எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!

எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!

 — கருணாகரன் —

வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ  எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! 

இலங்கையில் இனவாதச் சிந்தனையே அரசிடமும் பெரும்பாலான அரசியல், ஊடகத் தரப்பினரிடத்திலும் உண்டு. இனவாதச்சிந்தனை என்றாலே அது வன்முறையைக்  கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். கூடவே தம்மைப் பற்றிய உச்ச உயர்வுணர்வையும் (superiority complex) அதிக பாதுகாப்புணர்வையும் (sence of supreme security) கொண்டிருப்பதுமாகும். சிலவேளை அதிக தாழ்வுணர்வையும் (inferiority complex) கொண்டிருப்பதுமுண்டு. 

இதனால் எப்போதும் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேணும் என்ற உச்ச உணர்வுடன் – பதற்றத்துடன் எதிர்த்தரப்பின் மீது போரைத் தொடுப்பதற்கான வியூகங்களை வகுப்பதைப்பற்றிய சிந்தனை அதற்குள் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும். இது நேரடியாக ஆயுதம் தாங்கிய போராகத்தான் நடக்கும் என்றில்லை. பல வடிவங்களிலும் ஒடுக்குதலை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக விலக்குவது, விலகுவது, முரட்டுத் தனமாக எதிர்ப்பது, மற்றமைகளை நிராகரிப்பது, எதிர்த்தரப்புக்கு எதிராக அணிதிரள்வது,  மக்களைத் திரட்டுவது, மூர்க்கமாக எதிர்ப்பது, எதையும் சந்தேகிப்பது எனப் பல வகைப்பட்டிருக்கும்.

சிங்களத் தரப்பு தமிழர்கள் மீதும் தமிழர்கள் சிங்களவர் மீதும் கொண்டுள்ள சந்தேகமும் எதிர்ப்புணர்வும் (பகையுணர்வும்) இவ்வாறானதே. இப்படித்தான் முஸ்லிம்கள் மீது தமிழர்களும் சிங்களவர்களும் சிங்களவர், தமிழர் மீது முஸ்லிம்களும் சந்தேகம் கொள்வதும் எதிர்ப்புணர்வுடன் நோக்குவது என இந்த வியாதி தொடர்கிறது. அரசு இதில்  முழுமூச்சாக இயங்குகிறது. போட்டியாக  ஆளையாள் குற்றம் சாட்டிக் கொண்டு இனவாதத்தை எல்லோரும் வளர்க்கின்றனர்.  இதுவே லாபகரமான அரசியலாக்கப்பட்டுள்ளது. குறித்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதுவொரு வரலாற்றுப் பழியாகவே உள்ளது. இதனால் மக்களுக்கு உண்டாகும் அழிவுகள், இழப்புகள், சேதங்கள், பின்னடைவுகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் எந்த நிலையிலும் இனவாதத்தைக் கடந்த – இணக்கத்துக்கான, சமாதானத்துக்கான அரசியலையே இவர்கள் மேற்கொண்டிருப்பர். அதனுடைய நல் விளைவுகள் உருவாகியிருக்கும். 

இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு யார் முன்வரவில்லை? அல்லது ஏன் பின்னிற்கிறார்கள்? தமிழர்களும் முஸ்லிம்களும் சமாதான அரசியலுக்கு முன்வந்தாலும் அரசும் சிங்களத் தரப்பும் அதற்குத் தயாரா? அதற்கான உத்தரவாதம் என்ன? இதை யார், எப்படிக் கண்காணிப்பது? அதற்கான பொறிமுறையும் கால எல்லையும் என்ன? இப்படிச் சில அடிப்படையான கேள்விகளைச் சிலர் எழுப்பக் கூடும். 

இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு இன்னும் இலங்கைத்தீவில் சில சக்திகள் உண்டு. மெய்யாகவே அவை சமத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்றன. ஆனால், அவற்றை உதிரிகளாகவே மக்களும் நோக்குகின்றனர். ஊடகங்களும் வெளியுலகமும் பார்க்கின்ற பார்வை உண்டு. இதற்குக் காரணம், அவை வளரவில்லை. அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. 

இனவாதம் செழித்திருக்கும் ஒரு சூழலில் அதற்கு எதிரான தரப்புகள் வளர்ச்சியடைய முடியாது. அப்படி வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு நீண்ட காலமும் கடுமையான உழைப்பும் தேவை. மிகுந்த சவால்களின் மத்தியில்தான் அவை வேர் விடவும் துளிர் விடவும் முடியும். ஏனென்றால், இனவாதத்தில் திளைத்துப் போயிருக்கும், அதில் முதலிட்டிருக்கும் பிற அரசியற் தரப்புகளும் ஊடகங்களும் பிற அமைப்புகளும் லேசில் இந்த மாற்றுத் தரப்புக்கான இடத்தை அளிக்காது. ஆகவே கல்லிலே துளிர் விடும் சிறு நாற்றுப்போலவே அமைதிக்கான தரப்புகள் முளைத்தெழ வேண்டும். 

ஏற்கனவே இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு முயற்சித்தவர்களை மக்களே தோற்கடித்து விட்டனர். இடதுசாரிய நண்பர்கள் துயரம்தோய்ந்த பகடியாக அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியமுண்டு. “இடதுசாரிகளைத் தோற்கடித்து விட்டு இனவாதிகளை வளர்த்த மக்கள் அதற்கான துயரத்தை அறுவடை செய்கின்றனர்” என. உண்மைதான் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத அரசியலுக்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். நாடும் பொருளாதார ரீதியாகவும் ஜனநாயகம், அமைதி, சுபீட்சம் போன்றவற்றாலும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. 

ஆனாலும் மக்கள் இதில் பட்டறிவைப் பெறுவதற்கும் இதைக் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கும் மாற்று உபாயங்களைத் தேடுவதற்கும் தயாரில்லை. அவர்கள் மலக்குழிக்குள்ளே அமுதத்தைத் தேட முயற்சிக்கிறார்கள். அதற்கேற்றவாறு மலத்திலிருந்து தேனை எடுத்துத் தருவதாக இந்தத் தலைவர்களும் தங்கள் மக்களுக்கு இனிப்பாக வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக மொத்தத்தில் மக்களும் தமது தலைவர்களைப்போல இனவாதத்தில் சிக்கியுள்ளனர். தலைவர்களுக்கேற்ற மக்கள். அல்லது மக்களுக்கேற்ற தலைவர்கள். 

“இனவாதத்தை முறியடிப்பேன், இலங்கைத்தீவில் சமாதானத்தை நிலைநாட்டுவேன்”  என்று தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு எந்தத் தலைவரும் நாட்டில் இல்லை. இதனால் சமாதானத்துக்காக வேலை செய்யக் கூடிய, செயற்படுகின்ற ஒரு பத்துப் பேரைக் கூட இந்த நாட்டில் நம்மால் கண்டு பிடிக்க முடியாலிருக்கிறது. அண்மையில் மேற்குநாட்டுத் தூதுவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கேட்டார் -“போரைச் செய்வதற்காக நீங்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டீர்கள். பல படையணிகளை உருவாக்கினீர்கள். பல உயிர்களைக் கொடுத்தீர்கள். போர் வெற்றிக்காக எவ்வளவோ இழப்புகளின் மத்தியில் நீண்ட காத்திருப்பில் இருந்தீர்கள். அதிலே நீங்கள் எந்த நன்மைகளையும் பெற்றதில்லை. கண்ணீரையும் துயரத்தையும் பகை உணர்வையும் சம்பாதித்ததுதான் மிச்சம். பதிலாக சமாதானத்துக்காக என்ன விலையைக் கொடுத்தீர்கள்? எத்தனைபேர் சமாதானத்துக்காக உங்கள் நாட்டில் உழைக்கிறீர்கள்? உலகத்தில் அமைதியாக, இணக்கமாக, சமாதானமாக வாழ்வதுதானே சிறப்பு?” என்று. 

“நாங்கள் சமாதானத்துக்காக எத்தனை படிகள் கீழே இறங்கினாலும் அரசாங்கம் அதைப் புரிந்து கொள்ள மறுக்கிறதே. அது மேலும் மேலும் சமாதானத்துக்கு எதிராக அல்லவா செயற்படுகிறது? சிங்களப் புத்திஜீவிகள் கூட இதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றார்களே!” என்று பதிலளித்தோம். 

“உலகம் அப்படித்தான் உள்ளது. அதிகாரத் தரப்புகளின் குணவியல்பே அப்படியானதுதான். ஆனால் அரசுக்கு எல்லா மக்களையும் காக்க வேண்டிய பொறுப்புண்டு. அந்த அடிப்படையில் செயற்பட வேண்டிய கடப்பாடுண்டு. அதையே சர்வதேச  நியமங்கள் வலியுறுத்துகின்றன. அதற்கமைய சமாதானத்துக்கான வற்புறுத்தலைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் அனைத்து அரசியற் தரப்புகளுக்கும் உண்டு. அப்படிச் செய்தால் நிச்சயமாகச் சமாதானத்தை எட்ட முடியும்? அதைச் செய்தே ஆக வேண்டும். நீங்கள் சொல்கிற மாதிரி நம்பிக்கையீனமாக  யோசித்தால் உலகம் முழுவதும் இரத்தக்களரியாகத்தானிருக்கும். யதார்த்த உலகம் அப்படி இல்லையே!” என்றார் அவர். 

இதற்கு என்ன பதிலைச் சொல்வது?  

தலையைக் கவிழ்ந்து கொண்டு அமைதியாக இருந்தோம். 

இந்தப் பின்னணியில்தான் சமகால – எதிர்கால அரசியலை நாம் பேசவும் பார்க்கவும் வேண்டியுள்ளது. நம்முன்னே உள்ள யதார்த்தத்தையும் நடைமுறைச் சாத்தியத்தையும் பற்றி நம்முடைய அரசியற் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் மக்களும் சிந்திப்பதேயில்லை. உலகத்தின் மொழியையும் வரலாற்றின் குரலையும் பொருட்படுத்துவதில்லை. 

பகை வளர்ப்பின் மூலம் ஒருபோதுமே தீர்வை எட்ட முடியாது என்ற தெளிவான பட்டறிவு இருந்தாலும் நம்முடைய மனது எதிர்ப்பில், பகைமையில்தான்  திளைக்கிறது. அது ஒரு போதையாகி விட்டது. எதிர்த்தரப்பை அப்படி நோக்கிப் பழகி விட்டோம். ஆனால் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையர்களும், யப்பானும் அமெரிக்காவும் எனப் பல பகையைக் கடந்த உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இதை ஒத்துக் கொள்வதற்கு யாரும் தயாரில்லை. 

இனமுரணை மேலும் மேலும் வளர்த்தால் தீர்வை எட்டவே முடியாது. இனப் பிளவு கூடக் கூட நாடு பலவீனப்படும். இதனால் நாடு அந்நியச் சக்திகளிடம்தான் பறிபோகும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நமக்குள்ளே உடன்பாடு காணவும் அதிகாரங்களைப் பகிரவும் தயாரில்லை என்றால், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பிற சக்திகள் நம்முடைய நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். இலங்கை இந்திய உடன்படிக்கை எதற்காக வந்தது? இனப்பிரச்சினையின் விளைவாகத்தானே. ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாறாக திருகோணமலை எண்ணெய்க்குதங்களை நீண்டகால அடிப்படையில் இந்தியா எடுத்துக் கொண்டது. இப்படித்தான் ஒவ்வொரு நாடும் இலங்கையைக் கூறு போட்டு எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான விலையை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என எல்லோரும் இணைந்தே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஏதாவது  வேறுபட்ட நிலையிலா செலுத்திக் கொண்டிருக்கிறோம்? அல்லது இந்த விலை கொடுப்பில் யாருக்காவது விலக்கிருக்கிறதா?

சிவனின் முதுகில் விழுந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டதைப்போல, இலங்கைத்தீவுக்கு வருகின்ற நெருக்கடிகளும் அழுத்தங்களும் அனைவருடைய தலைகளிலும்தான் சுமையாக ஏறுகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் ஆளாளுக்கு பகைமையை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறோம். இது அந்நியருக்குச் சேவகம் செய்வதாகும். காலனிய ஆட்சிக்கால அடிமைத்தனம் முடிவுக்கு வந்து விட்டதாக நாம் கருதலாம். அது முடியவில்லை. நம்முடைய அறிவீனத்தின் விளைவாக இப்போதும் நாம் அடிமையாகவே இருக்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நம்முடைய உழைப்புச் சுரண்டப்படுவது வேறு. நம்முடைய தாய் மண்ணிலேயே பிறரால் சுரண்டப்படுவதும் அடிமைப்படுத்தப்படுவதும் வேறு. இது மிகக் கொடுமையானது. இதற்குக் காரணமாக நாமே இருப்பது இன்னும் கொடுமையானது. 

இங்கேதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. தம்முடைய சொந்த மக்களுக்குத் துரோகமிழைத்துக் கொண்டு, அந்திய சக்திகளுக்குத் தொண்டு செய்கிறது அரசு. அரசு மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து இனக் கட்சிகளும்தான். இதில் தமிழ், சிங்களச் சமூகத்தினருக்கே கூடுதல் பொறுப்புண்டு. இருதரப்புக்கும் இடையிலான இனமுரண்களே பாதிப்பின்  பெருவிளைவுகளாகும். பின்னர், முஸ்லிம்களிடமும் இந்த வியாதி  தொற்றிக் கொண்டது. 

இனவாதத்தையும் அதனால் உண்டாகும் இனமுரணையும் பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளிற் சிலவும் கூடத் தமது தேவைக்கேற்ப ஊக்குவிக்கின்றன. வளர்க்கின்றன. அதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதேவேளை இனவாதத்திற்கு எதிராக – அமைதித் தீர்வுக்காகச் சில நாடுகள் உண்மையிலேயே  முயற்சிக்கின்றன. நம்மவர்கள் அதிகம் நம்புவதும் தொடர்பில் இருப்பதும் தீர்வுக்கு எதிரான தரப்புகளுடனேயே.

இப்படி ஒரு சிக்கலான நிலைக்குள்ளேதான் இலங்கையின் இனப்பிரச்சினையும் இனங்களின் நிலையும் உள்ளது. 

இந்தக் கசப்பான யதார்த்த வெளியில்தான் இலங்கையர்கள் தமது அரசியலை முன்னெடுத்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். சரியான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருந்தால், நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபட வேண்டும். அதைத் தூக்கியெறிய வேண்டும். 

“இது சாத்தியமா?” என்று சிலர் கேட்கலாம். “அப்படிச் சிந்தித்த இடதுசாரிகளே இனவாதிகளாக மாறிய பிறகு, அதுவும் சிங்கள மேலாதிக்கத்தோடு அவர்கள் இணைந்த பிறகு எப்படி, எதில் நம்பிக்கை வைத்து நம்மால் செயற்பட முடியும்? மேலும் சமாதானத்துக்கான முயற்சியும் விட்டுக் கொடுப்பும் அதிகாரமற்ற சிறுபான்மைத் தரப்பிலிருந்து ஒரு எல்லைக்கு மேல் செய்யப்படுமாக இருந்தால், அதைப் பலவீனமாகக் கருதிக் கொண்டு, அரசு மேலாதிக்கம் செய்து விடும். இப்பொழுது அது தமிழர்களின் நிலப்பகுதியை – பிரதேசங்களை – சிங்கள மயமாக்கி வருகிறது. ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. படையை ஆதிக்க முனையாக தமிழரின் நிலத்திலேயே நிறுத்தியுள்ளதே!  இந்த நிலையில் எப்படிச் சமாதானத்தை முன்னெடுப்பது?” என்று  பல கேள்விகளை அடுக்கலாம். 

இனவாத அரசு, ஒடுக்குமுறை இயந்திரம் வேறு எப்படி இருக்கும்? வேறு எப்படி இயங்கும்? முதலாளிகள் தங்களுடைய லாபங்களை எல்லாம் தொழிலாளிகளுக்காக விட்டுக் கொடுத்து விடுவார்களா? வேண்டுமானால் சில சலுகைகளைச் செய்து கொள்வார்கள். அதற்குமேல் எதுவுமே இல்லை. இங்கேதான், நம்முடைய வலிமையான – உறுதியான நிலைப்பாடும் போராட்டமும் தேவை. நாம் எந்த நிலையிலும் ஐக்கியத்தை, சமாதானத்தை, நீதியை, உரிமையை, அதிகாரப் பகிர்வை, அமைதித்தீர்வையே விரும்புகிறோம். எந்த நிலையிலும் நமக்குச் சமாதானமே வேண்டும் என்று உறுதியாக – விடாப்பிடியாக நிற்க வேண்டும். இதுதான் உலக மொழி. அகிம்சையின் வழி. 

இந்த வார்த்தைகளைப் படித்துப் பலரும் சிரிக்கக் கூடும். சிலர் பரிகசிக்கலாம். அல்லது இதொரு மோசமான கற்பனை என்று உதாசீனப்படுத்தலாம். ஆனால், இறுதியிலும் இறுதியாக இந்த இடத்துக்கே வந்து சேர வேண்டும். ஏனென்றால், இலங்கைத்தீவில் பிரிவினையை எந்தச் சக்தியும் ஒருபோதுமே ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை, ஆதரிக்கப்போவதுமில்லை. அந்தச் சூழலே மாறி விட்டது. இப்போது உலகம் விரும்புவதும் வலியுறுத்துவதும் அமைதியையும் சமாதானத்தையுமே. அதற்காகவே அமெரிக்கா தொடக்கம் நோர்வே, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா தொடக்கம் அனைத்து நாடுகளும் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு (போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட) உதவுகின்றன. சமாதானத்துக்காகவும் பகை மறப்புக்காகவும் பல செயலணிகளை உருவாக்குவதற்கு நிதிப்பங்களிப்பையும் அறிவுசார் செயலாக்கப்பகிர்வையும் செய்கின்றன.  

ஒரு காலம் போருக்கு உதவியவை இதில் உள்ள சில நாடுகள். இப்பொழுது சமாதானத்துக்குப் பங்களிக்கின்றன. இதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. 

ஏற்றுக் கொள்ள மறுத்தால், இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று அவர்கள் சொல்ல வேண்டும்.