— அழகு குணசீலன் —
தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தோல்வியை வெற்றியாக மொழிமாற்றம் செய்த ஒரு மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் செப்டம்பர் 14ம் திகதி நடைபெற்று முடிந்திருக்கிறது. என்.பி.பி. வடக்கில் தமிழ்த்தேசியத்தை துரத்தியடித்திருக்கிறது. மீண்டும் மற்றொரு மொழிமாற்றத்தை- கயிறு திரிப்பை செய்யமுடியாத அளவுக்கு தமிழ்த்தேசிய அரசியல் தோல்வியுற்று மூக்குடைபட்டு நிற்கிறது.
வடக்கு மாகாண மக்கள் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபன கதையாடல்களை நிராகரித்து இருக்கிறார்கள். சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, தமிழர் தாயகம், வடக்கு கிழக்கு இணைப்பு, ஒரு நாடு இரு தேசம் எல்லாவற்றையும் நிராகரித்து என்.பி.பி.யின் வாக்குறுதிகளுக்கு வாக்களித்து அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். இது அப்பட்டமாக தமிழ்த் தேசியத்தின் தோல்வி.
இன்னொரு வகையில் சொல்வதென்றால் “வடக்கு மக்கள் அதிகாரப்பகிர்வு கோரவில்லை, அவர்களுக்கு தேவை அபிவிருத்தி.”
“ஒற்றை ஆட்சிக்குள் ‘இலங்கையர்’ என்ற பொது அடையாளத்துடனான வளமான வாழ்வு என்ற என்.பி.பி./ஜே.வி.பி. தலைவர்களின் கருத்துகளுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.
இவற்றிற்கு சமாந்தரமாக நிறைவேற்று அதிகாரம் யார் கையில் உள்ளது, அதையார் எப்படி பயன்படுத்துகிறார் என்பதே பிரச்சினையே அன்றி ஒட்டு மொத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையல்ல என்றும், பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சினை அல்ல அதை பயன்படுத்தும் முறையே தவறானது என்றும், சட்டத்தின் மூலம் சகல இன,மத,மொழி, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களுக்கும் அப்பால் ‘இலங்கையர்’ அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற என்.பி.பி.யின் அடிப்படை யோசனைகளுக்கு வடக்கு மக்கள் ஆமா போட்டே திசைகாட்டிக்கு புள்ளடிபோட்டுள்ளனர்.
இன்னொரு விடயத்தையும் இங்கு சொல்லலாம் என்.பி.பி.க்கு கிடைத்த இந்த அங்கீகாரம் அல்லது தமிழ்த்தேசிய நிராகரிப்பு, மக்கள் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அடையாள அரசியல் மற்றும் அதிகாரப்பகிர்வுக்கு அப்பால் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதில் ஊழல் ஒழிப்பு, நேர்மையான கட்சி அரசியல் தலையீடற்ற நிர்வாகம் என்பனவற்றிற்கு, அரசியல் தீர்வு, அதிகார பகிர்வை விடவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அடைய முடியாத கோஷங்களை இலக்காக கொள்ளாது நடைமுறைச் சாத்தியமான, ஜதார்த்த அணுகுமுறைக்கு வாக்களித்து இருக்கிறார்கள். இவை அனைத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளை கைவிட்டு என்.பி.பி.யை வடக்கு மக்கள் நம்புவதை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசிய அரசியல் தப்பிபிழைக்க காரணம் என்ன? வடக்கு மக்களின் அளவுக்கு கிழக்கு மக்கள் என்.பி.பி.யை நம்பவில்லையா? அல்லது தமிழ்த்தேசியகட்சிகளை நம்புகிறார்களா? அப்படியானால் அதற்கான காரணங்கள் எவையாக இருக்க முடியும்? இந்த கேள்விகளுக்கான பொதுவான பதில் இப்படித்தான் அமைய முடியும்……
அதுதான் கிழக்கின் பிரச்சினைகள் வடக்கின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டவை என்பது. பெரும்பான்மையாக தமிழர்களை, இந்துக்களை கொண்ட வடக்கில் நிலவும் தனித்துவமான பிரச்சினைகளில் இருந்து கிழக்கின் பன்மைத்துவ சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் வேறுபட்ட பரிமாணங்களையும், நெருக்கடிகளையும் கொண்டவை. வடக்கு தங்கள் பிரச்சினைகளை தமிழர் பொதுப் பிரச்சினையாக இதுவரை காட்டி வந்துள்ளது/வருகிறது.
இதனால் கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக, தென்னிலங்கை சிங்கள தேசியவாதக் கட்சிகளில் இருந்து என்.பி.பி.யை கிழக்கு தமிழ் மக்களால் இன்றும் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை . என்.பி.பி.யின் அரசியல் போக்கை கண்காணிப்பதற்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு கால அவகாசம் தேவை. இதற்கான இடைவெளியை பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் வடக்கில் தமிழ்த்தேசிய அரசியல் மீதுள்ளது போன்ற வெறுப்பும், நம்பிக்கையீனமும் இருந்தபோதும் என்.பி.பி.யை வடக்கு அளவுக்கு அங்கீகரிக்கவில்லை அல்லது தமிழ்த்தேசிய அரசியலை நிராகரிக்கவில்லை. இதை கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலின் வெற்றி என்று வாக்கு எண்ணிக்கையில் சொன்னாலும் அது கொள்கை ரீதியிலான வெற்றி அல்ல. தற்காலிக தேர்வு.
போர் காலத்திலும், போருக்கு பின்னரும் கிழக்கு தமிழ்மக்கள் சகோதர சிங்கள, முஸ்லீம் அரசியல் வாதிகளிடமும், கொழும்பு அரசியல் ஆதரவு தமிழ் அரசியல்வாதிகளிடமும் பெற்ற அனுபவங்கள் அவர்கள் என்.பி.பி.க்கு முழுமையான ஆதரவை உடனடியாக தமிழ்த்தேசியத்தை நிராகரித்து அங்கீகரிப்பதற்கு தடுக்கிறது.
ஆம்! இப்போதைக்கு கிழக்கு தமிழ் மக்கள் அநுர அரசனை நம்பி புருஷனை கைவிடக் தயாராயில்லை. அதற்கான அரசியல் புதிய கலாச்சார காலம் கனியவேண்டும். அது வரையும் தமிழ்த்தேசிய ஆதரவு ‘புல் என்றாலும் புருஷன் ‘ நிலைப்பாடுதான். இந்த நிலைப்பாட்டில் இருந்து கிழக்கு தமிழ் மக்களின் அச்சத்தை போக்கி , அவர்களை மீட்டெடுக்க, அரசியல் அடையாள, அதிகாரப்பகிர்வை துரிதப்படுத்த வேண்டியதே என்.பி.பி.க்கு முன்னால் உள்ள முக்கிய பொறுப்பாகும்.
ஆனால் அதை என்.பி.பி. சாதிக்குமா?
மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமாக 159 இருக்கைகளை பாராளுமன்றத்தில் கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மற்றைய முக்கிய கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழ்த்தேசிய கட்சிகளும் ஆதரிக்கும் நிலையில் 40+10 வாக்குகளை பாராளுமன்றத்தில் மேலும் பெற்று 209 வாக்குகளை அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு பெறக் கூடிய வாய்ப்பு இருக்கையில் சர்வஜன வாக்கெடுப்பு குறித்து அதிகப்பிரசங்கம் செய்ய வேண்டிய தேவை என்ன?
அரசியல் அமைப்பு மூலம் தீர்வை தருவதாக கூறி பின்னர் தீவிர சிங்கள தேசியவாதிகளினதும், பௌத்த பிக்குகளினதும், பௌத்த பீடங்களினதும் எதிர்ப்பை சாட்டுச்சொல்லி பின்னடிக்கப்போகிறதா என்.பி.பி? அல்லது தேர்தல் காலத்தில் வடக்கு கிழக்கில் கூறியதை அது தெற்கில் வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு கூறவில்லையா? ஜனாதிபதியின் நிலைப்பாட்டை மக்கள் இரு மாதங்களுக்குள் இரு தடவைகள் அங்கீகரித்து இருக்கையில், மூன்றாவது அங்கீகாரம் எதற்கு? ஒரு கையால் கொடுப்பது போல் கொடுத்து மறுகையால் எடுக்கவிருக்கின்ற அரசியலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
யாழ்ப்பாண குடாநாடு, வன்னி காணிப்பிரச்சினைகளில் இருந்து கிழக்கு காணிப் பிரச்சினை வேறுபட்டது. குடா நாட்டில் பாதுகாப்பு வலய காணிகளை மீளளிப்பதே முக்கிய பிரச்சினை. ஒப்பீட்டளவில் வன்னி குடியேற்ற பிரச்சினைகளை விடவும் கிழக்கு குடியேற்ற பிரதேச பிரச்சினைகள், விவசாய நீர் விநியோகம், கால் நடை வளர்ப்பு, மேய்ச்சல் தரை பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவை. மறுபக்கத்தில் கிழக்கின் எல்லைக்கிராமங்களில் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு புரிந்துணர்வுடன் இல்லை. இது முத்தரப்பு சிங்கள,தமிழ், முஸ்லீம்களுக்கு இடையேயும் காணப்படுகிறது. கிழக்கு மாகாண தமிழ் முஸ்லீம் கிராமங்கள் தொடர்பாக ஏற்கனவே ‘ நிர்வாக பயங்கரவாதம் ‘ என்ற பதம் முஸ்லீம் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்.பி.பி.யின் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் புதிய எம்.பி.க்கள் சமூகங்களுக்கு இடையில் நிலவும் இன,மத முரண்பாட்டை தாண்டி இதில் வெற்றி பெறமுடியுமா?
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வெற்றியை நிர்ணயிப்பதில் காணிப் பிரச்சினை, மேய்ச்சல் தரை பிரச்சினை, மற்றும் ஊழல், நிர்வாக சீர்கேடுகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஹிஸ்புல்லாவின் மீள் வருகை எதிர்பார்ப்பு தமிழரசுக்கட்சியின் வெற்றிக்கும், பிள்ளையான், சாணக்கியனின் மீள்வருகை எதிர்பார்ப்பு ஹிஸ்புல்லாவின் வெற்றிக்கும் மறைமுகமாக பங்களிப்பு செய்துள்ளது.
இவ்வாறான ஒரு சமூகத்தின் செயற்பாட்டை அவதானித்து மறு சமூகம் முடிவெடுக்கின்ற நிலை கிழக்கிலேயே இருக்கிறது. இது வடக்கு நிலைமையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
இந்த அடிப்படை பிரச்சினைகளுக்கான வடக்கு, கிழக்கு வேறுபாடுகளும், எதிர்பார்க்கப்படும் வேறுபட்ட தீர்வுகளுமே வடக்கில் மத்திய தரவர்க்கம் என்.பி.பி.யை நம்பவும், கிழக்கில் மத்திய தரவர்க்கம் தமிழ்த்தேசியத்தை நம்பவும் காரணமாக அமைந்துள்ளது. மத்திய தரவர்க்கத்தின் செல்வாக்கு கிராமிய விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பார்கள், தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்தி உள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கான அடையாள,அதிகார தீர்வுக்கும் அப்பால் கிழக்கு மக்கள் ஒரு அச்சமற்ற அமைதியான சுமூகவாழ்வை எதிர்பார்க்கின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் அதற்கான நிரந்தர தீர்வை முன்வைக்கும் வரை கிழக்கு மக்களின் இடைக்கால சுய பாதுகாப்பு தேர்வே தமிழரசுக்கட்சி. ஆனால் வடக்கு மக்களுக்கு தமிழ்த்தேசிய பாதுகாப்பு அவசியம் அல்ல. அதனால் வடக்கின் தேர்வு என்.பி.பி.
ஆக, வடக்குக்கும், கிழக்குக்குமான அதிகார பகிர்வு அரசியல் தீர்வு வடக்கில் ஒற்றை சமூகத்தை முதன்மை படுத்தியும், கிழக்கில் பன்மைத்துவ சமூகத்தை முதன்மைப்படுத்தி வேற்றுமையிலும் ஒற்றுமையையும், ஒற்றுமையில் வேற்றுமையையும் கொண்டதாக அமையவேண்டும். இது என்.பி.பி.ஆட்சிக்கு இருக்கின்ற முதல் சவாலாக அமையும்.
இன்றைய நிலையில் ‘இலங்கையர்’ என்பது வெறும் கடவுச்சீட்டு பொது அடையாளமே அன்றி தேசிய இனம் ஒன்றிற்கான தனித்துவ அடையாளம் அல்ல.
.