கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம் 

கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம் 

    — வேதநாயகம் தபேந்திரன் — 

 கொழும்பு லொட்ஜ்களுக்கும் (லாட்ஜ்?) எமக்கும் போர்க் காலத்தில் நகமும் சதையுமான வாழ்க்கை முறையொன்று இருந்தது. போரின் வெம்மை தாளாமல் வடக்கு கிழக்கை விட்டுத் தப்பியோடிய பலருக்கு அடைக்கலம் கொடுத்தவை இவை. 

நெல்லியடிக்காரரைச் சந்திக்க வேண்டுமா? பம்பலப்பிட்டி காசில் லொட்ஜ்க்குப் போங்கோ. 

இணுவில் ஆக்களைக் காண வேண்டுமா? ஆட்டுப்பட்டித்தெரு பி.ஜி.லொட்ஜ்க்குப் போங்கோ. 

இப்படியே ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்கள் இருந்தன. லொட்ஜ் உரிமையாளர்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தமது ஊரவரை உறவினரை அரவணைத்தபோது அது அந்த ஊரவரின் அடையாளமாக இருந்து. 

ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்களும் இருந்தன. 

பணவசதி படைத்த டீசன்ரான கிறவுட் என்றால் வெள்ளவத்தை. பணவசதி குறைந்த பாமர மக்களாயின் கொட்டஹேன (கொட்டாஞ்சேனை), புறக்கோட்டை போன்ற இடங்கள்தான் கைகொடுக்கும். 

ஆகவும் பணவசதி குறைந்தோராயின் நீர்கொழும்பு. 

1980களின் இறுதி, 1990களில் வத்தளை, சீதுவ, ஜாஎல போன்ற இடங்களை தமிழர்கள் எட்டியும் பார்க்க முடியாது. 

லொட்ஜ்ஜில் தங்குவதானால் பொலிஸ் றிப்போட் கட்டாயமென்ற நடைமுறை பிற்காலததில் வநதது. 

கொழும்பு சென்றால் லொட்ஜில் தங்காமல் வடபகுதிக்குத் திரும்பிவரும் வாழ்க்கை ஒன்றிற்குள் வந்துவிட்டோம். போரின் நிறைவு தடையற்ற வாழ்க்கையைத் தந்தமையை வரவேற்கத்தான் வேண்டும். ஆனாலும் லொட்ஜ் வாழ்க்கையின் ஞாபகங்கள் அடிக்கடி தாலாட்டவே செய்கின்றன. 

யாழ்ப்பாணத்தான் ஆளுக்குச் சாதி பார்ப்பதுபோல லொட்ஜ்சுக்கும் சதிபார்த்தன். 

ஐலண்ட் லொட்ஜ் என்றால் அதுக்கு ஒரு பெயர். பி.ஜி.லொட்ஜ் என்றால் அதுக்கு ஒரு ஸ்ராண்ட்டட். 

லொட்ஜ்களைச் சுற்றி ஒரு ஆட்டோக்காரக் கூட்டம் இருக்கும். தமிழிலும் சிங்களத்திலும் வெளுத்து வாங்குவார்கள். 

பாஸ்போட் எடுக்க வேண்டுமா? ஐசி எடுக்க வேண்டுமா? பிறப்புச் சான்றிதழ், விவாகப்பதிவுச் சான்றிதழ் எடுக்க வேண்டுமா?தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களுக்குச் செல்லவேண்டுமா? 

எல்லாமே ஆட்டோக்காரருக்கு அத்துப்படி. 

அதுபோல சிங்களத்தில் கதைத்துக் காரியமாற்றத் தெரிந்தவர்களுக்கும் படிவங்களை ஆங்கிலத்தில் சரியாக நிரப்பத் தெரிந்தவர்களுக்கும் தனிமதிப்பு. 

அப்போதெல்லாம் ஒன்லைன் சிஸ்ரங்கள் இல்லை. அதனால் வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களின் படிவங்களைச் சரியாக நிரப்பத் தெரிந்தோருக்கு உயர்மதிப்புச் சுளையன வருமானம். 

ஏன் இப்போது கூட ஒன்லைனில் சரியாக நிரப்பத் தெரிந்தோருக்கு மாத வருமானம் இலட்சங்களைத் தாண்டும். 

அன்றைய நாள் லொட்ஜ்சுகளில் வெளிநாட்டுக் கனவுடன் இளைஞர்களும், யுவதிகளும் வந்திருந்தார்கள். விடுதலைப் புலிகளைப் பிடிப்பதற்கென்று நடக்கும் சுற்றிவளைப்பில் அப்பாவிகளானோர் தப்பவேண்டும். 

பகல் முழுவதும் அலுத்துக் களைத்துத் திரிந்தபின் இரவு நல்லதொரு மெய் உறக்கத்தில் இருப்போம். புலிவேட்டைக்கென பொலிஸ், ஆமிப்படையொன்று வரும்.  

சந்தேகப்பட்டு பொலிஸ் பிடித்தால் உடுத்த உடுப்புடன் அரைகுறை நித்திரையால் கண்ணெரிய கண்ணெரியப் பயந்த பயந்த பொலிஸ் ஸ்ரேசன் போகவேண்டும்.  

பொலிஸ் பிடித்துப்போனால் லொட்ஜ் மனேச்சரோ, முதலாளியோ போய்த்தான் மீட்கமுடியுமென்ற நிலையும் பலருக்கு இருந்தது. பொலிஸ் அணைவு இல்லை. சிங்களம் தெரியாது போன்ற காரணங்களே இதற்குக் காரணம். 

பிணை எடுத்துவிடுவோருக்கு வெளிநாட்டுப் பணத்திலோ, கொண்டுவந்த காசிலோ கவனிப்பு இருக்கும். 

பயணம் சரிப்பட்டால் லொட்ஜ்காரனே பொலிசுக்குத் தகவல்கொடுத்துப் பிடிக்கச்செய்து ஆயிரங்களோ ஓரிரு இலட்சங்களோ கறந்துவிட்டுப் பிணை எடுத்த சம்பவங்களும் உண்டு. 

யாழ்ப்பாணத்து வேலிக்குள் கட்டுக்கோப்பாக இருந்த சில குமருகள கட்டுப்பாடன்றி கட்டாக்காலயாக இருந்த கோலங்களம் உண்டு. 

வெளிநாட்டு மாப்பிளையை மறந்து ஆட்டோக்காரனோடையோ, மினி சினிமாக்காரனோடையோ அல்லது பயணம் போகவந்த இளைஞனோடையோ புதுக்குடித்தனம் நடத்திய விடலைப் பெண்களும் உண்டு. 

ஊரில் சகோதரிகள் குமராக இருக்க வெளிநாடுபோய் உழைத்துக் கரைசேற்றுவேன் எனவந்த சிலபெடியள் வெளியூர்க்காரிகளிடம் கொண்டாட்டம் வைத்து மடியில் இருந்தவற்றையெல்லாம் கொடுத்து ஒட்டாண்டியான சங்கதிகளும் உண்டு. 

வெளிநாட்டுக் கனவைக் கைவிட்டு, வெள்ளை சொள்ளையாக ஒருத்தியைப் பார்த்து குடும்பமாகியரும் உண்டு. 

போரின் வெம்மையால் கொழும்புக்கு ஓடிவந்து பயணம் போகவும் வழியின்றிச் சாப்பிடவும் வழியுமன்றி அல்லாடியரும் உண்டு. 

அரைப்பாசல் சோற்றையெடுத்து அதையே அரை அரைவாசியாக உண்டு வறுமை மறைத்து வாழ்ந்தோரும் உண்டு. 

லொட்ஜ்களில் தொலைபேசி வசதிகள் இருக்கும். கண்ணாடியால் சுற்றிவர அடித்த சிற்றறை ஒன்றில்தான் பெரும்பாலும் தொலைபேசி கதைக்கவேண்டும்.  

வெளிச்செல்லும் அழைப்புக்கு ஒரு கட்டணம். உள்வந்த அழைப்புக்கு இன்னுமொரு கட்டணம். 

15 நிமிடங்கள் கதைத்தால் 20 நிமிடங்களெனப் பொய்க் கணக்குவிட்டு ஏற்கனவே உள்ள கொள்ளைக் கட்டணத்தைவிட இன்னுமொரு கொள்ளையடிக்கும் சில வித்துவான்களும் உண்டு. 

இன்றி சிறிதேவிரெயின் அதிகாலையில் சீறிக்கொண்டு ஓடுகிறது. அதன் பின்னால் அடுத்தடுத்து ரெயின்கள் ஓடுகிறது. அதிகாலையில் வெளிக்கிட்டால் அடுத்தநாள் அதிகாலையில் வீடு. 

அதுபோல ஏசி பஸ்ஸா காசு குறைந்த தூசி பஸ்ஸா ஒன்றல்ல இரண்டல்ல ஒரு நூறு ஓடுகிறது.  

இரவு ஏறினால் விடிகாலை கொழும்பு. உடனேயே அலுவல் முடித்தால் மதியம் பஸ் எடுத்தால் முதல் சாமம் வரமுன்பே வீடு. 

எம்மவரின் புலம்பெயர்வுக்கும் ஏஜென்சித் தொழிலுக்குமான தொடர்புக்கு மிக நீண்ட வரலாறு உண்டு.  

இடைத்தங்கல் நாடுகளில் இருந்த ஏஜென்சிகளின் கதைகள் எனச் சொல்லப்போனால் அவை அதிகம் அதிகம். 

போர் முடிந்து 13 வருடங்களைக் கடந்து வந்துவிட்டோம். ஆதனால் ஏஜென்சித் தொழிலில் பெரும் தேய்வு ஏற்பட்டுவிட்டது.