சம்பந்தனிடம் சில கேள்விகள் ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-16) 

சம்பந்தனிடம் சில கேள்விகள் ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-16) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

‘தீர்வை வென்றெடுக்க ரணிலுடன் பேசுவோம்’ என்ற முன்பக்கத் தலைப்பிட்டுத், “தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ளக் கூடியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எனவே அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்படும்” 

 -இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார் எனக் ‘காலைக்கதிர்’ மின்னிதழ் 16.05 2022 மாலைப் பதிப்பு செய்தி வெளியிட்டுள்ளது. 

இரா.சம்பந்தனின் கவனத்திற்குச் சில விடயங்களையும் வினாக்களையும் இப்பத்தி சமர்ப்பிக்க விரும்புகிறது. 

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் – முண்டுகொடுப்புடன்- விளங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன+பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டு ‘நல்லாட்சி’ க் காலத்தில் (2015-2019) தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது ஏன்? 

* உங்களது இந்த அறிவிப்பு அல்லது நம்பிக்கை வழமையாக நீங்கள் கூறும் ‘பொங்கலுக்கு முன் தீர்வு’- ‘தீபாவளிக்கு முன் தீர்வு’- ‘இந்த வருட இறுதிக்குள் தீர்வு’ என்று சம்பிரதாயபூர்வமாகக் கூறித்தமிழ் மக்களை ஆசுவாசப்படுத்தும் இன்னொரு நடவடிக்கையா? 

 * நீங்கள் இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்துச் செயற்படும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன்மற்றும் இரா சாணக்கியன் போன்றோர் ஏன் அவசரமாக முண்டியடித்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் நியமனத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்? முதலில் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்களின் வாய்க்குக் கடிவாளமிடுங்கள். முடியாவிட்டால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்றுங்கள். 

* நீங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூலம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எத்தகையது? ஏனெனில், நீங்கள் எப்போதும் அதனைத் தெளிவாகக் கூறாமல் மூடுமந்திரமாகவே வைத்துக்கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். 

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரியோ? பிழையோ? சாத்தியமோ? சாத்தியமில்லையோ? ‘இரு தேசம்; ஒரு நாடு’ என்றுதான் எப்போதும் கூறித் (குளறித்) திரிகிறார். 

தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவர் சி விவிக்னேஸ்வரன் சாத்தியமோ இல்லையோ? ‘வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி’ என்று தெளிவாகவே கூறுகிறார். 

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நீங்களோ தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய தீர்வு என வழுவழுப்பாகவே வாய் திறக்கின்றீர்கள். 

எனவே, நீங்கள் மனம் கொண்டுள்ள தீர்வை முதலில் மக்களுக்கு வெளிப்படையாகவும்- பகிரங்கமாகவும வெளிப்படுத்துங்கள். 

* 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் முழுமையான-முறையான அமுலாக்கம் குறித்து நீங்கள் அவ்வளவாக வாய் திறப்பதில்லை. ஏன்? 

 * இவை ஒரு புறமிருக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்ப்பதுடன் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளை இந்திய அரசின் எடுபிடிகள் எனவும் அடிவருடிகள் எனவும் சாடுகிறார். (தான் யாருடைய எடுபிடி என்றும் அடிவருடி என்றும் சொன்னால் நல்லது) 

சி வி விக்னேஸ்வரன் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதுடன் அவருடைய அரசில் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கும் கூட ‘பச்சைக் கொடி’ காட்டுகிறார். 

இந்த இடத்தில் இப்பத்தி எழுத்தாளராகிய எனக்குத் தங்களிடம், நீங்கள் ஒரு மூத்த தமிழ் அரசியல் தலைவர் என்ற ரீதியிலும் -1975 இலிருந்து தமிழரசுக் கட்சியிலும்- பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் தொடர்ந்து செயற்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் அனுபவம் மிக்கவரென்ற ரீதியிலும் எதிர்பார்ப்பொன்றுள்ளது. அது இதுதான்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது நியமனத்தைக் கடுமையாக எதிர்த்த -தன்னை மிகவும் மோசமாக விமர்சித்த அரசியல் கட்சித் தலைவர்களையும் ஆட்களையும் அழைத்துக் கட்சி பேதங்களை மறந்து நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு ஆதரவு தரும்படி பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் அடையுமளவுக்குத் தனது ஆளுமையை- அனுபவத்தை- ஆற்றலைப் பிரயோகித்திருக்கிறார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் ரணிலை ஆதரிக்க முன்வந்துள்ளன. இங்கே கோட்பாட்டு அரசியல் அடக்கி வாசிக்கப்பட்டு யதார்த்த அரசியல் முன்னுக்குவந்துள்ளது. 

அதேபோன்று, நீங்களும் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் அழைத்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில் கோட்பாட்டு அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அதி குறைந்தபட்சமாவது எப்படிப் பெற்றுக்கொள்வது என்பது குறித்த ‘யதார்த்த அரசியல் ‘பேச்சுவார்த்தை நடத்திக் கருத்தொருமித்த நிலைப்பாடு ஒன்றினை எய்துவதற்கு ஏன் உங்கள் ஆளுமையையும்-அனுபவத்தையும்- ஆற்றலையும் பிரயோகிக்கக் கூடாது? அதனைச் செய்ய உங்களுக்கு விருப்பமில்லையென்றால்- முடியாவிட்டால் இந்தத் தள்ளாத வயதிலாவது அரசியலிலிருந்து நீங்கள் ஒதுங்கிவிடுதல் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கும் உங்களுக்கும் நல்லதல்லவா? அந்த வெற்றிடத்தை வரலாறு- காலம் இட்டு நிரப்பிக் கொள்ளும்.