“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 53)

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 53)

(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)

       — செங்கதிரோன் —

 நாட்கள் நகர்ந்து பெப்ரவரி 07 ஆம் திகதி கோகுலனின் திருமணம் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுப் பின் கல்முனையிலும் பொத்துவிலிலும் வரவேற்பு நிகழ்வுகளும் முடிந்தன.

 திருமணம் நிகழ்ந்து இரண்டு மூன்று தினங்களின் பின்னர் கனகரட்ணம்  மட்டக்களப்பு கோகுலன் மனைவியின் வீட்டுக்கு வந்து புதுமணத் தம்பதியினரை வாழ்த்திச் சென்றார்.

 திருமணத்தின்போது மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த கணித ஆசிரியையான தன் மனைவிக்குத் தம்பிலுவில்  மகா வித்தியாலயத்திற்கு மாற்றம் எடுத்தான் கோகுலன்.

 மட்டக்களப்பில் திருமணம் செய்திருந்தாலும் பொத்துவில் தொகுதியிலேயே குடும்பத்துடன் வசிக்க அவன் விரும்பினான். அதனால் திருமணத்திற்கு முன்பே தம்பிலுவில் மகா வித்தியாலயத்திற்கு அருகாகக் கடற்கரை நோக்கிச் செல்லும் வீதியில் தம்பையா மாஸ்ரரின் வீட்டை ஏற்கெனவே  வாடகைக்கு எடுத்து திருமணத்தின்பின்  மனைவியுடன் தனிக் குடித்தனம் வருவதற்கான எல்லா ஒழுங்குகளையும் ஏற்பாடும் செய்து வைத்திருந்தான்.

 அதன்படி திருமணம் நிகழ்ந்து ஒரு வாரம் கழிந்திருக்கும், ஒரு நாள் மனைவியுடன் மட்டக்களப்பு முகத்துவாரம்  மனைவியின் வீட்டிலிருந்து காலையில்  ‘பஸ்’ சில் புறப்பட்டான். முகத்துவாரம்- வலையிறவு ‘பஸ்’ சில் மட்டக்களப்பு அரசடிக்கு வந்து பின் அரசடிச் சந்தியிலிருந்து கல்முனைக்கு ‘பஸ்’ எடுத்தார்கள்.

 தம்பிலுவில் நோக்கிய பயணத்தில் வழியில் கல்முனையில் இறங்கிக் கல்முனைச் சந்தையில் சமையலுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை ‘காட்போட்’ பெட்டிகளிரண்டில் பொதிகளாக்கி இருகைகளிலும் காவிக் கொண்டு  வீதியில் மனைவியுடன் கல்முனை  ‘பஸ்’ நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும்போது மட்டக்களப்புப் பக்கமிருந்து வந்த ‘கார்’ ஒன்று திடீர் என்று ‘பிரேக்’ போட்டுக் கோகுலனுக்கு அருகில் வந்து நின்றது.

 திருப்பிப் பார்த்தபோது காரின் பின் ஆசனத்திலிருந்த கனகரட்ணம் சிரித்துக் கொண்டு கையசைத்தார். கோகுலன் அந்த நேரத்தில் அதுவும் அந்த இடத்தில் கனரட்ணத்தை அறவே   எதிர்பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட அமைச்சருக்குரிய  உத்தியோகபூர்வ வாகனமே அது. காரை நெருங்கியதும் கனகரட்ணம் மீண்டும் சிரித்துக் கொண்டே ”புதுமணத் தம்பதிகள் எங்கே போறீங்க?” என்றார்.

 “தம்பிலுவிலுக்குக் தனிக்குடித்தனம் போகிறோம். அதுதான்  சமையலுக்குச் சாமான்கள் வாங்கிக் கொண்டு…………” என்று இழுத்தான் கோகுலன்.

 “நான் பொத்துவிலுக்குப்  போகிறேன். வழியில தம்பிலுவிலில  இறக்கிவிடுறன். ஏறிக் கொள்ளுங்கள்” என்று கூறிப் பின் ஆசனத்தைக் காட்டிய கனகரட்ணம் காரைவிட்டு இறங்கி மாறி முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.

 கார் கல்முனை பஸ் நிலையத்தைத் தாண்டிக் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயிலைக் கடந்து கொண்டிருக்கையில் அவரே கதையைத் தொடங்கினார்.

 “தம்பி! கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேல விசயம் எப்படி?” என்று கேட்டார்.

 கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தடியில் சூறாவளி தினத்தன்று  நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் விபரமாகக் கூறிய  கோகுலன். “அடுத்கிழம முழுவதும் அந்த வேலயத்தான் திட்டம் போட்டிருக்கன்” என்றான்.

 “தம்பி! இன்னொரு விசயம். வீடமைப்பு அதிகார சபை ஆளுங்கட்சி எம்பி.மார் ஒவ்வொருவருக்கும் தொகுதிக்கு முப்பது வீடுகள் கட்டித்தர உள்ளதாகக் கடிதம் அனுப்பியிருக்காங்க. பொத்துவில் தொகுதியில எனக்குக் கிடைக்கிற  முப்பது வீடுகளையும் எங்க தம்பி கட்டலாம்?” என்று கேட்டார்.

 கோகுலன் சிறிது நேரம் யோசித்தான். பின்,

 “ஊறணி அறுபதாம் கட்டயில கட்டலாம்” என்றான்.

 “அது யான வாற காடே தம்பி” என்றார் கனகரட்ணம்.

 “அது யான வாற காடுதான். ஆனா அங்கு இரிக்கிற குடும்பங்கள் அறுபதாம் ஆண்டிலிருந்து கச்சான் சேனை செய்து பயிர்பச்சைகள் போட்டுக் கொண்டு அங்கேயே தொடர்ந்து இரிந்து வருகிதுகள்” என்றான் கோகுலன்.

 “எத்தின குடும்பங்கள் தம்பி அங்க இரிக்கும்” என்றார் கனகரட்ணம். 

  “முப்பது நாப்பது குடும்பங்கள் மட்டில இரிக்கும்” என்றான் கோகுலன்.

 “முப்பது வீடுகள்தானே  கிடைக்கும். முழுப்பேருக்கும் குடுக்க முடியாதே” என்றார் கனரட்ணம்

 “முதலில முப்பது வீடுகளக் கட்டிக் குடுப்பம். புறகு ஒரு சந்தர்ப்பத்தில மற்றக் குடும்பங்களுக்கும் வீடக் கட்டிக் குடுக்கலாம்தானே” என்றான் கோகுலன்.

 “முப்பது குடும்பங்களயும் எப்பிடித் தெரிவு செய்யிற? என்று கேட்டார் கனகரட்ணம்.

“முழுக்குடும்பங்களுக்கும் துண்டெழுதிப்போட்டுக்  குலுக்கித் ‘திருவுளச்சீட்டு’  மூலம் தெரிவு செய்தால் ஒருதரும் குறை சொல்லவும் மாட்டார்கள், கோபிக்கவும் போறல்ல” என்றான் கோகுலன். 

 “அதுசரி அப்பிடிச் செய்யலாம்தான். அவங்களுக்குத் தண்ணிக்கு எங்க போற. கிணறு வெட்ட ஏலாதே” என்றார் கனகரட்ணம்.

 “மெயின் றோட்டுப் பக்கம்தான்  தண்ணி இல்ல. உள்ளே கடற்கரைப் பக்கம் போனா குறைஞ்ச ஆழத்தில தண்ணி இரிக்கு. அங்கிரிந்துதானே இப்ப ஆக்கள் தண்ணி எடுக்காங்க. கோமாரி ‘போஸ் மாஸ்டர்’ ராஜூவுக்கும் கடற்கரப் பக்கமாகக் காணியிரிக்கு. நாங்களும் அறுபத்தெட்டாம் ஆண்டிலிரிந்து ரெண்டு மூண்டு வருஷம் கச்சான் செய்தனாங்க. அந்தப் பூமி  இப்பவும் இரிக்கு. காடு வளர்ந்து கிடக்கு. பொத்துவில் ஆசப்பிள்ள ஓடாவியிர மூத்த மகன் சின்னையா-யேசுதாசன் அவரிர பெயர். என்னோட பொத்துவில் எம்.எம்.ஸ்கூலில ஒண்டாப் படிச்சாள்- கொச்சித் தோட்டமும் அங்க  செய்தது எனக்குத் தெரியும். தண்ணி வசதி இரிக்கு. பக்கத்தில ஊறணியிலயும் கனபேர் இப்ப குடியேறி ஊராப் போய்த்து. அந்த இடத்தையும் அறுபதாம் கட்டயோட சேத்து உங்கட காலத்திலேயே பெரிய கிராமமாக்கி அதுக்கு உங்கட பேரயும் வைக்க வேணும் என்றிரதுதான் என்ர ஆசை” என்று கூறிய கோகுலன்,

 “எதிர்காலத்தில கோமாரியிலிருந்து இங்கால கொட்டுக்கல்லுக்கு இந்த பக்கமா குரங்குமடு வரைக்கும் இரிக்கிற கடக்கரப் பகுதி நல்ல சுற்றுலா இடமாகவும் மாறப்போகிது. சொல்ல மறந்துட்டன். ஊறணியில புதுப் பள்ளிக்கூடமொன்றும் திறக்க வேணும்” என்று முடித்தான்.

 கோகுலன் கூறியவற்றையெல்லாம் காரின் முன் ஆசனத்திலிருந்து கோகுலனின் பக்கம்  தலையைத் திருப்பியபடி ஆர்வமுடனும்  அக்கறையுடனும் செவிமடுத்த கனகரட்ணம்,

 “நான் பொத்துவிலில ரெண்டு மூண்டு நாட்கள் நிப்பன், நாளைக்கு அல்லது நாளையண்டைக்கு ‘இரிக்கேசன் சேர்க்கியூட் பங்களாவு’ க்கு வா தம்பி. யோசிச்சுத் தீர்மானிச்சி உரிய கடிதங்கள வீடமைப்பு அதிகார சபைக்குத் தாமதியாம அனுப்பி வைப்பம்” என்றார்.

 கோகுலனையும் மனைவியையும் தம்பிலுவில் மகா வித்தியாலயத்தடியில் இறக்கிவிட்டுக் கனகரட்னத்தின் கார் பொத்துவிலை நோக்கிப் பறந்தது.

 மறுநாள் காலை  தம்பிலுவிலிலிருந்து ‘பஸ்’ சில் பறப்பட்ட கோகுலன் கோமாரிக்குச் சென்று ‘குவாட்டஸ்’ சில் நிறுத்தி வைக்கப்படடிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பொத்துவில் அறுகம்பையில் அமைந்திருந்த நீர்ப்பாசனத் திணைக்களச் சுற்றுலா விடுதியைச் சென்றடைந்தான்.

 கனகரட்ணத்தைச் சந்திப்பதற்காகப் பொது மக்கள் பலர் கூடியிருந்தார்கள். சுற்றுலா விடுதியின் முற்றத்தில் தேத்தாமரமொன்று செழித்து வளர்ந்திருந்தது. அந்த மரத்தின் நிழலின் கீழேயே பொது மக்கள் கனகரட்ணத்தைச் சந்திப்பதற்காகக் காத்து நின்றார்கள்.

 பொது மக்களைக் கடந்து நேரே சுற்றுலா விடுதியின் உள்ளே நுழைந்த கோகுலன் கனகரட்ணத்தைக் கண்டு அறுபதாம் கட்டையில் அமையவுள்ள முப்பது வீட்டுத் திட்டம் பற்றிய பேச்சையெடுத்தான்.

 கனகரட்ணம் கோகுலனின் ஆலோசனைப்படியே அந்த முப்பது வீடுகளையும் அறுபதாம் கட்டையிலே நிர்மாணிக்கச் சம்மதித்தார். அது சம்பந்தமாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தைத் தயாரித்துத் தனக்கு உடனே கையளிக்கும்படி கோகுலனைக் கேட்டுக் கொண்டார் கனரட்ணம்.

 கனகரட்ணத்தின் எழுதுவினைஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சிவராசாவும் தட்டச்சுப் பொறியுடன் கனகரட்ணத்தின் அருகில் ஒரு சிறு மேசையில் அமர்ந்திருந்தார்.

 கோகுலன் உடனடியாக  அதற்குரிய கடிதங்களைத்  தயாரித்துச் தட்டச்சுச் செய்வதற்காகச் சிவராசாவிடம் கொடுக்கச் சிவராசாவும்  தாமதியாது அவற்றைத் தட்டச்சுச் செய்து கொடுத்தார்.

கோகுலன் அவற்றை வாங்கிக் கனகரட்ணத்திடம் கொடுத்துக் கையொப்பம் வாங்கி உரிய இடத்தில் இறப்பர் முத்திரையையும் பதித்துக் கடித உறைகளில் இட்டு முகவரியையும் எழுதிச் சிவராசாவிடம் தபாலில் சேர்க்கும்படி கொடுத்துவிட்டுக் கனரட்ணத்திடமும் சொல்லிக் கொண்டு மீளத் தம்பிலுவில் நோக்கிப் புறப்பட்டான். 

 கோகுலன் புறப்படும்போது கனகரட்ணம்,

 “தம்பி! கோகுலன் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேலய மறந்திடாத. கெதியா அதிர வேலய முடிக்கப்பார்” என்று சத்தமிட்டுச் சொன்னார். 

 திருமணம் முடிந்து தனிக் குடித்தனம் நடாத்த மட்டக்களப்பிலிருந்து தம்பிலுவில் வரும் வழியில் கல்முனையில் வைத்துக் கனகரட்ணத்தைச் சந்திக்க நேர்ந்ததில் கல்முனையிலிருந்து தம்பிலுவில்வரை  தானும் மனைவியும் கனகரட்ணத்தின் காரில் வரும்போது காருக்குள் வைத்துக் கனகரட்ணத்திடம் அளித்த வாக்குப்படி தம்பிலுவிலுக்குத்  தனிக்குடித்தனம் வந்து ஒரு வாரம் கழிந்தபின் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத் திட்டப் பூர்வாங்க வேலைகளைக் கோகுலன் ஆரம்பித்தான்.

 கஞ்சிகுடிச்ச ஆற்றுக் குளக்கட்டை இன்னும் ஆறடிக்குமேல் உயர்த்தி அதன் கொள்ளளவை அதிகரிக்கச் செய்து பாரிய நீர்ப்பாசன நீர்த் தேக்கமாக  நிர்மாணம் செய்து அப்பகுதி விவசாய சமூகத்தைக்  கைதூக்கி விடவேண்டுமென்பதில் கோகுலன் உன்மத்தனாகியிருந்தான்.

 1860 களின் பின்னரே இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் நீர்ப்பாசனம் சம்பந்தமான பாரிய புனருத்தாரண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் 1870 இல்  ‘றூகம்’ குளமும் 1872 இல் ‘சாகாமம்’ குளமும் நிர்மானிக்கப் பெற்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே இலங்கையின் தமிழ்ப் பிரசேங்களில் நீர்ப்பாசனத் திட்ட வேலைகள் பாரிய அளவில் மேற் கொள்ளப்பட்டதாகக் காண முடிகிறது. இதன் விளைவாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 15 மே 1900 இல் நீர்ப்பாசனத் திணைக்களம் என்ற தனிப்பிரிவு தொடங்கப்பட்டு நீர்ப்பாசன வேலைகள் யாவும் நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளரின் பொறுப்பின் கீழ் வந்தன.

 1951 இலிருந்து நீர்ப்பாசனப் பணிப்பாளர் பதவியை வகித்த முதலாவது இலங்கையர் டபிள்யூ.ரி.ஏ.அழகரத்தினம் என்பவராவார்.

 ஜெ.எஸ்.கென்னடி என்பவரால் அவர் மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பொறியியலாராகப் பணியிலிருந்த காலத்தில் அப்போதைய  கிழக்கு மாகாணத்தில் பட்டிப்பளை எனும் ஆற்றை  இங்கினியாகலை எனுமிடத்தில் இரண்டு மலைக்குன்றுகளை இணைத்து அணைகட்டி மறித்து பாரிய நீர்த் தேக்கமொன்றை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்ப ஆய்வுகள் 1936 இல் மேற் கொள்ளப்பெற்றன. ஆனாலும் இரண்டாம் உலகப் போர் காரணமாக இத்திட்டம் முடக்கப் பெற்றது.

 அதற்குப் பின்னர் அழகரெத்தினம் 1940இல் மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பொறியியலாளராகப் பணியாற்றிய பொழுது இத்திட்டம் குறித்து ஆய்வுகளைத் தொடர்ந்தார். 

 இதைத் தவிர அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தை அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்வது தமிழ் அரசியல்வாதிகளும் பட்டிப்பளை ஆற்றுப்படுக்கையை அபிவிருத்தி செய்வது குறித்து 1940 களில் குரல் எழுப்பியுள்ளார்கள். 

 கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெரிய தந்தையான ஏ.கே.காரியப்பர் அவர்கள் பதுளைக்குப் பயணிக்கும் பொழுது இரண்டு மலைகளைக் கண்டு அவற்றைக் அணையொன்றின் ழூலம் இணைத்துப் பட்டிப்பளை ஆற்றுநீரைச் சேமிப்பதன் ழூலம் பாரிய விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்தலாமென அக்காலத்தில் ஆங்கிலேயக் கவர்னர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது அறிக்கை சமர்ப்பித்திருந்தார் எனவும் அறியக்கிடக்கிறது.

 இந்தப் பின்னணியில் அப்போதைய அரச சபை முதல்வரும் உணவு விவசாய அமைச்சருமான பின்னாளில் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராகப் பதவியேற்றவருமான டி.எஸ்.சேனாநாயக்கா அவர்கள் இங்கினியாகலையில் ஒரு மரத்தினை வெட்டி வீழ்த்தியதன் மூலம் 03.05.1941 இல் இத்திட்டத்தினைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இதற்குக் கல்லோயாத்திட்டம் எனப் பெயரிடப்பட்டது. இத்திட்டத்தின் உருவாக்கத்திற்கு எம்.எஸ்.காரியப்பரும் உந்துசக்தியாக இருந்தாரென்றும் அறியக்கிடக்கிறது.

 இங்கினியாகலையில் அமைக்கப்பட்ட அணைக்கட்டு, நீர்த்தேக்கம் மற்றும் அதன் கீழமைந்த காணிகளுக்கான நீர்ப்பாசன வசதிகள் குறித்த பொறியியல் வடிவமைப்புக்கள் யாவும் 1946 இல் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டன.

 இத்திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக அப்போதைய இலங்கைப் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ‘கல்லோயா அபிவிருத்திச் சபை’ யை (Galoya Development Board) நிறுவினார்.

 கல்லோயா அபிவிருத்திச் சபையின் முதலாவது  தலைவராக இலங்கை நிதியமைச்சின் செயலாளராக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிவில் சேவை அதிகாரியான Huxhan என்பவர் 1949-1952 காலப்பிரிவில் கடமையாற்றினார். இவர் பின்னர் தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து அப்போது காணிகள் ஆணையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த கே.கனசுந்தரம் என்பவரைக் கல்லோயா அபிவிருத்திச்சபையின் தலைவராக நியமித்தார்.

 1949 இல் தொடங்கப்பட்ட இத்திட்டம் அப்போதைய கிழக்கு மாகாணத்தின் தென்பகுதியில் 1400 சதுரமைல் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்ததுடன் இத்திட்டப்பரப்பு முழுவதுமே கல்லோயா அபிவிருத்திச் சபைத் தலைவரின் நேரடிப் பொறுப்பின் கீழும் அதிகாரத்தின் கீழுமே இருந்தன. இந்நிலப்பரப்பில் அரசாங்க அதிபரின் அதிகாரம் மட்டுமல்ல ஏனைய இலங்கை மின்சார சபை, நீர்வழங்கல் வடிகாலமைச்சு, நீர்ப்பாசனத்திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றுக்குரிய அதிகாரங்களும் செயற்பாடுகளும் இச்சபையிடமே ஒப்படைக்கப்பட்டன.

 இத்திட்டத்தின் செயற்பாட்டுப் பரப்பு அக்கரைப்பற்றுக்குத் தெற்கே சங்கமன்கண்டிவரை பரவியிருந்தது. கல்லோயா அபிவிருத்திச் சபையின் தலைவராயிருந்த தமிழரான கனகசுந்தரம் ஒரு சமூக நோக்கத்துடன் செயற்பட்டிருந்திருப்பாரேயானால் அக்கரைப்பற்றுக்குத் தெற்கே சங்கமன்கண்டி வரை பரவியிருந்த பிரதேசத்தில் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் திட்டங்களைப் பாரிய அளவில் மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் தனது நாளாந்த கடமைகளில் நாட்டம் கொண்டிருந்தாரேயன்றி அதற்கு மேல் சமூகநோக்குடன் சிந்தித்துச் செயற்பட்டாரில்லை. அவர் மட்டுமல்ல இலங்கையின் வரலாற்றில் உயர் பதவிகளை வகித்த தமிழ் அதிகாரிகளாகயிருந்தாலும் சரி ‘தமிழ்த்தேசியம்’ பேசிய அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி தமிழ் மக்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கி விடுவதில் தீர்க்கதரிசனத்துடனும் மூலோபாயத்துடனும் – தந்திரோபாயங்களுடனும் – அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை.

 கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ‘தமிழ்த்தேசியம்’ பேசாத அரசியல் தலைவர்களாலேயே பல சமூக பொருளாதாரத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 1921 இலிருந்து 1924 வரை சட்டநிரூபண சபையில் – Legislative Council – கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவரும் பின்னர் 1924 இருந்து 1931 வரை அப்போதிருந்த மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்தவருமான மட்டக்களப்பைச் சேர்ந்த ஈ.ஆர்.தம்பிமுத்துவின் முயற்சியினாலேயே மட்டக்களப்புக் கல்லடிப்பாலம் கட்டப்பெற்றதும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குப் புகையிரதப்பாதை வந்ததும்.

 1924 இலேயே கல்லடிப்பால நிர்மணம் நிறைவுற்றது. 

1925 இல் மட்டக்களப்புக்குப் புகையிரதம் வர ஆரம்பித்தது.

ஈ.ஆர்.தம்பிமுத்துவின் காலத்திற்குப் பின்னர் நல்லையா மாஸ்டரின் காலத்திலேயே கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டது.

 1943 இருந்து 1947 வரை சட்டசபையில் – State Council மட்டக்களப்புத் தெற்குத் தொகுதியையும், பின்னர் 1947 இருந்து 1956 வரை இலங்கைப் பாராளுமன்றத்தில் கல்குடாத் தொகுதியையும் நல்லையா மாஸ்ரர் பிரதிநிதித்துவம் செய்த காலத்திலேயே மட்டக்களப்பு அரசினர் கல்லுாரி – மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலை – வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் – மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு மன்னம்பிட்டியூடான தரைவழிப்பாதை (இந்த மன்னம்பிட்டிப் பாலம் நிர்மாணம் செய்யும் வரைக்கும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்குச் செல்வதாயின் பதுளை சென்றே கொழும்பிற்குச் செல்ல வேண்டியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) – வாழைச்சேனை காகித ஆலை என்பன ஏற்படுத்தப்பட்டன.

 நல்லையா மாஸ்டரின் காலத்திற்குப் பின்னர் 1965 இருந்து தொடர்ந்து கல்குடாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய கே.டபிள்யு.தேவநாயகத்தின் காலத்திலேயே கிழக்குமாகாணம் அபிவிருத்திக் காற்றைச் சுவாசித்து வருகிறது.

 ஆரம்பத்தில் கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் பெரும்பான்மையான அலுவலகர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் தமிழர்களாகவே – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

 சேனாநாயக்கா சமுத்திர நீர்த்தேக்கத்தின் நிர்மாண வேலைகளை Morrisons Knudson International என்ற அமெரிக்கக் ‘கம்பனி’ யே பொறுப்பெடுத்துச் செய்தது. தொழிநுட்ப ஆலோசனைகளை மட்டுமே அமெரிக்கா வழங்க இத்திட்டத்தின் முழுச்செலவும் இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலிருந்தே வழங்கப்பட்டது. உபகரணங்கள் யாவும் அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டன. கனகசுந்தரம் கல்லோயா அபிவிருத்திச் சபையின் தலைவராக 1952 இருந்து 1957 வரை பதவியிலிருந்தார். 

 கல்லோயாத் திட்டத்தின் கீழ் வெளிமாவட்டங்களிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இத்திட்டத்தின் நாற்பத்தியிரண்டு குடியேற்ற அலகுகளில் இடதுவரை வாய்க்கால் பகுதியில் அமைந்த ஒன்பது அலகுகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டன.

 இலங்கைத் தமிழரசுக்கட்சி இத்திட்டத்தின் கீழ் உள்ளுர்த் தமிழர்களைக் குடியேற்றுவதற்கு அக்கறைகாட்டாது இத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தபெற்ற சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனாலும் உள்ளுர்த்தமிழர்கள் பலர் இத்திட்டத்தின் கீழ்த் தாமாகவே காடுவெட்டிக் குடியேறினர்.

 ஆனால் 1956 யூன் மாதம் 05 ஆம் திகதி பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் கொணர்ந்த அரச கருமமொழிச் சட்டமசோதாவை (தனிச்சிங்களச் சட்ட மசோதா) எதிர்த்துக் கொழும்பு காலிமுகத்திடலில் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட சத்தியாக்கிரகத்தின் எதிரொலியாக 1956 யூன் 11ம் திகதியிலிருந்து கல்லோயாத் திட்டத்தின் கீழ் தாமாகவே குடியேறிய தமிழர்கள் சிங்களக்காடையர்களால் அடித்து விரட்டப்பட்டனர்.

 இந்த நிலையை ஏற்படுத்தியது தமிழரசுக்கட்சியே. தமிழரசுக்கட்சி காலிமுகத்திடலில் நடத்திய சத்தியாக்கிரகத்தின்போது சத்தியாக்கிரகிகள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் டாக்டர் – நாகநாதன் – வன்னியசிங்கம் – அமிர்தலிங்கம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் உட்படப் பலர் சிங்களக் கடையர்களால் தாக்கப்பட்டனர். இதனையடுத்து மட்டக்களப்பில் சுமார் பத்தாயிரம் தமிழர்கள் கலந்துகொண்ட எதிர்ப்புப்பேரணி நடாத்தப்பட்டது. அப்பேரணிமீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தனர். இதனால் மட்டக்களப்பு, கல்முனை, காரைதீவு ஆகிய இடங்களில் சிங்களவர்களுக்கு எதிரான சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.

 இச்சம்பவங்கள் ஊதிப்பெருப்பிக்கப்பட்ட வதந்திகளாக அம்பாறை மற்றும் இங்கினியாகலைப் பகுதியை வந்தடைந்தபோது புதிய சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு உருவான வன்முறைக் கும்பலினால் கல்லோயாத்திட்டத்தில் பணியாற்றிய தமிழ் ஊழியர்கள் குறிவைக்கப்பட்டார்கள். தாக்குதலில் சுமார் நூறு தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

 உயிர்தப்பிய தமிழ் ஊழியர்களின் குடும்பங்கள் அம்பாறை வாடி வீட்டில் தஞ்சம் புகுந்தன. அவ்வாறு தஞ்சம் புகுந்த குடும்பங்களுள் கல்லோயா அபிவிருத்திச் சபைத் தலைவர் கனகசுந்தரத்தின் குடும்பமும் அடங்கும்.

 1956 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் போது புதிய அரசாங்கத்தின் காணி, காணி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராகச் சி.பி.டி.சில்லா நியமனம் பெற்றார். இந்த அமைச்சின் கீழேயே கல்லோயா அபிவிருத்திச்சபை இருந்தது. அமைச்சர் சி.பி.டி.சில்வாவும் கல்லோயா அபிவிருத்திச்சபைத் தலைவர் கனகசுந்தரமும் நெருங்கிய நண்பர்கள்.

 ஆனாலும் கல்லோயா அபிவிருத்திச்சபை போன்ற உயர் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஒரு சபையின் தலைவராகத் தமிழர் ஒருவர் இருப்பதற்குப் பிலிப்குணவர்தனா பிரதமர் பண்டார நாயகாவிடம் எதிர்ப்புக் காட்டியதால் அமைச்சர் சி.பி.டி.சில்லாவின் கட்டுப்பாட்டையும் மீறி 1957 இல் கனகசுந்தரம் சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின் இத்திட்டமானது இலங்கை அரசாங்கத்தினால் முழுக்க முழுக்க இனவாத நோக்கிலேதான் முன்னெடுக்கப்பட்டது. வெளி மாவட்டங்களிலிருந்து மேலும் ஏராளமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இதனைத் தூண்டி விட்டதில் தமிழரசுக் கட்சியின் உபாயங்களற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கும் பங்குண்டு.

 இதனால் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணயத்தின் போது ‘அம்பாறை’ எனும் சிங்களப் பெரும்பான்மைத் தொகுதி ஏற்படுத்தப்பெற்றது. தொடர்ந்து 1962 இல் புதிய அம்பாறை நிருவாக மாவட்டமும் உருவானது. மட்டுமல்லாமல் அக்கரைப்பற்றுக்குத் தெற்கேயுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் இத்திட்டங்கள் ஏனோதானோ என்ற போக்கில் அரைகுறையாகவே மேற்கொள்ளப்பட்டன. 

 திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்திருந்த கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் பாரிய நீரேந்து பரப்பைக் கொண்டிருந்தபோதிலும் நீர்வரத்துப் போதுமான அளவு இருந்த போதிலும் இக்குளம் சிறிதாகவே நிர்மாணம் செய்யப்பெற்றது.

 வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் தமிழரசுக்கட்சியின் மூலோபாயமற்ற இனவாத நடவடிக்கைகளே இதற்குக் காரணம். தமிழரசுக்கட்சியின் போராட்ட நடவடிக்கைகள் யாவும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பதாயும் – பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பிடித்த கதையாகவுமே முடிந்திருக்கின்றன. 

 1961 இல் மட்டக்களப்புக் கச்சேரி வாயிலை மறித்துச் சத்தியாக்கிரகம் இருந்து கச்சேரி அலுவல்களைத் தமிழர் பிரதேசங்களில் முடக்கியபடியினால்தான் 1962 இல் மட்டக்களப்பு மாவட்டம் துண்டாடப்பெற்று அதன் தென்பகுதியில் புதிய அம்பாறை நிருவாக மாவட்டம் ஏற்படக் காரணமாயிற்று.

 இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயும் அனுபவங்களின் பின்னணியிலேயும்தான் கல்லோயா அபிவிருத்திச் சபையிடமிருந்து நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் அரைகுறையாகவும் முடிவுறாதவேலைகளுடனும் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் 1971 இல் பொறுப்பேற்கப்பட்டது.

 இதையெல்லாம் ஆதியோடந்தமாக அறிந்திருந்த கோகுலன், கனகரட்ணம் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் காலத்திலேயே கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்தைப் பாரிய நீர்த்தேக்கமாக நிர்மாணம் செய்யும் விடயத்தில் உன்மத்தனாயினான். 

(தொடரும் …… அங்கம் – 54)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *