கான கட்டளையைப் பிறப்பித்தவர் வேறுயாருமல்ல, இன்றைய மீன்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. டக்ளஸ் அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவான பி.எல்.ஏ.யின் தளபதி.  

கடத்தியவர்கள் அலன் தம்பதிகளை விடுதலை செய்வதற்ககு 50 மில்லியன் பணத்தையும், சிறையில் உள்ள 20 போராளிகளின் விடுதலையையும் கோரினார்கள். இது வைகாசியில் நடந்ததும், ‘வை காசு’ அரசியலும் கலந்தது. இந்திரா காந்தியின் முயற்சியினால் அலன் தம்பதிகள் 1984 மே 12இல் விடுதலை செய்யப்பட்டனர். வெறும் “திரில்” நாடகம். 

1985 மே 5 ம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். ஈழப் போராட்டத்தில் ஒரு வரலாற்றை எழுதியது. காரைநகர் கடற்படை முகாம் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் பங்கு கொண்ட பெண்போராளி ஷோபா வீரச்சாவடைந்தார். யார், ஈழப்போராட்ட வரலாற்றை தத்தமது அமைப்புக்கு ஏற்ப “மகாவம்சமாக” திரிபுபடுத்த முனைந்தாலும் ஈழப்போராட்ட வரலாற்றில் களத்தில் வீரச்சாவடைந்த முதல் பெண் போராளி ஷோபா தான். இவர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரி. 

சரியாக ஒருவருடம் கழித்து புலிகளின் மாற்று இயக்க அழிப்பு பகிரங்கமாக பிரகடனம் செய்யப்படுகிறது. 1986 மே 5இல் ரெலோ இயக்கத் தலைவர் சிறி சபாரெட்ணம் புகையிலைத் தோட்டத்திற்குள் கிட்டுவின் உத்தரவில் சுட்டுக்கொல்லப்பட்டார். மாற்று இயக்கங்களை தேடி அழிக்கும் சகோதரப் படுகொலை வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பில் புலிகள் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தவர் கல்லாறு “கடவுள்”. புலிகளின் மேலிட  உத்தரவை – சகோதரப் படுகொலையை நிராகரித்து புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறினார். கடவுளின் மனிதம் மட்டக்களப்பு மக்களின் இதயங்களில் வரலாறாகியது. கருணா பிரிந்த போது கிழக்கு கடவுளைத் தேடியது. 

மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடும் விடுதலை அமைப்புக்கள் பொதுவாக இன்றைய தினத்தை கொண்டாடுவார்கள். ஆனால் ஈழப்போராட்ட வரலாற்றில் இந்த நாள் ஒரு “கொலைநாள்”.  

1989, 1993, 1994 ம் ஆண்டுகளின் மே 1ம் திகதி, மேதின நாளன்று முறையே யாழ். அரசாங்க அதிபர் பஞ்சலிங்கம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு அங்கமான இந்தியப்படையை புலிகளோடு இணைந்து “GO HOME” என்று குரல் எழுப்பிய ஜனாதிபதி பிரேமதாச, பிரான்ஸ்சில் புத்திஜீவியும், கலை இலக்கிய படைப்பாளியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சபாலிங்கம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

இந்தக் கொலைகள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரை குறிவைத்தவை மட்டுமன்றி முன்பும், பின்பும் இடம்பெற்ற கொலைகளின் குறிகாட்டியாகவும் அமைந்தவை. மாற்று இயக்கத்தவர்களை மட்டுமல்ல அரசாங்க அதிகாரிகள், அரசுத்தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் யாரும் “நாங்கள் சொல்வதைத் கேட்காவிட்டால், எங்கள் ஏகபோகத்தை ஏற்காதுவிட்டால் அவர்களின் ஆயுளை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்” என்று இதன் மூலம் அறிவிக்கப்பட்டது. 

இங்கு பிரேமதாசாவின் கொலையிலும் ஆயுத வழங்கல் மட்டுமல்ல, வைகாசும் பின்னணியில் இருந்தது என்பது எல்லோரும் அறிந்த பரம ரகசியம். கொடுத்தவர் தன்னைக் கொல்லமாட்டார்கள் என்று நம்பினார். வாங்கியவர்களோ கொலை செய்வதுதான் ஆதாரங்களை அழிக்க வழி என்று நம்பினர். அரசியல் தலைமைத்துவங்களை, தலைவர்களை அழிக்கும் தொடரில் இது முக்கிய நிகழ்வு. 

1990 மே 7ம் நாள் மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாம். தம்பிமுத்து கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். சூட்டுக்காயங்களுக்குள்ளான அவரது மனைவி கலா மாணிக்கம் தம்பிமுத்து மே 16ம் திகதி காலமானார். 1989 பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற இருவரில் சாம்.தம்பிமுத்து ஒருவர். மற்றவர் பிரின்ஸ் காசிநாதர். தமிழர் விடுதலைக் கூட்டணியில் ரெலோ சார்பில் அதிக விருப்ப வாக்குகளைப் பெற்று தெரிவானவர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா). 

1991 மே 21இல் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டார். சம்பந்தப்பட்டவர்களால் “துன்பியல்” என்று கூறப்பட்ட இந்தக் கொலை ஈழப்போராட்டத்தின் பாதைகளை அனைத்து திசைகளிலும் மூடியது. பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் விடுதலைப்போராட்டம் ஒன்றை  “பயங்கரவாதம்” என்று பிரகடனப்படுத்தவும், எதிர்காலத்தில் ஈழப்போராட்டத்தின் போக்கை / தோல்வியை நிர்ணயிக்கும் திருப்பு முனையாகவும் அமைந்தது. 

இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையிலும் டெல்கியில் “வைகாசு” முக்கிய இடம்பிடித்திருந்தது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான இதுவரையான தீர்வு முயற்சிகளில் உருப்படியான ஒரு முயற்சியாக இருந்த இத் தீர்வுத்திட்டம் சிதறடிக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த சிங்கள, பௌத்த பேரினவாதத்தில் இருந்து விடுதலை வேண்டி நின்றோமோ அதே பேரினவாதத்துடன் கைகோர்த்து 13 வது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபை அதிகாரப்பகிர்வை தகர்த்தோம் என்பதுதான். 

சிலருக்கு இது “இராஜதந்திரம்” ஆனால் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இது சந்தர்ப்பவாதம். இன்று இந்திய, இலங்கை ஆட்சியாளருக்கு வெறும் வாய்ச்சவால்களை விட்டுக்கொண்டு 13வது திருத்தத்தை அமுல் செய்யுமாறு கோரி உரிமைப் பிச்சை எடுக்கிறார்கள். 

உரிமை – விடுதலை கேட்டுப் பெறுவதல்ல, போராடிப்பெறுவது என்று ஆயுதம் தூக்கிய அமைப்புக்களும், கட்சிகளும் செல்லும் திசை தெரியாது நடுச்சந்தியில் வந்து நிற்கிறார்கள். சந்திரிகா தருவார்..? ராஜபக்ச தருவார்…?  சிறிசேன தருவார்…? ரணில் தருவார்…? தமிழ்த்தேசிய (?) பாராளுமன்ற அரசியலின் பதவிப் பம்மாத்து. 

1998  மே 17இல் சரோஜினி யோகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். 2004 மே 31ம் நாள் பத்திரிகையாளர் நெல்லை நடேஸ் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டார். ஈழப்போராட்டத்தின் பெயராலும், அரசசார்பு எதிர்த்தரப்பாலும் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிமலராஜன், சின்னபாலா, ரமேஷ், சிவராம், செழியன் பேரின்பநாயகம், றேலங்கி போன்று இன்னும்… இன்னும்… எத்தனையோ பேரின் பேனாக்களை துப்பாக்கிகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.  

தனிநபர் பயங்கரவாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த துப்பாக்கி கலாச்சாரம் புலம்பெயர்ந்த நாடுகளுக்கும் இறக்குமதி செய்யப்பட்டு நாதன், கஜன் போன்றவர்களையும் சுட்டுத்தள்ளியது. அதுமட்டுமா பரிஸில் சுட்டவர்களே அஞ்சலியும் செலுத்தி பட்டங்களையும் வழங்கினார்கள். விடுதலையின் பெயரிலான ஆகக் குறைந்தபட்ச நேர்மையும் இல்லாது போனது. இப்படித்தான் ஒருவர் சுட்டுவிரல் மற்றவரையும், மற்றையவர் சுட்டுவிரல் அடுத்தவரையும் நோக்கி நீண்டுகொண்டிருக்கிறது.  

இந்தக் கொலைகளுக்கு பின்னால் புலிகள், ஈ.பி.டி.பி,புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ரி.எம்.வி.பி. ரொலோ, ஈரோஸ் எல்லோரதும் இரத்தக்கறை படிந்த கரங்கள் இருக்கின்றன. பத்திரிகையாளர் கருணாகரன் தனது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருப்பது போன்று “எனக்கு விடுதலை உனக்கு துரோகம்” என்ற வரிகள்தான் நினைவில் வருகின்றன. 

ஈழப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்த நாளும் 2009 மே 18 .  

விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணம் ஆயுதப்போராட்டம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கச் செய்தது. ஒரு ஆயுதப் போராட்டத்தின் தோல்வியை மக்கள் சந்தித்தார்கள். பலர் அத்தாக்கத்தில் இருந்து ஒரு தசாப்தம் தாண்டியும் இன்னும் விடுபடவில்லை. அளவுக்கு அதிகமாகவும், அரசியல் மயப்படுத்தப்படாமலும், ஆயுத குறுந்தேசிய வாதத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் இதில் இருந்து விடுபடுவது இலகுவானதல்ல. மக்களின் இந்த நிலையை தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் மிகவும் இலகுவாகப் பயன்படுத்திக்கொள்கிறது. 

இன்றைய பாராளுமன்ற அரசியலிலும் “வைகாசு” முதன்மை பெறுகிறது. பேரம்பேரல் வியாபாரம் அரசியல் சந்தையில் நன்றாக நடக்கிகிறது. விலை உயர்வு பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் மட்டும் அல்ல. எம்.பி.க்களுக்கும்தான். காரணம் பணவீக்கமாம். 

2002 மே 9இல் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விருப்பமின்றி காலத்தின் கட்டாயத்தில் பதவி விலகினார். மூன்றாவது நாள் கழித்து மே 12இல் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். 1972 க்கும் 1922க்கும் இடையே சரியாக 50 மே மாதங்கள் -ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அரை நூற்றாண்டு கடந்தும் சிங்கள தேசியமும், தமிழ்த் தேசியுமும் இன்னும் ஒரு புள்ளியில் சந்திக்கும் அறிகுறிகள் தென்படவில்லை. 

அண்மையில் மனோகணேசன் எழுதிய கடிதமும், வெளியிட்ட கருத்துக்களும் காலிமுகத்திடல் காடு போலிக்காடு என்பதையும், அது தெட்டத் தெளிவாக சிங்கள பௌத்த பேரினவாதக்காடு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு இது மீண்டும் ஒரு பாடமாக அமையும். 

பாடங்களை கற்றால் மட்டும் போதாது. பரீட்சையில் வினாவுக்குப் பொருத்தமான பதிலை எழுதவேண்டும். அதுவே பரீட்சையில் சித்தியடைய ஒரேவழி. இதுவே சிறுபான்மைத் தேசிய இனங்களின் பாராளுமன்ற அரசியல் மீதான எதிர்பார்ப்பு. 

2022 வைகா(சு)சி மனோகணேசனுக்கு புரிகிறது மற்றவர்களுக்கு…..? 

தமிழ்த்தேசியம் பரீட்சையில் சித்தியடையும் என்ற நம்பிக்கை மக்களுக்கு கிஞ்சித்தும் இல்லை.