— ராகவன் —
(குறிப்பு : இந்தக்கட்டுரை 1 ஜுன் 2009 இல் ஹிமால் சஞ்சிகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எனது கட்டுரையின் மொழி பெயர்ப்பு. பிரபாகரனின் மரணத்தை நினைவுகூர்ந்து வந்த முதல் கட்டுரை இது எனச் சொல்லாம். பிரபாகரனுடனும் விடுதலைப்புலிகள்அமைப்புடனும் தீவிர அரசியல் வேறுபாடுகள் கொண்டிருப்பினும், பதின்மவயதுகளில்ஒன்றாக பழகி, மிக கடினமான காலப்பகுதிகளில் ஒன்றாக பயணித்த நினைவுகள் மட்டுமல்ல, பிரபாகரனுடன் நட்பாக பழகிய காலகட்டங்களும் நினைவில் இருப்பவை.பிரபாகரன் இறந்து 14 வருடங்களுக்கு மேல் சென்றிருப்பினும், இலங்கை வாழ் தமிழ்தேசியவாதிகளும் , புலம் பெயர் தமிழ்தேசியவாதிகளும் அவருக்கு ஒரு அஞ்சலியைக்கூட செலுத்த முன்வராத அபத்தமும் அரசியல் வங்குரோத்தும் சூழ்ந்திருக்கும் காலகட்டம் இது. இப்போ புலம்பெயர்ந்த அமைப்புகளை சேர்ந்த சிலர் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முன்வந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே காலப்பொருத்தம் கருதி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.)
“ஆயுதம் ஏந்துபவர்கள் அதீத அதிகாரத்தைப் பெறுகிறார்கள், இந்த அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது தவிர்க்க முடியாமல் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் என்று நாம் நம்புகிறோம்.”
– பிரபாகரன், என்.ராமுடனான நேர்காணலிலிருந்து.. 1986.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதியுயர் தலைவரும், தளபதியுமான வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் முழு தலைமையும் இலங்கை இராணுவத்தால் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் 1970 களில் ஒரு கெரில்லா அமைப்பாக ஆரம்பித்தது; அதன் பாரிய வளர்ச்சிப்போக்கில், அது ஒரு பரந்த நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்ல தரைப்படை , கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் கொண்ட ஒரு மரபு வழி இராணுவத்தையும் உருவாக்கியது. இந்த அமைப்பு இலங்கை இராணுவத்திற்கு எதிரான பல போர்களை வென்றது, இலங்கையில் செயல்பட்ட அனைத்து தமிழ் அமைப்புகளையும் நசுக்கியது, அத்துடன் அது ஒரு கொடூரமான, மிகுந்த கட்டுப்பாடு கொண்ட, வெல்லப்படமுடியா அமைப்பாக பரிணமித்தது. எனினும் இறுதிக்காலங்களில் அவர்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற மாயை நொறுங்கத் தொடங்கியது, இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்கள் ஒரு சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டு இலங்கை ராணுவத்தால் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டனர்.
1976 இல் விடுதலைப்புலிகள் உருவாக்கப்பட்டதிலிருந்து, 27,000 க்கும் மேற்பட்ட அவர்களது உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொடூரமான யுத்தத்தின் விளைவாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததோடு இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களால் பல பொதுமக்கள் அங்கவீனமுற்றனர். விடுதலைப் புலிகளின் தற்கொலை அரசியல், இராணுவவாதம், விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளாமை ஆகியவற்றுக்காக நான் புலிகளின் தலைமைத்துவத்தை விமர்சித்த போதும் இலங்கை அரசு சிறுபான்மையினங்களின் ஜனநாயக உரிமைகளைஅசட்டை செய்து அவர்களை இலங்கை அரசியல் பரப்பில் உள்வாங்கத் தவறியதே பிரச்சினையின் மூல காரணம் என நம்புகிறேன். இலங்கையின் பேரினவாத அரசியல் பரப்பின் உப விளைபொருளே விடுதலைப் புலிகள். எனினும் விடுதலைப்புலிகளின் இயங்கியல் வளர்ச்சிப்போக்கு அதனை ஒரு சர்வாதிகார கட்டமைப்பாக்கியதும் யதார்த்தமே. தலைவருக்கு விசுவாசமாக இருப்பது முதன்மையான முன்நிபந்தனையாக இருந்தது. இவ்வகையில் தலைவரிடமிருந்து அமைப்பை வேறுபடுத்தமுடியா நிலை உருவாகியது.
பிரபாகரன் இயற்கையிலேயே தீய குணங்கள் கொண்ட கொலைகாரன் என்ற விம்பம் தவறானது. மாறாக , சமூக, அரசியல் நிலைமைகளே இந்த நிலையை உருவாக்கியது. இந்தப்பரிணாம வளர்ச்சிப்போக்கில் பிரபாகரன் அதிகாரப்படி நிலை கொண்ட இயக்கத்தின் தனித்தலைவரானார். . அவரது ஆளுமை கொண்ட தலைமைப்பண்பு அவரை பின்னர் கடவுளாக்கியது. இது அவரது ஆளுமைக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தது. அனைத்து தமிழ் மக்களையும் கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த வடிவம் தானே என்றும், தனது உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாதவர்களைத் தண்டிக்கவோ கொல்லவோ தனக்கு உரிமை உண்டு என்றும் அவர் நம்பத் தொடங்கினார். சரி -தவறு, நல்லது- கெட்டது என்பதை தீர்மானிக்கும் உரிமை தனக்குரித்தானது என அவர் எண்ணினார். தமிழ் தேசத்தை விடுவிக்கும் மீட்பனாக தன்னை உருவகப்படுத்திக்கொண்டார். . தேசம் விடுதலை அடைவதை அவரது தனிப்பெரும் கடமையாக எண்ணினார் . இவ்வகையில் தனது வழிமுறைகளை எதிர்த்த அனைவரும் அழிக்கப்பட வேண்டும் என அவர் தீர்மானித்தார். இந்த மனநிலைதான் தொடர்ந்த விட்டுக்கொடா யுத்ததுக்கு வழிவகுத்து மக்களின் சொல்லொணாத் துயரங்களிற்கும் பேரிழப்புகளுக்கும் வழிவகுத்தது எனலாம்.
புதிய தமிழ் புலிகள்:
=============
1974 ம் ஆண்டு, அப்போது எனக்கு 18 வயது. ஒரு யாழ்ப்பாணத் தமிழ் மத்தியதர வர்க்க இளைஞன் மற்றும் முதிர்ச்சியற்ற இலட்சியவாதி என்ற வகையில், நான் தமிழ் தேசிய சித்தாந்தம் மற்றும் ஆயுதப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டேன், இந்த அணுகுமுறையில் ஏற்கனவே உறுதியாக இருந்த ஒரு சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. ஒரு நாள், செட்டி என்ற தேடப்படும் ஒருவருடன் ஒரு உயரம் குறைந்த இளைஞன் என்னைப் பார்க்க வந்தார், செட்டி அவரை “தம்பி” என்று சுருக்கமாக அறிமுகப்படுத்தினார், தம்பி என அழைக்கப்பட்டவர்தான் பிரபாகரன். . அதுதான் பிரபாகரனுடனான எனது முதல் சந்திப்பு. கொஞ்ச காலம் நான் தம்பியை சந்திக்கவில்லை. அதற்குள் செட்டி போலீசாரால் பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
1975 ஜூலை 27 இல் யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். துரையப்பா, தமிழ் அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியால் தமிழர் நலன்களுக்கு எதிரான துரோகியாக சித்தரிக்கப்பட்டார் ஏனெனில் துரையப்பா இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளராக செயல்பட்டார். துரையப்பா பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்டார் என்று பிரபாகரனை சந்தித்த பின்னர் அறிந்தேன். அப்போது, ஒரு ‘துரோகி’ ஒழிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தின் பின்னர், 1975 ஓகஸ்ட் வாக்கில், பிரபாகரன் எனது கிராமத்தில் உள்ள எனது பாட்டி வீட்டிற்கு வந்தார். (என் பாட்டி என் மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததால் நான் வழக்கமாக அவர் வீட்டில்தான் தங்குவேன்.) அப்போது, அவர் ‘தேடப்படுபவர்’ என்பது எனக்குத் தெரியும், ஆனால் பிரபாகரன் எனது பாட்டி வீட்டில் சிறிது காலம் தங்க விரும்புவதாகக் கூறினார். எந்த தயக்கமும் இல்லாமல் சரி என்றேன்.
அந்த நேரத்தில் நான் பாடசாலை மாணவன். அதேவேளை, சில மாணவர்கள் என்னிடம் கல்வி கற்க வருவர். அதனால் பிரபாகரனை என்னிடம் கற்க வந்தவர் என்ற காரணத்தைக்காட்டி என் பாட்டி வீட்டில் தங்கவைத்தேன். என் தந்தை மிகவும் கண்டிப்பான மனிதர், மற்ற மாணவர்கள் பாடம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது, இந்த இளைஞன் தொடர்ந்து என் பாட்டி வீட்டில் தங்கியிருப்பதை அவர் கவனித்தார். எனக்கு போலீசை விட அப்பாவுக்குத்தான் பயம். ஒரு நாள் என்னை அழைத்து இந்தப் பையன் ஏன் அங்கே தங்கியிருக்கிறான் என்று கேட்டார்.. அவரது பெற்றோருடன் அவருக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக நான் அவரிடம் பொய் சொன்னேன், அதற்கு அவர் பதிலளித்தார்: “நீ அவரை தங்க அனுமதிக்கக்கூடாது, ஏனெனில் அது அந்த பையனின் நலனுக்கு உகந்ததல்ல. நான் அவனை சமாதானப்படுத்தி அவனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார். என் தந்தையிடம் அவர் தேடப்படும் நபர் என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. எனவே தந்தையிட,ம் உண்மையை சொன்னேன். நான் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த எனது தந்தை, தேடப்படும் நபராக இருந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். அந்த இளைஞர் ஒரு விடுதலைப் போராளி என்றும் தமிழர் நலனுக்காகப் போராடுபவர் என்றும் நான் விளக்கினேன். அத்துடன் எனக்கு திடீரென்று எங்கிருந்தோ ஒரு தைரியம் வந்தது. என் தந்தையிடம் பின்வருமாறு கூறினேன், “ஒரு நாள் இதே நிலை உங்கள் மகனுக்கும் ஏற்படலாம், அப்போ உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?”
என் வாதத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர தந்தைக்கு வேறு வழியிருக்கவில்லை. மௌனமாகச் சென்றுவிட்டார். பிரபாகரனுடனும் அப்போது தமிழ் புதிய புலிகள் என்று அழைக்கப்பட்ட சில உறுப்பினர்களுடனும் எனது தொடர்பின் ஆரம்பம் இதுவே. 1976 மே 5 இல் அது தமிழீழ விடுதலைப் புலிகள் என மாற்றப்பட்டது.
பிரபாகரனின் அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அவர் எப்பொழுதும் செயல்பாடு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் மிக நுணுக்கமான திட்டமிடுபவர், திறமையான ஒழுங்கமைப்பாளர் மற்றும் ஒரு கச்சிதவாதி. அவர் தனது பாதுகாப்பிலும் மற்றவர்களின் பாதுகாப்பிலும் மிகவும் கவனமாக இருந்தார். அவருக்கு முறையான கல்வி பெரிதாக இல்லாதிருப்பினும் (அவர் இரண்டு முயற்சிகளில் க.பொ.த பரீட்சையில் தோல்வியடைந்தார்) அவரது அறிவு மிகவும் பரந்த அளவில் இருந்தது.
பகத்சிங் மற்றும் நேதாஜி போன்ற இந்திய விடுதலைப் போராளிகளின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, நாம் எப்படி ஒரு தலைமறைவு வலைப்பின்னலை உருவாக்குவது என்று அவர் மணிக்கணக்கில் பேசுவார். ஆயுதப் போராட்டம் ஒன்றே முன்னோக்கிய வழி என்றும், அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறுவார். கிழக்கிந்திய கம்பெனியில் குமாஸ்தாவாக வந்த கேப்டன் கிளைவ் எவ்வாறு பிரிட்டிஷ் ராணுவத்தை இந்தியாவில் வழிநட த்தினார் என விதந்துரைப்பார். ஐரிஷ் போராட்டம் பற்றியும் பேசுவார். தமிழ் மன்னர்கள் மற்றும் தமிழ் போர் வீரர்களின் வீரத்தை போற்றும் தமிழ்வரலாற்று நாவல்களின் மீதும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் இஸ்ரேலைப் பற்றியும், யூதர்கள் எவ்வாறு ஒரு சக்திவாய்ந்த நாட்டை உருவாக்க முடிந்தது என்பதைப் பற்றியும் பேசுவார்.
இவ்வாறான விடயங்களைப் பற்றி அவர் பேசும்போது, தமிழர்களுக்கென ஒரு தாயகம் இல்லாததால் நாங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டோம் என்பார். நமது கடமை போராடி எமது நாட்டை உருவாக்குவது. இந்த காரணத்திற்காக நாம் குடும்ப உறவுகளை துறக்க வேண்டும், காதல் விவகாரங்கள் அல்லது திருமணத்தில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் கூறினார். இந்த ஆசைகள் அனைத்தும் இலட்சியத்திற்கு தடையாக இருக்கும் என்றார் பிரபாகரன்.
நாட்டுக்காகப் போராட நீங்கள் தயாராக இருந்தால், உங்களிடம் முழுமையான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும், காதல் போன்ற மனித ஆசைகள் எமது போராட்டத்தை பலவீனப்படுத்தும் என அவர் கூறுவார்.
சில வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ஒரு ஆங்கிலப் படம் ( operation daybreak) பார்க்கச் சென்றோம். அது இரண்டாம் உலகப் போரை வைத்து எடுக்கப்பட்ட கதை ஒன்று , படம் ஒடிக்கொண்டிருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவை ஆக்கிரமித்த நாஜிகளின் ஒரு முக்கிய தளபதியை கொலை செய்ய திட்டமிடுதலே கதைக்கரு. ஒரு செக் குடும்பம் இந்த திட்டத்தை நிறைவேற்ற வந்த இளைஞர்களுக்கு மறைவிடத்தை வழங்கியது. தளபதி கொலை செய்யப்பட்டபின், நாஜிக்கள் பெரும் தேடுதல் வேட்டையை நிகழ்த்தினர். மறைவிடத்தை வழங்கிய குடும்பத்தில் திருமணமாகி இருந்த ஒருவர், அச்சம் காரணமாக நாஜிகளிடம் சென்று தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கினால் கொலையில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவலை தரச்சம்மதிக்கிறார். அக்கணம் பிரபாகரன் என் பக்கம் திரும்பி, ” இப்போ விளங்க்குதா ஏன் குடும்ப வாழ்க்கை இயக்கத்துக்கு பொருந்தாது என்று வலியுறுத்தினேன்” என்றார்.
சித்தாந்தமும் சந்தேக மனப்பிரேமையும் :
=====================
பிரபாகரனின் நேரம் தவறாமை மிக கச்சிதமானது. . அதற்கு பாதுகாப்பு நிமித்தமான தேவையும் இருந்தது என்பேன். ஒருவரை சந்திக்க குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் குறித்த இடத்துக்கு வரவில்லை என்றால், பிரபாகரன் அவ்விடத்தில் கணமேனும் காத்திருக்க மாட்டார். எனெனில் நேர தாமதம் ஆபத்தின் சமிக்ஞை என்பது அவரின் முடிபு. ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது பேருந்து நிறுத்தத்திற்கு ஒருவரைச் சந்திக்க அழைத்தால் பிரபாகரன் அந்தப்புள்ளியில் நிற்கமாட்டார்; மாறாக , வரச்சொன்னவரை யாராவது பின்தொடர்ந்தார்களா என்று அவதானிக்கும் நோக்கில் அவர் சிறிது தூரத்தில் காத்திருப்பார். அவருக்கு எள்ளளவு சந்தேகம் வரின் உடனே அவ்விடத்தை விட்டு சென்றுவிடுவார். இந்த பாதுகாப்பு உணர்வு அவரை 36 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறை, இராணுவம் மற்றும் பிற ஆபத்துகளிடமிருந்து பாதுகாத்தது. அவர் 1972ம் ஆண்டிலே அரசால் தேடப்படும் பட்டியலில் இருந்தார். அக்கணத்திலேயே அவர் தனது பள்ளி அடையாள அட்டையைத் தவிர தனது அனைத்து புகைப்படங்களையும் அழித்தார்; 1982 வரை அவர் யாரையும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
அவர் தன்னைப் பற்றிய எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்ல மாட்டார்; வேறொரு உறுப்பினரிடமிருந்து கடிதம் வந்தால், அவர் கடிதத்தைப் படித்து பின்னர் எரிப்பார். அரசபடைகளால் கைது செய்யப்பட்ட பலரின் கைதுக்கு முக்கிய காரணம் அவர்களிடம் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கையின்மையே என்பதை அவர் கற்றுக்கொண்டார், இந்த அனுபவத்தின் வெளிச்சத்தில் தன்னைக்காத்து உயிர்வாழும் திறனை அவர் கற்றுக்கொண்டார் என நான் நம்புகிறேன்.
பிரபாகரனின் சித்தாந்தம் பகவத் கீதை, இந்திய தேசியப் போராட்டம், பண்டைய தமிழ் இராச்சியங்களின் வரலாறு, இஸ்ரேலிய அரசின் உருவாக்கம் மற்றும் அடால்ப் ஹிட்லரின் சர்வாதிகாரம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஒரு கலவை. ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்பதே அவரது தாரக மந்திரம். ஆன்மா அழிவற்றது, ஆனால் ஸ்தூல உடல் நிரந்தரமற்றது என்று அவர் நம்பினார். போர்க்களத்தில் எந்த ‘மரணமும்’ உடலைப் பிரித்தெடுப்பதை மட்டுமே உள்ளடக்கியிருக்கும், அதேவேளை ஆன்மா நித்தியமானது.. தீமைக்கு எதிராக போராடுவதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், எதிரிகளை கொல்வது அவசியம் என அவர் நம்பினார்.
1976ல் ஒரு சந்தர்ப்பத்தில், பிரபாகரனும் இன்னுமொரு புலி உறுப்பினரும் தமிழ் இளைஞர்களை உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பொலிஸ் புலனாய்வு அதிகாரியை சுட்டுக் கொலை செய்தனர். அக்கொலைக்குப் பின், பிரபாகரன் தனது மறைவிடங்களில் ஒன்றிற்கு சைக்கிளில் சென்றார், அங்கு சென்ற போது, தற்செயலாக, கர்ணன் என்ற தமிழ் திரைப்படத்தின் ‘மரணத்தை எண்ணிக்கலங்கிடும் விஜயா, என்ற பாடல் வானொலியில் ஒலிபரப்பானது. இந்த பாடல் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான உரையாடலைப் பற்றியது, இது தர்மத்தின் முதன்மையையும் எதிரியைக் கொல்லும் கடமையையும் விளக்கியது. இந்த பாடலைக்கேட்டு பிரபாகரன் உணர்ச்சி அடைந்து தனது செயல்களின் நியாயப்பாட்டை பாடல் சரியான தருணத்தில் உணர்த்தியதாக நம்ப்பினார்.
தமிழர் நலன் காக்க ஒற்றை அமைப்பின் பின்னால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பிரிந்திருந்த காரணத்தாலே தமிழர்களின் பண்டைய அரசுகள் அழிந்தன என்பது அவரது நியாயப்படுத்தல். எனவே அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டு ஒரே அமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என்று அவர் நம்பினார். டார்வினின் ‘தக்கன பிழைக்கும்’ என்ற கோட்பாட்டை முன்னெடுத்து, மற்ற அமைப்புகள் வலிமையாக வர ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என நம்பினார்.
1970 களின் பிற்பகுதியில், விடுதலைப்புலிகள் 15 முதல் 20 இளைஞர்கள் கொண்ட மிகச்சிறிய அமைப்பு. இக்காலகட்டத்தில், பிரபாகரன் முடிவுகள் எடுப்பதிலும் அமைப்பை ஒழுங்கமைப்பதிலும் மிகுந்த செல்வாக்கு செலுத்தினார். ஒரு மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அவரே தொடர்ந்து ஆளுமை கொண்ட தலைவராக இருந்தார், அவரது ஒப்புதல் இல்லாமல், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அக்கால கட்டத்தில் அவர் ஒருமுழுமையான சர்வாதிகாரியாக இல்லை எனினும் அவரது அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் காரணமாக, மற்றவர்கள் தவிர்க்க முடியாமல் அவரது ஒப்புதலை வேண்டினர்.
அக்காலகட்ட த்தில், அவர் அமைப்பின் உறுப்பினர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டிருந்தார், அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டார் என்பதையும் நான் நினைவில் கொள்கிறேன். யாராவது நோயுற்றிருந்தால், அந்த நபர் சரியாகக் கவனிக்கப்படுகிறாரா என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொள்வார், நோயுற்ற ஓர் உறுப்பினரை யாராவது புறக்கணித்தால் அவர் கோபமடைவார். எனினும், அவர் கவனித்துக்கொண்ட அதே நபர் எதிர்காலத்தில் எல்லை மீறினால், அவரைக் கொல்லவும் அவர் தயங்க மாட்டார்.
ஆரம்ப நாட்களில், விடுதலைப்புலிகள் அமைப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மீதும் தேசத்துரோகிகளாக சித்தரிக்கப்பட்டவர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியது. நாங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்தோம், அந்தப் பணத்தை ஆயுதங்கள் வாங்கவும், முகாம்களை அமைக்கவும் பயன்படுத்தினோம். ஒரு உறுப்பினர் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் கணக்கிடப்பட்டது. பிரபாகரன் உட்பட அனைவரும் தனது செலவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். செலவுகள் விஷயத்தில் கண்டிப்பான சமத்துவம் பேணப்பட்டது. முகாம்களில் சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் ஒன்றுதான்.. எவ்வாறாயினும், ஒரு விஷயத்தில், இந்த சமத்துவம் பராமரிக்கப்படவில்லை: அது தோட்டாக்கள் ஒதுக்கீடு. பிரபாகரன் சுடும் பயிற்சியின் போது நிறைய தோட்டாக்களை பயன்படுத்தினார். , ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சிலவற்றை மட்டுமே ஒதுக்கினார். அவர் போலீசாரால் தேடப்படுபவர் எனும் காரணத்தால் மற்றவர்களை விட அவர் அதிகமாக சுட்டுப்பழகவேண்டியிருந்தது என்பது அவரது நியாயப்படுத்தல். அவர் எப்போதும் ஒரு ஸ்மித் & வெஸ்ஸன் .38 ரிவால்வரை வைத்திருந்தார்; அது அவரது செல்லப்பிள்ளை. இதைத் தவிர, அந்த நேரத்தில் எங்களிடம் வேறு சில ஆயுதங்களும் இருந்தன, சில ஷாட்கன்கள் மற்றும் மூன்று அல்லது நான்கு ரிவால்வர்கள் மட்டுமே அப்போ இருந்த ஸ்டாக். பிரபாகரன் ஆயுதங்களை புனிதப் பொருட்களாகக் கருதுவார் – ஒவ்வொரு நாளும் அவற்றை சுத்தம் செய்து எண்ணெய் விட்டு தயார் படுத்துவார்.. மேலும் அவை ஒழுங்காக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துவார்.
பிரபாகரன் ஒரு தூய்மைவாதி . விடுதலைப்புலிகள் அமைப்பு புனிதமானது என்று நம்பினார். அதன் விதிகளை மீறியவர்கள் தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்டனர், எனவே விதிகளை மீறியவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் – அல்லது கொல்லப்பட வேண்டும் என்பதே அவரது சித்தாந்தம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக 70 களில் நியமிக்கப்பட்ட உமாமகேஸ்வரன் ஒரு பெண் போராளியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது, ஆத்திரமடைந்த பிரபாகரன், அவர்கள் இருவரும் அமைப்பின் புனிதத்தை கெடுத்ததாக குற்றம் சுமத்தினார். இதனால் அவர்கள் இருவரும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தனி நபர் தலைமை:
=============
1980 ஆம் ஆண்டில் இயக்கத்துள் பிரபாகரனின் சர்வாதிகாரப்போக்கு பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. பெரும்பாலான உறுப்பினர்கள் பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என குற்றம் சுமத்தினர். குறிப்பாக இரண்டு விடுதலைப்புலிகள் போராளிகளின் உட் கொலையில் அவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதால், அமைப்பில் பிளவு ஏற்பட்டது. அவரை விமர்சித்தவர்கள் அவரை மத்திய குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்றும், ஜனநாயக கோட்பாடுகளுடன் அமைப்பு சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் கூறினர். தூய இராணுவவாதம் ஏற்புடையதல்ல; பிரபாகரனின் வழிமுறைகள் தவறானவை; விடுதலைப்புலிகள் மக்கள்அமைப்பாக மாறவேண்டும் என அவர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர். இந்த விமர்சனத்தால் மனம் புண்பட்ட பிரபாகரன், தன்னிடம் எந்த தவறும் கிடையாதென்றார். இதன் விளைவாக, அமைப்பு இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டது, பின்னர் வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (PLOTE) நிறுவினர்.
இந்த சம்பவங்களால் மிகவும் கோபமும் ஏமாற்றமும் அடைந்த பிரபாகரன், வெளியேறியவர்கள் தன்னை முதுகில் குத்தியதாக குற்றம் சாட்டினார். ஒரு மத்திய குழுவை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், அதற்கு பதிலாக அமைப்பின் தனிப்பெரும் தலைவராக இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். நான் உட்பட பல உறுப்பினர்கள் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்துவிட்டோம், இதனால் அவர்விடுதலைப்புலிகளிலிருந்து வெளியேற முடிவு செய்தார்.
நாங்கள் அவரை அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வற்புறுத்தினோம், ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார், தனித் தலைமையைத் தவிர வேறு எதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறினார். அதன்பிறகு, அவர் தனது மாமாவின் வீட்டில் தங்கினார், அங்கு அவர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) என்று அழைக்கப்படும் மற்றொரு போராளிக் குழுவின் இரண்டு தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணியை சந்தித்தார். (இவர்கள் இருவரும் பின்னர் 1983 ஜூலையில் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையில் படுகொலை செய்யப்பட்டனர்.)
இருவரும் பிரபாகரனின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு அவரை நன்கு தெரியும். அவர்களுடன் கலந்தாலோசித்த பின் பிரபாகரன் தங்கத்துரையின் தலைமையின் கீழ் பணி புரிய ஒப்புக்கொண்டார், சிறிது காலத்தின் பின்னர் அவர் மற்றும் சில விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
1981 ஆம் ஆண்டில் குட்டிமணியும் தங்கத்துரையும் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட சிறுகாலப்பகுதியின் பின்னர், பிரபாகரன் டெலோவிலிருந்து பிரிந்து விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்து தன்னை தனிப்பெரும் தலைவராக உறுதிப்படுத்தினார். பன்மைத்துவத்தையும், மாற்றுக்கருத்தையும் ஏற்க மறுத்த அவர், இலட்சியத்திற்கு அவை ஒரு தடையென நம்பினார். எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்று அவர் இரக்கமின்றி உத்தரவிட்டார், தனக்கு விசுவாசமானவர்களையே அவர் அமைப்பில் முன்னிறுத்தினார் அவர்கள் எந்த கேள்வியும் தயக்கமும் இல்லாமல் அவரது உத்தரவுகளை நிறைவேற்றினர்.
குட்டிமணியும் தங்கத்துரையும் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி, பாதுகாப்புப் படையினருக்கு முக்கிய தகவல்களை சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, பிரபாகரன் தற்கொலை சயனைடு பொட்டலத்தை அறிமுகப்படுத்தினார், இது புலிகளின் அர்ப்பணிப்பின் அடையாளமாக மாறியது.
1983 ஜூலை கலவரங்களின் தாக்கத்தால் அதுவரை சிறிய அமைப்புகளாயிருந்த விடுதலைப்புலிகள் உட்பட பல்வேறு தமிழ் போராளிக் குழுக்கள் பெரிதாக முளைத்தன. இந்திய அரசு விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆதரவும் வழங்கியது. 1980 களின் பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக விடுதலைப் புலிகளை விட்டு ஒதுங்கி இருந்த நான், 83 கலவரத்தின் தாக்கத்தால் மீண்டும் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். ஆனாலும், விடுதலைப் புலிகளின் உட்கட்டமைப்பின் ஒடுக்குமுறை சகிக்க முடியாக் காரணத்தால் 1984 இல் நான்அமைப்பில் இருந்து வெளியேறினேன். மீதமுள்ளவை வரலாறு.