— என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் —
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.முருகவேள் அவர்களுடன் திருமதி பரராஜசிங்கமும் இடம்பெற்றிருந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் 30.04.1940இல் பிறந்தவர். இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயான இவர் சிறுவயது முதலே வாசிப்பில் ஆர்வம் மிக்கவர். தன் இளமைக் காலத்தில் பென்குவின் பதிப்புகளைத் தேடித் திரிந்து வாசித்து மகிழ்ந்தவர். அவரது நூல்களின் மீதான ஆர்வமே விலங்கியல் பட்டதாரியான அவரது வாழ்வின் திசையை நூல்களையும் நூலகங்களையும் நோக்கித் திருப்பியுள்ளது.
திருமதி ரோ.பரராஜசிங்கம் 1961இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில், தனது B.Sc. சிறப்புப் பட்டத்தை விலங்கியல்துறையில் பெற்றுக்கொண்டவர். தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பின்னர் சிறிது காலம் கார்கில்ஸ் நிறுவனத்தின் புத்தக விற்பனைப் பிரிவின் (Cargill’s Book Centre) பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
தனது பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவை (Post Graduate Diploma) நூலகவியல் துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்1964-1965 காலகட்டத்தில் பெற்றுக்கொண்டார். இக்காலகட்டத்தில் இலங்கையின் புகழ்பெற்ற நூலக அறிஞர்களான சி.முருகவேள், எச்.ஏ.ஐ. குணத்திலக்க, திரு. சோமதாச, கலாநிதி போல் குரூஸ் ஆகியோர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் சிறப்பான வழிகாட்டலின்கீழ் திருமதி ரோ.பரராஜசிங்கம், சிறந்ததொரு நூலக ஆளுமையாக செதுக்கப்பட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 02.03.1978இல் இணைந்து, உதவி நூலகராக அங்கு சேவையாற்றத் தொடங்கினார். சிக்கலான போர்க் காலப்பகுதியில், குறிப்பாக 1983 இனக்கலவரக் காலத்திலும், அதன் பின்னர் இந்திய இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த 1987-1990 காலகட்டத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தை சிறப்புற நிர்வகித்து வந்தவர் இவர்.
தனது MLIS நூலக உயர்கல்விப் பட்டத்தினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 1983இல் சிறப்புச் சித்திகளுடன் பெற்றுக்கொண்டவர். இப்பட்டத் தேர்ச்சியின் பயனாக சிரேஷ்ட உதவி நூலகராகப் பதவி உயர்வினை 1983இல் பெற்றுக்கொண்டவர்.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகமும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு இராணுவ முகாமாகவே அது மாறிவிட்டிருந்தது. அவ்வேளையில் பல்கலைக்கழக நூலகத்தின் சேர்க்கைகளை சமயோசிதமாக பாதுகாத்த பெருமை இவருக்கு உரியதாகும். இக்காலகட்டத்தில் பிரதம நூலகர் திரு. சி.முருகவேள் அவர்கள் ஒராண்டு கல்விசார் விடுப்பில் (Sebatical Leave) சென்றிருந்தார். பல்கலைக்கழக நூலகத்தின் தலைமைப் பொறுப்பினை திருமதி பரராஜசிங்கம் அவர்களே ஏற்று நடத்தவேண்டிய சூழல் அன்று இருந்தது. அவ்வேளையில் திருமதி பரராஜசிங்கம் அவர்கள் குடும்பத்தினருடன்,திருநெல்வேலியில் இடம்பெயர்ந்து வாழ்ந்திருந்தார். உள்ளக இடப்பெயர்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுள் இவருடைய குடும்பமும் ஒன்று.
இந்திய இராணுவம் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்திருந்த ஒருநாள் இரவு அவரது உதவி நூலகர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு வந்திருந்தது. அவரின் கூற்றுப்படி நூலகக் கட்டிடம் தாக்கப்பட்டிருந்தது. நூல்கள் சிதறுண்ட கிடக்கின்றன. அந்நியர்களால் நூல்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. மழைவேறு சிதறுண்டு கிடந்த நூல்களை நனைத்தழித்துக்கொண்டிருந்தது. அவற்றை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் அப்புறப்படுத்தாவிட்டால், பல்கலைக்கழக நூலகச் சேர்க்கைகள் அனைத்தும் அழிந்துவிடும். இந்நிலையில் துரிதமாகச் சிந்தித்து மிகமுக்கியமான முடிவொன்றினை உடனடியாக எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.
மழையுடன் கூடிய காரிருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில் மின்சார வெளிச்சம் தடைப்பட்டிருந்த நிலையில் கூப்பிட்ட குரலுக்கு வரக்கூடியதாகவிருந்த ஒரு சில நூலக உதவியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கைவிடப்பட்டிருந்த நூலகப் பகுதியைக் கண்டு திருமதி பரராஜசிங்கம் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கே பல நூல்கள் இந்திய இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டு, தீவைத்துக் குளிர்காயவும் பயன்படுத்தப்பட்ட சான்றுகள் சாம்பல் மேடுகளாகக் காட்சியளித்தன. மேலும் பல நூல்கள் சேர்த்தடுக்கப்பட்டு இராணுவத்தினருக்கான இருக்கைகளாகவும், படுக்கைகளாகவும் உருமாற்றப்பட்டிருந்தன. புள்ளிவிபரவியல் பகுதியில் காணப்பட்ட நூல்தட்டுக்கள் வெறிச்சோடியிருந்தன. அவர் முன்னிருந்த ஒரே தீர்வு எஞ்சிய நூல்களையாவது பாதுகாப்பாக மீட்டெடுத்து லொறியொன்றில் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதேயாகும்.
அயலவர்களாலும் இந்திய இராணுவத்தினராலும் சூறையாடப்பட்டவை போக தப்பிப் பிழைத்த நூல்களையும், மழையில் நனைந்து கொண்டிருந்த நூல்களையும் அவசர அவசரமாக சேர்த்து எடுத்து லொறிகளில் ஏற்றி, தன்னிடமிருந்த சில்க் சேலைகளினால் அவற்றை மழையிலிருந்து ஒரளவு பாதுகாத்து, அவற்றை சாவகச்சேரியிலுள்ள ஒரு பாடசாலை மண்டபத்துக்குக் கொண்டுசென்று சேர்த்திருக்கிறார். அதற்கான முழுச்செலவினையும் அப்பொழுது 44 வயதேயான அவர், தானே பொறுப்பேற்று இந்த அவசரகாலப் பணியை ஆற்றியிருக்கிறார்.
ஆரம்பத்தில் நூல்களை அனுமதியின்றி அப்புறப்படுத்திய இவரது அருஞ்செயலை பல்கலைக்கழக நிர்வாகம் முதலில் கண்டித்தபோதிலும், பின்னாளில் அவரால் பாதுகாத்து வழங்கப்பட்ட 35000 நூல்களையிட்டு அவருக்கு அதே நிர்வாகம் பாராட்டுக் கடிதமொன்றினையும் வழங்கியிருந்தது. அங்கே இழக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களையும் பின்னாளில் திட்டமிட்டுக் கட்டியெழுப்ப அவர் மிகுந்த பிரயாசையுடன் செயற்பட வேண்டியிருந்தது.
திருமதி பரராஜசிங்கம் அவர்கள்,துஷ்யந்தி கனகசபாபதிப்பிள்ளை என்பவருக்கு வழங்கிய நேர்காணலொன்றில் தனது உணர்வுகளை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். அந்த நேர்காணலில் பல்கலைக்கழக நூலக அழிப்புப் பற்றித் தான் கொழும்பிலிருந்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு ஒரு காரசாரமான கடிதத்தை எழுதியிருந்ததாகவும், அதில் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் சேர்க்கைகளுக்கும் கட்டிடத்திற்கும், தளபாடங்களுக்கும் ஏற்படுத்தியிருந்த மீளப்பெறமுடியாத சேதத்தை, கலாச்சாரப் படுகொலையை விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்திய இராணுவம் ஏற்படுத்திய சேதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவ்வேளையில் இருப்பிலிருந்த 64000 நூல்களில் 35000 நூல்களையே மீட்டெடுக்க முடிந்ததாகத் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணப் பொது நுலகம் 97000 நூல்களுடன் எரியுண்டபோது இழந்த நூல்களைப் பற்றிப் பேசுமளவிற்கு எவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூல்களின் இழப்புப் பற்றிப் பேசுவதில்லை என்பது அவதானிக்கத்தக்கது. பல்கலைக்கழகத்தின் நூலகப் பிரிவில் மாத்திரமல்ல, சில கல்வித்துறைகளுக்கான பீடங்களின் அலுவலகங்களில் இந்திய இராணுவத்தினர் தங்கியிருந்த வேளை தமக்கு இடைஞ்சலாகவிருந்த சொத்துக்களையும் அப்புறப்படுத்தியிருந்தார்கள். அவற்றில் குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வேடுகளின் பிரதிகளை பல்கலைக்கழக தண்ணீர்த் தாங்கியின் அருகே குப்பைமேடாகக் குவித்து வைத்திருந்த அவலத்தையும் அவ்வேளையில் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தில் வாழ்ந்திருந்த என்னால் கண் கூடாகப் பார்க்கவும் கண்ணீர் வடிக்கவுமே முடிந்திருந்தது. வரலாற்றுத்துறைப் பிரிவினரால் பாதுகாக்கப்பட்டு வந்த தொல்பொருட்கள் சிதறியடிக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த 5000 ஆண்டுப் பழமையானஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பொருட்களுக்கும், குறிப்பாக அங்கு பேணி வைத்திருந்த முதுமக்கள் தாழிக்கும் என்ன நடந்திருக்கும் என்று கற்பனைகூட செய்திருக்க என்னால் முடியவில்லை. முப்பதாண்டுகள் கழிந்த நிலையிலும் எமது தலைமுறையினரின் மனத்திரையை விட்டு அகலாத வடுக்கள் இவை.
படிப்படியாகத் தன் பதவியுயர்வுகளைப் பெற்று 16 ஆண்டுகள் உதவி நூலகராகச் சேவையாற்றிய பின்னர் அப்போது பிரதம நூலகராகவிருந்த திரு. சி. முருகவேள் அவர்கள் 1994இல் ஓய்வுபெற்றவேளையில் திருமதி பரராஜசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் நூலகராகப் பதவியேற்றிருந்தார். பின்னர் 01.03.1995இல் பிரதம நூலகராகப் பணியில் தொடர்ந்தார். இவரது பொறுப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் இருந்த வேளையில்தான் மீண்டும் ஒரு பாரிய சிக்கல் ஏற்பட்டது. வரலாற்று முக்கியத்துவமான 1995 வலிகாமம் பாரிய இடப்பெயர்வு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுப்பெற்ற பின்னர் காணப்பட்ட அந்த இறுக்கமான நிர்வாகக் கட்டமைப்பிற்குள்ளும் பாரிய போக்குவரத்துச் சங்கடங்களுக்குள்ளும், பல்கலைக்கழக நூலகத்தை மீளவும் ஒழுங்கமைத்து வழிநடத்தவேண்டியிருந்தது.
இவரது நூலக பணிகளில் அவரது கணவர் பரராஜசிங்கம் அவர்கள் பின்னணியில் நின்று பலவிதங்களிலும் உதவி புரிந்து வந்துள்ளார். ஆங்கிலத்தில் மிகவும் திறமையாக எழுத்தாற்றலை கொண்டிருந்த இவரது கணவர் பல சந்தர்ப்பங்களில் சட்ட நுணுக்கமான கடிதங்களை எழுதி இவரது பணிக்கு உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 27 ஆண்டு இடையறாத நூலகப் பணியினை மேற்கொண்டுவந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் 30.09.2005இல் பல்கலைக்கழக நூலகர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.
பல்கலைக்கழக புத்திஜீவிகளுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்ஒரு வருட கல்விசார் விடுமுறைகளையும் இரண்டு தடவைகள் பெற்றக்கொள்ளாமல் நூலகத்தை வளர்த்தெடுப்பதிலேயே செயற்பட்டிருந்தவர் திருமதி பரராஜசிங்கம். தொடர்ந்து 27 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்துறைக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கின்றார்.ஒரு தடவை இவர் 3 மாத விடுமுறையை மாத்திரம் பெற்றுக்கொண்டு பல்வேறு சர்வதேச நூலகங்களுக்கும் விஜயம்செய்து, தான் அவதானித்து வந்திருந்த நூலக நிர்வாக, வடிவமைப்புச் சிந்தனைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் செயற்பாட்டில் அறிமுகம்செய்ய முன்வந்திருந்தார்.
அவ்வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலக சேர்க்கைகளை கணனிமயப்படுத்தும் Library Automation நடவடிக்கைக்கு 2003 முதலே பெரும் பங்காற்றியிருக்கின்றார்.
நூலகவியல் கல்வியை தமிழ் மாணவர்களுக்கு வழங்கும் பணியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே நூலகவியல்துறைக்கான பட்டப்பின் கல்வி டிப்ளோமா துறையை (DIPLIS) இலங்கை நுலகச் சங்கத்தின் உதவியுடன் 2002/2003 காலகட்டத்தில் மீளுருவாக்கம் செய்வதில் முன்நின்று உழைத்தவர் இவர்.
பல்கலைக்கழகத் தேவைகளுக்கான ஆராய்ச்சித்துறையில் இவர் ஈடுபாடு காட்டிவந்ததன் பயனாக, லேசர் தொழில்நுட்பத்துறைக்கான சுட்டி மற்றும் சாராம்ச சேவைகள் பற்றிய வழிகாட்டிகளையும் (Major Indexing and Abstracting Services in the field of Laser Technology), நூலக விஞ்ஞான,தகவல் தொழில்நுட்பக் கல்விக்கான குறிப்புரையுடனான வழிகாட்டியொன்றினையும், பட்டியலாக்கம், பகுப்பாக்கம், சுட்டிகள், மற்றும் நூலக முகாமைத்துவம் சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றார்.
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், இலங்கை நூலகச் சங்கம் ஆகியவற்றின் ஆயுட்கால உறுப்பினராகவிருந்து இந்த அமைப்புகளின் வளர்ச்சிக்கும் தனது கடின உழைப்பினை இவர் வழங்கியிருக்கிறார்.
2005இற்குப் பின்னரான தனது ஒய்வுக்காலத்திலும்கூட, நூலகவியல்துறையைத் தேர்வுசெய்திருந்த தமிழ் மாணவர்களுக்கு உதவும் வகையில் தான் முன்னர் வழங்கிவந்த விரிவுரைச் சேவையினைத் தொடர்ந்தும் வழங்கிவந்திருந்தார். அவ்வகையில், ஸ்ரீலங்கா நூலகச் சங்கம் வழங்கி வந்த நூலகவியல், தகவல் விஞ்ஞானக் கல்வி மாணவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கிவந்த நுலகவியல்துறைக்கான பட்டப் பின்படிப்பு டிப்ளோமா கல்விகற்கும் மாணவர்களும், யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரி வழங்கிவந்த நூலகக் கல்வி கற்கும் மாணவர்களும் பயனடைந்துள்ளனர். உரும்பிராயில் இருந்தபோது பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்வியறிவை ஊட்டியதோடு அவர்களது தடையுறாத கல்விக்காக பண உதவியும் செய்து வந்தார். இயல்பாகவே மிகவும் இரக்க குணம் படைத்தவரான இவர் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னாலான உதவிகள் செய்து வந்தார் என்பதை இவருடன் நெருங்கிப் பழகிவந்த சக நூலக ஊழியர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
பின்னாளில் பருத்தித்துறையில் தனது இளைய மகளோடு அமைதியாகத் தனது ஓய்வினை அனுபவித்து வந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் அவர்கள், 27.04.2022 அன்று இயற்கையெய்தினார். திருமதி பரராஜசிங்கம் ஈழத்துத் தமிழ் நூலகர்களின் வரிசையில் குறிப்பிடத்தகுந்தவராக வரலாற்றில் பதிவுசெய்யப்படுவார். அவரது ஆத்மா சாந்தியடைவதாகுக.