பின்லாந்தின் திசை மாற்றம்: மீளத் திரும்பும் ஐரோப்பிய வரலாறு 

பின்லாந்தின் திசை மாற்றம்: மீளத் திரும்பும் ஐரோப்பிய வரலாறு 

    — ஜஸ்ரின் — 

(இரண்டாம் உலகப் போரின் பின்னர் அரசியல் நடுநிலைமை பேணி வந்த பின்லாந்து எனும் ஸ்கண்டினேவிய நாடு, நேட்டோ அமைப்பின் உறுப்பினராக இணைய முன்வந்திருக்கிறது. பின்லாந்தை விட நீண்ட கால அரசியல் நடு நிலைமைப் பாரம்பரியம் கொண்ட சுவீடனும் நேட்டோ அமைப்பின் உறுப்பினராக இணையும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்தத் திசை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிமயமான கட்டுரைகளை எங்கள் ஆய்வாளர்கள் பொது வெளியில் பரப்ப ஆரம்பிப்பர் என்பது திண்ணம். உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவதற்கு முன்னர், காய்தல் உவத்தலின்றி பின்லாந்து ரஷ்ய மேற்கு உறவின் வரலாற்றுத் தகவல்களைத் தமிழ் வாசகர்களிடம் அறிமுகம் செய்யும் நோக்கில் இக்கட்டுரை வரையப் படுகிறது. )  

1917 இற்கு முன்னரான ஸ்கண்டினேவியா 

பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் டென்மார்க்கைத் தளமாகக் கொண்ட அரசாட்சியின் கீழ் குறுநில இராச்சியங்களாக இருந்தவை. இந்த மூன்று நாடுகளுள், நிலப்பரப்பில் பெருமளவு மாறாமல், 16ஆம் நூற்றாண்டிலிருந்து நிலைத்திருக்கும் ஒரு நாடாக சுவீடன் இருக்கிறது. இந்த மூன்று நாடுகளுடன், ஐஸ்லாந்து, கிறீன்லாந்து, fபாரோ தீவுகள் (Faroe Islands) ஆகியன சேர்ந்த நாடுகளின் கூட்டத்தை நோர்டிக் நாடுகள் என அழைப்பர். வைக்கிங் கடலோடி மக்களாலும், சுதேசக் குடிகளான, சாமி (Sami), இனுயிற் (Inuit) போன்ற மக்களாலும் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக உருவான மக்கட் கூட்டத்தினர் இந்தப் பிரதேசத்தில் வசிக்கின்றனர். 1800களில் ரஷ்யப் பேரரசு சுவீடனோடு போரிட்டு வென்று பின்லாந்தைத் தன்னுடன் ஒரு சுயாட்சிச் சிற்றரசாக (Grand Duchy) இணைத்துக் கொண்டது. சுவீடன் ஈடுபட்ட இறுதி யுத்தங்களில் ஒன்றாக இந்த “ரஷ்ய- பின்னிஷ் யுத்தம்” விளங்குகிறது. 1917 இல்ரஷ்யப் பேரரசு மறைந்து தொழிலாளர் புரட்சி வெற்றி பெற்றபோது, பின்லாந்து சுதந்திர நாடாக உருவாகியது. அந்த வேளையில், உக்ரைன் உட்பட்ட சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யப் பேரரசில் இருந்து பிரிந்து சுதந்திரமடைந்தாலும், அடுத்த சில வருடங்களில் சோவியத் ரஷ்யாவினால் பலவந்தமாகவோ அல்லது புரிந்துணர்வு அடிப்படையிலோ சோசலிசக் குடியரசுகளாக மீள இணைத்துக் கொள்ளப் பட்டன. ஆனால், பின்லாந்து தன் சுதந்திரத்தை 1917இல் இருந்து பேணி வருகிறது.     

பின்லாந்தை ஆக்கிரமித்த சோவியத் ஒன்றியம் 

ஏற்கனவே என்னுடைய உக்ரைன் பற்றிய கட்டுரையில் சுட்டிக் காட்டியது போல, மொலரோவ் -ரிப்பட்ரொப் ஒப்பந்தம் எனப்படும் பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஹிட்லரின் ஜேர்மனிக்கும், ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்திற்குமிடையே ஆகஸ்ட் 1939இல் உருவானது. இந்த ஒப்பந்தம் முக்கியமாக போலந்தை ஆக்கிரமித்து ஹிட்லருக்கும் ஸ்ராலினுக்குமிடையே பங்கு போட்டுக் கொள்ளும் நோக்கத்தில் உருவான ஒரு ஏற்பாடு. இந்த போலந்து ஆக்கிரமிப்பும் துண்டாடலும் நடக்கவும் செய்தன. ஆனால், ஒரு கொசுறு இணைப்பாக ஸ்ராலின் தனது வடக்கு அண்டை நாடான பின்லாந்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் ஒரு படையெடுப்பை ஆரம்பித்தார். 1939 பனிக்காலத்தில் ஆரம்பித்து 1940 ஆரம்பம் வரை, உறைபனிக் காலத்தில் நிகழ்ந்த இந்த ஆக்கிரமிப்பு “குளிர்கால யுத்தம்” (Winter war) என்ற பெயருடன் பின்லாந்து வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.   

பின்லாந்தின் குளிர்காலயுத்தம் 

சோவியத் ஒன்றியம் அன்று பின்லாந்து மீது தொடர்ந்த ஆக்கிரமிப்பிற்கும் இன்று உக்ரைன் மீது தொடர்ந்துள்ள ஆக்கிரமிப்பிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. “பின்லாந்து- சோவியத் எல்லை முக்கிய சோவியத் நகரமான ஸ்ராலின் கிராட்டிற்கு மிக அண்மையில்  இருக்கிறது, இதனால் சோவியத் ஒன்றியத்தின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து” என்பது தான் அன்று பின்லாந்தை ஆக்கிரமிக்க ஸ்ராலின் சுட்டிய காரணம். இந்த ஆபத்து ஸ்ராலினின் மனதில் இருந்தாலும், பின்லாந்து ஸ்ராலின் கிராட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கை எதையும் அதுவரை எடுத்திருக்கவில்லை. மிகச் சிறிய பின்லாந்தை, குறுகிய நாட்களில் கைப்பற்றி விடலாமென்ற எதிர்பார்ப்புடன் நுழைந்த செம்படையினரை பின்லாந்துப் படைகளும், மக்கள் படைகளும் மூர்க்கமாக எதிர்த்துப் போரிட்டனர். இயற்கையிலேயே போர்க்குணம் கொண்ட பின்லாந்து மக்களிடையே வேட்டையாடும் பாரம்பரியமும் இருந்ததால், பின்லாந்துமக்களை ஆயுதமயப்படுத்துவதில் சிரமங்கள் இருக்கவில்லை. பலத்த எதிர்ப்பினால் நிலைகுலைந்த சோவியத் படைகள், இன்று உக்ரைனில் செய்வதுபோலவே, தங்கள் இராணுவத் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். முதலில் முழு ஆக்கிரமிப்பு என்று இருந்த சோவியத் திட்டம், பின்னர், பின்லாந்து நிலப்பரப்பை நடுவில் ஒரு இராணுவக் கோடுபோட்டு இரு பாகங்களாகப் பிரித்து, சோவியத் ஆதரவுப் பொம்மை அரசொன்றைக் கிழக்குப் பாதியில் நிறுவும் திட்டமாகக் குறுக்கப்பட்டது. இதே துண்டாடும் நுட்பத்தை ஜோர்ஜியாவிலும், மொல்டோவாவிலும், உக்ரைனிலும் ரஷ்யா நடைமுறைப்படுத்துவது, அன்றைய சோவியத் ஒன்றியமும் இன்றைய ரஷ்யாவும் இராணுவ நோக்கில் ஒரே அச்சுடைய நாடுகள் என்பதையே காட்டுகிறது. 

மூர்க்கமாகப் போரிட்ட பின்னிஷ் மக்கள் 

இன்று உக்ரைன் மக்கள் ஒன்று திரண்டு போரிடுவது போலவே, பின்லாந்து மக்களும் ஆரம்பத்தில் சரணடைந்துவிடாமல் செம்படைகளை எதிர்த்தனர் – ஆனால், பின்லாந்து மக்களுக்கு அன்று தற்போதைய உக்ரைனுக்குக் கிடைப்பதுபோல ஆயுத, நிதி மற்றும் இராஜ தந்திர உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. ஐ.நா சபை, அதன் பாதுகாப்புச்சபை என்பன இருக்கவில்லை, நேட்டோ இன்னும் உருவாகவில்லை. அயல்நாடான சுவீடன், தன் எல்லையைத் திறந்து பெண்களையும், குழந்தைகளையும் உள்ளே வரவழைத்துப் பாதுகாப்பளித்தது மட்டுமே அன்று பின்லாந்திற்குக் கிடைத்த பாரிய ஆதரவு. ஆனால், பின்லாந்துப் படைகள் மதிநுட்பத்தோடு சோவியத் படைகளை எதிர்த்துப் பாரிய இழப்புகளை ஏற்படுத்தினர். தங்கள் கள/பின்கள உளவறிதல் மூலம் சோவியத் தாக்குதல் அணிகளின் தலைமை அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களைக் குறிபார்த்துச் சுட்டுக் கொல்வதன் மூலம் சோவியத் தாக்குதல் அணிகளின் ஒழுங்கையும் மனோபலத்தையும் சிதைப்பதில் பின்லாந்துப் போராளிகள் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். இதே போன்ற ஒரு நுட்பம், இன்று உக்ரைன் படைகளால் பின்பற்றப்படுவதால் அதிக எண்ணிக்கையான ரஷ்யப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதாக அறிகிறோம் -ஆனால், மேற்கு நாட்டு உளவு அமைப்புகளின் உதவியுடன் இன்று உக்ரைன் செய்வதை, அத்தகைய உதவிகள் எவையுமின்றி பின்லாந்துப் போராளிகள் செய்தனர் என்பது அவர்களது மதி நுட்பத்தின் எடுத்துக் காட்டு.     

பின்லாந்தின் இராணுவத் தோல்வி 

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு சிறிய சனத்தொகை கொண்ட நாடான பின்லாந்தினால், அலை அலையாக வரும் சோவியத் படைகளை முற்றாகத் தடுக்க இயலவில்லை. எனவே, போர் நிறுத்தம், பேச்சு வார்த்தை என்பன மூலம் தீர்வு தேடும் கோரிக்கை பின்லாந்தினால் முன்வைக்கப்பட்டது. இது பின்லாந்தின் இராணுவ ரீதியான தோல்விதான் என்றாலும், ஸ்ராலின் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள ஒரு காரணமாக, பின்லாந்துப் படைகளின் போர்க்குணம் இருந்தது. சோவியத் நாட்டின் அச்சத்திற்கு பின்லாந்தின் அருகாமை தான் காரணமென்பதால், தனது எல்லையை சோவியத் நிலப்பரப்பிலிருந்து பின்னகர்த்திக் கொள்ள பின்லாந்து ஒப்புக் கொண்டது. இதன் மூலம் தனது நாட்டின் 10% நிலப்பரப்பை பின்லாந்து இழந்தாலும், சமாதானத்திற்காக இது அவசியமான விட்டுக்கொடுப்பாக இருந்தது.மொஸ்கோ ஒப்பந்தம் மூலம் ஏற்பட்ட இந்த விட்டுக் கொடுப்பு குளிர்கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.ஆனால், 1942 இல், பகைமை தவிர்ப்பு ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டு விட்டு, கிழக்கு நோக்கி முன்னேறிய நாசி ஜேர்மனிப் படைகள் சோவியத்தின் ஸ்ராலின் கிராட் நகரை மிக அண்மித்து தங்கள் மூன்றாண்டுகள் நீண்ட முற்றுகையை ஆரம்பித்தன. இந்த ஸ்ராலின் கிராட் முற்றுகை தனியே ஜேர்மன் படைகள் மட்டும் நடத்திய ஒன்றல்ல. தெற்கிலிருந்து ரோமானியப் படைகள், மேற்கிலிருந்து உக்ரைன் ஆயுதக் குழுக்கள் என்பவற்றோடு, வடக்கிலிருந்து பின்லாந்துப் படைகளும் இந்த முற்றுகையில் பங்காற்றின. இது, 1939இல் தன்பாட்டிலிருந்த பின்லாந்தை சோவியத் வலியப் போருக்கிழுத்து நிலத்தைப் பறித்தமைக்கு, பின்லாந்தின் பழிவாங்கலாக நோக்கப்பட்டது.    

இராட்சதன் நிழலில் பின்லாந்து 

இரண்டாம் உலகப் போரின் முடிவில், பின்லாந்து தனது சக்தி வாய்ந்த அயல் நாடான சோவியத் ஒன்றியத்துடன் ஒரு பாதுகாப்பான சகவாழ்வை உருவாக்கிக்கொண்டது. இதன் அர்த்தம், நட்பு உருவானது என்பதல்ல. சில உள்ளக அரசியல் மாற்றங்களை நுட்பமாக உருவாக்கி, பின்லாந்து சோவியத் ஒன்றியம் தன் மீது மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பை முன்னெடுக்காமல் கவனித்துக் கொண்டது. அத்தகையசமாதானம் பேணும் கொள்கைகளில் முதன்மையானவை: பின்லாந்தின் அரசியல் நடுநிலைமையும் (political neutrality), நேட்டோவில் இணையாமையும். நேட்டோ சோவியத்தின் இராணுவ முன்னெடுப்புகளை முடக்கும் நோக்கத்தை வெளிப்படையாக அறிவித்து உருவான ஒரு அமைப்பாக இருந்ததால், பின்லாந்தும், சுவீடனும் உறுப்பினர்களாக இணையவில்லை. ஆனால், நேட்டோ உறுப்பினரான நோர்வேயுடனும், நேட்டோவுடனும் இந்த இரு நாடுகளும் நெருக்கமாகச் செயற்பட்டே வந்திருக்கின்றன. எனவே, தற்போது நேட்டோவில் பின்லாந்து இணைவது ஒரு குறியீட்டு ரீதியான நடவடிக்கையாகவும் பார்க்கப்படலாம்.      

தற்போதைய நிலை 

ஆனால், பின்லாந்து, சுவீடன் ஆகிய இரு நாடுகளும் 2014 முதல் வெளியிட்டு வரும் கருத்துக்கள், அறிக்கைகள் மூலம், இவ்விரு நாடுகளும் நேட்டோவின் ஐந்தாவது சரத்து (Article 5) வழங்கும் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. 2014இல் என்ன தான் மாறியது? அந்த ஆண்டில் தான், புட்டினின் ரஷ்யா உக்ரைன் நாட்டிற்குச் சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை இராணுவ தாங்கிகளை அனுப்பி ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில்தான் நேட்டோ விழித்தெழுந்து, கிழக்கு ஐரோப்பாவில் தனது விசேட படையணிகளை அதிக அளவில் நிறுத்தி வைக்க ஆரம்பித்தது. பின்லாந்திலும், சுவீடனிலும் பொதுமக்களின் நேட்டோவுடன் இணைவது தொடர்பான அபிப்பிராயம், 2014இல் கூட மாறவில்லை: இவ்விரு நாட்டு மக்களும் நேட்டோவுடன் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், 2022 பெப்ரவரி உக்ரைன் ஆக்கிரமிப்பின் பின்னர் இரு நாடுகளின் கருத்துக் கணிப்புகளும், மக்களிடையே நேட்டோவுடன் இணைய வேண்டியதன் முக்கியத்துவம் பெருமளவு சாதகமாக மாறியிருப்பதாகக் காட்டியிருக்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்புகளை பொதுஜன வாக்கெடுப்புகளாகக் கொள்ள முடியாவிட்டாலும், இந்த இரு நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளும் நேட்டோவுடன் இணைவதை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிரதிநிதித்துவ ஜனநாயகம், ஜனநாயகம் இவையெல்லாம் பற்றி அலட்டிக்கொள்ளாத புட்டினின் ரஷ்யாவோ, நேட்டோவில் சுவீடனும், பின்லாந்தும் இணையக் கூடாது என “மென்மையாக” மிரட்டி வருகிறது.   

அதிசயங்கள் 

தன்னோடு 800 மைல்கள் நீளமான பொது எல்லை கொண்ட ஒரு நாடு நேட்டோவில் இணைவது ரஷ்யாவுக்கு கசப்பாகவே இருக்கும். ஆனால், பின்லாந்தின் தலைவர்கள் சுட்டிக் காட்டி வருவது போல, இந்த நிலைமைக்குப் பிரதான காரணம் புட்டினின் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மீதான இராணுவ முன்னெடுப்புகளே. பின்லாந்தின் இந்த முடிவினால் நேட்டோவும் அமெரிக்காவும் இலாபமடைந்தாலும், நாம் மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் பார்த்தால், பின்லாந்தின் முடிவு ரஷ்யாவின் சாதனை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.ரஷ்யா ஒரு அணுவாயுத நாடு, உலகிலேயே பெரிய நிலப் பரப்பும், கனிய வளங்களும் கொண்ட தேசம். ஒரு இராட்சதனான ரஷ்யாவுக்கே தன் அணுவாயுதம் தரிக்காத சுண்டக்காய் அயல் நாடுகள் மீது அச்சம் இருக்கிறதெனில், பின்லாந்து, சுவீடன் போன்ற சிறு நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சம் ஏற்படுவது அதிசயமல்ல. இந்தப் பாதுகாப்பு அச்சத்தைப் போக்க, தங்களையொத்த ஆட்சி, பொருளாதார, சமூக நடைமுறைகள் கொண்ட ஏனைய 30 நாடுகளுடன் இந்த நாடுகள் இணைவதும் அதிசயம் கிடையாது.  

அதிசயம் என்னவெனில், ஒரு அணுவாயுத, இராணுவ வல்லரசின் தலைமைக்கு, (எதிர் தரப்பான) நேட்டோ எப்படித் துலங்கல் காட்டும் என்ற எதிர்வு கூறலோ ஆலோசனையோ எப்படிக் கிடைக்காமல் போனது என்பது தான்.