— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி இடைக்கால அரசை ஏற்படுத்துமாறு மீண்டுமொருமுறை (நான்காவது தடவையாக) மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியிருந்தனர். ஜனாதிபதி-பிரதமர்-எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இக்கோரிக்கை கூட்டறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து 07.05.2022 அன்று ஜனாதிபதி கோட்டபாய எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவிடம் சர்வகட்சி இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கு ஆதரவை நாடியிருந்தார். இதன்போது சஜித் பிரேமதாச இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பதின்மூன்று அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால் அதனடிப்படையில் சர்வகட்சி இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்கத் தயாரென்று ‘பச்சைக்கொடி’ காட்டியிருந்தார்.
மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பத்திலிருந்தே அரசியல் நெருக்கடிக்கான உடனடிப் பரிகாரமாக இவ்வாறான இடைக்கால அரசு ஒன்றையே யோசனையாக முன்வைத்திருந்தது. இறுதியாக இத்தகைய இடைக்கால அரசின் பிரதமராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்ளவும் தயாரென கட்சி அறிவித்துமிருந்தது. ஜேவிபியும் சற்று இறங்கி வந்து சில நிபந்தனைகளின் பேரில் இவ் இடைக்கால அரசை வெளியிலிருந்து ஆதரிப்பதாகவும் கூறியிருந்தது. ஆனால் இதற்கு வழிவிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாமல் இழுத்தடிப்புச் செய்து கொண்டிருந்ததே இடைக்கால அரசு விவகாரத்தை முன்கொண்டு செல்லத் தடையாக- அடைப்பாக (Bottle neck) வுமிருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச 09.05.2022 அன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்ததால் இத்தடை நீங்கி ‘பந்து’ எதிரணியினரிடம் (ஐக்கியமக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளிடமும் -இதில் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளும் அடக்கம்- முன்பு அரசாங்கத்துடன் இணைந்திருந்து பின் விலகி வந்து சுயாதீனமாகச் செயற்படும் பதினொரு பங்காளிக் கட்சிகளிடமும், பொது ஜன பெரமுனையைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் அணியிடமும்) வந்தது.
ஆனால், எதிரணியினர் கருத்தொருமைப்பட்டு – ஐக்கியப்பட்டு ஓரணியில் நின்று அரசமைப்பதற்குரிய தங்கள் பாராளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்காமல் ஒவ்வொரு அணியும் – ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக நிபந்தனைகளை முன்வைத்தும் தனித்தனி அரசியல் நிகழ்ச்சி நிரலுடனும் இயங்கியமையும், எதிர்க்கட்சித் தலைவரின் ஆளுமைப் பலவீனமும் புதிய (இடைக்கால) அரசை அமைப்பதற்கு மாற்று வழியை நாடும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதிக்கு ஏற்படுத்திக் கொடுத்தன.
சென்ற பத்தியில் (வாக்குமூலம் – 14 ‘அரங்கம்’ 08.05.2022) இலங்கைப் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ‘சர்வகட்சி இடைக்கால அரசு’ (தேசிய இணக்கப்பாட்டு அரசு) சாத்தியப்படமாட்டாதென்பதற்கான காரணங்களைக் கூறி, எது எப்படியிருப்பினும் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுச், சர்வகட்சி அரச- தேசிய இணக்கப்பாட்டு அரச அற்புதம் நிகழுமாயின், சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஐக்கியப்பட்டு (அதுவும் ஒரு அற்புதமே) ஒரே குரலில் ஒற்றைக் கோரிக்கையாக 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் நடத்தும் விடயத்தை முன்நிபந்தனையாக விதித்து அதற்குக் காலக்கெடுவும் விடுத்து இவ்வாறான சர்வகட்சி அரசாங்கத்தில் பங்காளர்களாக- ஒரே அணியாக- இடம் பெற வேண்டுமென்ற கருத்தை முன் வைத்திருந்தேன்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை 09.05.2022 அன்று இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில் ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் அக்கட்சியின் ஒரேயொரு ( தேசியபட்டியல்) பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு ஐந்து தடவைகள் பிரதமராகப் பதவி வகித்த அனுபவமிக்கவருமான ரணில் விக்கிரமசிங்கவை 12.05.2022 அன்று புதிய பிரதமராக நியமித்திருப்பதாலும் இந்நியமனத்தை எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பதாலும் பொது ஜன பெரமுன மட்டுமே ஆதரிப்பதாலும் ‘சர்வகட்சி இடைக்கால அரசு’ இனிச் சாத்தியக் குறைவாகிவிட்டது.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டது சரியா? பிழையா? அரசியலமைப்பு ரீதியாகச் சரியானதா? ஜனநாயக நடைமுறைக்கு உட்பட்டதா? என்பது குறித்த வாதப்பிரதிவாதங்களுக்குள் இப்பத்தி இறங்க விரும்பவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் அவர்களுக்குப் பாரபட்சமாக அரசியலமைப்பு மீறப்பட்டிருக்கின்றது. ஜனநாயக நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
சோல்பரி அரசியலமைப்பின் (1947-1972)29 வது ஷரத்தை மீறித்தான் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறித்து அவர்களை நாட்டவர்களாக்கிச் சுமார் பத்து லட்சம் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு இடம் பெயர வைத்த குடியுரிமைச் சட்டங்களும் (1948) தமிழ் மொழியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய அரசகரும மொழிச் சட்டமும் (1956) நிறைவேற்றப்பட்டன.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாக இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்டு இலங்கை அரசியலமைப்பின் ஓர் அங்கமாக 1988 இலிருந்து நடைமுறையிலுள்ள 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் நடத்தாமல் இன்றுவரை 34 வருடங்களாக இழுத்தடித்து வருவதும் அரசியலமைப்பு மீறல்தானே. ஜனநாயக நடைமுறைகளின் புறக்கணிப்புத்தானே. இது பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை.
இன்று இலங்கையில் எழுந்துள்ள அரசியல் சூழலைத் தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்பது குறித்துச் சில ஆலோசனைகளை முன்வைப்பதே இப்பத்தியின் பிரதான இலக்காகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே உள்ளூர் அரசியலால் வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகமாகும். சுதந்திர இலங்கையில் கடந்த எழுபத்திநான்கு வருடங்களாகப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தாலும் அதனை எதிர்கொண்ட குறுந் தமிழ்த்தேசிய வாதத்தினாலும் தொடர்ந்தும் தமிழ்ப் பொதுமக்கள் வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.
இன்று இலங்கைத் தமிழர்களின் கைகளிலுள்ள ஒரேயொரு பாதுகாப்புக் கவசம் (அதில் குறைபாடுகள் இருந்தபோதிலும் கூட) இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் -இந்தியத் தலையீட்டின் – விளைவான 13வது அரசியல் சட்டத் திருத்தமும் அதன் கீழமைந்த அதிகாரப் பகிர்வு அலகான மாகாணசபை முறைமையுமே ஆகும்.
கடந்த காலங்களில் இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றங்களாலோ அல்லது அரசியலமைப்பு மாற்றங்களினாலோ தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் விளையவில்லை. அதேபோல் இன்று ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையும் அவ்வாறுதான் நோக்கவேண்டியுள்ளது.
பௌத்த சிங்களப் பேரினவாதம் பிரசவித்த கொடுமைதான் யுத்தம் என்பதையும் அந்த யுத்தம் ஏற்படுத்திய நேரடி மற்றும் பக்க விளைவுகள்தான் தற்போதைய பொருளாதார நெருக்கடி என்பதையும் அந்தப் பொருளாதார நெருக்கடி பெற்றெடுத்ததுதான் இன்றைய அரசியல் நெருக்கடி என்பதையும் பௌத்த சிங்களப் பேரினவாத சமூகம் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
‘கோட்டா கோ கம’ (GOTA GO HOME) போராட்டக் குழுவினரால் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள எட்டு அம்சக் கோரிக்கைகளில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்தோ அல்லது குறைந்தபட்சம் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்தும் விடயமோ உள்வாங்கப்படவில்லை என்ற உண்மை இதற்குப் பிந்திய உதாரணமாகும்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது பொருளாதார நெருக்கடியால் எழுந்த ஓர் அரசியல் ‘சுழி’ ஆகும். இந்தச் சுழி ஏற்படக் காரணம் பௌத்த சிங்களப் பேரினவாதமேயாகும். பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான யுத்தச் செலவீனம் – ஊழல் மோசடிகள் – அதிகார துஷ்பிரயோகம் – குடும்ப வாரிசு மற்றும் ஆதிக்க அரசியல் என்பவற்றைப் பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையே மூடி மறைத்து வந்தது. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அது தோன்றுவித்த அரசியல் ‘சுழி’யிலிருந்தும் முழு நாடும் மீளவேண்டும் என்பதற்காகத் தமிழர்களும் பங்களிக்க வேண்டுமென்பது தார்மீகம் – மனிதாபிமானம் – தேசப்பற்று ஆகும். அது வேறு விடயம். ஆனால் இந்த அரசியல் சுழிக்குள் தமிழர்கள் அகப்பட்டுவிடக்கூடாது.
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள/ ஏற்பட்டுவரும்/ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்களில் உள்ளூர் அரசியல் சக்திகளைவிட இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல் சக்திகளுக்குத்தான் அதிகம் செல்வாக்கும் சிரத்தையும் இருக்கப் போகின்றன. எனவே தமிழர்கள் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல் நீரோட்டத்துடன் இணைந்து பயணிக்கத் தம்மைத் தகவமைத்துக் கொள்ளல் அவசியம்.
ஆகவே, தற்போது நடைபெறும் இலங்கை அரசியல் மாற்றங்கள் பற்றி எந்த விமர்சனங்களையும் அவசரப்பட்டு முன்வைக்காது அமைதியாகவிருந்து அவதானிப்பதே தமிழர் தரப்பு அரசியல் சக்திகளுக்கு அறிவுபூர்வமானதாகும்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவசரத் தன்மையுடனும் அதிகப்பிரசங்கித்தனமாகவும் நடந்துகொள்ளக் கூடாது என்பதைப் பகிரங்கமாகக் கூற வேண்டியுள்ளது. ஏனெனில், அவரது வாய்ச்சவடால் அவரை மட்டும் பாதித்தால் பரவாயில்லை, ஆனால், அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகவிருப்பதால் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். வழக்கமாகச் சுமந்திரனைத் தூக்கிவைத்து எழுதும் ‘காலைக்கதிர்’ மின்னிதழ் கூட தனது 13.05.2022 மாலைப் பதிப்பு ஆசிரியர் தலையங்கத்தில், ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் நியமனம் சம்பந்தமாகச் சுமந்திரன் வெளியிட்ட கருத்துக் குறித்து, ‘It is too much. ரணிலுக்கு எதிரான இந்த விமர்சனம் அளவுக்கு அதிகம்’ என்றே வர்ணித்துள்ளது.
தமிழர்கள் இதுவரை கண்டுள்ள அரசியல் பட்டறிவின் அடிப்படையில் பார்க்கும்போது உள்ளூர் அரசியல் நீரோட்டத்துடன் சேர்ந்து பயணிப்பதும் ஆபத்தானது, (இறுதியில் ஏமாற்றுப்படுவோம்) அதற்கு எதிர்நீச்சல் போடுவதும் ஆபத்தானது (இழப்புகள்தான் எஞ்சும்). எனவே இதற்கு மாற்று வழியாக இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல் நீரோட்டத்தின் திசையில் பயணிப்பதே தமிழ்மக்களுக்குப் பாதுகாப்பானது.