— வீரகத்தி தனபாலசிங்கம் —
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஒரு இலங்கைப் பிரஜை இல்லையென்பதால் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என்று கடந்த வாரம் உயர்நீதிமன்றம் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு சர்ச்சைக்குரிய கேள்விகள் சிலவற்றை எழுப்புகிறது.
டயானாவின் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு எதிராக சமூகச் செயற்பாட்டாளர் ஒஷால ஹேரத் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ஆட்சேபித்து அவர் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. வேறு வழக்குகள் காரணமாக டயானா வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தடையும் பிறப்பித்திருக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்த டயானா, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோதே அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படத் தொடங்கினார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் அரசாங்கத்துக்கான அவரின் ஆதரவு தொடர்ந்தது. சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இரவுப் பொருளாதாரம், கஞ்சா வளர்ப்பு பற்றியெல்லாம் அவரின் சர்ச்சைக்குரிய பேசுக்களை நாடறியும்.
டயானாவின் தகுதி நீக்கத்தால் பாராளுமன்றத்தில் ஏற்படும் வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்தவருட முற்பகுதியில் நடத்தப்படவிருந்து பிறகு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். உள்ளூராட்சி தேர்தல் தற்போதைக்கு நடத்தப்படும் சாத்தியம் இல்லை என்பதால் மீண்டும் பாராளுமன்றம் வருவதற்கு இது அவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
டயானா வெளிநாட்டுப் பிரஜையாக இருந்துகொண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். கடந்த வருட முற்பகுதியில் குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு அளித்த வாக்குமூலத்தில் அவர் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தனக்கு பிரிட்டிஷ் பிரஜாவுரிமை தேவையில்லை என்று கூறும் ஆவணங்களைக் கையளித்து அந்த பிரஜாவுரிமையை துறந்துவிட்டதாகவும் இரட்டைப் பிரஜாவுரிமையை ஒருபோதும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். அதன் பிரகாரம் நோக்கும்போது எந்தவொரு நாட்டின் பிரைஜயாகவும் இல்லாமல் அவர் கடந்த நான்கு வருடகாலமாக பாராளுமன்ற உறுப்பிராக இருந்து வந்திருக்கிறார். இதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி.
குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறிச்செயற்படுவதாகச் சந்தேகிக்கப்படும் மிகவும் சிலருக்கு இந்த நாட்டில் விசேட சலுகை வழங்கப்பட்டிருக்கிறது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் பிரத்தியேகமாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
டயானா இரு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த அதேவேளை இரு இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டதாகவும் அவற்றைப் பெறுவதற்கு போலி பிறப்புச்சாட்சிப்பத்திரம் உட்பட மோசடி செய்யப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் ஒஷால ஹேரத் முறையிட்டிருந்தார். இலங்கை கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்கு டயானா போலி தேசிய அடையாள அட்டையையும் பிறப்புச்சாட்சிப் பத்திரத்தையும் சமர்ப்பித்ததை நிரூபிக்க போதிய சான்றுகள் இருந்ததாக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அப்போது கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பாராளுமன்றத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பதவிநீக்கப்படுகின்ற இரண்டாவது உறுப்பினர் டயானா. தனது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்துக்கு முரணாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் 2021 பட்ஜெட்டுக்கு ஆதரவளித்தமைக்காக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நஷீர் அஹமட்டை கடந்த வருட இறுதியில் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது.
நஷீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தபோது வேறு பல உறுப்பினர்களின் பதவிக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று கருதப்பட்டது. ஏனென்றால் தற்போதைய பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியை தவிர மற்றைய சகல கட்சிகளினதும் உறுப்பினர்கள் பலர் தங்கள் கட்சிகளில் இருந்து பிரிந்து சுயாதீனமாகச் சபைக்குள் செயற்படுகிறார்கள். நஷீர் அஹமட்டுக்கு எதிரான தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக கட்சிகளின் தலைமைத்துவங்கள் சட்டநடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அரசியல் அனுகூலத்துக்காக சட்டவிரோதமான நடவடிக்கைகள் கண்டும்காணாமல் விடப்படும் போக்கிற்கு இதுவும் ஒரு உதாரணம்.
டயானாவுக்கு எதிரான தீரப்பையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டபூர்வத்தன்மை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்கமுடியுமா என்று கேட்டு எவராவது நீதிமன்றத்தை நாடமுடியும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் கூறினார்.
“டயானா இலங்கை பிரஜை இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அவர் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்யமுடியுமா என்று எவரும் கேள்வியெழுப்பலாம்.
டயானாவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை சட்டரீதியாக செல்லுபடியாகுமா என்று கேள்வியெழுப்பமுடியும். டயானா கையெழுத்திட்ட குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நியமனப்பத்திரங்களின் செல்லுபடித்தன்மையும் கேள்விக்குரியது” என்று விஜேசேகர கூறினார்.
டயானாவும் அவரின் கணவர் சேனக டி சில்வாவும் நடத்திய ‘அபே ஜாதிக பெரமுன’ வின் கட்டுப்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினரிடம் கையளித்தமைக்கு பிரதியுபகாரமாகவே டயானா தேசியப்பட்டில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் காரணமாகவே அவரின் பதவிநீக்கத்தை அடுத்து இந்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஆனால், இவற்றுக்கான பதிலை ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகளை விடவும் மிகவும் தெளிவாக தந்திருக்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய.
இலங்கைப் பிரஜை இல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றைப் பதிவு செய்வதற்கு சட்டரீதியான எந்த தடையும் கிடையாது என்று கூறியிருக்கும் அவர் இலங்கைப் பிரஜையாக இல்லாதவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதையும் பாராளுமன்ற உறூப்பினர்களாக வருவதையும் மாத்திரமே இலங்கைச் சட்டம் தடுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
டயானா ஒருபோதும் ‘அபே ஜாதிக பெரமுனவின்’ பொதுச் செயலாளராக இருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் நியமனப்பத்திரங்களில் அவர் கைச்சாத்திடவும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் கூட்டணியில் இருந்து வெளியேறி காலஞ்சென்ற மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியுமே அபே ஜாதிக பெரமுனவை ஆரம்பித்தனர். அந்த கட்சியின் பொதுச் செயலாளராக ருவான் பேர்டினண்டஸ் இருந்தார். பிறகு அந்த பொறுப்பை டயானாவின் கணவர் ஏற்றுக்கொண்டார் என்று தேசப்பிரிய கூறியிருக்கிறார்.
அதேவேளை, டயானாவுக்கு முன்னர் வெளிநாட்டுப் பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினையில் நீதிமன்றத்தீர்ப்பின் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர் நடிகை கீதா குமாரசிங்க. 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக காலி மாவட்டத்தில் போடடியிட்டுத் தெரிவானபோது குமாரசிங்க இலங்கைப் பிரஜையாகவும் சுவிட்சர்லாந்தின் பிரஜையாகவும் இருந்தார். அந்த வேளையில் நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றிய அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதை தடை செய்திருந்தது.
தற்போது டயானாவுக்கு எதிரான தீர்ப்பையடுத்து பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் மீது மக்களின் கவனம் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் தகவல் அறிவதற்கான உரிமையைப் பயன்படுத்தி இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டிருப்பவர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திடம் கேட்டபோது அந்த விபரங்களை கண்டறிவதற்கான ஒரு பொறிமுறை தங்களிடம் கிடையாது என்று கட்டுப்பாட்டாளர் பதிலளித்ததாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கடந்த வாரம் கூறினார்.
இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த ஒரு அரசியல் குடும்பத்தின் இரு உறுப்பினர்களை மையமாக வைத்து கடந்த எட்டு வருட காலத்திற்குள் அரசியலமைப்புக்கு மூன்று தடவைகள் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட விசித்திரத்தை நாம் கண்டோம்.
முதலில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த 19 வது திருத்தம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதை தடைசெய்தது. பிறகு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட 20 வது திருத்தம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மீண்டும் அனுமதித்தது. இரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சியை அடுத்து ராஜபக்சாக்கள் அதிகாரத்தில் இருந்து இறங்கிய பிறகு ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கம் 2022 அக்டோபரில் கொண்டு வந்த 21வது திருத்தம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதை மீண்டும் தடைசெய்தது.
அந்த திருத்தம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டபோதிலும், இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதாக கருதப்படும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் பதவி விலகவில்லை.
தற்போதைய பாராளுமன்றத்தில் பத்து உறுப்பினர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க பகிரங்கமாகக் அந்த வேளையில் கூறினார்.
தங்களது பதவிகளின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தனக்கு இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு பதவிவிலக முன்வரவில்லை.
தற்போதைய பாராளுமன்றத்தில் இருக்கும் சகல உறுப்பினர்களும் 2020 ஆகஸட் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தெரிவானவர்களே. அந்த நேரத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதை தடைசெய்த 19 வது திருத்தம் நடைமுறையில் இருந்தது. இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தபோது உண்மையை மறைத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.
அவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மாத்திரமல்ல, தங்களது கட்சிகளின் தலைவர்களுக்கும் உண்மையை மறைத்தார்கள் அல்லது அவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்திருந்த போதிலும் கூட தலைவர்களும் நியமனங்களை வழங்கினார்கள் என்றுதான் கூறவேண்டும்.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதில் பாராளுமன்றம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிக்கல் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கிறார்களா அல்லது நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்று 21 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு பிறகு ஊடகங்கள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேட்டபோது அதைக் கண்டறியும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கு அல்ல தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உரியது என்று பதிலளித்தார். ஆனால், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்யும் நபரின் பிரஜாவுரிமை குறித்து விசாரிப்பது தங்களது பொறுப்பு அல்ல என்று அன்றைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவ கூறினார்.
போதிய சான்றுகள் இருந்தால் இந்த விவகாரத்தில் எவரும் நீதிமன்றத்தை நாடமுடியும் என்பது அவரது நிலைப்பாடு. அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிடாமல் கோட்டாபய ராஜபக்ச 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டபோது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரியவும் அதே நிலைப்பாட்டையே எடுத்தார்.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது இரட்டைப் பிரஜாவுரிமையை இரகசியமாக வைத்திருப்பதாக சர்ச்சை கிளம்பியபோது அது குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தது. ஆனால் நாளடைவில் அது மறக்கப்பட்ட கதையாகிப் போனது. அத்தகைய ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் இரட்டைப் பிரஜாவுரிமையுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் நிச்சயமாக பதவிவிலகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த விவகாரத்தில் முக்கியமான பொறுப்பு இருக்கிறது. ஆனால் அவர்களில் எவரும் தங்களுக்கு இருக்கவேண்டிய சட்டரீதியானதும் தார்மீக ரீதியானதுமான பொறுப்பை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. தங்களது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கிறார்களா என்று தலைவர்கள் கேட்டதாக ஒருபோதும் அறியவரவில்லை.
இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ‘முடிந்தால் கண்டுபிடியுங்கள்’ என்ற மனோநிலையில்தான் இருக்கிறார்கள் போன்று தெரிகிறது.
(ஈழநாடு)