கிழக்கு தமிழர்களும் ஜனாதிபதி தேர்தலும்…! (மௌன உடைவுகள்-85)

கிழக்கு தமிழர்களும் ஜனாதிபதி தேர்தலும்…! (மௌன உடைவுகள்-85)

    — அழகு குணசீலன் —

“பங்குனி மாதத்து வெயிலை பார்த்து இருந்தவனும் பாவவாளி” என்று கூறுவது மட்டக்களப்பில் வழக்கம்.  இத்தனைக்கும் பங்குனி கோடை வெயிலின் ஆரம்பம் மட்டுமே. இப்போது  முன்கூட்டியே கோடைகால கொதிக்கும் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. 

அது போல் முன்கூட்டியே மே தின நாளில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. புவியியலுக்கு இது கோடைகாலம் என்றாலும் அரசியலுக்கு இது தேர்தல் காலம். 

  வழமைபோல் மேதின கொடி ஒரே நாளில் ஏறி இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும்  பெரிய தேசிய கட்சிகளும்,  சிறிய பிராந்திய கட்சிகளும் மேதினம் குறித்த தத்தமது புரிதலுக்கு ஏற்ப இந்த நாளை கொண்டாடி முடித்திருக்கின்றன. எல்லா மேடைகளிலும் கட்சி அரசியல் அளவுக்கு அதிகமான இடத்தை பிடித்துக்கொண்டது. தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பம் – மக்களை கூட்டி யாருக்கு/ கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டும் பலப்பரீட்சை. 

செப்டம்பர்/ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர். இலங்கை பௌத்த சிங்கள தேசியத்தின் தேர்தல் முண்டியடிப்புக்கு மத்தியில் கட்சியையே காப்பாற்ற முடியாமல் தத்தளிக்கின்ற பழம்பெரும் தமிழரசுக்கட்சியும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அன்றைய கூட்டாளிகளும் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதா? பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா? இல்லை தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா?  ஆதரிப்பதானால் அந்த வேட்பாளர் முன் கூறிய மூவரில் யார்? என்று கேள்வி எழுப்புவதில் அவர்களுக்கு எல்லாச் சூடும்  சேர்ந்து “கிறுகிறுப்பு” ஏற்பட்டுள்ளது.

உண்மையில் நடக்கப்போவது இதுதான். தமிழ்த்தேசிய கட்சிகளின் இன்றைய இலட்சணத்தில் பொதுவேட்பாளர் கோஷம் வெறும் பகல்கனவு. தேர்தல் பகிஷ்கரிப்பை  சுமந்து கொண்டு தனித்து சைக்கிள் ஓடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்  கோரிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள். வாக்களிப்பு வீதம் இதனை உறுதி செய்யும்.  இறுதியில் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரையே ஆதரிப்பதற்கு முடிவு செய்வார்கள்.  இதுதான் நடக்கப்போகின்ற நடைமுறை ஜதார்த்தம்.

அவர்கள் கூறுவது போன்று, இந்த பொதுவேட்பாளர், பகிஷ்கரிப்பு பூதங்கள் சிங்கள தேசத்திற்கான அழுத்தம் என காட்டும் ஒரு தந்திரோபாயமாகவும் ,  பலத்தைகாட்டுவதாகவும் அமையப்போவதில்ல. இவை  இருந்தால்தானே காட்டுவதற்கு. இந்த வெருட்டல்களை சிங்கள தேசம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது. தமிழ்த்தேசியம் கூறுகின்ற ஜனாதிபதியை நிர்ணயிக்கின்ற சக்தி தாங்கள் தான்  என்பது தேர்ந்தெடுத்த பொய்.  அந்தளவுக்கு சிங்கள தேசியம்  பெரிதாக பிளவுபட்டும் இல்லை, தமிழ்த்தேசியம் ஒன்று பட்டும் இல்லை. 

இன்னும் வேடிக்கை என்னவென்றால் முஸ்லீம் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டும் அல்லது  பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்பது . நடக்கின்ற காரியமா…..இது?. தமிழ், முஸ்லீம் குறுந்தேசியங்கள் ஒரே குணாம்சத்தை கொண்டுள்ள போதும்  தங்கள் தங்கள் கூடைக்கு தனியாகவே வீசுகின்ற சந்தர்ப்பவாத அரசியலே இதுவரை நடந்துள்ளது.  ஒன்றுக்கொன்று முரணாகவே  அவை தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றன. சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆகவே  பகிஷ்கரிப்பும், பொதுவேட்பாளரும் சிங்கள தலைவர் ஒருவரை வெல்லவைப்பதற்காக  முதுகுக்குப் பின்னால் நடக்கின்ற சுத்துமாத்து. முஸ்லிம் கட்சிகள் மட்டும் அல்ல  மலையக கட்சிகளும் இந்த பம்மாத்தில் பங்காளிகளாகப் போவதில்லை.

வடக்கு தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் முன்வைத்துள்ள தேர்தல் பகிஷ்கரிப்பு, பொதுவேட்பாளர் ஆலோசனைகள் பன்மைத்துவ கிழக்குமாகாண சமூகங்களுக்கு பொருத்தமற்றவை. மூன்று இனங்களும் இல்லாவிட்டாலும் கிழக்கை பாரம்பரிய தாயகமாகக்கொண்ட முஸ்லிம், தமிழ் சமூகங்கள் ஒருமித்த முடிவை எடுப்பது பகற்கனவு. இந்த நிலையில் வடக்கு தலைமைகளின் தன்னிச்சையான இந்த முடிவுகள் கிழக்கு மாகாண தமிழ்மக்களுக்கு  சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். பன்மைத்துவ சமூக அரசியலில் இருந்து தமிழர்களை தனிமைப்படுத்தும். எனவே கிழக்கு மாகாண தமிழர்கள் தங்கள் அடிப்படை உரிமையான அரசியல் உரிமையை-வாக்களிக்கும் உரிமையை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாக கிழக்கின் பன்மைத்துவ சமூக பொருளாதார அரசியல் சூழலை கவனத்தில் எடுக்காது  தன்னிச்சையாக எடுக்கின்ற அரசியல் முடிவுகளை கிழக்கில் திணிப்பதன் வரிசையில் இதுவும் ஒன்று.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இந்த ஒருபோதும் வெற்றியளிக்காத யோசனைகளுக்கு பின்னால் அலையத் கூடாது. வடக்கில் கூட ஒரு மக்கள் திரட்சியை இவர்களால்  சாதிக்க முடியாது. ஈ.பி.டி.பி, ஜே.வி.பி., சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு  இவர்களின் கோரிக்கை ஒருகாதால் உள் நுழைந்து மறுகாதால் வெளியேறும்.  மூளைக்கு வேலையே இல்லை.  இதனால் கிழக்குமாகாண தமிழர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரி.எம்.வி.பி., மற்றும் தேசியக்கட்சிகளின் ஆதரவாளர்களும் வடக்கில் இருந்து எழும் இந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்தே வாக்களிப்பார்கள். ஆக, கிழக்கு மாகாணத்தின் சிங்கள, முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாக்களிப்பில் பங்கேற்கும் போது தமிழர்களில் ஒரு சிறுபகுதியினர் மட்டும் பகிஷ்கரிப்பதாலோ, பொதுவேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதாலோ தனித்து நின்று எதையும் அடையப் போவதில்லை.

ஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்த பட்ச தீர்வைக்கூட  அறிவிக்கவில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகும் என்றால் எப்படி? ஜே.வி.பி.யின் கடந்த கால வரலாற்றை கேள்விக்கு உட்படுத்தத் தேவையில்லை என்றால் ஆகக்குறைந்தது அக்கட்சியின் சமகால, எதிர்கால கொள்கைகள் பற்றியாவது தெளிவாகத் தெரியவேண்டாமா?  தங்களை இடதுசாரிகள் என்று “சொல்வதன் – காட்டிக்கொள்வதன்” மூலம் மட்டும் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று எப்படி நம்புவது? மரபு ரீதியான பாராளுமன்ற இடதுசாரிகளின் வரலாற்றையும்,  ஜே.வி.பி.யின் மலையக மக்களை நில ஆக்கிரமிப்பாளர்களாகவும், இந்திய கைக்கூலிகளாகவும் பிரகடனம் செய்த வரலாற்றையும் இந்திய -இலங்கை சமாதான உடன்பாட்டை இந்திய ஆக்கிரமிப்பாக காட்டிய வரலாற்றையும் தமிழ்மக்கள் எப்படி மறப்பது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜீத் பிரேமதாச தனது மேதின உரையில், தனது ஆட்சியில் “13 வது அரசியல் அமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார். அவர் எந்த 13 ஐ கருதுகிறார் என்று தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரமதாச 13 க்கு எதிராக புலிகளோடும், ஜே.வி.பி.யோடும் கைகோர்த்து நின்ற வரலாறுதான் இந்த நாட்டில் இதுவரையான ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை இல்லாமல் செய்த வரலாறு. சஜீத் பிரேமதாச நல்லாட்சியின் அமைச்சராக இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளபோதும் 13 ஐ நடைமுறைப்படுத்த இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? ஒரு தமிழ் தேசிய நாளிதழ் கேட்கிறது? கேட்க வேண்டிய கேள்விதான்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டிய பல்கட்சி மாநாடுகளில் அனுரகுமாரவும், சஜீத்தும்  அல்லது அவர்களின் கட்சி பிரதிநிதிகள் இது விடயமாக எப்போதாவது 13 க்கு சாதகமாக பேசியிருக்கிறார்களா? இல்லை , நாங்கள் எதிர்கட்சியில் இருந்தாலும் அரசாங்கம் 13 ஐ  நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்குகிறோம் என்று சொல்லாதது ஏன்? இதை சஜீத்தும், அனுரகுமாரவும் செய்திருந்தால் ரணிலுக்கு ஒரு அழுத்தமாக இருந்திருக்கும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதாகவும் இருந்திருக்கும். கடந்த ஜனாதிபதித் தேர்தல்  பிரச்சார காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து மட்டக்களப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சஜீத் பதிலளிக்கவில்லை. இதே பாணியைத்தான் அனுரகுமாரவும் கைக்கொண்டார். கனடா முதல் யாழ்ப்பாணம் வரை இதுதான் நடந்தது.

இதுவரை பொதுஜனபெரமுன தலைவர்கள் தாங்கள் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் என்றே கூறிவந்தனர். ஆனால் மே தினக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து இதுவரையான நொடியை அவிழ்ப்பதாக உள்ளது. “பொதுஜன பெரமுனையின் ஆதரவு இன்றி எந்த ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றி பெறமுடியாது” என்று கூறியிருக்கிறார். இதன் தாற்பரியம் என்ன ரணில் விக்கிரம சிங்கவை பொது வேட்பாளராக நிறுத்த பொதுஜனபெரமுன தீர்மானிக்கிறது என்பதாகும். இவர்களுக்கும் கடந்த கால வரலாறு இல்லை என்பதல்ல. ஆனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமது பிரதேசத்தின் தனித்துவமான வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு வெற்றி பெறக்கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரையே ஆதரிக்கவேண்டும்.

சஜீத் பிரேமதாசவின்  புரிந்துணர்வு ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்ட போது அதன் பங்காளிகள் கட்சியின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், மற்றும் மனோகணேசன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு சஜீத் பிரேமதாச ஊடகவியலாளர்களுக்கு கூறிய பதில் நம்பகத்தன்மையற்றது. இந்த இரு தரப்பும் வெற்றி பெறக் கூடிய ஒரு வேட்பாளர் பக்கம் பாய்வதற்காக மதில் மேல் இருக்கின்றன. அனேகமாக பூனை பாயும் பக்கம் ரணில் பக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதற்காக இது நிபந்தனையற்ற பாய்ச்சலாக இருக்காது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜீத் பிரேமதாசவை ஆதரித்ததால்  இவர்களின் அரசியலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பகுதியாகப்பிரிந்து அரசாங்கத்தை ஆதரித்தார்கள்.  உள் முரண்பாடு அதிகரித்தது. அதை கண்டும் காணாத மாதிரி ரவூப் ஹக்கீம் இருந்தார். இப்போது பாராளுமன்றத்தில் பதவியிழந்த நஸீர் அகமட் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு பிரதியுபகாரமாக கிழக்குமாகாண – மட்டக்களப்பு முஸ்லீம் வாக்குகள் ரணிலுக்கு அளிக்கப்படுவதற்கான பொறுப்பு நஸீர் அகமட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அகமட்  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அதேவேளை கிழக்கில் -மட்டக்களப்பில் முழு முஸ்லீம் கட்சிகளையும் ஒரே ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில், சின்னத்தில் போட்டயிட வைத்து  முஸ்லீம் வாக்குகள் பிரிவதைத்தடுத்து தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் ஒன்றையும் பெறும் முயற்சிகள் திரைமறைவில் ஆரம்பித்து விட்டன.

இவ்வாறான சமூக நலன் சார்ந்த தீர்க்கதரிசனமான செயற்பாட்டு அரசியல் முன்னுதாரணமானது. இதுபோன்ற அரசியல் அணுகுமுறைகளில் இருந்து கிழக்குமாகாண தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ்மக்களும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறையே கிழக்கு மக்கள் எதிர்நோக்கக்கூடிய சமூக, பொருளாதார,அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியும். ஏட்டுச் சுரைக்காய் அல்லாத  ,எதிர்காலம் குறித்த மக்கள் சார் செயற்பாட்டு அரசியலே கிழக்கு மக்களின் இன்றைய தேவை. 

அதற்காக கிழக்கு தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை எதிர்வரும் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பகிஷ்கரிப்பும், தமிழ் பொதுவேட்பாளரும் மக்களின் ஜனநாயக வாக்களிப்பு உரிமையை பயன்படுத்த தடுக்கின்றதும், வீணடிக்கின்றதும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *