— அழகு குணசீலன் —
போருக்கு பின்னர் அல்லது பயங்கரவாதம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் இலங்கைத்தீவில் இடம்பெறவுள்ள நான்காவது ஜனாதிபதி தேர்தல் இது. 2010, 2015, 2019 வரிசையில் 2024 சற்று வேறுபட்ட பொருளாதார, அரசியல் சூழலில் நடைபெறவுள்ளது. முக்கியமாக கடந்த தேர்தல் கால ஈஸ்டர் படுகொலை முதல் கொரோனா தொற்று, ஜனாசா எரிப்பு, பொருளாதார நெருக்கடி, தீர்க்கப்படாத இனப்பிரச்சினை, காலிமுகத்திடல் என்பனவற்றை கழுவிக் காயப்போட்டு காட்சிப்படுத்துகின்ற தேர்தலாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
2024 செப்டம்பர் 21 ம் திகதி நடைபெறவுள்ள இத்தேர்தலின் முக்கியத்துவம் வெறுமனே 39 வேட்பாளர்கள் போட்டியிடுவது மட்டும் தானா? கடந்த முறையும் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தன்னந்தனியாக ஒரு கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. பிரதமராகி, ஜனாதிபதியாகிய அரசியல் சூழல் இத்தேர்தலில் முக்கியம் பெறுகிறது. முன் எப்போதும் இல்லாதவாறு ஆளுமை, அனுபவம், பல்துறை அறிவியல், பரந்த சர்வதேச தொடர்பு, பிராந்திய நல்லுறவு என்பனவற்றுடன் சர்வதேசம் அறிந்த ஒரு தலைமைத்துவத்தை இத் தேர்தல் தேடுகிறது.
பொதுஜனபெரமுனயின் பெரும்பான்மை பாராளுமன்றம் ஒன்றினால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரும், 69 இலட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியும் நாடு எதிர்நோக்கிய சகல வகையான நெருக்கடிகளுக்கும் தீர்வு காண முடியாமல் பதவிகளை துறந்தும், நாட்டை விட்டும் தப்பியோடிய நிலையில் ஒரு தனிமரம் தோப்பாகியது எப்படி? மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக அரசு தற்கொலை அல்லது அடித்துக்கொலை செய்யப்பட இருந்த நிலையில் எவரும் எதிர்பார்க்காத வகையில் பிழைத்துக்கொண்டது. இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அதிசயம். இதுவும் இத்தேர்தலில் வழக்கத்திற்கு மாறான முக்கியத்துவம்.
இந்த இக்கட்டான நிலையில் வடக்கு தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளும், கிழக்கு முஸ்லீம் தலைமைகளும் பெருமளவுக்கு பார்வையாளர்களாகவே எதிர்க்கட்சியில் இருந்தனர். இக்கட்டான சூழலில் எதிர்க்கட்சியின் பொறுப்பு மிக்க கடமைகளை புறக்கணித்து வசைகளை மட்டும் பாடினர். ஆனால் வடக்கு கிழக்கின் தமிழ்த்தேசிய மாற்று கட்சிகளும், முஸ்லீம் கட்சி தலைமைகளின் நிலைப்பாட்டை நிராகரித்த கிழக்கு முஸ்லீம் எம்.பி.க்களும் அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப கைகொடுத்தனர்.
முஸ்லீம்கட்சிகளின் இன்றைய நிலையை இந்த பின்னணியின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. இன்றைய முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் போன்றவற்றின் எம்.பி.க்களின் தனிநபர்/குழு நிலைப்பாடுகளையும் கொள்ள வேண்டி உள்ளது. இது இரண்டு வருடங்களுக்கும் மேலாக சாம்பலுக்குள் இருந்த நெருப்புத் தணல் அன்றி, ஒன்றும் முற்றிலும் புதியதல்ல.
தமிழ், முஸ்லீம் கட்சிகள் கூட்டணியாக, தனிக்கட்சியாக எதிர்கட்சியில் இருந்தாலும் அது ஒரு போலித்தோற்றம் மட்டுமே. முஸ்லீம், தமிழ் கட்சி தலைமைகளுக்கு இது தெரியாமல் இருக்கவில்லை. பலவீனமான தலைமைத்துவங்களான ஹக்கீமும், ரிஷாத்தும் சம்பந்தரும் தங்கள் கட்சி எம்.பி.க்களை நீள் கயிற்றில் வளையப் போட்டு மேய விட்டதால் அவை இன்று அறுத்துக்கொண்டு ஓடி விட்டன அவ்வளவுதான். இன்று இது தமிழ்த்தேசியகூட்டமைப்பு, தமிழரசுக்கட்சி, முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், ஊடாக நகர்ந்து மனோகணேசனின் கூட்டணி வரை வந்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து தமிழ், முஸ்லீம் எம்.பி.க்கள் அ(ர)ணில் பாய்சல் செய்வதும், மற்றைய கட்சி தாவல்களும் இந்த தேர்தலில் ஒரு பொதுப்பண்பாடாகிறது. பொதுஜன பெரமுனவின் 100 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்ற நிலையில், சஜீத்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து கடந்த சில தினங்களில் 13 எம்.பிக்கள் ரணில் விக்கிரமசிங்க பக்கம் தாவியிருக்கின்றனர். இதில் மலையக தமிழ் எம்.பி.களும், கிழக்கு முஸ்லீம் எம்.பி.களும் இதுவரை ஐவர். தமிழ் தேசிய எம்.பி.க்கள் வாங்கிய கட்டுக்கு வாக்குக்கட்டை எட்ட நின்று எறிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அவர்கள் முடிவை எட்டப்போடுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழரசுக்கட்சி யாரை ஆதரிப்பதாக உத்தியோகபூர்வ முடிவை எடுத்தாலும் தமிழரசு எம்.பிக்கள் பத்து பேரும் யாரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள். ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீடும், தவறணை பேர்மிட்டுக்களும், மற்றும் பல சலுகைகளும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரி.என்.ஏ. எடுத்த முடிவுக்கு உதவிய ‘கம்பெரல’ போன்று இந்த முடிவின் பின்னணியில் உள்ளன. இதற்காகத்தான் இழுத்தடித்து இறுதி நேரத்தில் சாக்கு போக்கு காட்டப்போகிறது தமிழரசு. மொத்தத்தில் முன்னாள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூட்டாளிகளான தற்போதைய எம்.பி.க்கள் தமிழ்ப்பொதுவேட்பாளரை ஆதரித்து மனம்விட்டு பிரச்சாரம் செய்யப்போவதில்லை. தமிழ் பொது வேட்பாளர் நிலை நாயைக்கட்டி தனியாகத் தீவில் தவிக்கவிட்டது மாதிரித்தான். தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் உள்ளது.
தமிழ்த்தேசிய கட்சிகளின் இந்த குழப்பத்திற்கு காரணம் தென்னிலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள். நாங்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்ற தமிழ், முஸ்லீம் கட்சிகள் இன்று தங்களின் உட்கட்சி தீர்மானங்களை உறுதியாக எடுக்க கூடிய நிலையில் கூட இல்லை. தேர்தல் கருத்துக்கணிப்பில் ஏற்பட்டு வரும் மாற்றம் கட்சி தாவல்கள், முடிவு எடுப்பதில் உள்ள இழுபறிகளுக்கு முக்கிய காரணமாகிறது. இ.தொ.கா. ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது. 36 இன்னும் ஒரு முடிவிலி…..!
மார்ச் 2023 முதல் யூலை 2024 வரை ஒரு கருத்து கணிப்பு மாதாமாதம் எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் 48 வீதமாக இருந்த அநுரகுமார திசநாயக்காவுக்கான ஆதரவு தற்போது 30 வீதமாக குறைந்துள்ளது. சஜீத் பிரேமதாசவுக்கான ஆதரவு 37 வீதத்தில் இருந்து 43 வீதத்திற்கு அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு 11 வீதமாக இருந்து 20 வீதமாக மாறியுள்ளது. பொதுஜன பெரமுன (நாமல் ராஜபக்ச) ஆதரவு 4வீதமாக இருந்து 7 வீதமாகியுள்ளது. ஆனால் இந்த கருத்துக்கணிப்பு முடிவு தொடர்பில் கவனிக்கவேண்டிய பல விடயங்கள் உள்ளன.
170 இலட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ள இத்தேர்தலில் வெறும் 400 முதல் 1000 வரையானவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கையுடன் பார்க்கையில் ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைந்தளவானவர்களின் கருத்தை கொண்டது. ஆய்வு நிறுவனம் கூறுகின்ற ஆய்வுத்தவறு ஆகக்கூடியது பத்து வீதம். இதுவும் கருத்துக்கணிப்பு புள்ளி விபரங்கள் குறித்த நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. மேலும் இக் கணிப்பு கிட்டத்தட்ட தட்ட ஒன்றரை வருட ஆரம்ப நிலையுடன் ஒப்பிடப்படுகிறது. இடைக்காலப்பகுதியில் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியலில் பல சாதக, பாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை ‘அறகரலய’ காலத்தில் இருந்து இரண்டு வருடங்களாக மேற்கொண்டு வரும் வேட்பாளர்களாக சஜீத் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க உள்ளனர். அப்போது மக்கள் பெருமளவு தமது தேர்வை இவர்கள் இருவருக்கும் இடையேயே மேற்கொள்ள மட்டுமே வாய்ப்பு இருந்தது. தற்போது 39 வேட்பாளர்கள் அதில், நான்கு முக்கிய வேட்பாளர்கள் என்று வரும் நிலையிலும், அவர்களும் கடந்த இரண்டு வருடமாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தினை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் போது நிலைமை மாற்றம் அடைய நிறையவே வாய்ப்புள்ளது. இரண்டு வருடத்தில் தனிக்காட்டு இராஜாக்களாக அநுரவின் 18 வீத வீழ்ச்சி, சஜீத்தின் 6 வீத அதிகரிப்புக்களுடன் ஒப்பிடுகையில் ரணிலின் குறுகிய கால 9 வீத அதிகரிப்பு குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. இனி வரும் ஒரு மாதம் இதைத் தீர்மானிக்கும்.
இந்த வீழ்ச்சியானது தன்னை ஒரு இடதுசாரி வேட்பாளராக, புரட்சிகர சக்தியாக இனம் காட்டிய அநுரகுமாரவை கோயில் குளங்களை நாடச்செய்திருக்கிறது. அவர் சிங்கள மக்களின் வாக்குகளை நோக்கி காய்களை நகர்த்துகிறார். வெறுமனே இரண்டாம் தெரிவை தமிழ்மக்களிடம் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக, தமிழர்கள் இரண்டாம் தர பிரஷைகளாக்கப்படுகிறார்கள். அதற்காக வடக்கில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரியவராக இருந்த ‘ஆனா’ எனப்பட்ட டாக்டர் ஒருவர் குத்தகைக்கு அமர்த்தப்பட்டுள்ள உரையாடல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
சஜீத்தும், ரணிலும் போராடுகிறார்கள். ரணிலின் ‘இமேஜ் ‘ இவ்வளவு விரைவாக அதிகரிக்கும் என்று சஜீத் எதிர்பார்க்கவில்லை. இதனால் தடுமாகிறார். ரணில் தனது கால பொருளாதார சாதனைகளை பட்டியலிடுகிறார். சஜீத் அதற்குள் தவறுகளை தேடுகிறார். மொத்தத்தில் இலங்கை பொருளாதாரம் போன்று மூவரிடமும் நிச்சயமற்ற தன்மையும்,தளம்பலும் நிலவுகிறது.
கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்கும், கிழக்கும் எப்படி வாக்களித்துள்ளன? என்று நோக்குவோமாயின்…., 2010 இல் சரத்பொன்சேகா வடக்கிலும், கிழக்கிலும் சுமார் 5. 5 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். இதில் சரத்துக்கு வடக்கில் கிடைத்தது சுமார் 1.8 இலட்சம். வடக்கு, கிழக்கில் மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் சுமார் 3.5 இலட்சம். அப்போதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்து 75,000 வாக்குகள் வடக்கில் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்துள்ளது. இது இரத்தக்கறை காயுமுன் இடம்பெற்ற ‘பழிவாங்கும் ‘ அரசியல் முடிவு. யுத்தத்தில் இருந்து மீள்வதற்கு முன்னரான தேர்தல் சூழல். இது ஒரு குறிப்பிட்ட காலத்தின் பிரதிபலிப்பு மட்டுமே.
2015 இல் மைத்திரிபால சிறிசேன வடக்கிலும், கிழக்கிலும் சுமார்
9.5 இலட்சம் வாக்குகளை பெற்றார். இது இரண்டு பிரதான கட்சிகள் இணைந்தும், மற்றைய கட்சிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகள். அப்போது மகிந்த ராஜபக்ச சுமார் 3 இலட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். இது யுத்தம் முடிவடைந்த கையோடு பெற்றதையும் விடவும் குறைவானது எனினும் 2010 இல் வடக்கில் பெற்றதை விடவும் அதிகமானது. 1,10,000 வாக்குகளை மகிந்த பெற்றார். இங்கும் ரி.என்.ஏ.யின் கோரிக்கை நிராகரிப்பு அதிகரித்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முற்று முழுதான ஆதரவு இருந்தது. இனப்பிரச்சினைக்கான பொருத்தமான தீர்வுக்காக மக்களுக்கு புதிய அரசியல் அமைப்பு அமைக்கப்படும் என்று நம்பிக்கையூட்டப்பட்டது முக்கிய காரணமாக இருந்தது. இந்த இலக்கை நல்லாட்சி அடையவில்லை.
2019 இல் கோத்தபாய ராஜபக்ச வடக்கு, கிழக்கில் சுமார் 2.75 இலட்சம் வாக்குகளை பெற்றார். மாறாக சஜீத் பிரேமதாச சுமார் 12 இலட்சம் வாக்குகளை பெற்றார். இதுவும் ராசபக்ச குடும்பத்திற்கு எதிரான ஒரு வாக்களிப்பு. ஆனால் சஜீத் வடக்கு கிழக்கில் 12 இலட்சம் வாக்குகளை பெற்றும் வெற்றி பெறமுடியவில்லை. 69 இலட்சம் வாக்குகளில் 66.25 இலட்சம் வாக்குகளை தென்னிலங்கையில் பெற்று ஜனாதிபதியானார் கோத்தபாய. ஆனால் வடக்கில் அவருக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 50,000 மட்டுமே. அதேபோன்று மைத்திரிபால சிறிசேன 2015 இல் தென்னிலங்கையில் 52 இலட்சம் வாக்குகளை பெற்றே வெற்றி பெற்றார். மொத்தம் அவர்பெற்ற 62 இலட்சத்தில் 9.5 இலட்சம் மட்டுமே வடக்கு, கிழக்கு வாக்குகள்.
இன்றைய நிலையில் வடக்கு, கிழக்கு வாக்குகள் தமிழ்ப்பொது வேட்பாளரை முன்னிலைப்படுத்தி சிதறடிக்கப்படுகின்ற நிலையில் ‘திரட்சி’ என்பது வெறும் தேர்தல் புரட்டு. தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கை வேட்பாளர்கள் பெறும் வாக்குகளை எதிர்பார்கின்ற அளவுக்கு குறைக்க முடியாது. ரணில், சஜீத், அநுர வரிசையில் வடக்கு கிழக்கில் குறைந்த வாக்குகளைப் பெறுகின்றவராக அநுர இருப்பார். சஜீத்தின் வாக்குகளை தமிழ்ப் பொதுவேட்பாளர் பிரிப்பதால் அது ரணிலுக்கு சாதகமாக அமையும். நான்கு முனை பிரதான போட்டியில் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெறுகின்ற போதும், வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லீம் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இன்னும் இருக்குமா? என்பது கேள்வியே.
மொத்தத்தில் வடக்கு கிழக்கில் சஜீத்தின் வாக்குகளை அரியநேந்திரன் பிரிக்கிறார். சஜீத்தும்,அரியரும் ஆளுக்காள் பிரித்து கூட்டாக ரணிலின் வாக்குப்பலத்தை அதிகரிக்கிறார்கள். முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உடைவும், தேசிய காங்கிரஸ், ரி.எம்.வி.பி உள்ளிட்ட ரணில் ஆதரவு கட்சிகளின் ஆதரவும், கிழக்கில் தமிழ்த்தேசிய பொதுக் கூட்டமைப்பு, தமிழரசுக்கட்சி, பொதுவேட்பாளர் மீதான அதிருப்தியும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவை தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.