— அழகு குணசீலன் —
“GENERAL ELECTION : AKD WANTS ONE PARTY RULE, THERE IS NO NEED FOR OPPOSITION IN PARLAMENT……” .
“Prasident Anura Kumara Dissanayake has decleared that there is absolutely no need for parlimentary Opposition…..”
இந்த முதற்பக்க கொட்டை எழுத்து தலைப்பை தாங்கி வெளியாகியிருக்கிறது கொழும்பில் இருந்து வெளிவரும் தி ஐலண்ட் -THE ISLAND நாளிதழ்.
ஒக்டோபர் 22 ம்திகதிய பதிப்பில் அதற்கு முதல்நாள் 21.10.2024 இல் கம்பஹாவில் இடம்பெற்ற என்.பி.பி.யின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஒன்று தேவையில்லை என்றும் ஒருகட்சி ஆட்சியே தேவை என்றும் அநுர உரையாற்றினார்”.
இந்த செய்தியை படித்தபோது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிச்சத்தில் வந்தார். 1980 களில் இந்திய ‘புரண்ட்லைன்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ‘தமிழீழத்தில் ஒரு கட்சி ஆட்சி’ (SINGLE PARTY RULE) முறையே தனது இலக்கு என்று கூறியிருந்தார். இந்த கொள்கையில் சகோதர அமைப்புக்களையும் தலைமைகளையும், கட்சிதலைமைகளையும் புலிகள் தடைசெய்தார்கள், கொலைசெய்தார்கள். ‘ஏகபோகம்’ என்ற இந்த புலிகளின் கருத்தியல் அவர்களுக்கு சேதாரத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை, முற்றாகவே அழித்துவிட்டது. மாற்று இன்றி தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளாக நிற்கிறார்கள்.
இப்போது இருதடவை ஆயுதப்போராடத்தில் தோல்வியுற்று, பாராளுமன்ற ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து ஆட்சியைப்பிடித்துள்ள ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அரசியல் அவதானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக வழியில் அதன் நன்மைகளை அடைந்த ஒரு ஜனாதிபதி இந்த ஜனநாயக மறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இத்தனைக்கும் எதிர்க்கட்சியில் மூன்று எம்.பிக்களாக இருந்து, எதிர்க்கட்சி ஒன்றின் ஜனநாயக அரசியல் கடமைகளை செய்து, ஜனாதிபதியாகியுள்ள ஒருவரின் கருத்தாக இது வெளிவந்துள்ளது. அதுவும் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் தாங்கள் அநுர ஆட்சிக்கு ஆதரவளிக்கத் தயார் என்றும், தேசிய அரசு ஒன்றை அமைக்கலாம் என்றும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ள நிலையில் ஜனாதிபதி இந்த ஜனநாயக மறுப்பு – சர்வதிகார கருத்தை வெளியிட்டுள்ளார். ஒரு கட்சி ஆட்சியே தங்கள் கொள்கை என்று என்.பி.பி/ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடம் ஆணை பெறவில்லை. ஆனால் மற்றைய கட்சிகள் மக்களின் ஆணையை மீறுகின்றன எனக்கூறி அதிகாரத்திற்கு வந்தவர்கள்.
அநுரகுமார ஆட்சி ஒரு மாதத்தை கடந்து இருக்கின்ற நிலையில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான அதிகாரப்பகிர்வை நிராகரித்திருக்கிறது. பேரினவாத நோக்கில் அந்த இனங்களின் தனித்துவ அடையாளங்களை மறுத்து, அபிவிருத்திக்குள் மறைத்திருக்கிறது. இப்போது ஒருகட்சி ஆட்சியை வலியுறுத்தி, பாராளுமன்ற ஆட்சி ஒன்றின் அதிஉயர் ஜனநாயக பண்பான எதிர்கட்சி அரசியல் கலாச்சாரத்தை மறுதலித்து பிரச்சாரம் செய்கிறது.
எதிர்க்கட்சிகள் மக்களிடம் கோருகின்ற பலமான எதிர்க்கட்சி ஒன்றுக்கான ஜனநாயக அழைப்பை அதற்கான ஜனநாயக வழியில் பாராளுமன்றத்தில் எதிர்கொள்ளாது, எதிர்கட்சி ஒன்று தேவையில்லை, ஒரு கட்சி ஆட்சியே தேவை என்பது ஜே.வி.பி. இத்தனை தசாப்தங்கள் கடந்தும் இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது.
தேசிய இனப்பிரச்சினை என ஒன்றில்லை. தமிழ்மக்கள் கோருவது அபிவிருத்தியே எனும் இலங்கை ஆட்சியாளர்களின் கடந்த கால வரலாற்றில் இருந்து அநுரகுமார ஆட்சி மாறவில்லை. மாற்று வழியில் அது பயணிக்காத வகையில் அந்த ஆட்சிக்கு பெயர் “மாற்றம்”அல்ல. பொருளாதார பிரச்சினைகள், அபிவிருத்தி என்று கூறி நவ காலனித்துவ தாராள பொருளாதார கொள்கையை அரசு விரிவுபடுத்துகிறது. இந்த வழியில் அநுரகுமார திசாநாயக்க ஆட்சி சிறுபான்மை தேசிய இனங்களின் இனப்பிரச்சினையை நிராகரிப்பதால் அபிவிருத்தி கோஷத்தை ஒரு பேரினவாத அடக்குமுறை வடிவமாகவே கொள்ள வேண்டி உள்ளது. அது மட்டுமின்றி கடந்த காலங்களை போன்று அரசியல் தீர்வை மறுக்கும்,அதிகாரப்பகிர்வை மறுக்கும் தந்திரோபாயமாகவும் இது அமைகிறது.
என்.பி.பி.யின் சிறுபான்மை தேசிய இனங்களின் புறக்கணிப்பு தொடர்பாக மனோகணேசன், ஹக்கீம் போன்ற சிறுபான்மை இன கட்சித்தலைமைகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. ஆனால் தமிழ்மக்களின் பாரம்பரிய கட்சி, பெரிய கட்சி என்றெல்லாம் பெருமை பேசுகின்கின்ற தமிழரசுக்கட்சி இதுபற்றி அடக்கிவாசிக்கிறது. அதன் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம் கண்டித்துள்ள போதும் எப்போதும் பேச்சாளராக முந்திக்கொள்ளும் எம்.ஏ.சுமந்திரன் வாய்திறப்பதாக இல்லை. சுமந்திரனின் கருத்துக்கு பிராந்திய, சர்வதேச மட்டத்தில் அதிக நிறையுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். தென்னிலங்கையிலும் அது சீர்தூக்கி பார்க்கப்படும். ஆனால் எல்லாவற்றிற்கும் வாய் திறக்கும் சுமந்திரனும், சாணக்கியனும் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?
கொழும்பு தகவல்களின் படி எம்.ஏ. சுமந்திரனுக்கு அமைச்சர் பதவி ஒன்றுக்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியே சுமந்திரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்த வடக்கு கிழக்கு அபிவிருத்தி நிதியம் பற்றிய கருத்து. இந்த இணக்கம் காரணமாகத்தான் வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு தேவையில்லை அல்லது அவர்கள் கோரவில்லை என்று ஜே.வி.பி. முக்கியஸ்த்தரின் கருத்தை சுமந்திரன் மறுக்கவில்லை. சம்பிரதாயத்திற்காக சிவஞானத்தை கொண்டு அதைச்செய்திருக்கிறார் என்று அவதானிக்கப்படுகிறது. சுமந்திரனின் இந்த திட்டத்திற்கு பின்னால் அதிகார பகிர்வு தீர்வற்ற “இலங்கையர்” கோட்பாட்டை அங்கீகரிக்கும் மரபுசார் இடதுசாரிகளும், புலிகளால் தடைசெய்யப்பட்டு புலம்பெயர்ந்துள்ள, இந்திய ஆதரவு கட்சி ஒன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்சியினர் இந்திய ஆதரவு வரதராஜப்பெருமாள் மாகாண ஆட்சியின் பங்காளிகள்.
இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள யாழ்.பத்திரிகை ஒன்று அமைச்சர் ஆகுவதற்கு முதலில் அவர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வெற்றிபெற வேண்டுமே என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது சுமந்திரனுக்கு பொதுத்தேர்தலில் உள்ள வில்லங்கத்தை காட்டுகிறது. ஆனால் சுமந்திரனின் அரசியல்வரலாறு தெரிந்தவர்களுக்கு அல்லது சுமந்திரனின் சுழிவு நெளிவுகள் தெரிந்தவர்களுக்கு இது அவருக்கு ஒரு வில்லங்கமான காரியம் அல்ல. தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் அவருக்கு கைகொடுக்க வாய்ப்பு உண்டு. அதுவும் இல்லையேல் ஒரு கட்சி ஆட்சியில் தமிழரசுகட்சியும் கரைந்து என்.பி.பி. தேசிய பட்டியலில் சுமந்திரன் எம்.பி.யாகி அமைச்சரானாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
அப்போது டக்ளஸ் தேவானந்தா, சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழியில் அபிவிருத்தி அரசியல்வாதியாகிறார் சுமந்திரன். இதைத்தான் தமிழ்தேசியத்திற்கு பிறந்த முதலாவது அமைச்சர் சுமந்திரன் என்கின்றது அந்த யாழ். பத்திரிகை.
“வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்……..!”