இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா?

இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா?

– கருணாகரன் –

பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம்? என்ற கேள்வியும் விவாதமும் தமிழ் மக்களிடத்திலே வழமையை விடக் கூடுதலாகக் காணப்படுகிறது. சனங்கள் சற்றுச் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். மாற்றங்களை விரும்புகிறார்கள்.  பழைய தலைகளை விலக்க வேண்டும் என்ற விருப்பம் சற்றுக் கூடுதலாகத் தெரிகிறது. 

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மெய்யாகவே மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்காகச் செயற்படக் கூடியவர்களையும் நேர்மையானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்று பலரும்  எண்ணுகிறார்கள். இதனால் இந்தத் தேர்தற் களம் முற்றிலும் வேறாகக் காட்சியளிக்கிறது. 

இதுவரையிலும் தமிழ் மக்களிடம் ஒரு சூத்திரமிருந்தது. பெருந்திரளானோர் எந்தக் கேள்வியுமில்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அதாவது வீட்டுச் சின்னத்துக்கு  வாக்களிப்பார்கள். இவர்கள் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்திச் சிந்திப்போராகும். அல்லது அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டோர் எனலாம். இன்னொரு விதமாகச் சொன்னால் இவர்கள், தமிழரசுக் கட்சியின், விடுதலைப் புலிகளின் அரசியலைப் பின்தொடர்கின்றவர்களாக இருந்தனர்.

இதனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட, தமக்குரிய சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்களாகவே இருந்தனர்.  என்பதால்தான்,‘நாம் தும்புத்தடியை நிறுத்தினாலும் அதற்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பர்‘ என்று கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா. சம்மந்தன் திமிரோடு (மக்களை மலினப்படுத்தி)  சொல்லக்கூடியதாக இருந்தது. உண்மையும் அதுதான். அதனால்தான் எந்தக் கேள்வியுமில்லாமல் பெருந்திரளான தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு – வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து வந்தனர். 

மறு  தொகுதியினர் வடக்கில் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கயன், விஜயகலா போன்றோருக்கு ஆதரவளிப்பவர்கள். கிழக்கில் சந்திரகாந்தன், வியாழேந்திரன் போன்றோரை ஆதரிப்பர். இவர்கள் அபிவிருத்தி, முன்னேற்றம் போன்றவற்றை முன்னிலைப்படுத்திச் சிந்திக்கும் தரப்பினராகும். அதற்காக இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள்  மீதான ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்களோ, தமிழ் மக்களுக்கான உரிமையை மறுப்பவர்களோ இல்லை. 

ஆனால் இவர்களும் தமது ஆதரவின் பெறுமானத்தைக் குறித்தும் நியாயத்தைக் குறித்தும் சிந்திப்பதில்லை.  அதை மீள்பரிசீலனை செய்வதில்லை. 

இந்த அரசியலின் விளைவுகள், பெறுமானங்கள், முறைமைகளைக் குறித்து பேசுவதோ விவாதிப்பதோ கிடையாது. அப்படி விவாதிக்க முற்பட்டால், தமிழ்த்தேசியத் தரப்பினரைப்போல, அதை ஏற்றுக் கொள்ளாமல், விமர்சனங்களை முன்வைப்போரை அவமதித்து, நிராகரித்து வந்தனர். பதிலாக ஏதோ நடக்கிறது. கிடைப்பது லாபம் என்ற அளவில் தமது அரசியலை மேற்கொண்டு வந்தனர். தம்மைச் சற்று நிதானப்படுத்திச் சிந்தித்திருந்தால், இந்த அரசியலுக்கான அடித்தளத்தையும் முறைமை ஒன்றையும் உருவாக்கியிருக்க முடியும். அதைக் குறித்து இவர்கள் சிந்திக்கவில்லை. 

ஆக இரண்டு தரப்புகளும் தமக்குரிய (தாம் உருவாக்கிய அல்லது அப்படி அமைந்த) Formula வின்படி தமது அரசியலைச் செய்து வந்தனர். அதற்கேற்ற வகையில் வாக்காளர்களும்  பிரிந்திருந்ததால் அரச  எதிர்ப்புத் தரப்புக்கும் இடமிருந்தது. அரச ஆதரவுத் தரப்புக்கும் வாய்ப்பிருந்தது. அவரவர் தத்தமது தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டுமிருந்தனர். இதற்குத் தோதாக ஒவ்வொரு தரப்பும் தங்களுடைய அரசியலுக்கு நிறமூட்டிக் கொண்டிருந்தனர். ஒரு தரப்பு தமிழ்த்தேசியம் என. மறுதரப்பு அபிவிருத்தி அரசியல் என்று.

இப்படி இரண்டு பிரிகோடுகளில் தமிழ் அரசியல் பயணித்துக் கொண்டிருந்ததால் இரண்டு வகையான அரசியலாளர்களும் தமக்குரிய இடம் எப்படியோ உறுதியாக உண்டு என்ற நம்பிக்கையுடனிருந்தனர். சிலவேளை இதில் சிறிய அளவிலான அசைவுகள் நடக்கும். அப்படி நடக்கும்போது டக்களஸ் தேவானந்தா ஒன்றோ இரண்டோ கூடுதலான ஆசனங்களைப் பெறுவார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்று இரண்டு ஆசனங்களை இழக்க நேரிடும். இன்னொரு வகையில் சொல்வதென்றால், அரச ஆதரவுத் தரப்பு ஒன்றிரண்டு ஆசனங்களைக் கூடுதலாகப் பெறும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்றிரண்டு ஆசனங்களை இழக்கும். ஆனால், பெரிய மாற்றங்கள் ஏற்படாது. 

இந்தத் தடவை இந்தச் சூத்திரத்துக்கு அடி விழுந்துள்ளது. இப்போதுள்ள களநிலவரத்தின்படி வடக்கிலும் கிழக்கிலும் வழமைக்கு மாறான வகையிலான தேர்தல் முடிவுகளே வரப்போகின்றன. ஏனென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உடைந்து நொறுங்கி இல்லாமற்போய் விட்டது. பதிலாக ‘தமிழ்த்தேசியம்‘ என்ற அடையாளத்தோடு (மஞ்சள் – சிவப்பு நிறத்தில்) பல கட்சிகளும் குழுக்களும் போட்டியில் இறங்கியுள்ளன. இவற்றின் பெயரையெல்லாம் மனதில் வைத்திருப்பதற்குக் கடவுளாலும் முடியாது. சாத்தானாலும் இயலாது. எல்லாவற்றுக்கும் ஒரு அடைமொழியைப்போல முன்னொட்டில் ‘தமிழ்த்தேசியம்‘ என்ற சொல் மட்டும் உள்ளது. அந்தச் சொல்லையும் மஞ்சள் சிவப்பு நிறத்தையும் இணைத்துக் கொண்டால், தமிழ் மக்களுடைய அரசியல் சரியாகி விடும் என்று இவை நம்புகின்றன. தமிழ்ச்சனங்களை அந்தளவுக்கு மலினமாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளன. இந்தக் குறைபாடு, தும்புத்தடியை நிறுத்தினாலும் தமிழ்மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொன்ன மூத்த தலைவரான சம்மந்தனிலிருந்து இன்றைய இளைய தலைமுறை உறுப்பினர்கள் வரையில் தொடர்கிறது. 

இதில் எந்தத் தரப்பும் மாறுதலைக் கொள்ளவில்லை என்பதால்  எந்தத் தரப்பை ஆதரிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், எல்லாமே தமிழ்த்தேசியம் எனவும் மஞ்சள் – சிவப்பு நிறத்திலும்தான் வந்து முன்னிற்கின்றனவே தவிர, தாம் எந்த அடிப்படையில் ஏனையவற்றிலிருந்து வேறுபடுகிறோம்? தம்முடைய தனித்துவம் என்ன? எதிர்கால அரசியலை எந்த அடிப்படையில் முன்னெடுப்போம்? அதற்கான பொறிமுறைகளும் வழிமுறையும் என்ன? கடந்த காலத் தவறுகளுக்கும் பின்னடைவுகளுக்குமான காரணங்களும் பாத்திரவாளிகளும் யார்? அதற்கான பொறுப்பை ஏற்பது எவர்? கடந்த காலத் தோல்விகளிலிருந்து மீள்வது எப்படி? புதிய அரசியலுக்கான உத்தரவாதம் என்ன? அதைச் செயற்படுத்தும் கால அட்டவணை எப்படியானது? என  எதைப்பற்றியும் எந்தக் கட்சியும் எந்தக் குழுவும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. 

தமிழ்த்தேசியக் கட்சிகளில் அல்லது மஞ்சள் – சிவப்புக் குழுக்களில் பெரியளவில் இருப்பவை நான்காகும். ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி. இது வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறது. அடுத்தது, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA). இது சங்குச் சின்னத்தில் நிற்கிறது. அடுத்தது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ். இது காங்கிஸின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. (பேசாமல் காங்கிரஸின் பேரிலேயே நிற்கலாம். இடையில் என்ன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. அது அப்படித்தான்… ‘சும்மா ஒரு இதுக்குத்தான்‘ அப்படிச் சொல்வது. அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து படியுங்கள்). அடுத்தது, தமிழரசுக் கட்சியிலிருந்து தேர்தலுக்காகப் பிரிந்தவர்கள், ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தோடு கூட்டிணைந்து நிற்கிறார்கள். இவர்கள் கையில் ஏந்தியிருப்பது மாம்பழமாகும். ஐந்தாவதாகவும் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் பின்னாளில் சாராயத் தவறணை விடயத்தில் சிக்கியிருப்பவருமான விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி. இதனுடைய சின்னம்,மான். 

இப்படிப் பல அணிகளாகச் சிதறியிருக்கும் தமிழ்த்தேசியத் தரப்புகளின் வாக்குகளை எப்படி ஒன்று திரட்டுவது? என்ற கேள்வியும் கவலையும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது. இந்தக் கவலைக்கு அவர்களும் பொறுப்பாளிகளே!  ஏனென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்மோதல்களைக் கண்டிக்காமலும் கண்டு கொள்ளாமலும் இருந்ததன் விளைவுகளையே இப்போது நேரில் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. இதனால் முன்னர் கண்ணை மூடிக்கொண்டு வீட்டுச் சின்னத்துக்குக் கீறிய நிலைபோய், இப்போது எந்தச் சின்னத்தைத் தேர்வது? யாரை ஆதரிப்பது? எதை நம்புவது என்று தெருவில் நின்று யோசிக்க வேண்டி நிலை வந்துள்ளது.  

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தமக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என ஒவ்வொரு தரப்பும் மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றன. சங்குக் கூட்டணி சொல்கிறது, தாம் எப்படியும் 10 இடங்களைக் கைப்பற்றுவோம் என. தமிழரசுக் கட்சி பிரகடனப்படுத்துகிறது தனக்கு எப்படியும் 12 இடங்கள் கிடைக்கும் என. சைக்கள் கம்பனி சொல்கிறது, தாமே கூடுதலான இடங்களைக் கைப்பற்றுவோம் என. அப்படிப் பார்தால், அவர்களுக்கு எப்படியும் 14 இடங்களுக்கு மேல் கிடைக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமா என்று உங்கள் உள்மனது கேட்கிறது. ஏன், வாய்விட்டே நீங்கள் சிரிக்கிறீர்கள் என்பதும் தெரியும். ஆனால் இவர்கள் இப்படிக் கணக்குப் பார்த்தும் கணக்கு விட்டும் வந்ததன் பழக்கமே இப்போதும் இப்படிச் சொல்வதற்குக் காரணமாகும். 

அதனால்தான் சனங்களை மடையர்களாக்கியோ என்னவோ எப்படியாவது தமக்கான வாக்குகளைக் கவர்ந்து விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றன, அனைத்துக் கட்சிகளும். இதற்காகச் சில கட்சிகள், தனிநபர்களை (சுமந்திரன் போன்றோரை) குறி  வைத்துத் தாக்குகின்றன. பொதுவாக அனைத்துத் தரப்பும் தம்மை மாற்றுக்குறையாத தங்கம் எனவும் மற்றவர்கள் போலி என்றும் காட்ட முற்படுகின்றன.

இது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் விளைவுகளைச் சமூகவலைத்தளங்கள் தொடக்கம் மக்களின் பொது உரையாடல்வெளிகளில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. தமிழ்த்தேசியத் தலைமைகளையும் கட்சிகளையும் வறுத்தெடுக்கும் சமூக வலைத்தளப் பதிவுகளே அதிகமாகப் பொது வெளியில் காணப்படுகின்றன. 

இந்தச் சூழலில், தமது அடுத்த தெரிவு என்ன? எந்தத் தரப்பை அல்லது யாரை ஆதரிக்கலாம் என்ற கேள்வியோடு மக்கள் நிற்கிறார்கள். 

இந்தக் கேள்வியே அவர்களை விவாதத்துக்குத் தூண்டியிருக்கிறது. அவர்கள் இரண்டு வகையில் பிரதானமாகச் சிந்திக்கின்றனர். 

1.    தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த உடைவையும் சிதைவையும் பார்த்துச் சினமடைந்திருக்கின்றனர், கவலை கொண்டுள்ளனர். இதனால்  ‘தமிழ் மக்கள் ஒன்றாக நிற்க வேண்டும். தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும். தேசமாகத் திரள வேண்டும். தமிழ்த்தேசியத் தரப்புகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும்‘ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, அதற்கு மாறாகச் செயற்படும் (நாடகமாடும்) கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். இவர்களுடைய வாக்குகள் வழமைக்கு மாறாக எதிர்த்தரப்புகளுக்குச் செல்ல வாய்ப்புண்டு. அதற்காக டள்ளஸ் தேவானந்தா, பிள்ளையார் போன்றோருக்கு அவை கிடைக்காது. மாறாக அனுரவின் NPP க்கும், சஜித்தின் SJB பிக்கும் பிரியப்போகின்றன. 

இதற்கொரு காரணமும் உண்டு. இதில் ஒரு சாரார் யோசிக்கின்றனர்,  இப்போதுள்ள சூழலில் NPP க்கு ஆதரவளித்தால், அது ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என. 

ஆனால், இன்னொரு சாரார் இதை மறுத்து, பேராதரவுடன் NPP அதிகாரத்தைக் கைப்பற்றினால், அது நாட்டுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரானதாகவே மாறும். ஆகவே, ஒரு வலுவான எதிர்த்தரப்பு – எதிர்க்கூட்டணி அல்லது கூட்டரசாங்கம் ஒன்று அமையக் கூடியவகையில் தம்முடைய ஆதரவு இருக்க வேண்டும். ஜனநாயக வெளி பாதுகாக்கப்பட வேண்டும் என. இவர்கள் சஜித்தின் SJB ஐ ஆதரிப்பதற்கு முற்படுவர். இப்போதுள்ள சூழலும் அப்படித்தான் உள்ளது. 

2.     அரச தரப்பை அனுசரித்து நிற்கும் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றோருக்கான ஆதரவுத் தளம் சற்று வீழ்ச்சியடைகிறது. இவர்களை NPP ஏற்றுக் கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் இந்தச் சரிவு எனலாம்.  

ஆகவே இவற்றின் விளைவுகள் நிச்சயமாகத் தேர்தல் முடிவுகளில் நிச்சயமாகப் பிரதிபலிக்கும்.  இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளன, இதை அறிந்து கொள்வதற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *