— அழகு குணசீலன் —
“மின்சாரக்கதிரைகளில் இருக்கவேண்டிய உங்களை காப்பாற்றியவன் நான்” என்று ஒரு சந்தர்ப்பத்தில் ராஜபக்சாக்களைப் பார்த்து ஒருவர் சொன்னார். அவர் வேறுயாருமல்ல இன்றைய இடர்க்காலப் பிரதமர் ரணில்தான் அவர். இப்போது அதற்கு கைமாறாக பிரதமர் இருக்கையை வழங்கி இருக்கிறார் கோத்தபாயா ராஜபக்ச. ஆக, கதிரைக்குக் கதிரை கைமாறியிருக்கிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் குடும்ப உறவினரான ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு உயர்மேட்டுக்குடியில் பிறந்து, வளர்ந்து அரசியலுக்கு வந்த ஒருவர். 1970ஆம் ஆண்டு களனி தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளரானார் ரணில். அப்போதுதான் ரணிலுக்கு அரசியல் கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்து விட்டவர் மாமனார் ஜே.ஆர். களனி ஜே.ஆரின் தொகுதி இங்கிருந்துதான் பண்டா -செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். கண்டிக்குப் பாதயாத்திரை போனார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
தாராளவாத, கட்டற்ற முதலாளித்துவக் கொள்கையையும், மேற்குலக அரவணைப்பையும் கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியில் 1977 தேர்தலில் பியகம தொகுதியில் வெற்றிபெற்றபோது பாராளுமன்ற கதவும் ரணிலுக்கு திறந்தே இருந்தது.
‘பங்கிடுபவன் நம்மாள் என்றால் முதல்பந்தி என்ன, கடைப்பந்தி என்ன’ என்று சொல்வார்கள். 1977 இலேயே வெளியுறவு பிரதி அமைச்சராக ஜே.ஆர்.ஆல் நியமிக்கப்பட்டார் ரணில். பின்னர் இளைஞர் விவகாரம் வேலைவாய்ப்பு, கல்வி, கைத்தொழில் தொழில்நுட்பம், பொருளாதார திட்டமிடல், கொள்கை வகுப்பு என பல அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகித்து பிரதமர் நிலை வரையும் உயர்ந்தவர்.
ஏற்கனவே ஐந்து தடவைகள் ரணில் பிரதமராக பதவிவகித்துள்ள போதும் அவை எல்லாம் குறுகிய காலங்கள். எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் பத்து ஆண்டுகளையும் தேறாது. 1977 முதல் 9 பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள ரணில் விக்கிரமசிங்க கடந்த 2020 தேர்தலில் முதன்முதலாக தோல்வியடைந்தார். இதைத் தவிரவும் இரு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் ரணிலுக்கு வழங்கிய பட்டம் “ராசி இல்லா ராஜா”.
ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி ஏற்பு குறித்து எதிரணியினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவர்களின் வாதங்களின் தேறல் பிரதமர் நியமனம் ஜனநாயகத்திற்கு முரணானது என்பதே.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்று தீவிர கோரிக்கை வைத்த எந்த அரசியல்வாதியும், ஜனாதிபதி அழைப்பு விட்டும் தனித்தோ அல்லது கூட்டாகவோ பிரதமர் பதவி குறித்து ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. விளைவு தனிமரமாக சும்மா இருந்த ரணிலுக்கு லொத்தர் விழுந்தது.
மூத்த அரசியல்வாதியான அவரின் செயற்பாடுகளில் அரசியல் முதிர்ச்சி இருக்கிறது. அதேவேளை தந்திரோபாய ரீதியான அணுகுமுறைகளும், நடைமுறைகளும் நிறையவே இருக்கின்றன. சமகால அரசியல், பொருளாதார நெருக்கடிகளை கணக்குப்போட்டு காய்களை நகர்தியதற்காக ரணில் இன்று பிரதமர் பதவியை அறுவடை செய்திருக்கிறார். குட்டி ஆடு குடலேறக்கொழுத்தும் “அரசியல் தளம்பலில்” தடுமாறியதால் ரணிலுக்கு இருந்த தடையையும் “சஜீத்” தானே நீக்கி தனக்குத்தானே ஆப்பு வைத்துள்ளார்.
ரணில் தற்போது தான் ஜனாதிபதியாவதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். கோத்தா கோ கம அகற்றப்படமாட்டாது. போராட்டக்கார்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படும். பேச்சுவார்த்தைக்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கோத்தா பதவி விலகும்வரை ரணில் பிரதமர். பாராளுமன்றத்தில் கோத்தா ஆதரவாளர்களும், எதிரணியின் ஒரு பகுதியினரும் அவரை ஆதரிப்பார்கள். கோத்தா பதவி விலகும் நிலை ஏற்பட்டால் பிரதமரே இடைக்கால ஜனாதிபதி ஆவார். அந்த இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. வெற்றிடமாகும் பிரதமர் பதவிக்கு சஜீத் அல்லது சிறிசேன இவர்களில் ஒருவர். இணக்கப்பாடு ஒன்று ஏற்படாவிட்டால் பாராளுமன்ற பெரும்பான்மை சிறிசேனவுக்கே. சஜீத்துக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை. ஆக, நல்லாட்சி தலைமைத்துவம் இடம்மாறுகிறது. ரணில் ஜனாதிபதி! சிறிசேன பிரதமர்!!
பாராளுமன்றத்தில் இரு தடவைகள் இடம்பெற்ற உபசபாநாயகர் தேர்வையும், சுமந்திரனின் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையையும் இதற்கான வெள்ளோட்டமாகக் கொள்ளமுடியும். காலிமுகத்திடலில் என்னதான் நடந்தாலும் சட்டரீதியான பாராளுமன்றப் பெரும்பான்மை ராஜபக்சாக்களின் பக்கமே உள்ளது. ரணிலின் வரவு அதைமேலும் பலப்படுத்தியுள்ளது என்பதே உண்மை.
ரணிலின் பாணி தனி ( நரி) ப்பாணி..!
இலங்கைப் பாராளுமன்றத்தில் பலர் வேலிக்கு மேலால் எட்டிப்பார்த்து “கொம்புகின்ற” வெறும் சத்தவெடி பேச்சாளர்களாக இருக்கும்போது ரணிலின் பேச்சும், உள்ளடக்க விடயதானமும் வித்தியாசமானது. அமைதியாக, ஆத்திரப்படாமல் நாகரிகமாக சபையில் முன்வைக்கின்ற ரணிலின் பாணி தனிப்பாணி.
“உயிரைப் பணயம் வைத்து, இந்தச் சவாலுக்கு நான் முகம் கொடுத்துள்ளேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பையும் எனக்கு தாருங்கள்” என்று தனது உரையில் கூறியிருக்கிறார் ரணில். அவரது பயணம் உயிரைப் பணயம் வைத்தது என்பதையும், சவால்களை கொண்டது என்பதையும் நடந்து முடிந்திருக்கின்ற வன்முறைகளுக்கும் பின்னர் எவரும் மறுக்க முடியாது.
இது அவருக்கு பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் ஒரு மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் முதிர்ச்சியையும், அனுபவத்தையும், காற்று வளம் பார்த்து படகோட்டும் வித்தையையும் வெளிக்காட்டுவதாக அவர் பாணி அமைந்ததால் மக்களுக்கும் அவர்மீது நம்பிக்கை ஏற்பட்டது. இன்றைய பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கைக்குரிய ஒருவராக ரணிலை இது மாற்றியது. இது விடயத்தில் அவரோடு போட்டியிட பாராளுமன்றத்தில் எவரும் இல்லை.
ஜனநாயகம் பற்றிப் பேசுகின்ற பிராந்திய, மேற்குலக அரசியல் தலைமைகளையும், இராஜதந்திரிகளையும் இலகுவில் கட்டிப்போட ரணிலுக்கு இந்தப்பாணி பெரிதும் உதவியது. அவர் பதவி ஏற்றபோது அவருக்கு இராஜதந்திர உலகில் கிடைத்த வரவேற்பு இதனையே காட்டுகிறது. அவர்கள் ரணிலை தங்களில் ஒருவராக நம்புகிறார்கள்.
ஆனால் இவை அனைத்தும் ரணிலின் வெளித்தோற்றப்பாடுகள்தான். பொய் முகம்தான். அப்படியெனில் ரணிலின் மறுபக்கம் அல்லது உண்மையான ரணிலின் முகம் என்ன? அது இனப்பிரச்சினைக்கான தீர்விலேயே பெரிதும் அம்பலமாகிப்போகிறது.
உண்மையில் ரணில் ஒரு புலித்தோல் போர்த்த பசு. அவரின் கடந்தகால அரசியல் பயணத்தை திரும்பிப்பார்த்தால் அது வெளிப்படும். ரணில் “நம்பநட நம்பி நடவாதே” என்ற நரிக் குணாம்சம் கொண்டவர். இதனால்தான் அவரது நியமனத்தின் போது ஒப்பாரி வைத்தவர்கள் பலரும் இப்போது படிப்படியாக அடக்கி வாசிக்கத் தொடங்கிவிட்டனர்.
அதுமட்டுமின்றி அவரின் பிளஸ், மைனஸ்களை அறிந்தவர்கள் கூட காலைவாரிவிடாமல் ஒத்துழைக்கவும் தயாராக உள்ளனர். நல்லாட்சியில் சூடுகண்ட தமிழ்த்தேசியப் பூனைகள் கூட கண்களை மூடிக்கொண்டு பால்குடிக்க தயார் என்று அறிவித்து விட்டன. அமெரிக்கத்தூதுவர் சந்தித்தவுடன் அநுரகுமார அடங்கிவிட்டார்.
ரணிலின் கடந்த கால பாராளுமன்ற உரைகளைப் படிக்கும் எவரும் இலங்கையின் எரியும் தேசிய இனப்பிரச்சினை குறித்து அவர் குறைவாகவே பேசியிருப்பதை அவதானிக்கமுடியும். பௌத்த சிங்கள தேசியவாதிகளின் கருத்தோடு இணங்கிப்போகின்ற ஒருவராக அவர் இருந்ததினால் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அவர் அதிகம் அக்கறை காட்டியதில்லை. மாறாக விடுதலைப்புலிகள் அமைப்பை உடைத்து, கருணா அம்மானை பிரிப்பதில் ரணிலுக்கும் பங்கு இருந்தது.
சந்திரிகாவின் கீழ் பிரதமராக இருந்தபோதும், சிறிசேனவின் கீழ் நல்லாட்சியில் பிரதமராக இருந்த போதும் தீர்வுக்கான வாய்ப்பு அவருக்கு நிறையவே இருந்தது. ஆனால் யுத்தத்தின் மூலம் தீர்வு காண்பதையே அவர் மாமா ஜே.ஆர்.இன் பாணியில் கொண்டிருந்தார். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போதும் ஜே.வி.பி.யின் கருத்தே ரணிலின் கருத்தாக இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களான – ஜே.ஆரின் செல்லப் பிள்ளைகளான லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்றோர் பிரேமதாசவுடன் முரண்பட்டபோதும் ரணில் தனது இலாப நட்டக்கணக்கிலேயே குறியாய் இருந்தார். பிரமேதாசவின் கொலை ரணிலைப் பிரதமராக்கியது.
இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயம் ரணில் சிலுசிலுப்பு இல்லாமல் பலகாரம் சுட்டதால் புலிகளில் இருந்து மட்டுமல்ல ஜே.வி.பி. யின் வன்முறைகளில் இருந்தும் தப்பித்தார். ஆம் …. இவர்தான் ரணில்.
மேற்குலகம் எப்போதும் சந்திரிகாவை மேற்குலக எதிர்ப்பு பண்டாரநாயக்க குடும்பத்தவராகவே அடையாளப்படுத்தியது. இது ஜே.ஆர்.வாரிசு ரணிலுக்கு வாய்ப்பாக அமைந்தது. அதனையே ரணில் இன்றும் அரசியலில் அறுவடை செய்கிறார்.
2002 இல், 18 ஆண்டுகளுக்குப்பின் வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபரைச் சந்திக்கின்ற ஒரு இலங்கைத் தலைவராக ரணிலை அமெரிக்கா வரவேற்றது. ஜோர்ஜ் புஷ் இன் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் அமெரிக்கா இலங்கைக்கு ஆயுத உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்கியது. இது ரணில் – புஷ் சந்திப்பின் விளைவு. இது இனப்பிரச்சினையை யுத்தத்தினால் தீர்க்கும் ரணிலின் அமைதி அணுகுமுறை.
நோர்வே சமாதான யுத்த நிறுத்த காலத்தில் ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைத் தலைமையகம் இலங்கை இராணுவத்திற்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியது. முப்படைகளினதும் போர்த்திறனை அதிகரித்தல் இங்கு முக்கிய இலக்கு. இதற்காக சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளையும் மற்றும் கிபீர் ,எம்.ஐ.24 விமானங்களையும், சமுத்திரா சண்டைக்கப்பலையும் புஷ் -ரணில் சந்திப்பு இலங்கைக்கு வழங்கியது.
புஷ் – ரணில் சந்திப்பு மற்றைய மேற்குலகத் தலைவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை ரணிலுக்கு இலகுபடுத்தியது. அன்றைய பிரித்தானிய, ஜப்பான், இந்தியப் பிரதமர்களை ரணில் சந்தித்து, புஷ் ஆசீர்வாதத்துடன் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவி கோரினார். இதன்மூலம் ஒரு மறைமுகமான கூட்டை சத்தம் இல்லாமல் ரணில் அமைத்தார். சர்வதேசத்தில் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்வதற்கும், தடைசெய்வதற்கும் ரணில் பின்னணியில் இருந்தார்.
இவற்றை விடவும் ரணில் இளைஞர் சேவைகள் மன்றத்தை தனது அமைச்சுக்காலத்தில் உருவாக்கினார் என்பதுதான் அவரின் சாதனையாகப் பலருக்கு தெரிந்தது. ரணில் ஒரு இராணுவ துணைப்படை கட்டமைப்பை ஏற்படுத்தினார் என்பது இன்றைய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1988- 1990 காலப்பகுதியில் SRILANKAN NATIONAL GUARD (SLNG) என்ற இந்த துணைப்படை இலங்கை இராணுவத்தின் மிகப்பெரும் துணைப்படையாக இருந்தது. 20 பட்டாலியன்களைக்கொண்ட இந்த துணைப்படைப்பிரிவு இலங்கை இராணுவத்தின் கீழ் தொண்டர் படையாக செயற்பட்டது. இவர்களே வட்டலந்ந தடுப்பு முகாமுக்கும் பொறுப்பாக இருந்தார்கள். ரணிலின் மேற்பார்வையிலும், ஆலோசனையிலும் இந்த முகாம் செயற்பட்டது.
ஆக, அவர்தான் இவர். இவர்தான் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இவரிடம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தமிழ்த்தேசியம் தேடுவது தீராத துயரம்.
ஆனால் ரணிலுக்கு தேசிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திறனும், மேற்குலக உறவும், உதவியும், பலமும் நிறையவே இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ரணிலின் அரசியல் வாழ்வில் இதுவே அவருக்கான இறுதிச் சந்தர்ப்பம். இலங்கையின் அரசியல் வரலாறு ரணிலின் பெயரை சற்று வித்தியாசமாகவே பதிவு செய்யும்.