கிழக்கில் : பயனீட்டு அரசியலும், எதிர்ப்பு அரசியலும்…..! (மௌன உடைவுகள்- 86)

கிழக்கில் : பயனீட்டு அரசியலும், எதிர்ப்பு அரசியலும்…..! (மௌன உடைவுகள்- 86)

— அழகு குணசீலன் —

“1950கள் தொடக்கம் சிங்கள சமூகத்துக்கும் தமிழருக்குமிடையே அரசியல் ரீதியாக ஏற்பட்ட விரிசலில் முஸ்லீம்களின் அரசியல் உபாயம் பல நன்மைகளை சிங்கள அரசாங்கங்களிடம் இருந்து முஸ்லீம்களுக்கு பெற்றுக்கொடுத்தது. அதனால்தான் கட்சி விட்டு கட்சி தாவும் இந்த உபாயத்தை வரலாற்று ஆசிரியர்களும், அரசியல் ஞானிகளும் பயனீட்டு அரசியல் என கௌரவிக்கலாயினர்” .—-

இதைக்கூறியிருப்பவர் வேறுயாருமல்ல. முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பிறப்பிடம் காத்தான்குடியின் நாடறிந்த கல்வியாளரும், மட்டக்களப்பு தமிழ்க் கல்விச் சமூகத்திடம் இன்றும் பெரும்  மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரத்துறை சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி அமீர் அலி அவர்கள். 

தற்போது மேற்கு அவுஸ்ரேலியாவில் மேர் டோக் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, இலங்கையின் முன்னணி முஸ்லீம் வார இதழான “விடிவெள்ளி” அமீர் அலி அவர்களின் கட்டுரையை தாங்கி வெளிவந்துள்ளது. முஸ்லீம் கட்சிகளின் சமகால அரசியல் குறித்த அவரது பார்வை “மோப்பம் பிடிக்கும் முஸ்லீம் அரசியல் கட்சிகள்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மௌன உடைவுகள் 85 இல் குறிப்பிடப்பட்ட “மதில்மேல் பூனைகள்” என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாக இந்த மோப்பம் பிடித்தல் அமைகிறது.

  கலாநிதி அமீர் அலி அவர்களின் இந்த வரிகள் “மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில் முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரையும் மூன்றாவது இனம் அதன் செல்லப்பிள்ளையாக இருக்கும். இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின் மூன்றாவது இனத்திற்கும் அதே கதிதான் நடக்கும்” என்ற மாமேதை லெனினின் கருத்தை உறுதி செய்கிறது. இந்த முஸ்லீம் அரசியல் கட்சிகளின்  பயனீட்டு அரசியல் போக்கு ஆயுதப்போராட்ட காலத்தில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லீம் தேசிய இனங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படுவதையும், ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதையும் தடுக்கின்ற சந்தேகப்பேயாக அமைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தோற்றம் பற்றி குறிப்பிடும் போது கலாநிதி அமீர் அலி இவ்வாறு குறிப்பிடுகிறார்….  “1970 களின் பிற்பகுதியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியூதீன் மஹ்மூத் முஸ்லீம் பாடசாலைகளின் பாடவிதானத்தில் நடனம், இசை போன்ற கவின் கலைகளை புகுத்தியபோது அதற்காக கொதித்தெழுந்த முஸ்லீம்களின் எதிர்ப்புக்கு தலைமைதாங்கி போராடி ஒரு அரசியல்வாதியாக அரும்பியவர் அஷ்ரப். தமிழீழப்போராட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கிலும், வடக்கிலும் வாழ்ந்த முஸ்லீம்கள். அந்த முஸ்லீம்களின் நிலையைப் பற்றி கொழும்பில் வாழ்ந்த முஸ்லீம் தலைவர்கள் கவலையீனமாக இருந்ததே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி உருவாவதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது” என்று எழுதியுள்ளார்.

“முஸ்லீம் காங்கிரஸின் அடையாளச் சின்னங்களும், தேர்தல் பிரச்சாரங்களும் முஸ்லீம்களின் உரிமைகள் எவை என்பதைப் பட்டியலிட்டு விளக்காமல் வெறுமனே மார்க்க முலாம் பூசப்பட்ட பேச்சு மேடைகளாகவே விளங்கின. தப்வீக் இயக்கத்தின்”இஜ்திமாவுக்கும் ” காங்கிரஸின் பிரச்சார கூட்டங்களுக்கும் இடையே வித்தியாசமே இல்லையெனுமளவவுக்கு அவை காணப்பட்டன” என்று மிகத்தெளிவாக மதத்தில் இருந்து அரசியலை பிரித்து நோக்குகிறார் அமீர் அலி அவர்கள்.

“ஒரு ஜனநாயக நாட்டில் அப்புஹாமிக்கும், ஆறுமுகத்திற்கும் இல்லாத உரிமை அப்துல்லாவுக்கு இருக்குமா? என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதன்பின் அப்துல்லாவின் உரிமைகள் மறுக்கப்பட்டால் அவற்றுக்காக நீதிகேட்டுப்போராட வேண்டும். போராடினார்களா இந்தப் பெருந்தகைகள்.? என்று கேட்கிறார் அவர். இந்த கேள்வியின் மூலம்  அவர் கூற வருவது இன, மதங்களைக் கடந்த ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒருங்கிணையாது முஸ்லீம் அரசியல் தலைமைகள் சிங்கள -தமிழ் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாட்டை பயன்படுத்தி “பயனீட்டு” அரசியலை செய்தார்கள் என்பதாகும்.

சுதந்திர இலங்கையில் தனிக்கட்சியில்லாத நிலையில், முஸ்லீம்களின் கொழும்பு தலைமைகள் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை சிங்கள கட்சிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, ஆட்சியிலும் பங்கேற்று தங்கள் பயனீட்டு அரசியலை செய்தார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக முஸ்லீம் காங்கிரஸ் அமைக்கப்பட்ட போதும் காலப்போக்கில் அதுவும் கொழும்பு அரசியல் தலைமைகளின் பாணியிலேயே செயற்பட்டது/செயற்படுகிறது. இது இன்றுவரை நீடிக்கின்ற அமீர் அலி அவர்கள் கூறுகின்ற ” பயனீட்டு”அரசியல்.

தமிழர்களைப் பொறுத்தமட்டில் தனிக்கட்சியில்லாத நிலை இருக்கவில்லை. கட்சிகள் இருந்தபோதும் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக்கட்சியினர் தொடர்ச்சியாக கடந்த 75 ஆண்டுகளாக எதிர்ப்பு அரசியலயே செய்துவருகின்றனர். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் எதிர்ப்பு அரசியல் செய்வது -எதிர்ப்பைக்காட்டுவது தவறல்ல, அனால் மூன்று கால்நூற்றாண்டுகளாக வெறும் எதிர்ப்பு அரசியல் செய்வதை அரசியல் உபாயம் என்று எப்படிச் சொல்லமுடியும்? இந்த எதிர்ப்பு அரசியல் மூலமான தமிழர்களுக்கான இழப்பும், பயனீட்டு அரசியல் உபாயம் காரணமான முஸ்லீம்களின் பெறுகையும் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் கிழக்கில் சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையீனத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. 

கொழும்பு அரசியல் தலைமைகளால் கிழக்குமாகாண முஸ்லீம்கள்  அரசியல் தலைமைத்துவம் இல்லாது அரசியல் பாதிப்புக்களைச் சந்தித்ததுபோல், யாழ்ப்பாண அரசியல் தலைமைகளின் கீழ் சரியான தலைமைத்துவமோ, கட்சியோ இன்றி கிழக்குமாகாண தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். வடக்கு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கொடுக்கப்படவில்லை. மேலும் கிழக்கு பிரச்சினைகளும், பன்மைத்துவ சமூக வாழ்வியலும் முற்றிலும் வேறுபட்டவையாக அமைந்திருந்தபோதும் அவற்றின் மீது தனித்துவமான கவனம் செலுத்தப்படவில்லை. 

யாழ்ப்பாண அல்லது வடக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினைகளே ஒட்டு மொத்த தமிழர்களின் பொதுப்பிரச்சினைகளாக காட்டப்பட்டன. இதைச் சுட்டிக் காட்டுவதற்கும்,தட்டிக் கேட்பதற்க்குமான அரசியல் தலைமைகள் இருக்கவில்லை. இருந்த ஒரு சிலரும் யாழ்.அரசியல்கட்சிகளுக்குள் கட்டுப்பட்டுக்கிடந்தார்கள். எதிர்ப்பு அரசியலுக்கு அப்பால் முஸ்லீம் சமூகத்தலைமைகள்  மேற்கொண்ட “பயனீட்டு” அரசியல் உபாயம் ஒன்று இருக்கிறது என்பது பற்றி கிழக்கு அரசியல்வாதிகள் சிந்திக்கவில்லை.

அப்படி சிந்தித்த ஒரு சில தலைமைகள் நல்லையா, தேவநாயகம், இராஜன் செல்வநாயகம் போன்றவர்கள் சிங்கள அரசு சார்பானவர்களாக காட்டப்பட்டார்கள். ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தபோது இதற்கான வாய்ப்பு ஜனநாயக மறுப்பாக முற்றாக இல்லாமல் போனது. இந்த சூழலில் ஒப்பீட்டளவில் யாழ் .குடாநாட்டை விடவும்  சகல துறைகளிலும் குறைவான அபிவிருத்தி மட்டத்தை கொண்டிருந்த கிழக்கு மாகாண தமிழ்ப்பிரதேசங்கள் “புலிகள் தான் தமிழர்கள், தமிழர்கள் தான் புலிகள்” என்ற ஒட்டு மொத்தமான முட்டாள்தனமான கோஷத்தினால் இருந்ததையும் இழக்க வேண்டி ஏற்பட்டது. மார்க்சியம் பேசிய இயக்கங்கள் சோஷலிச தமிழ்ஈழத்தில் இந்த வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றன.

ஆனால் இதே காலகட்டத்தில் கலாநிதி அமீர் அலி கூறுவதுபோன்று. இந்த முரண்பாட்டு இடைவெளியைப் உபாயமாக பயன்படுத்தி கொண்ட  கிழக்கின் முஸ்லீம் அரசியல் தலைமைகள் பல பயனீட்டை அடைந்தார்கள். இந்த நிலையில் கிழக்கு தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காக புலிகள் அப்பாவி முஸ்லீம்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முஸ்லீம்கள் அரசபடைகளின் உதவியை நாடவேண்டி இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சிங்கள அரசு முஸ்லீம் இளைஞர்களை படையணிகளுக்குள் உள்வாங்கி தமிழ் இயக்கங்களுக்கு எதிராக செயற்படச்செய்தது. 

யாழ்ப்பாண கட்சி அரசியல் தலைமைகள் கிழக்கின் தனித்துவத்தையும், சூழலையும் எவ்வாறு கவனத்தில் கொள்ள வில்லையோ அதே போன்றுதான் யாழ். ஆயுத அமைப்புக்களின் அமைப்புக்களும் இந்த விடயங்களை புறக்கணித்தன. கருணா இதற்கான எதிர்ப்பை வெளியிட்டபோது காலம் கடந்த ஒன்றாக இருந்தது. எனினும் அப்படியொரு முடிவு அன்றைய கட்டத்தில் எடுக்கப்படாமல் இருந்திருந்தால் கிழக்கு மாகாணத்தில் ஒரு முள்ளிவாய்க்காலாக படுவான்கரை இருந்திருக்கும். இதன் போது ஏற்பட்ட இடைவெளியில் எழுந்த சுவாசமே கிழக்கிற்கான  தனியான கட்சி ஒன்றின் தோற்றத்திற்கும்,அரசியல் தலைமைத்துவம் ஒன்றுக்கும் வழிவகுத்தது. 

முஸ்லீம் சமூகம் 1950 களில் ஆரம்பித்த பயனீட்டு உபாய அரசியலை 75 ஆண்டுகள் கடந்து கிழக்குமாகாண தமிழர் அரசியல் சிந்தித்திருக்கிறது. ஒரு சமூகத்தில் 75 ஆண்டுகால எதிர்ப்பு அரசியல் ஏற்படுத்திய பின்னடைவை நிவர்த்தி செய்ய இன்னும் எத்தனை காலம்தான் தேவை. அதுவும் இன்றும் யாழ்ப்பாண அரசியல் தலைமைகளின் தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் அலைகளை – எதிர்க் காற்றை  ஊடறுத்து படகை செலுத்த வேண்டியுள்ளது. 

கலாநிதி அமீர் அலி அவர்களின் கட்டுரையில் இருந்து கிழக்கு மாகாண முஸ்லீம்கள் மட்டும் அல்ல தமிழர்களும் கற்றுக் கொள்வதற்கும்,சிந்திப்பதற்கும் நிறையவே  இருக்கிறது.