மட்டக்களப்புப் பொதுநூலக விருத்தியில் நூலகர் என் செல்வராஜா

மட்டக்களப்புப் பொதுநூலக விருத்தியில் நூலகர் என் செல்வராஜா

— கலாநிதி சு.சிவரெத்தினம் —

நூல் தேட்டம் செல்வராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தில் நூலகராகப் பணியாற்றிய பின் புலம் பெயர்ந்து ஈழத்திலிருந்து வெளிவந்த நூல்களைத் தேடி அவற்றைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்துகின்ற பெரும்பணியைச் செய்து கொண்டிருப்பவராக அறிந்திருந்தேன். புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது முன்னைய பணிகளை மறந்து புலம் பெயர் தேசத்தின் பணப் பொருளாதாரத்தில் கரைந்து மூழ்கிப் போபவர்களாக இருக்க செல்வராஜா அவர்கள் புலம்பெயர்ந்த போதும் தனது தொழில் கடமையை, அதன் தொடர்ச்சியை எவ்வித சம்பளமுமின்றி தமிழ் மக்களுக்காக ஆற்றிக் கொண்டு வருகிறார் என்பதில் ஒரு மரியாதை அவர் மேல் உருவாகியிருந்தது.

இவர் அரங்கம் பத்திரிகையில் ‘மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம்’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரையொன்றினை எழுதத் தொடங்கினார். அரங்கம் பத்திரிகை கிழக்கின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தனித்துவங்களையும் வெளிப்படுத்துவதற்காக திரு. சீவகன் பூபாலரட்ணம் அவர்களால் தனது சொந்த நிதியில் வெளியிடப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்த பத்திரிகையாகும்.

இலவசமாக வழங்கப்படுவதற்குக் சீவகன் சொன்ன காரணம் ‘மட்டக்களப்பு மக்கள் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வாசிப்புப் பழக்கத்துக்கு கொண்டு வருவதற்கு இலவசமாக வழங்க வேண்டும்’ என்பதாகும். அவருடைய கூற்றில் ஒரு உண்மையிருந்தது. அது என்னவென்றால் யாழ்ப்பாணத்திலிருந்து நாளிதழ்களாக ஈழநாடு, உதயன், போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றை யாழ் மக்கள் காலையில் வாசித்த பின்தான் மற்றக் கடமைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் மட்டக்களப்பிலிருந்து எந்தவொரு பத்திரிகையுமே வருவதில்லை. தேசியப் பத்திரிகையாக வருகின்ற வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிரிகைகளையும் பெருமளவுக்கு கல்வி கற்றவர்களும் வாசிப்பது குறைவு இந்த நிலையில் இலவசமாகக் கொடுத்து நல்ல வாசிக்கும் சமூகத்தை உருவாக்குவது என்பது அவருடைய கனவாக இருந்தது.

அரங்கம் ஒரு பிராந்தியப் பத்திரிகையாக இருந்ததினால் அந்தப் பிராந்தியத்தினுடைய தேவைகள், பிரச்சினைகள், சமூக தனித்தவங்கள், அவர்களுடைய அரசியல் நோக்குநிலைகள் என்பன வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் சீவகன் மிகக் கவனமாகத் தொழில்ப்பட்டார். இதன் பொருட்டு மட்டக்களப்பை மிக நுணுக்கமாக நோக்கி தான் நோக்கிய விடயங்கள் தொடர்பாக யார் யாரைக் கொண்டு எழுத முடியுமோ அவர்களை அணுகி அவர்களிடம் இருந்து கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டுக் கொண்டு வந்தார். இவ்வாறு அவருடைய ஒரு நோக்கு நிலையில் அவதானிக்கப்பட்டதே மட்டக்களப்பு பொதுநூலகக் கட்டிடிடமாகும்.

பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கில் முதலமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு பொதுநூலகக் கட்டிடம் அரசியல் இழுபறியில் முடிவுறா இருந்த போது, அரசியல் நிலை கடந்து அந்த நூலகம் இன்றைய நவீன தேவைப்பாடுகளையும் தொழில்நுட்ப வசதிகளையும் அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு வாசகர்களுக்கு நிறைவான சேவையை வழங்கலாம் என்ற ஒரு தேவைப்பாட்டின் நிமித்தம் நூலகம் தொடர்பான அனுபவமும் அறிவும் வாய்ந்த திரு என். செல்வராஜா அவர்களை சீவகன் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க திரு என்.செல்வராஜா அவர்கள் அரங்கத்தில் தனது ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கொண்ட கட்டுரையினை தொடராக எழுத ஆரம்பித்தார் என்பதை அறிய முடிந்தது.

இந்தத் தொடரினூடாக பொதுமக்களும்  அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நூலகம் என்பது தனியே கட்டிடங்களிலோ அல்லது நூல்களின் எண்ணிக்கையில் மாத்திரம் தங்கியிருப்பதல்ல அதற்கு மேலால் அவற்றினுடைய அமைப்பு, அந்த அமைப்பின் ஓழுங்கு, அது செயற்படும் முறை, வாசகர்களுக்குரிய வசதிகள், வாய்ப்புகள் என பலவகைகளில் தங்கியிருக்கின்றன என்ற விடயம் புலனாகியது.

பிள்ளையான் ஒரு தமிழினத் துரோகியாக தமிழ் தேசிய அரசியல் பேசுபவர்களால் முத்திரைகுத்தப்பட்டிருக்கின்ற அரசியல் களத்திலும் அரங்கம் மட்டக்களப்பு பிரதேச வாதப் பத்திரிகை என மாற்றுச்சிந்தனைகளை மறுப்பவர்களால் தூற்றப்படும் சூழலிலும், செல்வராஜா அவர்கள் இவை எவற்றையும் பொருட்படுத்தாது, இந்த குறுகிய அரசியல் நலன்களைக் கடந்து தனது அறிவு, அனுபவம், ஆற்றல் என்பன மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற பரந்த சிந்தனைத்தளத்தில் நின்று அரங்கத்தில் நூலகம் தொடர்பான கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்தார். செல்வராஜா அவர்களுக்கு இருந்த மக்கள் நலனையும் சமூகப் பொறுப்பையும் தன்னலமற்ற குணத்தினையும் அவற்றுக்காக எதையும் எதிர்கொள்வதற்குத் தயாரான அவருடைய துணிவையும் இலங்கையர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.  

அவருடைய அந்தக் தொடர் கட்டுரை நூலகத்தின் அமைப்பு, நூலகத்தின் முக்கியத்துவம், புதிய கட்டிடத்தின் நூலகப் பிரிவுகள், மாற்றுத்தியனாளிகளின் தேவைகள், இரவல் வழங்கும் மண்டபமும் வாசிப்பு முனையமும் இரவல் வழங்கும் சேவை, சுவடிகள் காப்பகம், என நூலகத்தைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படைக் கருத்துக்களாகவும் வழிகாட்டியாகவும் கொண்டமைந்த கட்டுரைகளாக அமைந்திருந்தன.

இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கியத்துவம் கருதி இந்தக் கட்டுரைகளின் தொகுப்பாக ‘மட்டக்களப்பில் பொலிபெறும் பொதுசன நூலகம்’ எனும் நூல் வெளிவந்தது.

இந்த நூல் வெளியீட்டின் போது மூன்று நிகழ்வுகள் இடம் பெற்றன.

1. இந்த நூலாசிரியர் செல்வராஜா அவர்கள் மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு மூன்று இலட்சம் புத்தகங்கள் தேவை அதில் ஓர் இலட்சம் ஆங்கிலப் புத்தகங்களை தான் பெற்றுத் தருவதாக மேடையில் வாக்குறுதியளித்தார்.

2. மட்க்களப்பு நூலகத்துக்கு நூல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் அமைப்பு நிறுவப்பட்டது.

3. பேராசிரியர் சி.மௌனகுரு தனது சேமிப்பில் உள்ள புத்தகங்களை மட்டக்களப்பு நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவித்தார்.  

இறுதி இரண்டு நிகழ்வுகளின் முன்னேற்றங்கள் அல்லது செயல்படுத்துகை எவ்வகையில் உள்ளது என்பதை அறிய முடியவில்லை. ஆயினும் தான் வழங்கிய வாக்குறுதியை காற்றில் பறக்கவிடாது தனியொருவராக அல்லும் பகலும் உழைத்து ஓர் இலட்சம் நூல்களைச் சேகரித்து அனுப்பியுள்ளமை கை தட்டலுக்கான ஒரு மேடைப் பேச்சாக இல்லாமல் கொடுத்த வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டுமாகும்.

ஓர் இலட்சம் நூல்களைத் சேகரிப்பது என்பது குவிந்து கிடக்கும் நூல்களை அள்ளிக் கொண்டு வருவதல்ல அதற்கு அர்ப்பணிப்பான உழைப்பும் தேடலும் தொடர்புகளும் அவசியமாகும். இந்த அனைத்தையும் கொண்டுதான் அவர் ஓர் இலட்சம் புத்தகங்களை சேகரித்து மட்டக்களப்புக்கு அனுப்பியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்கள் ஸ்கொட்லாந்தில் இயங்கும் புக்ஸ் எப்ரோட் (Books Abroad) எனும் தொண்டு நிறுவனத்தின் இணைப்பாளர்களுள் ஒருவராகப் பணியாற்றும் ஒரேயொரு தமிழராகவும், இலங்கையராகவும் 2003முதல் இயங்கி வருகிறார். இதன் காரணத்தினால் இந்நிறுவனத்துக்கு மட்டக்களப்பு பொதுநூலகம் பற்றியும் அதற்கு நூல்களின் தேவைகள் பற்றியும் எடுத்து விளக்கி இந்நூலகத்துக்கு நுர்ல்கள் அன்பளிப்புச் செய்வதற்கான அனுமதியினை மிகச் சிரமத்தின் மத்தியில் பெற்றிருக்கின்றார். அத்தொண்டு நிறுவனம் 40 அடி கொண்டெய்னர் ஒன்றில் 38 பலட் புத்தகம் வழங்குவதற்பு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். ஆயினும் பாவித்த புத்தகங்களுக்க VAT அறவிடுவதை புக்ஸ் எப்ரோட் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் மட்டக்களப்பு கொன்டெய்னர் இறக்குவதில் ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

இவற்றை விட ஒரு கொன்டெய்னர் அனுப்ப புத்தகங்களின் பெறுமதியை விட காசாக 8000 பவுண்ட் தேவைப்படுகின்றது. அதாவது இலங்கை ரூபாவில் அண்ணளவாக 2800000 ஆகும். இந்தப் பணத்தினை குறிப்பிட்ட தொண்டுநிறுவனம் பொறுப்பேற்க மாட்டாது இத்தொகையினைச் சேர்ப்பதற்காக செல்வராஜா அவர்கள் புக்ஸ் எப்ரோட் அமைந்துள்ள அபர்டீன்ஷெயரில் உள்ள 17 மிகப்பெரும் பணக்காரர்களின் தனியார் மாளிகைத் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட தனித்தனியாக அவர்களிடம் அனுமதியினைக் கோரியிருக்கிறார். அவர்களில் 12 பேர் அதற்கு ஒத்துழைத்து தங்கள் தனிப்பட்ட பூந்தோட்டங்களை பாரவையாளர்களுக்க ஒரு நாளைக்க வழங்கினர். பார்வையாளர்களிடம் ரிக்கட் விற்று அவர்களுக்கு அங்கு பார்பக்கியூ, சான்விட்ச் போன்றன பரிமாறப்பட்டு மிகுதிப் பணத்தினையே கொண்டய்;னர் அனுப்புவதற்கு திரட்ட முடிந்திருக்கிறது. எங்கோ ஒரு நாட்டிலுள்ள 12 பணக்காரர்களின் வீட்டுத்தோட்டத்தை மட்டக்களப்பு பொது நூலகத்துக்காக திறந்துகாட்டி  நிதி வசூலிப்பது என்பது இலகுப்பட்ட காரியமல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அர்ப்ணிப்பான கஸ்ரமான காரியத்தினை மட்டக்களப்புப் பொதுநூலகத்துக்காக அவர் ஆற்றியிருப்பது இந்த பிரதேசத்து மக்களின் அறிவு வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர் கொண்டிருக்கும் அக்கறையினைக் காட்டுகின்றது.

மேலும் அங்குள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் சீனமொழிப் பிரிவு மூடப்படுவதால் அங்கிருந்த சீனமொழி மூல நூல்களையும் பெற்றிருக்கின்றார். அந்த நூல்கள் மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு வந்துள்ளன. செல்வராஜா அவர்களின் ஆலோசனையின் பெயரில் மட்டக்களப்புப் பொது நூலகத்தில் சீனமொழிப் பிரிவு ஒன்று தனியாக ஆரம்பிக்கப்பட் இருக்கின்றது. இலங்கையில் ஒரு நூலகத்தில் சீனமொழிக்கென்று தனியான ஒரு பிரிவு ஆரம்பிக்கப்படுவதும் மட்டக்களப்பில்த்தான் என்ற பெருமையும் இதனால் உருவாகியிருக்கிறது.

மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் எனும் கட்டுரைத் தொடரை எழுதி அதனைப் புத்தகமாக்கியதோடு மட்டும் நின்றுவிடாமல் நூலக்தை நூல்களால் பொலிவுபெற வைப்பதற்காக செல்வராஜா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மட்டக்களப்பு மக்களால் என்றும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.

கிழக்கில் கிழக்குப் பல்கலைக் கழகமும் தென்கிழக்குப் பல்கலைக் கழகமும் அமையப் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இப்பல்கலைக் கழக மாணவர்களினதும் ஆராச்சியாளர்களினதும் அறிவுத் தேவையைப் பூர்த்தி செய்வதாக இந்நூலகம் விளங்கும் எனலாம். அதுவும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பட்டப்பின்படிப்பு பீடத்தில் ஆய்வுக்காக இணைந்திருக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஆய்வு முயற்சிகளுக்கு இந்நூலகம் பெரிதும் துணைபோக வேண்டும்.

யாழ்ப்பாண புலமைப் பாரம்பரியத்தின் ஓர் அடையாளமாக யாழ்நூலகம் இருப்பது போன்று மட்டக்களப்புப் பொது நூலகம் மட்டக்களப்புப் புலமைப் பாரம்பரியத்தின் ஓர் அடையாளமாகத் திகழ வேண்டும். அப்போதுதான் இந்நூலகத்தினை இந்தளவுக்குப் பெரிதாகத் திட்டமிட்டு கட்டுவதற்கு உழைத்த சிவநேசதுரை சந்திரகாந்தன், இந்நூலகத்துக்கு இவ்வளவு நூல்களைக் கொண்டு சேர்த்த நூலவியலாளர் என்.செல்வராஜா, இந்நூலகத்தினூடு இப்பிரதேச மக்கள் குறிப்பிடத்தக்க அறிவுச் சாதனைகளை அடைய வேண்டும் என எதிர்பார்த்துத் தொழில்படும் சீவகன், இவர்களைப்போலவே இந்த நூலகத்தையும் நூல்களையும் நேசித்து அதன் விருத்திக்கு உழைத்துக் கொண்டிருக்கும் இந்த நூலகர் ராணி, மற்றும் இலைமறையாக இந்நூலகத்துக்காகப் பாடுபடும் அனைத்து நல்லுள்ளங்களினதும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அர்த்தமுடையதாக அமையும் எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *