சொல்லித்தான் ஆக வேண்டும்! (சொல்-03)

சொல்லித்தான் ஆக வேண்டும்! (சொல்-03)

(‘அரங்கம்’அரசியல் பத்தித்தொடர்.)

   — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

முகநூல் குறிப்புக்கான பதில்:

‘சொல்லித்தான் ஆக வேண்டும்’ எனும் அரசியல் பத்தித் தொடரின் முதலாவது பத்தி (சொல்-01, அரங்கம் 22.04.2024) குறித்து ஆனந்த்தா என்பவர் தனது முகநூலில்,

” ‘புலிநீக்க’ அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானதல்ல. எனவே புலி நீக்க அரசியல் என்பதைத் தமிழ்த் தேசிய நீக்க அரசியல் என்று தவறாக பொருள் கொள்ள கூடாது” என்று சொல்லிக்கொண்டே கட்டுரையாளர் சொல்வதெல்லாம் தமிழ்த் தேசிய நீக்க அரசியலே. அவர் அதை புரிந்து செய்கிறாரா? அல்லது புரியாமல் செய்கிறாரா என்பதில் தங்கி உள்ளது அவருடைய அரசியல் நிலைப்பாடு.

பிரச்சினையைப் புரிந்து கொள்ள இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் சென்று பார்க்க வேண்டும். இதற்கு முன்னதாகத் திம்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதில் எல்லாத் தமிழ் இயக்கங்களும் இணைந்து ஒருமித்த சில கோரிக்கைகளை முன் வைத்தன. அதற்கு என்ன நடந்தது என்ற கேள்வியை கட்டுரையாளர் எழுப்பிப் பார்த்திருந்தால் இப்படிக் கோளாறான முடிவுக்கு அவர் வந்திருக்கமாட்டார். இப்போதும் அவர் அந்தக் கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். அவ்வாறு எழுப்பினால் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான நிலையில் அவர் போய் நிற்க மாட்டார். செய்வாரா?” என்று பதிவிட்டுள்ளார்…..

இம் முகநூல் பதிவிற்கான எனது பதில் வருமாறு.

முதலில் ஆனந்த்தா அவர்களின் பின்னூட்டலுக்கு எனது நன்றிகள்.

1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப் பெற்ற இனக்கலவரத்தின்போது இந்தியாவின் நேரடித் தலையீடு- இந்திய அமைச்சர் நரசிம்மராவ் மற்றும் தூதுவர் பார்த்த சாரதி ஆகியோரின் இலங்கை வருகை-இணைப்பு ‘சி’ எனும் ஆவணம்- இந்தியாவின் அனுசரணை அல்லது மத்தியஸ்த்தத்துடனான திம்புப் பேச்சு வார்த்தை ஆகியவற்றின் நீட்சிதான் 1987இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தமாகும்.

இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்தமை அல்லது அனுசரித்துப் போகாமை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த சரியான அரசியல் செயற்பாடென்றா ஆனந்த்தா கருதுகிறார்?

மேலும், ஆனந்த்தா தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதுபோல் ‘ எல்லாத் தமிழ் இயக்கங்களும் இணைந்து (திம்புப் பேச்சுவார்த்தையில்-1985) ஒருமித்த சில கோரிக்கைகளை முன்வைத்த பின்னர்தானே 1986இல் ‘ரெலோ’ இயக்கத்தைப் புலிகள் தடை செய்து தாக்குதல்கள் மேற்கொண்டதும் தொடர்ந்து ஏனைய இயக்கங்களையும் அழிக்க முற்பட்டதும்.

திம்புப் பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட அந்த ‘ஒருமித்த’ ஒற்றுமையைத் தொடர விடாமல் அதற்கு ஊறு விளைவித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தானே.

இந்த ஒற்றுமைச் சிதைவுதானே தமிழ்த் தேசிய இனத்தை இன்றும் கூட அரித்துத் தின்று கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழ்த் தேசியத் தரப்பு (தமிழீழ விடுதலை புலிகள்) 1987-இல் இந்தியாவைப் பகைத்துக் கொண்டதுதானே இலங்கைத் தமிழர்களை 2009 முள்ளிவாய்க்கால் அழிவுவரை இட்டுச் சென்றது.

தமிழர் தரப்பு (தமிழ்த் தேசிய) அரசியலிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆரோக்கியமான அறிவு பூர்வமான விமர்சனங்களை முன் வைப்பவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று கற்பிதம் செய்யும் ஒரு மன நோய் தமிழ்ச் சமூகத்தைப் பீடித்திருக்கிறது. அத்தகைய நோய்க்குத்தான் ஆனந்த்தா அவர்களும் வாய்ப்பட்டிருக்கிறாரென்பதையே அவரது இம் முகநூற் பதிவு காட்டுகிறது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ‘பாசிச’ச் சிந்தனை வேறு. தமிழ்த் தேசிய அரசியல் செல்நெறி வேறு. இந்த வேறுபாட்டைத் தமிழ்ச் சமூகம் புரிந்து கொண்டு தெளிவடைவதுதான் தமிழ்த் தேசிய அரசியல் காலத்துக்கேற்பச் சரியான பொருத்தமான தடத்தில் மீண்டும் கால் பதிப்பதற்கான ஆரம்பமாகும்.