ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா? 

ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா? 

     — கருணாகரன் — 

இலங்கையில் மிக அதிர்ஷ்டசாலியான ஒரு மனிதர் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கதான். யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் பிரமராகியிருக்கிறார். ஹொலிவூட் சினிமாக்களில் வருவதைப்போல தனியொருவராக – ஒற்றை ஆளாக – நின்று ஆட்சி அமைத்திருக்கிறார். 

அவருடைய அமைச்சரவையில் இடம்பெறுகின்றவர்களும் இடம்பெறப் போகின்றவர்களும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதுவரையும் அவரைக் கடுமையாக எதிர்த்தவர்கள், எதிர்ப்பவர்கள். அவரையும் அவருடைய ஆட்சியையும் ஆதரிக்கப் போகின்றவர்களும் கூட எதிர்த் திசையில் நிற்பவர்களே. 

எவராலும் எதுவுமே செய்ய முடியாது என விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியிருக்கிறது. இதனால் ரணில் விக்கிரமசிங்கவையும் அவருடைய ஆட்சியையும் எதிர்க்க முடியாது என்ற நிலையில் எல்லோரும் உள்ளனர். தவிர்க்க முடியாமல் அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவையும் அவருடைய ஆட்சியையும் ஆதரித்தே தீரவேண்டும். அல்லது பொறுமையாக அதை ஜீரணித்துக் கொள்ள வேணும். 

மறுத்து, எதிர்த்தால் வரலாற்றுப் பழி வந்து விடும். அது அரசியல் படுகுழியாகி விடும். நாட்டின் நிலையும் மக்கள் மனநிலையும் அந்தளவுக்கு வந்துள்ளது. 

இதனால், இந்த நிர்ப்பந்தத்தால் விரும்பியோ விரும்பாமலோ ரணில் அரசாங்கத்தை ஆதரித்தே ஆக வேண்டும் என்றாகியுள்ளது. 

இதை, இந்த வாய்ப்பை கடந்த தேர்தலில் வெற்றியைப் பெற்றிராத ஐக்கிய தேசியக் கட்சியோ ரணில் விக்கிரசிங்கவோ எதிர்பார்க்கவில்லை. ஏன் இலங்கையில் மட்டுமல்ல, உலகத்திலேயே கூட யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

ஆனால், நடந்துள்ளது. அவருடைய ஐக்கிய தேசியக் கட்சியில் அவரைத் தவிர வேறு யாருமே தெரிவாகவில்லை. ஏன் அவர் கூடக் கடந்த (2020) தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று அவர் இலங்கையின் பிரதமர். 

ஆகவே காலம் அவருக்கு அளித்த பரிசு என்றே இதைச் சொல்ல வேண்டும். அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றவர்களும் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகளும் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது தேர்தலில் தெரிவாகியிருக்காத –நிராகரிக்கப்பட்டவர் பிரதமராகியிருக்கிறார் என்றால்…! 

இதற்குக் காரணம், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் ராஜபக்ஸவினரின் ஆட்சித் தவறுகளுமே. 

மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் தவறுமாகும். 

இவர்கள் விட்ட தவறுகளால்தான் அதிக வாக்குகளைப் பெற்றவர்களும் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாது என்று தடுமாற வேண்டியிருந்தது. 

மட்டுமல்ல, வரலாற்றின் இந்த அபூர்வ தருணத்தில் தமிழ்,முஸ்லிம், மலையகக் கட்சிகள் –இனத்தவர்களிடையே இருந்து ஒருவரைக் கூட பிரதமராக்க முடியவில்லை. இதை ராஜபக்ஸவினரிடம் கேட்க முடியாதிருக்கலாம். ஆனால் எல்லா இனத்தவர்களும் இணைந்து போராடும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகின்றவர்களிடத்திலும் கேட்க வேண்டும். 

அப்படியொரு தெரிவு நடந்திருந்தால் அது பொருளாதாரப்பிரச்சினையோடு, இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான தொடக்கப்புள்ளியாகவும் இருந்திருக்கக் கூடும். நல்லிணக்கத்தின் மெய்யான புள்ளியைத் தொட்டதாகவும் இருந்திருக்கும். 

அதற்கான சூழல் இன்னும் கனியவில்லை என்று வைத்துக் கொள்வோம். 

இப்பொழுது உள்ள சூழலில் தனியொருவராக – எந்த ஆதரவுப் பின்னணியும் இல்லாமல் துணிவோடு ரணில் முன்வந்ததே அவருடைய வெற்றியாகும். 

இதற்கு அவருக்குப் பின்னணி ஆதரவுகள் இருந்திருக்கலாம். (அப்படிப் பலமாக ஊகிக்கப்படுகிறது). ஆனாலும் அதை மட்டும் நம்பாமல் தன்னை நம்பிக் களத்தில் ஒரு போர் வீரரைப் போல இறங்கியதே அவருடைய வெற்றியாகும். 

ஆனாலும் இந்த வெற்றியை அவருடைய ஆட்சியே உறுதிப்படுத்த வேண்டும். 

ஏற்கனவே இந்த மாதிரி அவருக்கு எதிர்நிலையில் இருந்த இரண்டு ஜனாதிபதிகளால் தன்னுடைய ஆட்சியைத் தொடர முடியாமல் பதவியை இழந்த அனுபவம் அவருக்குண்டு. அப்படியிருந்தும் மூன்றாவது தடவையும் தலையைக் கொடுத்துள்ளார் என்றால்.. அது சாதாரணமானதல்ல. 

இப்பொழுது தவிர்க்க முடியாமல் அரசாங்கத்தில் பங்குபற்றப் போகும் கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகளுமாக (ஆதரித்தே ஆக வேண்டும் என்ற நிலையில்) ஏறக்குறைய அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளது. 

இப்படி முழுமையான ஆதரவு கிடைத்தாலும் அது எந்தளவுக்குச் செல்லும்? எதுவரை தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை.   

ஏனென்றால் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி ஒரு தேசிய நெருக்கடியாக உணரப்படுவதைப்போல அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் உணரப்பட வேண்டும். அப்படி உணரப்பட்டால்தான் தீர்வைக் காண்பது இலகு. அதுதான் விரைவான மீட்புக்கு உதவும். 

இதற்கு ஒருங்கிணைந்த சிந்தனை வேண்டும். அல்லது பல நிலைப்பட்ட சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் ஆற்றல் வேண்டும். 

இலங்கையின் அரசியல் பண்பாட்டில் அப்படியான ஒருங்கிணைந்த சிந்தனையோ அல்லது பல நிலைப்பட்ட சிந்தனைகளை ஒருங்கிணைத்துத் தீர்மானங்களை எடுக்கும் மரபோ இல்லை. 

இங்கே நிலவுவது, கட்சிகளின் இருப்பும் வெற்றியைக் குறித்த இலக்கு – நோக்குமே. கட்சிகளுக்குள்ளும் தமக்கான இடத்தை – வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்புமே. 

இப்படியான ஒரு மரபுச் சூழலில் எப்படி இந்தத் தேசிய நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது? 

நாடோ மிக அபாய நிலையில் உள்ளது. 

ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் பிரதமர். எதையும் மக்களுக்கு மறைப்பதற்குத் தான் விரும்பவில்லை. மக்களுக்கு உண்மைகள் தெரிய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், எதிர்வரும் காலம் என்பது மிகக் கடினமான நாட்களைக் கொண்டதாக இருக்கும் என எச்சரித்துள்ளார். அல்லது அறிவுறுத்தியுள்ளார். 

நிலைமையை மாற்றியமைப்பதற்கு தான் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் பிரதமர் கூறியிருக்கிறார். குறிப்பாக சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்போல வேறு நிறுவனங்கள், சபைகளும் தனியார் மயப்படுவதற்கான சந்தர்ப்பமுண்டு. 

இப்பொழுது நாடு வெற்றிடமாகவே உள்ளது என்பதை அவருடைய அறிவிப்பிலிருந்து நாம் உணர முடிகிறது. இதையே முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவும் பொறுப்பேற்ற காலத்தில் கூறியிருந்தார். 

ஆகவே, நிலைமை படுமோசமாகவே உள்ளது. இப்பொழுது இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது கோதுமை மாவின் விலை 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது. பாணின் விலை 30 ரூபாயினால் கூடியுள்ளது. 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எரிபொருள் விநியோகம் சீராகவில்லை. மின்தடை நீங்கவில்லை. இதெல்லாம் இப்போதைக்கு சீராகும் என்றில்லை. இதற்குக் காலம் எடுக்கும். அந்தக் காலத்தைத் தாக்குப்பிடிக்கக் கூடிய ஆட்சி வேண்டும். அல்லது விரும்பியோ விரும்பாமலோ கட்சி அரசியலுக்கு அப்பால் ஆட்சியை ஸ்திரப்படுத்த வேண்டும். 

அதோடு இந்த அபாய நெருக்கடிக்குத் தீர்வு காணக் கூடியவாறு ஒரு முகப்பட்டு தீர்மானங்களை எடுக்கின்ற ஒரு ஒழுக்கம் தேவைப்படுகிறது. 

இதை எப்படி உருவாக்குவது? 

மக்களின் மீது அக்கறை கொண்டு செயற்படுவதன் மூலமே இதை உருவாக்க முடியும். 

மக்கள்தான் நாடு. நாடு என்பது வெறும் நிலமும் கடலும் மலைகளும் காடுகளும் அல்ல. அது மக்களும் அவர்களுடைய வாழ்க்கையுமாகும். 

மக்களுடைய வாழ்க்கையைப் பாதுகாப்பது என்பது மக்களைப் பாதுகாப்பதாகும். மக்களைப் பாதுகாப்பது என்பதே நாட்டைப் பாதுகாப்பது என்பதாகும். 

இதைச் செய்ய முன்வராத சக்திகளையும் ஆட்களையும் மக்கள் இனங்காண வேண்டும். அவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும். அல்லது நிராகரிக்க வேண்டும். 

இது மக்கள் 100 வீதம் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் மக்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் இதைச் செய்துதான் ஆக வேண்டும். 

தமக்கு ஏற்பட்ட நெருக்கடியை முன்னிறுத்தி, அதற்கு எதிராகப் போராடியபடியால்தான் சிறிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். 

ஆகவே அதற்குத் தொடர்ந்து போராட வேண்டும். தொடர்ந்து விழிப்பாக இருக்க வேண்டும். 

மக்களே வழிப்படுத்துநர்களாக இருக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இது. 

நெருக்கடிகள் உச்சமடையும்போது மக்களின் பங்கேற்பு உருவாகுவது உலக நியதி. உலகெங்கும் இதுவே நடந்துள்ளது. ஆகவே இந்த ஆட்சியை மக்களே வழிநடத்த வேண்டும். புதிய அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ளது. புதிய பிரதமரும் அமைச்சர்களும் வந்துள்ளனர். ஆகவே இனிப் பிரச்சினையில்லை. எல்லாமே சீராகி விடும் என்று நம்பவோ எதிர்பார்க்கவோ முடியாது. அதையே புதிய அரசாங்கத்திலும் தொடரும் நிலையும் பிரதமரின் அறிவிப்பும் சொல்கின்றன. 

மக்கள் அரசாங்கத்தை வழிநடத்தால், அதைச் சரியாகக் கண்காணிக்காமல் விட்டதன் தவறே இன்றைய அறுவடை என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மக்கள் அரசாங்கத்தை வழிப்படுத்துவது, கண்காணிப்பதுடன் தம்முடைய வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேணும். நெருக்கடி நிலைக்கு ஏற்ப வாழ்க்கை முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. உணவு, உடை, போக்குவரத்து, பண்பாட்டு நிகழ்வுகள் என அனைத்திலும் இந்த மாற்றம் தேவை. அத்துடன் முக்கியமாக உழைப்பிலும் உற்பத்தியிலும் பன்மடங்கு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். எல்லோரும் இரண்டு அல்லது இரண்டரை மடங்கு  உழைக்க வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் தனியே உத்தியோகம் என்று அலுவலக வட்டத்திற்குள் சுற்றிக் கொள்ளாமல் களத்திலும் பணியாற்ற வேண்டும். இந்தப் பணி ஏதோ கடமைக்குச் செய்யும் பணி என்றில்லாமல் அர்ப்பணிப்புடன், புதிதாக்குகிறோம் என்ற உணர்வுடன் செய்யப்பட வேண்டும். 

இப்படி அனைத்துத் தரப்பிலும் ஒரு முகப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே இந்தத் தேசிய இடரை நீக்கப்பயன்படும். இதற்கான வழியை அரசாங்கமும் காட்ட வேண்டும். புதிய பிரதமரும் அவரை அங்கீரித்துள்ள ஜனாதிபதியும் கூட்டாக இணைந்து இந்த வழிகாட்டலைச் செய்ய வேண்டும். அவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பு மக்களுக்கு. ஆக பரஸ்பர உறவும் பங்கேற்புமான நிலையில்தான் புதிய சூழலை உருவாக்க முடியும்.