மேதினப் பேரணிகளின் அரசியல் அர்த்தங்கள்

மேதினப் பேரணிகளின் அரசியல் அர்த்தங்கள்

  — வீரகத்தி தனபாலசிங்கம் —

  சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள்  அவற்றின் உண்மையான அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் இழந்து நீண்டகாலம் சென்றுவிட்டது.  தொழிலாளர்கள் தங்களது உரிமைகள் பலவற்றை வென்றெடுத்த கடந்த காலப் போராட்டங்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கவும் சமத்துவமானதும் மனிதாபிமானமுடையதுமான ஒரு சமுதாயத்தை தோற்றுவிப்பதற்கான போராட்டத்தைத் தொடருவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும்  மேதினக் கொண்டாட்டங்களை பயன்படுத்துவதே  பாரம்பரியமாக இருந்துவந்தது.

  ஆனால், இன்று மேதினம் பெரும்பாலும் அரசியல் கட்சிகள் அவற்றின் செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கு  வருடாந்தம் கேளிக்கைகளுடன் கூடிய  நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒரு தினமாக மாறிவிட்டது. இலங்கை  தேசிய தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் கடந்த புதன்கிழமை அரசியல் கட்சிகள் அவற்றின் பலத்தை வெளிக்காட்டுவதற்கு  மேதினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. 

  இலங்கையில் அண்மைய தசாப்தங்களாக கட்சித் தொண்டர்களின் கட்டுக்கோப்பான அணிவகுப்புடன் கூடிய ஒழுங்கமைவான மேதின ஊர்வலங்களையும் பேரணிகளையும் ஜனதா விமுக்தி பெரமுனவே (ஜே.வி.பி.) நடத்திவந்திருக்கிறது. இந்த தடவையும் அவர்களின் மேதினம்  மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் எடுப்பில்  அமைந்திருந்தது. 

  முன்னரைப் போலன்றி  தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரத்துடன்  ஜே.வி.பி. நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் வரிசையில் வந்துவிட்டது போன்று தோன்றுகிறது.

 பாரம்பரிய பிரதான அரசியல் கட்சிகளாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அமைப்பு ரீதியான கட்டுக்கோப்பையும்  மக்கள் ஆதரவையும் பொறுத்தவரை சிறிய கட்சிகள் என்ற நிலைக்கு வந்துவிட்டன.

  எட்டு வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்கள் தங்களுக்கென்று  தொடங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறுகிய காலத்தில் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்தது மாத்திரமல்ல, ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியது. இரு வருடங்களுக்கு முன்னர்  இலங்கை வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியின் மூலமாக அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட ராஜபக்சாக்கள் மீண்டும் தங்களது கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப் படுத்தியிருக்கிறார்கள். அதற்கு மேதினத்தையும் அவர்கள்  பயன்படுத்திக் கொண்டார்கள்.

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி நீண்டகாலத்துக்கு பிறகு இந்த தடவை விமரிசையாக மேதினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு  செய்திருந்தது.  மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர்  தலைமையில் மேதினத்தைக் கொண்டாடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 1993 மேதினத்தன்று கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊர்வலத்துக்கு தலைமைதாங்கி ஆதரவாளர்களுடன்  நடந்துவந்து கொண்டிருந்தபோது  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் எவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவில்லை. கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக தன்னிடமிருந்து நழுவிக்கொண்டிருந்த ஜனாதிபதி பதவிக்கு தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் விக்கிரமசிங்க எவ்வாறு வந்தார் என்பது மிகவும் அண்மைக்கால வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. 

 அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இரு வருடங்கள் நிறைவு பெறுவதற்கு இன்னமும் இரு மாதங்களே இருக்கின்ற போதிலும், மக்கள் மத்தியில் தனது கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையே தொடருகிறது. கடந்த பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக்கூட கைப்பற்ற முடியாமல் வரலாற்று தோல்வியைச் சந்தித்த ஐக்கிய தேசிய கட்சி விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மாத்திரமே புத்துயிர் பெறும் நம்பிக்கையை பெறக்கூடியதாக இருந்தது.

  பல வருடங்களுக்கு பிறகு அந்த கட்சியின் மேதினக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுவந்ததை கடந்த புதன்கிழமை காணக்கூடியதாக இருந்தது. ஜே.வி.பி.யின் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்கள் அணிதிரண்டுவந்து கலந்துகொண்டாலும், அந்த ஆதரவு தேர்தல்களில் வாக்குகளாக மாறவதில்லை என்று பேசப்படுவது வழமையாக இருந்தது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தவரையிலும் கூட மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் திரள் வாக்குகளாக மாறுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

 இந்த தடவை மேதினக் கூட்டத்துக்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்து மக்களைக் கூட்டிவந்து பிரமாண்டமான காட்சியை காண்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம்  ஐக்கிய தேசிய கட்சிக்கும் இருந்தது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக  அறிவிப்பதற்கு  முன்னதாக பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் ஏற்கெனவே இறங்கியிருக்கும் விக்கிரமசிங்கவுக்கு  தனது கட்சி நான்கு வருடங்களுக்கு முன்னர் இருந்த படுமோசமான  பலவீன நிலையில் தற்போது இல்லை என்று காண்பிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அந்த நோக்கத்திற்கு மேதினத்தை பயன்படுத்துவதில் அவரும் கட்சியும் முழு அளவில் அக்கறை காட்டினார்கள்.

  ஆனால்,  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விக்கிரமசிங்க கொழும்பு மேதினப் பேரணியில் சிலவேளை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்கப்பட்ட போதிலும் அவர் அதைப் பற்றி எதையும் பேசவில்லை. மாறாக பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன்  முன்னெடுக்கப்படும் தற்போதைய பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை தொடருவதற்கு அரசாங்கத்துடன் பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு முன்வருமாறு முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உட்பட சகல அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

  புதிதாக வாக்குறுதிகளை வழங்குவதற்கு பதிலாக ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு கட்சிகளை கேட்டுக்கொண்டார். அவரைப் பொறுத்தவரை, தனது எதிர்கால அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான அம்சமாக தற்போதைய பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கையாளுவதிலேயே கவனம் செலுத்துகிறார் என்பது தெளிவானது.

  வேறு சில கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேதினத்தன்று சில அரசியல் அதிர்வுகள் ஏற்படும் என்று கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன முதல்நாள் கூறியிருந்தார் என்ற போதிலும், பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தவிர வேறு எவரும் மேடையில் ஏறவில்லை. 

  அதேவேளை, சஜித் பிரேமதாச தனது கட்சியின் கொழும்பு பேரணியில் உரையாற்றியபோது நாட்டின் அரசியல் சவால்களை கையாளுவதற்கு தனது கட்சி கடைப்பிடிக்கப்போகும் அணுகுமுறைகளை விளக்கிக் கூறியதுடன் பல்வேறு உறுதிமொழிகளையும் வழங்கினார்.

 தனது எதிர்கால அரசாங்கம்  சிறுபான்மைச்  சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவுடன் நிலைபேறான தீர்வைக் காண்பதற்கு பாடுபடும் என்று கூறிய பிரேமதாச அரசியலமைப்புக்கான 13 திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் உறுதிகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

  சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசக்கரம் நீட்டியதாக அமைந்த எதிர்க்கட்சி தலைவரின் உரை ஜனாதிபதி தேர்தலில் அந்த சமூகங்களின் ஆதரவைப் பெறுவதில் அவர் கொண்டிருக்கும் கடுமையான  அக்கறையை வெளிக்காட்டியது.

  மற்றைய கட்சிகள் சகலவற்றினதும் மேதினப் பேரணிகளில் கலந்துகொண்ட மக்களையும் விட மிகவும் கூடுதலான மக்கள் அணிதிரண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு பேரணியில் உரையாற்றிய அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியில் அவருக்கு இருக்கும் உறுதியான நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடாக  அடுத்த மேதினத்தை இலங்கை தங்களது அரசாங்கத்தின் கீழேயே கொண்டாடும் என்று கூறினார்.

  வழமைபோன்று கடந்த கால அரசாங்கங்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த திசாநாயக்க திட்டவட்டமான கொள்கைகளை விளக்குவதை விடுத்து பொருளாதார மீட்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் செயற்திட்டத்தில் மக்களையும் பல்வேறு சக்திகளையும் இணைப்பது குறித்து பொதுப்படையாகப் பேசினார். 

 இது இவ்வாறிருக்க, தங்களுக்கு இருப்பதாக தாங்கள் நம்புகின்ற மக்கள் ஆதரவை நிரூபிக்க மேதினப் பேரணியை பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய ராஜபக்சாக்கள் அதில் எதிர்பார்த்த வெற்றியைக் கண்டதாகக் கூறமுடியாது.

  கொழும்பு கெம்பல் பூங்காவில் நடைபெற்ற மேதினப் பேரணியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழமை போன்று தங்களது கட்சியின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடும் வேட்பாளரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்று பெருமை  பேசினார். பொருளாதார நெருக்கடியைக் கையாளுவதற்கு அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு கோட்டாபய ராஜபக்ச கேட்டபோது அந்த சவாலை ஏற்பதற்கு பிரேமதாசவும் அநுரா குமாரவும்் அஞ்சியதாகக் கூறியதன் மூலம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு முறைமுகமான ஒரு பாராட்டைத் தெரிவித்தார். ஆனால், ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு  தனது கட்சி ஆதரவளிக்கும் என்று வெளிப்படையாக அவர் கூறவில்லை.

   இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் கொழும்புக்கு வெளியே கம்பஹாவில் மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சுதந்திர கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தாங்கள் தயாராகிவிட்டதாகக் கூறினார். 

  சிறிசேனவின் தலைமையின் கீழ் கடுமையாகப் பலவீனமடைந்து தற்போது சந்திரிகா குமாரதுங்கவின் தலையீட்டை அடுத்து மேலும்  பிளவடைந்திருக்கும் அந்தக் கட்சியின் ஒரு பிரிவின்  ஜனாதிபதி வேட்பாளராக   போட்டியிடும்  சூதாட்டத்தில் எதற்காக நீதியமைச்சர் இறங்கினார் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் பின்னணியில் அந்தரங்க நோக்கம் ஒன்று இருக்கலாம் என்று சந்தேகிக்காமலும் இருக்கமுடியவில்லை.

  தேர்தல் பிரசாரங்களின் அமர்க்களமான ஒரு தொடக்கமாக அமைந்த மேதினப் பேரணிகளின் மூலமான செய்திகள் இவ்வாறாக இருக்கையில், ஜனாதிபதி விக்கிரமசிங்க எப்போது  தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை அறிவிப்பார் என்ற கேள்வி எழுகிறது. தனது அறிவிப்பைச் செய்வதற்கு பொருத்தமான(சுப) நேரம்  எதுவென்று அவர் நினைக்கிறார்? 

 கனடாவில் வசிக்கும் இலங்கை அரசியல் ஆய்வாளரான ராஜன் பிலிப்ஸ்  கடந்த வாரம் ‘சண்டே ஐலண்ட்’  பத்திரிகையில் தனது வழமையான பத்தியில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான வர்ணனையைச் செய்திருந்தார்.

  “ரணில் விக்கிரமசிங்கவின் நட்சத்திரமும் அதிர்ஷ்டமும் வித்தியாசமானவை. அவை மேலும் உயர்ந்துகொண்டு போகவும் கூடும். பாராளுமன்றத்தில் அவருக்கு கட்சி ஒன்று இல்லை என்றாலும் பாராளுமன்றத்தை தனது முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தேர்தல் பிரசாரங்களை துடிப்புடன் முன்னெடுக்க அவரிடம் பலமான கட்சி இல்லை. ஆனால் அது அவருக்கு  கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு பல்வேறு கட்சிகளிடமிருந்து ஆதரவைத் தேடுவதற்கும் அரசாங்கத்தின் பொது வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்துவதற்கும் சதந்திரத்தை அவருக்கு கொடுக்கிறது. அவர்  ஒரு புதிய அரசியல் மிருகம்.”

(ஈழநாடு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *