கஞ்சி 

கஞ்சி 

           — அகரன் — 

வேலைக்குப் போகவில்லை. வேலை பறிபோய்விட்டால் எங்கே போவது? அந்த நிறுவனம் நட்டத்தில் மீதுவழுக்கி.. வழுக்கி.. ஏறப் பார்த்தது. அதன் கடைநிலை ஊழியனாக இருந்து மேலெழும் வாய்ப்பு என் அருகில் இருந்தபோது நிறுவனம் தன் கதவுகளை நிரந்தரமாய் மூடிக்கொண்டது. அனாதை மனநிலை மீண்டும் தொற்றிக்கொண்டது.  

எனக்கும் ஓர் அறை இருக்கிறது. எட்டு நாட்களுக்கு கஞ்சிதான் என் உணவு. ஆச்சியின் சாவு நிகழ்ந்த முறையை 2011 இல் பவளம் அக்கா சொன்ன பிறகு ஆச்சி நினைவாக அதைமட்டும்தான் செய்கிறேன்.  

அறையில் ஜன்னல் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து மாலை 7மணிக்கு அறை அடையும் எனக்கு ஜன்னல் பற்றிய கரிசனை இருக்கவில்லை. எங்கும் போக முடியாத நிலையில் ஜன்னலைத் திறந்தேன். சுவரில் மாற்றப்பட்ட ஓவியம் போல ஜன்னல் ஊடாக இயற்கை அறைக்குள் வந்தது.  

மரங்கள் செழித்து நின்றன. அதன் உடலெங்கும் பூக்கள். ஏதோ கொண்டாட்டத்திற்கு புறப்பட்ட திருமணமான புதுப்பெண் போல மரங்கள் மீண்டும் அணியாத இலைப் புடவைகளை அணிந்து இருந்தன. ஜன்னலுக்குள்ளால் வந்த வானம் எந்த கலப்புமற்று நீலமாக இருந்தது. அப்போது தான் ஊரில் இருந்து புறப்பட்ட பின்பு வானம் பார்க்காமலே வாழ்ந்து விட்டது அதிர்ச்சியாக குத்தியது. நிலம் பார்த்த நாட்கள்தான். நேர்கொண்டு பார்க்காத, தலை நிமிர்ந்து பார்க்க முடியாத நாட்களின் இடைவெளியில் இந்த ஜன்னல் தந்த துண்டு வானத்தைப் பார்ப்பது பூரிப்பாக இருந்தது. அந்த பூரிப்பை முடிப்பதற்கு வானத்தில் ஒரு இரும்பு அழுக்கு வெள்ளை கோடு போட்டவாறு சென்றது. அது வானத்தை பெரியவாளால் வெட்டுவது போலிருந்தது. அந்த விமானம் ஆச்சியின் நினைவுகளை எனக்கு தந்தது. ஜெட் விமான புகைபோல் நினைவுகள் பெரிதாகிச் சென்றன.  

‘ஆச்சி’ எனது அம்மாவின் தாயார். அம்மாவும் சித்திகளும் ஆச்சி… ஆச்சி.. என்பதால் நானும் ஆச்சி என்றே அழைப்பேன். ‘அம்மம்மா’ என்று அழைத்த ஞாபகமில்லை. ஆச்சிதான் என்னை வளர்த்தார்.  

காணாமல் போன அப்பாவை தேடி போன அம்மாவும் காணாமல் போன பிறகு ஆச்சிதான் எனது அம்மா, அப்பா! மீதியாய் இருந்த நான்கு சித்திகளையும், என்னையும் சேர்த்து ஆச்சிதான் வளர்த்தார்.  

ஆச்சி போன்ற ஆளுமையும், உழைப்பும் கொண்ட ஆண்களைக்கூட இதுவரை நான் கண்டதில்லை. 

 அதிகாலை 5 மணிக்கு எல்லோருக்கும் சேர்த்து கஞ்சி காய்ச்சி விட்டு தோட்டத்துக்கு புறப்படும் ஆச்சி, எதைச் சாப்பிடுவார் என்பது தெரியாது. எனக்கு மட்டும் சக்கரைக்கட்டி ஒன்றை கஞ்சிக்குள் போட்டு விட்டு அதை தனியாக மூடி வைத்து இருப்பார். நான் சாப்பிடாமல் பள்ளிக்கூடம் போய் விடுவேன்; ‘பிள்ளைக்கு சர்க்கரை போட்ட கஞ்சியை கொடு ராணி’ என்று ராணிச் சித்தியிடம் சொல்லும் சத்தம் தூக்கத்தில் இருக்கும் எனக்கு கேட்கும். இரவில் ஆட்சியின் கையால் இழைத்த பெரிய ஓலைப் பாயில் எல்லோரும் தூங்குவோம். திண்ணையில் முதலாவதாக தூங்கும் ஆச்சியின் அருகில் நான் தூங்குவேன். தன் சேலைத் தலைப்பால் என்னை மூடி இருப்பார். நாய் குரைத்து ஏதாவது அரவம் தெரிந்தாலும் ஆச்சி எந்த பயமுமின்றி முன்னே போவார். குப்பி விளக்கைக்கூட கொழுத்த மாட்டார். மதியம் ஆச்சி வீடு வருவதில்லை. தோட்டத்தில் இருக்கும் மரக்கறிகளை பச்சையாக உண்டு பசியாறி விடுவார். நான் பள்ளி விட்டு வந்து ஆட்சியின் முகத்துக்காக காத்திருப்பேன். தலையில் பெரிய மூட்டையோடு வீடு வந்து சேர்வார். அதில் தேங்காய், பாகற்காய், கத்தரிக்காய் பயற்றங்காய், வெண்டிக்காய், வெங்காயம், கீரை, மிளகாய் என அதனதன் விளைச்சலுக்கேற்றாற்போல் ஏதாவது இருக்கும். அவர் முகத்தில் களைப்பு இருக்காது.  

இரவு உணவைச் சமைப்பார்.. பசியாறி விட்டு இரவில் பனையோலையால் பின்னும் கடகம், பாய், நீத்துப்பெட்டி என இழைக்க ஆரம்பித்துவிடுவார். எத்தனை மணிக்கு தூங்குவார் என்பது தெரியாது.  

எனக்கான படிப்புச் செலவுகளுக்காக ஆச்சி 5 தேங்காய் 10 தேங்காய் என்று உரித்து தருவார். அவற்றை சந்தையில் கொடுத்துவிட்டு பணம் பெறுவேன். ஆச்சி அடிக்கடி சொல்வது ‘பக்குவமா படிச்சுடு ராசா’ இப்படி எல்லா பாரங்களையும் தன் தோள்மேல் சுமந்த ஆச்சி, அப்பு மனம் குழம்பிப் போக முதல் வளத்தோடு இருந்தவர் என்று பவாச்சித்தி சொல்வார். அப்பு நல்லா படிச்சவராம். மூன்று மொழிகளும் அத்துப்படி. அப்புவுக்கு கம்பளையில் கடை இருந்தது. 1977இல் காடையர்கள் அவரின் கடையை எரித்தார்கள். அப்படி எரித்தபோது கடையில் வேலை செய்த சின்னத்தங்கம் என்ற அப்புவின் விசுவாசமான தொழிலாளியை அவர்கள் வெட்டியதை அப்பு மறைந்து இருந்து பார்த்து இருக்கிறார்.அதன் பிறகு ஊருக்கு வந்து சேர்ந்த அப்பு, மூளையை விட்டுவிட்டார். புத்தி குழம்பிப்போய் அதிகமாக சாப்பிடாமல் தன் உடலைத் தானே வருத்தி செத்துப்போனார். அப்படித்தான் ஆச்சியின் பொறுப்பில் நாம் எல்லோரும் வந்து சேர்ந்தோம். தன் நான்கு பெண் பிள்ளையும் போதாக்குறைக்கு என்னையும் ஆச்சி தனியே தாங்கினார்.அவர் முகத்தில் ஒரு நாளேனும் அதுபற்றி பிரஸ்தாபம் இருந்தது இல்லை. எப்போதுமே விதம் விதமான கஞ்சி காய்ச்சுவார். பால் கஞ்சி,வெங்காய கஞ்சி, பைத்தங்காய் கஞ்சி, கௌப்பி கஞ்சி என்று அவர் தோட்டத்தில் கிடைக்கும் எல்லா மரக்கறிகளையும் கஞ்சியாக்கி விடுவார்.  

என்னை ‘வெளியில் ஓடித் தப்பு ராசா!’ என்று ஆச்சி இறுதியுத்தத்தில் இடம்பெயர ஆரம்பித்தார். நான் நாடு நாடாக ஓடிக் கொண்டிருந்தபோது, ஆச்சி ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தார்.  

ஆச்சிக்கு ஒரு பழக்கம் ஊரில் இருந்தது. எங்கு இளவு நடந்தாலும் அது எத்தனை காத தூரம் என்றாலும் நடந்தே சென்று விடுவார். ஆச்சி ஊர் ஊராக இடம்பெயர்ந்தபோது வீதியிலும், கோவிலிலும் வீட்டிலும், வயல்களிலும் மரங்களின் கீழும் செத்தவீடுகள் நடந்துகொண்டிருந்தன.அவர்கள் யார்? எவர்? என்று தெரியாவிட்டாலும் தன்னிடமுள்ள அரிசியில் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தாராம். முள்ளிவாய்க்காலை ஆச்சி அடைந்தபோது காவிச்சென்ற அரிசி முடியும் தருவாயில் இருந்தது. 

குழந்தைகளின் கதறல், காயப்பட்ட மனிதர்களின் முனகல், எங்கும் செத்து கவனிப்பாரற்று அங்கங்கே கிடந்த நேற்றைய மனிதர்கள். அடுத்த நொடியை அதிசயமாக நினைக்கும் வாழ்க்கையிலிருந்து.  

ஆச்சி அன்று பத்தாம் திகதி மே மாதம் தன்னிடமிருந்த மிகக்குறைந்த அரிசியை அருகே குழந்தைகளோடு இருந்த பெண்களுக்கு கைப்பிடி, கைப்பிடியாகக் கொடுத்தாராம். பின்பு அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் சென்று உட்கார்ந்தாராம். ஆச்சியை காணவில்லை என்று தேடிப் போனபோது, மரத்தில் சாய்ந்து இருந்தவாறு கால் மேல் காலைப் போட்டவாறு தியானத்தில் இருப்பது போல செத்துக் கிடந்தாராம். 

ஆச்சியின் உடலை என்ன செய்வது? என்று ஆராய்ந்து கொண்டிருந்தபோது அங்கு விழுந்த செல் குண்டால் அங்கு நின்ற நான்கு ஆண்கள் செத்துப் போனார்களாம். ஆனால் ஆச்சியின் உடலை ஒரு சன்னமும் தொடவில்லயாம். பின்பு அந்த சடலங்களை அப்படியே விட்டு விட்டு எல்லோரும் ஓடி விட்டார்களாம். என்று தப்பி வந்த அயல்வீட்டு பவளம் அக்கா சொல்லித்தான் நான் ஆச்சியின் இறுதி கணங்களை அறிந்துகொண்டேன். 

அதை அறிந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 10- 18 வரை உபவாசம் இருந்து கஞ்சிகுடிப்பேன். அது, ஆச்சியின் நினைவாக மட்டுமல்ல நிதாரவான எல்லா உயிர்களுக்காகவும்தான். 

யூதர்கள் ஏப்ரல் மாதத்தில் ஏழுநாட்கள் ‘பாசோவர்’ என்ற நினைவு நாளை அனுட்டிப்பார்கள். அவர்கள் உலகில் எந்த மூலையில், எந்த நிலையில் இருந்தாலும் அதை மறக்க மாட்டார்கள். யூதர்களாகத் தங்களை உணரும் எல்லோருக்கும் பசோவர் முக்கியமான நாள். அதன் கதை ஒருவகையில் கஞ்சியோடு ஒத்துப்போவது. 

3400 வருடங்களுக்கு முன்னர் எகிப்து நாட்டில் பர்வோன் என்ற அரசனின் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் அடிமையாக இருந்து கஷ்டப்பட்டார்கள். அவர்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க மோசே என்ற இளைஞன் போராடினான். அதன் நெருக்கடியால் மன்னன் ஒரு கட்டளை இட்டான் ‘உடனே போய்விடுங்கள்! தாமதித்தால் தலை இருக்காது! ‘ 

அடிமைகள் போட்டது போட்டபடி அவசரமாகப் புறப்பட்டனர். அவர்கள் அப்ப- மாவை எடுத்துச் சென்றனர். எல்லோரும் புளிக்காத மாவில் சுட்ட அப்பத்தை உண்டு தப்பிப்பிழைத்தனர். அந்த கொடிய நாளை நினைக்கும் முகமாக இன்றும் அந்த ஏழு நாட்களும் புளிக்காத அப்பத்தை அந்த ஏழு நாட்களும் உண்டு தாங்கள் பட்ட துயரை உலகெங்குமுள்ள யூதர் 3400 வருடங்களாக அனுட்டிக்கின்றனர்.  

நாங்கள் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்ரேலியா, ஆபிரிக்கா, என்று நிறைந்து பரந்து வாழ்கிறோம். வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகியும் ஒன்றாக எங்கள் துன்ப நாட்களை நினைக்கவில்லை. 

ஊரில் இன்று கஞ்சிக்குக்கூட வழியற்று ஏழை மக்கள் துன்புறுகின்றனர். அன்று என் ஆச்சி எல்லாவற்றையும் எதிர்த்தே உயிரை போக்காட்டி இருப்பார்.  

நான், சீவனுள்ளவரை அந்த எட்டு நாட்களையும் உப்பில்லாவெறும் கஞ்சியால் நினைப்பேன். என் ஆச்சியை நானெப்படி மறப்பேன்?.  

ஜன்னலை பூட்டிவிட்டு இருட்டுக்குள்இருக்க வேண்டும்போல் உள்ளது. ஆச்சி ஒருமுறை நினைவில் வந்து என் கஞ்சியை கொஞ்சம் அருந்தவேண்டும்.